மகனின் திருமணம்
அவர் வந்திருந்த சமயம் என்னிடத்தில் மகனுடன் திருப்பதி சென்று வழிபட்டு திரும்பும் சமயம் காளஹஸ்தியில் நடைபெறும் பூஜையில் கலந்து கொள்ளுமாறு சொன்னபடி செய்தேன். அதுவும் தவிர அவர் சொல்லாத ஒன்றையும் ஜோதிடரின் அறிவுறைப்படி செய்து விட்டு வந்தேன்.
சிவகங்கைக்கு அருகே அமைந்துள்ள திருக்கோஷ்டியூர் என்னும் திருத்தலத்திற்கு நான் என்னுடைய மகனுடன் சென்று அங்கு வழிபட்டு அங்கிருந்து அகல் விளக்கு ஒன்றினை பெற்று வந்து தொடர்ந்து 48 நாட்கள் வீட்டில் பூஜை செய்தேன். அவ்வாறு கோயிலுக்குச் சென்று வந்த சமயம் அவரது இல்லத்திற்குச் சென்று அவரை நேரில் கண்டு வர வேண்டும் என என் மனம் துடித்தது. ஆனால் முடியவில்லை. திருமணம் நடைபெற்று முடிந்தவுடன் மீண்டும் ஒரு முறை திருக்கோஷ்டியூர் கோயிலுக்குச் சென்று அந்த அகல் விளக்கினை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்பதனை அறிந்து கொண்டேன். என் மகனுக்கு நல்ல வரன் அமைந்து விட்டது.
அவரிடத்தில் எனது இரண்டாவது மகனுக்கு வரன் அமைந்து விட்டது. திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று தெரிவிக்க என் மனம் துடித்துக் கொண்டிருந்த சமயம் எனது இல்லத்திற்கு அவர் வருகை தந்தார். நான் அவரிடத்தில் மகனுக்கு திருமணம் நடைபெற வேண்டி அவர் சொன்னபடி திருப்பதி மற்றும் காளஹஸ்தி சென்று வந்த விவரங்களையும் திருக்கோஷ்டியூர் கோயிலுக்குச் சென்று வந்த விவரத்தினையும் சொல்லிக் கொண்டிருந்த சமயம் எனது இரண்டாவது மகன் வீட்டில் நுழைந்தான். அவரைப் பார்த்தவுடன் அவனுக்கு மிக்க சந்தோஷம்.
நான் என் மகனிடத்தில் திருமணம் பற்றிய நல்ல சேதியினை அவரிடத்தில் நேரடியாக சொல்லும்படி கேட்டுக் கொண்டேன். அவனும் அவ்வாறே அவரிடத்தில் தனக்கு திருமணத்திற்கான நாள் குறிக்கப் பட்டு விட்டதாகவும் நிச்சயதார்த்தத்தினை திருமணத்திற்கு முதல் நாள் வைத்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்து அவரை கட்டாயம் திருமண விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டான்.
என் மகன் அவரிடத்தில் வீட்டு முகவரியினை கேட்டறிந்து அந்த விவரங்களை ஒரு டைரியில் குறித்துக் கொண்டு திருமணத்திற்கு நேரில் வந்து அழைக்கப் போவதாக தெரிவித்தான். அப்போது அவர் என்னைப் பார்த்தார். நான் அவரைப் பார்த்தேன். அதன் பின்னர் அவரிடத்தில் எனது மகன் நீங்கள் திருமண விழாவில் பங்கேற்க வேண்டும் என ஆசைப் படுகின்றான் என்று சொன்னேன்.
அதற்குப் பின்னர் நானும் என் மகனும் அவருடன் பேசிக் கொண்டிருந்தோம். அவர் அவரது இல்லத்திற்கு திரும்ப முயற்சித்த சமயம் எனது மகன் அவரிடத்தில் திருமண சேதியினை கேட்ட பின்னர் கட்டாயம் எங்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டுத் தான் செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு சிற்றுண்டி வாங்கி வர வெளியில் சென்று விட்டான்.
அந்த சமயத்தில் நான் அவரிடத்தில் திருப்பதியில் அங்கப் பிரதட்சணம் செய்யும் போது கொஞ்சம் கூட பக்தி என்பதே இல்லாமல் அவரது நினைப்பு தான் இருந்தது என்பதனை தெரிவித்தேன். அதிகாலை 2.30 மணிக்கு ஈரத் துணியுடன் குளிரால் பற்கள் வெட வெடவென நடுங்கிய போது கூட எனக்கு அவரது நினைப்பு தான் என்பதனை வெட்கமில்லாமல் தெரிவித்தேன். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
அச்சமயம் சிற்றுண்டியுடன் எனது மகன் திரும்பி விட்டான். முதன் முதலாக அவருக்கு என் மகன் சிற்றுண்டி ஹோட்டலிருந்து வாங்கி வந்துள்ளதால் அவருக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பது தெரியாது. எனவே இட்லி தோசை பூரி சப்பாத்தி பொங்கல் என எல்லாவற்றையும் வாங்கி வந்திருந்தான். என் மகன் என்னிடத்தில் அவருக்கு என்ன பிடிக்கும் என்பது தெரியாததால் அனைத்தையும் சூடாக வாங்கி வந்துள்ளதாகத் தெரிவித்தான்.
அந்த சமயம் அவர் என்னைப் பார்த்த பார்வை என் கையால் பரிமாறினால் எல்லாமே பிடிக்கும் என்பதனை எனக்கு மட்டும் உணர்த்தியது. சிற்றுண்டி சாப்பிட்டு முடித்தவுடன் அவர் திரும்பிய சமயம் என் இதயத்தில் வெற்றிடம் ஏற்படுவதை உணர்ந்தேன். இல்லத்தில் நடைபெறப் போகின்ற திருமணம் பற்றி எவ்வளவு சந்தோஷம் இருந்தாலும் அவர் என்னிடத்தில் விடைபெற்றுச் சென்று விட்ட காரணத்தால் இதயத்தில் சந்தோஷம் இல்லை. இரவு முழுக்க தூக்கமில்லை.
திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் என் மகன் சொந்த ஊருக்குச் சென்று உறவினர்கள் அனைவரையும் அழைத்த சமயம் அவரது இல்லத்திற்கும் நேரில் சென்று திருமண பத்திரிக்கை கொடுத்து அழைத்து விட்டு கட்டாயம் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாக ஊரிலிலுந்து திரும்பிய பின்னர் தெரிவித்தான். அப்போது நான் அவரும் நானும் நடத்தி வைக்க வேண்டிய வைபவங்கள் அனைத்தையும் தனிமையில் நடத்த வேண்டியிருப்பதை நினைத்து கண் கலங்கினேன். திருமண நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.
வழக்கம் போல் அவர் திருமணம் முடிந்த ஒரு மாத காலத்திற்குள் எனது இல்லத்திற்கு வருவார் என அவர் எனது வீட்டிற்கு வரப்போகும் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் திருமணம் நிச்சயிக்கப் பட்ட நாளுக்கு நான்கைந்து நாட்களுக்கு முன்னர் வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக ஆரம்பித்த கன மழையினால் திருமண மண்டபங்கள் கல்விக் கூடங்கள் அனைத்தும் நகரம் முழுக்க நீர் தேங்கியுள்ளமையாலும் பல வீடுகள் இடிந்து விழுந்தமையாலும் வீடு வாசல்களை இழந்து தவிக்கன்றவர்களையும் வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாதவாகளையும் தங்க வைப்பதன் பொருட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளுக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே அனைத்து திருமண மண்டபங்களும் கல்விக் கூடடங்களும் காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினரால் எடுத்துக் கொள்ளப்பட்டன.
திருமணம் நிச்சயிக்கப் பட்ட தினத்தன்று நகரம் முழுவதும் வெள்ளத்தால் சூழ்ந்து இருந்ததாலும் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் யாவும் நிறுத்தப் பட்டதாலும் வெளியூர்களிலிருந்து யாரும் வர முடியவில்லை. உள்ளுரில் மழை நீர் தேங்கியிருந்ததன் காரணமாக டவுண் பஸ் போக்கு வரத்து நிறுத்தப் பட்டது. ஆட்டோக்கள் டாக்சிகள் எதுவும் இயங்கவில்லை. இரண்டு சக்கர வாகனங்கள் அனைத்தும் பழுதாகி சாலைகளின் ஓரத்தில் நின்றன. வீட்டை விட்டு யாரும் வெளி வர முடியாத அளவிற்கு சாலைகளில் மழை நீர் இடுப்பு உயரத்திற்கு ஓடிக் கொண்டிருந்தது. நிறைய வீடுகளில் மழை நீர் புகுந்து விட்டது. திருமண மண்டபங்கள் யாவும் மாற்று உபயோகத்திற்கு உபயோகப் படுத்தப் பட்டமையால் அனைத்து திருமணங்களும் தள்ளி வைக்கப் பட்டன. அவ்வாறு ஒத்தி வைக்கப் பட்ட திருமணங்களில் ஒன்று என் மகனின் திருமணம்.
திருமணத்திற்கான வரன் அமைவதில் தாமதமாகி கோயில் குளங்களுக்கு எல்லாம் சென்று வழிபட்டு வந்த பின்னர் நிச்சயிக்கப்பட்ட திருமணம் மழையின் காரணமாக ஒத்தி வைக்கப் பட்டது. என் மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் திருமணத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு மிக நெருக்கமானவர்கள் மற்றும் திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் வெளி நாடுகளிலிருந்து வந்திருந்தார்கள். எனவே அவர்கள் வெளி நாடு திரும்புவதற்குள் திருமணம் நடத்தியாக வேண்டும் என்னும் கட்டாயத்தின் பேரில் இரண்டு சம்மந்திகளும் மிக மிக நெருங்கிய உறவினர்களும் மாத்திரம் கலந்தாலோசித்து மீண்டும் ஒரு சுப முகூர்த்த நாள் பார்த்து அந்த நாளில் திருமணம் நடத்த வேண்டியதாயிற்று.
மிகக் குறுகிய காலத்தில் திருமணம் நடைபெற்ற காரணத்தால் மறு தேதி குறிப்பிட்டு திருமண பத்திரிக்கை கூட அச்சடிக்காமல் மிக நெருங்கிய உறவினர்களை மாத்திரம் தொலைபேசியிலோ அல்லது உள்ளுரில் உள்ளவர்களை நேரடியாகவோ சென்று அழைத்தோம். வெளியூரில் உள்ள உறவினர்கள் நண்பர்கள் சுற்றத்தார் தெரிந்தவர்கள் பழக்கமானவர்கள் யாரையும் குறுகிய கால இடைவெளி காரணமாக அழைக்க முடியவில்லை.
குறுகிய கால இடைவெளியில் திருமணத்திற்கான மறு தேதி நிச்சயிக்கப் பட்டதன் காரணமாக அனைவரையும் அழைக்க முடியவில்லை. அதே போல திருமணத்தில் மிக மிகக் குறைவானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நிறைய பேர் கலந்து கொள்ள முடியவில்லை.. அவ்வாறு கலந்து கொள்ள முடியாதவர்களில் என்னைப் பொறுத்த வரையில் அவர் மட்டும் மிக மிக முக்கியமானவர்.
திருமணம் முடிந்து ஒரு மாத காலத்திற்கு அவர் வருவார் என எதிர்பார்த்தேன். ஆனால் திருமணம் முடிந்த நான்கு மாதங்களுக்குப் பின்னர் அவர் எனது இல்லத்திற்கு வருகை தந்தார். அவர் வந்த சமயத்தில் எனது இரண்டாவது மருமகள் வீட்டில் இருந்தாள். அவர் வந்தவுடன் அவரை வரவேற்று உபசரித்து சோபாவில் அமர வைத்தேன்.
அதன் பின்னர் என் மருமகளிடத்தில் காபி கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டேன். என் மருமகள் இரண்டு டம்ளர்களில் காபி கொண்டு வந்தாள். நான் எனக்கு காபி வேண்டாம் எனச் சொல்லி அதனை மருமகள் பருகும் படி கேட்டுக் கொண்டேன். அவளும் சரியெனச் சொல்லி விட்டு ஒரு டம்ளர் காபி மாத்திரம் கொடுத்து விட்டு சமையலறைக்குச் சென்று விட்டாள்.
வழக்கம் போல் அவர் டம்ளரில் இருந்த காபியில் பாதியினை குடித்து விட்டு மீதியினை என்னிடத்தில் கொடுத்த சமயம் நான் ஆசை ஆசையாக வாங்கிப் பருகி விட்டு டம்ளரை தூரத்தில் வைத்து விட்டேன். பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விட்டது என நினைக்கும் என்பது போல அவர் பாதி குடித்து விட்டு கொடுத்த மீதியினை நான் குடித்ததை மருமகள் சமையலறைக்குச் சென்று விட்ட காரணத்தால் பார்க்கிருக்க வாய்ப்பில்லை என எண்ணினேன்.
அவர் பருகிய பின்னர் மீதியினை நான் பருகியதை என் மருமகள் நேரடியாகப் பார்க்காமல் கண்ணாடியில் தெரியும் பிம்பத்தில் சமையலறையில இருந்தவாறே பார்த்து விட்டாள் என்பது எனக்கு அந்த நேரத்தில் தெரியவில்லை. திருமண நாளன்று ஏற்பட்ட சம்பவங்களை ஒன்றன் பின் ஒன்றாக அவரிடத்தில் எடுத்துச் சொன்னேன்.
அந்த நேரத்தில் எனது மகன் வீடு திரும்பினான். அச்சமயம் அவர் கொண்டு வந்திருந்த திருமண பரிசுப் பொருளை என் மகன் மற்றும் மருமகள் ஆகிய இருவரையும் அழைத்து பரிசளித்தார். அச்சமயத்தில் எனது மகனும் மருமகளும் ஒன்றாக நாம் இருவரும் அருகருகே நின்று ஒரே நேரத்தில் அசீர்வதிக்குமாறு கேட்டுக் கொண்டனர். என்னால் எதுவும் பேச முடியாத நிலையில் எனது மருமகள் என்னை அவருக்கு அருகில் நிற்க வைத்தாள். முதல் முறையாக நானும் அவரும் சேர்ந்து எனது மகன் மற்றும் மருமகளை ஒரே நேரத்தில் தம்பதிகள் போல ஆசீர்வதித்தோம். அவர் கொண்டு வந்துள்ள பரிசுப் பொருளை இருவரும் சேர்ந்ந்து ஒன்றாகக் கொடுத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
அதன் பின்னர் இதுவரையில் எனது இல்லத்தில் நடந்த எந்த ஒரு விசேஷத்திலும் கலந்து கொள்ளாதவர் முதல் முறையாக என்னுடன் சேர்ந்து என் மகனையும் மருமகளையும் ஆசீர்வதித்துள்ளார் என்பதனை நினைத்து நான் மிக மிகச் சந்தோஷமாகப் பட்டேன். முதல் மகன் வீடு கட்டி கிரஹப் பிரவேசம் செய்யும் சமயம் அவனது மாமனார் அதாவது எனது சம்மந்தி அவருக்கு நண்பர் என்பதால் நேரில் வந்து கிரஹப் பிரவேசத்தின் போது தனியே நின்று பரிசளித்தார்.
அதற்குப் பின்னர் எனது இரண்டாவது மகன் வீடு கட்டுவதில் உள்ள பிரச்சினைகளை அவரிடத்தில் எடுத்துக்கூறி அதனை நிவர்த்தி செய்வதற்கான அறிவறைகளை அவரிடமிருந்து நானும் என் மகனும் மிக கவனமாக கேட்டறிந்தோம். என் மருமகளுக்கு அவர் பேசுவது புது அனுபவமாக இருந்தது. வீடு கட்டி முடிப்பதில் உள்ள சிரமங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறிவிட்டு இரண்டு கோயில்களுக்குச் சென்று வருமாறு அறிவுறைகள் வழங்கினார்.
இடைப்பட்ட நேரத்தில் மதிய உணவு தயாராகி விட்டது. அதன் பின்னர் எனது வேண்டுகோளை ஏற்று திருமணத்திற்கு வராத காரணத்தால் திருமண விருந்து போல நினைத்து மதிய உணவு உட்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவினை முடித்தோம்.
அதன் பின்னர் அவர் நம்மிடத்தில் விடைபெற்றார். என் மகனும் மருமகளும் சரியெனச் சொல்லி வழியனுப்பும் சமயம் நான் மட்டும் எனது இல்லத்திலேயே இரவுச் சிற்றுண்டியை கூட சாப்பிட்டு விட்டுச் செல்லலாம் எனக் கேட்டுக் கொண்டேன். அவர் என்னை விட்டுப் பிரிவதை என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் என் இல்லத்திலேயே தங்கி விட வேண்டும் என அவரை சொந்தம் கொண்டாடுகின்றது. ஆனால் கலாச்சாரக் கைதிகளுக்கு அது சாத்தியமில்லை என்பதனை நினைத்து என் மனம் வேதனைப் படுகின்றது.
அவருக்கும் என்னைப் பிரிய மனமில்லை. இருந்தாலும் தங்க முடியாத நிலையில் அவரது கால்கள் முன்னே செல்ல இதயம் என்னை நோக்கி வருகின்றது. அவர் என் இல்லத்தை விட்டுச் சென்ற பின்னர் மீண்டும் அவரைக் காண நான் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டுமோ என்னும் ஏக்கம் என்னைக் கவ்விக் கொண்டது. வழக்கம் போல் என் இமைகள் என்னை உறங்க விடாமல் இரவுத் தூக்கத்தை இழந்து வருத்தத்தில் இருந்தேன். அடுத்த ஜென்மத்திலாவது இவ்வாறான சோதனைகள் நம் இருவருக்கும் வராமல் இருக்க வேண்டும் என இறைவனை வேண்டிக் கொண்டேன். துக்கம் தூக்கத்தைக் கெடுத்தது.