திருமணத்திற்கு முன் அவருடன் கடைசி சந்திப்பு
ஒரு குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த யாரேனும் ஒருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவ மனையிலோ அல்லது வீட்டிலோ உயிர் பிரியும் தருவாயில் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் மீது மிகவும் அன்பு செலுத்துபவர்கள் எப்படியெல்லாம கண்ணீர் சிந்தி வருந்துவார்களோ அதே போன்ற நிலைமை எனக்கு வந்து விட்டது. நான் அவரை இழக்கப் போகின்றேன் என்னும் எண்ணம் எனக்குள் வந்து விட்டது.
அவர் திருமணம் மற்றும் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வதற்கு முன்னர் நான் எதிர்பாராத நேரத்தில் என் இல்லத்திற்கு வருகை தந்தார். அவர் வந்தவுடன் என் செல்லப் பெண் அவரது மடியில் அமர்ந்து கொண்டு அவரிடத்தில் நீ ஏன் வரல. நீ வராம அம்மா அழுதுட்டு இருக்காங்க என்று மழலை மொழியில் சொன்னதை கேட்ட அவாது கண்களிலும் நீர் வழிய ஆரம்பித்தது. உடனே என் குழந்தை அவரிடத்தில் அம்மா அழற மாதிரி நீயும் அழாத முதல்ல எனக்கு சாக்லெட் கொடு என்று கேட்க அவர் கொண்ட வந்திருந்த ஒரு பையினை என்னிடத்தில் கொடுத்தார்.
நான் என்னவென்று கேட்டதற்கு வழக்கம் போல் நான் கொடுக்கின்ற தீபாவளிக்கான பரிசு. என்னை எதிர்பார்த்து ஏங்கிக் காத்திருக்கின்ற உனக்கும் நம்மை இன்னமும் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கின்ற செல்லப் பெண்ணுக்கும் என்று சொன்னார். நான் அதனைப் பார்த்த சமயம் வழக்கம் போல் எனக்குப் பிடித்தமான அவரைக் கவர்ந்த இளமஞ்சள் நிறத்தில் பச்சை நிற பார்டர் போட்ட சேலை அதற்கு மேட்சாக ரவிக்கைத் துணி மற்றும் அதே நிறத்தில் குழந்தைக்கு ரெடிமேட் ஆடைகள்.
நான் வெளியில் எடுத்துப் பார்க்காமல் அப்படியே பீரோவில் வைத்து விட்டேன். அதன் பின்னர் வழக்கம் போல் அவர் என் செல்லப் பெண்ணுக்கு சாக்லெட் கொடுக்க அதன் பின்னர் அவரும் நானும் பாதி பாதி சாக்லெட் சாப்பிட்டோம். அவரது உறவுக் காரப் பெண் வந்து சென்றது பற்றி சொன்னாளா எனக் கேட்டேன்.
அதற்கு அவர் என்னிடத்தில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் நானும் என்னுடன் படித்து தற்போது இதே ஊரில் பணியாற்றி வரும் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து செல்வதற்கு ரயிலில் டிக்கட் முன்பதிவு செய்தார்கள். அதில் அவளுக்கும் எனக்கும் ஒரு பெட்டியிலும் எனது நண்பர்கள் அனைவருக்கும் வேறொரு பெட்டியிலும் இடம் கிடைத்து உள்ளது. இது எனது நண்பர்கள் வேண்டுமென்றே செய்த ஏற்பாடா அல்லது இரயில் முன்பதிவு அவ்வாறு அமைந்து விட்டதா எனத் தெரியவில்லை. ஆனால் அவள் என்னுடன் ஒரே பெட்டியில் பயணம் மேற்கொள்வதில் மிகவும் சந்தோஷத்துடன் இருக்கின்றாள் என்று சொன்னார். அவரிடத்தில் எனக்கு மிகவும் பிடித்த குணம் இது தான் எதனையும் என்னிடத்தில் மறைக்க மாட்டார். நானும் அப்படித் தான்.
அதன் பின்னர் தீபாவளி மற்றும் திருமணம் முடிந்து எப்போது இங்கு திரும்புவீர்கள் எனக் கேட்டதற்கு திருமணம் மற்றும் தீபாவளிக்கு ஒரு மாதம் லீவு போடுமாறு எனது வீட்டார் சொன்னார்கள். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை.
காரணம் நான் பணியாற்றும் அலுவலகத்தில் உள்ள மிக மிக முக்கியமான நபர் ஒருவர் என்னுடைய திருமணத்திற்கு குடும்பத்தினருடன் வருகை தந்து அவர்களது கரங்களால் தாலியினை எடுத்துக் கொடுக்க ஆசைப்படுகின்றார். அந்த பாக்கியம் தனக்குக் கிடைக்க வேண்டும் என்று ஆயிரக் கணக்கானோர் விரும்புவார்கள். அவ்வாறானவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவே கிடைக்காது.
ஆனால் என்னுடைய தந்தை வழக்கம் போல் நான் பெற்று வளர்த்து செலவு செய்து ஆளாக்கிய உனக்கு வேறு யாரும் தாலியினை எடுத்துக் கொடுத்து திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்க அனுமதிக்க மாட்டேன் என்று சொன்ன காரணத்தால் என் திருமணத்தில் அந்த மிக முக்கியமான நபர் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்து இங்கு வரவேற்பு வைத்து அவரிடமிருந்து ஆசீர்வாதம் பெற வேண்டும்.
அன்றைய நாளில் அவரால் வர முடியாவிட்டால் அவரது இல்லத்திற்கு நான் மனைவியுடன் சென்று ஆசீர்வாதம் பெறவேண்டும். இல்லையெனில் அவரது மனது புண்படும். எனவே விரைவில் வந்து விடுவேன் என்று சொன்னார். அவரை மீண்டும் மிக விரைவில் பார்க்க முடியும் என்று எனக்குள் ஒரு இனம் புரியாத மின்னல் போன்ற திடீர் சந்தோஷம்.
அன்றைய நாளில் அவரால் வர முடியாவிட்டால் அவரது இல்லத்திற்கு நான் மனைவியுடன் சென்று ஆசீர்வாதம் பெறவேண்டும். இல்லையெனில் அவரது மனது புண்படும். எனவே விரைவில் வந்து விடுவேன் என்று சொன்னார். அவரை மீண்டும் மிக விரைவில் பார்க்க முடியும் என்று எனக்குள் ஒரு இனம் புரியாத மின்னல் போன்ற திடீர் சந்தோஷம்.
அவரது தந்தை அவரை எனக்கு மணமுடித்து வைக்கவில்லை. காரணம் நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள். அவரது தாயார் என்னைப் பார்த்துவிட்டுச் சென்ற பின்னர் அவர்களாகவே காட்டிய பெண்களில் ஒருவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்து அதனையும் நிறைவேற்ற மறுத்து விட்டார்.
தற்போது திருமணத்திலும் அவ்வாறு செய்வதால் அவர் கோபப்படுகின்றார் என்பதனை நான் அறிந்து கொண்டேன். அவர் எங்கு வேலை பார்க்கின்றார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவர் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் அவர் சொல்வது போல செய்தால் நிறையச் செலவாகும். அவருக்கு நன்றாக படிப்பு வந்தும் கூட படிக்க வைக்காதவர்கள் திருமணத்தினை ஆடம்பரமாகச் செய்வார்களா என என்னை நானே மனதில் கேட்டுக் கொண்டேன்.
பேசிக் கொண்டிருக்கும் சமயம் இங்குள்ள நண்பர்கள் அனைவரையும் அழைத்து முடித்து விட்டதாகவும் சொந்த ஊரில் உள்ள நண்பர்களை மாத்திரம் அழைக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.
அந்த சமயத்தில் நான் அவரிடத்தில் உங்களுக்குத் திருமணம் ஆகப் போகின்றது. உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டால் என்னுடைய சமையலைவிட உங்ளுடைய வருங்கால மனைவியின் சமையல் ருசியாக இருந்து விட்டால் என்னுடைய சாப்பாடு உங்களுக்கு பிடிக்காமல் போய் விடலாம்.
எனவே இன்று மட்டும் ஒரே ஒரு முறை என் கைகளால் ஏதேனும் விரைவாகச் சமைத்துப் பரிமாற ஆசையாக இருக்கின்றது. அதனை நிறைவேற்றுவீர்களா எனக் கேட்டேன். அவர் முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தார். நான் உடனடியாக சமைக்கக் கூடிய பூரி சமைத்து அவருக்குப் பரிமாறினேன். அவரும் ருசித்துக் கொண்டே சாப்பிட்ட சமயம் என் குழந்தைக்கும் ஊட்டிவிட்டு எனக்கும் ஊட்டிவிட்டு என்னை சந்தோஷக் கடலில் ஆழ்த்தினார். அதன் பின்னர் வழக்கம் போல அவரும் நானும் பாதி பாதி காபி குடித்தோம் அதிலும் எனக்கு எல்லையில்லா சந்தோஷம். பின்னர் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அவரிடத்தில் சென்ற வாரம் கோயிலுக்குப் போயிருந்த சமயம் ஒரு சித்தர் போன்ற ஜடாமுடியுடன் கூடிய ஒருவர் என்னை அழைத்து அவராகவே சொன்ன வார்த்தைகள் சொல்லலாமா எனக் கேட்டேன். அவர் ஆவலுடன் கேட்ட சமயம் அவர் சொன்ன வார்த்தைகளை அப்படியே சொன்னேன். அது என்னவெனில் புடிச்சது கிடைக்காது. கிடைச்சது புடிக்காது. தொடவும் முடியாது. விடவும் முடியாது. அப்போது என் கணவர் பக்கத்தில் இருந்ததால் மேற்கொண்டு அவர் விளக்கமாக எதுவும் சொல்லவில்லை எனத் தெரிவித்தேன். அதற்கு அவர் விளக்கம் அளித்தார். இந்த ஏழெட்டு வார்த்தைகளில் நம் இருவருடைய கடந்த காலத்தைப் பற்றியும் நிகழ்காலத்தைப் பற்றியும் எதிர் காலத்தைப் பற்றியும் இவ்வளவு தெளிவாக ஜாடையாக சொல்லியிருக்கின்றார் என்பதனை அவர் சொல்லத்தான் நான் அறிந்து கொண்டேன்.
நான் அவரிடத்தில் திருமணத்தில் நான் கலந்து கொள்ளாவிட்டாலும் கூட என்னுடைய எண்ணங்கள் முழுதும் உங்களைப் பற்றித் தான் இருக்கும் என்று சொல்லிவிட்டு அண்ணனும் அண்ணியும் கூட வருகின்றார்களா எனக் கேட்டதற்கு அவர்கள் இங்கேயே தீபாவளி கொண்டாடி முடித்து விட்டு பின்னர் தான் வருகின்றார்கள் எனத் தெரிவித்தார். இந்த வருடமாவது நீங்கள் பழையனவற்றை நினைத்துப் பார்க்காமல் சந்தோஷமாக தீபாவளி கொண்டாட முயற்சி செய்யுங்கள். நான் நீங்கள் எடுத்துக் கொடுத்து இருக்கும் சேலையினைத் தான் கட்டிக் கொள்ளப் போகிறேன் என்று தெரிவித்தேன்.
திருமணம் முடிந்து இங்கு திரும்பியவுடன் அலுவலக நண்பர்களுக்கும் அலுவலகத் தோழியர்க்கும் மற்றும் இங்கு அறிமுகமாகி உள்ளவர்களுக்கும் வரவேற்பு வைக்கும் சமயம் நேரில் வந்து தெரிவிப்பதாக கூறினார். நானும் சரியென ஒப்புக் கொண்டேன்.
அவர் என்னிடம் சென்று வருகிறேன் என்று கேட்ட சமயம் நான் அழுது விட்டேன். அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவர் கால்கள் முன்னே செல்ல கண்கள் என்னைப் பார்த்தவண்ணம் விலகல் பெருகிக் கொண்டே சென்று தெருமுனையில் திரும்பியவுடன் அவர் என் கண்களிலிருந்து மறைந்து விட்டார். ஆனால் என்னுடைய இதயம் ஏங்க ஆரம்பித்து விட்டது.
மீண்டும் வருமா வசந்தம்?