முதல் அறிமுகம்
வளர்பிறையில் வந்த சுப முகூர்த்த நாளன்று அதிகாலையில் நானும் என் குடும்பத்தாரும் சூரிய உதயத்திற்கு முன்னர் பிரம்ம முகூர்த்த வேளையில் பால் காய்ச்சி குடியேறினோம்.
சொந்தமாக வீடு கட்டி குடியேறினால் கிரஹப் பிரவேசமாக இருக்கும். ஆனால் வாடகை வீட்டில் தான் குடியேறினோம்.
நாம் குடிபுகுந்த வீடு பத்துக்கு மேற்பட்ட எதிர் எதிர் வீடுகளைக் கொண்ட ஒரு காம்பவுண்ட் ஆகும். எனவே பால் காய்ச்சுவதற்கு அந்த காம்பவுண்டிற்குள் உள்ள மற்ற குடியிருப்போரையும் என் குடும்பத்தினர் முன் கூட்டியே அழைத்து இருந்தார்கள்.
எங்கள் குடும்பத்தினர் அழைப்பை ஏற்று அந்த காம்பவுண்டில் உள்ள பெரியவர்கள் வருவதற்கு முன்னர் எனக்குச் சமமான வயதுடைய நான்கைந்து ஆண்களும் நான்கைந்து பெண்களும் வருகை தந்தனர். அனைவரையும் வரவேற்று அமருமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால் யாரும் அமரவில்லை. அனைவரும் நாங்கள் வைத்திருந்த கடவுள் படத்தினைப் பார்த்து இருகரம் கூப்பி வழிபாடு செய்தனர்.
அதன் பின்னர் நான் அனைவருக்கும் பருகுவதற்குப் பால் கொடுத்து பூஜை பிரசாதங்களை கொடுத்தேன். அனைவரும் தேங்காய் மற்றும் வாழைப் பழத்தை தட்டிலிருந்து எடுத்துக் கொண்டனர். விபூதி குங்குமம் பூசிக் கொண்டனர் ஒருவரைத் தவிர.
அவருக்கு மட்டும் நான் தேங்காய் பழம் என் கைகளால் கொடுத்தேன். பெற்றுக் கொண்டார். விபூதி குங்குமத்தை பூசிக் கொள்ளாமல் தொட்டு மட்டும் விட்டார். அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருப்பாரோ என்னும் சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. அதன் பின்னர் வந்திருந்த அனைவரும் சேர்ந்து ஒன்றாக விடைபெற்று அவரவர் இல்லங்களுக்குத் திரும்பினர்.
அதன் பின்னர் ஒருவர் பின் ஒருவராக வீட்டிலிருந்த பெரியவர்கள் வந்து சென்றனர்.
பழைய வீட்டிலிருந்து அனைத்து ஜாமான்களையும் புதிய வீட்டிற்குக் கொண்டு வந்து அந்தந்த இடங்களில் வைத்து முடித்தோம்.
மாலையில் வீட்டிற்கு முன்னர் உள்ள மிக நீண்ட திண்ணையில் எதிர் எதிரே அனைவரும் அமர்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.
அதனைப் பார்த்த எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது வரையில் பேச்சுத் துணைக்கு ஆள் கிடைக்காமல் நம் குடும்பத்தில் உள்ளவர்களுடன் மட்டுமே நான் பேசி வந்தேன். யாராவது உறவினர்கள் வருவார்களேயானால் அவர்களுடன் பேச முடியும். ஆனால் இந்த வீட்டில் என் வயதுடைய ஆண்கள் பெண்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பேசியதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ந்தேன். நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு அரட்டை அடிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டேன்.
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னை அனைவரும் அழைத்து எங்களுடன் பேசுவதற்கு கூச்சப்படக் கூடாது. தைரியமாகப் பேசி கலகலப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்களின் அழைப்பை ஏற்று நானும் அந்த குழுவில் சேர்ந்து கொண்டேன்.
அனைவரது பெயரினையும் தாங்கள் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் நானும் என் பெயர் சொல்லி அறிமுகமானேன்.
முதன் முதலாக நான் அந்த குழுவினரிடம் கேட்ட முதல் கேள்வி. அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா என்பது தான்.
அதற்கு அவர் நேரடியாக பதில் சொல்லவில்லை. ஆனால் மற்றவர்கள் அவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அதைவிட அவருக்கு உழைப்பின் மேல் அதிக நம்பிக்கை. கடவுளை மாத்திரம் கையெடுத்து கும்பிட்டால் சோறு தானாக வந்து விடாது. விடா முயற்சியும் உழைப்பும் இருந்தால் தான் வாழ்க்கை வாழ முடியும் என்பதால் விபூதி குங்குமம் பூசிக் கொள்ளவில்லை என்று சொன்னார்கள். எனக்கு கேட்பதற்கு ஆச்சர்யமாக இருந்தது. அதே நேரத்தில் என் கைகளால் நான் தேங்காய் பழம் கொடுத்த பின்னர் அதனை உண்டதன் நோக்கம் தெரியவில்லை. அது பற்றிக் கேட்க நினைத்தேன்.
அதனை நான் அவரிடமே கேட்டு விட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டது.
பூஜை தட்டிலிருந்து நான் எடுத்துக் கொண்டால் அது பிரசாதம். என் கைகளால் கொடுத்து பெற்றுக் கொண்டால் அது விருந்தோம்பல் அதாவது வரவேற்பு என்றார். இந்த பதில் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
ஒரு சாதாரண விஷயம் இதில் இவ்வளவு அர்த்தம் உள்ளதா என்பதனை நான் யோசித்துப் பார்த்தேன். என்னுடைய யோசனை அவரை என் பக்கம் என் நினைவில் முதல் நாளன்றே நிற்க வைத்தது.