என்னைக் காண என் காதலர் வராத ஏக்கம்
என் காதலி என் தேவதை என்னும் பெயரில் என்னுடைய இதயத்திலே நிரந்தரமாக குடிகொண்டிருக்கும் என் காதலர் என்னுடன் பழகிய நாட்களை நினைவு படுத்தி எழுயதை கண்டு நான் மிகவும் வியந்து போனேன்.
என் மீது எவ்வளவு அக்கரை செலுத்தியுள்ளார். என் மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளார். எனக்காக எதையெல்லாம் விட்டுக் கொடுத்துள்ளார். என்னை எப்படியெல்லாம் ஆச்சரியமூட்டியுள்ளார் என்பதனை எண்ணும் போது அவரது பிரிவு எனக்கு சுகமான சோகங்களாக இருக்கின்றது.
இன்று வரையில் நான் எனது மனதில் உள்ள சோகங்களை வெளிக் காட்டாமல் வெளியிலே சிரித்துக் கொண்டும் உள்ளே அவரை கணவராக அடைய முடியவில்லையே என்ற காரணத்தால் அழுது கொண்டும் தான் இருக்கின்றேன்.
என்னுடைய கண்களின் சுரக்கும் கண்ணீர் என்னுடைய கண்கள் இறுதியாக மூடும் வரையில் அப்படியே தான் வெளி உலகத்திற்கு தெரியாமல் நிலைத்திருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
எனது குடும்பத்தார் செய்த தவறுக்காக அவற்றை பெரிது படுத்தாமல் என்னை அடைய வேண்டும் என்று துடித்ததும், என்னை அடைய முடியாத நிலையில் எனது திருமணத்திற்குப் பின்னர் நான் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்பதனை மனதில் கொண்டு என்மீது அன்பு செலுத்தி என்னுடைய கடமைகள் அனைத்தையும் முடிக்கும் வரையில் எனக்கு என் கணவர் இருந்த போதும் என் கணவர் மறைந்த போதும் ஒத்தாசையாக இருந்து வந்ததும் அவ்வப்போது அறிவுறைகள் வழங்கி வந்ததையும் நினைக்கும் போது எனக்கு ஒரு பக்கம் கவலையாகவும் மறு பக்கம் சந்தோஷமாகவும் இருக்கின்றது.
அவர் இனிமேல் என்னுடைய வருகை குறையும் என்று தான் சொன்னார். நானும் அதனை முழுமையாக நம்பி விட்டேன். வருடத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை அவருடன் சிறிது நேரம் உரையாடினால் கூட என்னுடைய மனம் சற்று கவலைகளை மறந்து ஆறுதலடையும். ஆனால் அவர் சொன்ன படி என்னைக் காண வரவில்லை என்பது எனக்கு மிகுந்த மன வேதனையையும் ஏமாற்றத்தையும் கொடுத்துக் கொண்டு என்னை தினமும் நினைக்க வைத்து துன்பத்தில் ஆழ்த்திக் கொண்டு தான் இருக்கின்றது.
அவர் என்னுடன் தனிமையில் மனம் விட்டு உரையாட முடியாது என்னும் காரணத்துக்காக அவர் என்னைப் பார்க்க வருவதையே நிறுத்திக் கொண்டார்.
அதற்கு ஒரே காரணம் நாங்கள் புதிதாக கட்டி குடிபோகும் வீட்டு விலாசத்தினைன அவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. வீடு குடி போகும் போது அவர் வரும் சமயம் சொல்லி அழைத்து விடலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் கிரஹப் பிரவேசத்தின் போது பத்திரிக்கை அனுப்ப எனது வாரிசுகள் மறந்து விட்டனர். நானாக முன் வந்து சொல்ல எனக்கு மிக்க தயக்கம். ஏனெனில் எங்கள் நெருக்கமான உறவு அவர்களுக்கு தெரியக் கூடாது என்று நான் கருதியது. நாங்கள் புதிதாகக் கட்டி குடியேறியுள்ள வீட்டு விலாசத்தை முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் கட்டாயம் ஒரு முறையாவது எங்களுடைய புதிய வீட்டிற்கு வந்து என்னை சந்தோஷப் படுத்தியிருப்பார்.
மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர் என் வீட்டிற்கு வந்து நேரில் சந்தித்த சமயம் எனக்கு ஆனந்தம் தாங்கவில்லை. ஆனாலும் இத்தனை நாள் என்னைப் பார்க்க வராமல் ஏன் இருந்தீர்கள் என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. நான் அவரிடம் பேசுமுன்னர் அவரிடம் கேட்ட முதல் கேள்வி. இத்தனை நாள் என்னை மறந்து ஏன் இருந்தீர்கள் என்பது தான். அதற்கு அவர் சொன்ன பதில் எனக்கு திருப்தியளிக்கவில்லை. என்றாலும் இத்தனை நாள் கழித்து வந்தவரை வரவேற்று உபசரிக்க வேண்டும் என்று என் மனம் துடித்தது.
அவர் எங்கே உனது சம்மந்தி எனக்கேட்டதற்கு அவர்கள் ஒரு வருடத்திற்கு முன்னர் காலமாகி விட்டார்கள் என்று சொன்னபோது அவர் முகம் சற்று வாடியது. மகன் மருமகள் பேரன் பேத்திகளைப் பற்றிக் கேட்ட போது அவர்கள் சம்மந்தி வீட்டிற்கு போயிருப்பதாகவும் வருவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகும் என்றும் கூறினேன்.
அவர் நீ தனிமையிலா இருக்கின்றாய் என்று கேட்டு பயமாக இல்லையா என்றார். அந்த நேரத்தில் இத்தனை வருடங்கள் ஆகியும் நான் தனிமையில் இருந்தால் பயந்து விடுவேன் என்று என் மீது அக்கரை காட்டுவது என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது. இன்னமும் கூட அவர் இரட்டை சடை பின்னலுடன் தான் என்னை கற்பனை செய்து வருகின்றார் என்பது நினைக்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கின்றது
நான் சற்று மௌனமாக இருந்தேன்.
அப்போது அவர் தனது நினைவுகளை வலைப்பதிவாக வெளியிட்டு இருப்பதைப் பற்றித் தெரிவித்தார். அதற்கு நான் நான் தவறாமல் படித்து வந்தேன். பதிவுகள் இல்லாத நாட்களில் நான் உங்களது உடல் நலம் ஏதேனும் பாதிக்கப் பட்டிருக்குமோ என்பது குறித்து மிகவும் கவலைப் படுவேன். ஆனால் அடுத்த வலைப் பதிவு வந்தவுடன் அந்த கவலைகள் குறைந்து விடும்.
அவர் எனக்காகத் துடித்த பல சந்தர்ப்பங்களை அவர் எழுத விட்டிருந்தாலும் அல்லது மறந்திருந்தாலும் அல்லது மறைத்திருந்தாலும் அவற்றையும் கூட நான் நினைவு படுத்தி எழுதவேண்டும் என்னும் ஆர்வத்தில் அவரைப் போலவே நானும் எழுத முடிவு செய்து நானும் எனக்காக வலைப்பதிவுகளை ஏற்கனவே எழுத ஆரம்பித்து விட்டேன்.
நான் அவர் அளவிற்கு கல்வியறிவு இல்லாத காரணத்தால் அவரிடமே கொடுத்து என்னுடைய பதிவுகளை வலைப் பதிவில் இடுகை செய்யுமாறு கேட்டுக் கொள்வது என்று தயாராக வைத்திருந்தேன்.
அதனை அவரிடம் கொடுத்த சமயம் என்ன இது என்று கேட்டார். உள்ளே பாருங்கள் என்னுடைய இதயம் இருக்கின்றது என்றேன்.
நான் எழுதியிருந்த நோட்டினை அவர் பெற்றுக் கொள்ளும் சமயம் அவர் நான்கைந்து பக்கங்கள் வரையில் சுவாரஸ்யமாக படித்துப் பார்த்து விட்டு விரைவில் இவற்றினை வெளியிடுகின்றேன் என்று ஒப்புக் கொண்டார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர் என்னைச் சந்திக்க வந்த காரணத்தால் அவருக்கு விருந்து படைக்க ஆசைப்பட்டேன். அவர் அதற்கு நேரமில்லை. வெறும் பானம் மட்டும் போதும் என்று சொன்னார்.
நானும் மேற்கொண்டு வற்புறுத்தாது பானம் கொடுத்த போது வழக்கம் போல் பாதி குடித்து விட்டு மீதியை என்னிடம் கொடுத்த போது நான் சந்தோஷத்தில் என்னுடைய உயிர் இப்போதே பிரிய வேண்டும் போல் இருக்கின்றது என்றேன்.
அதற்கு அவர் இந்த ஜென்மத்தில் நாம் இருவரும் கணவன் மனைவியாக வாழ இறைவன் அருள் புரியவில்லை. அடுத்த ஜென்மத்தில் அந்த வாய்ப்பு வேண்டுமெனில் இந்துமத கலாச்சாரப்படி மனைவிக்கான வயது கணவனின் வயதைவிட குறைவாக இருக்க வேண்டும். உன் உயிர் இப்போது பிரிந்தால் அடுத்த ஜென்மத்தில் நீ ஆணாகப் பிறந்து நான் பெண்ணாகப் பிறந்தால் தான் நாம் இருவரும் மணமுடிக்க முடியும். இல்லையெனில் என் உயிர் பிரிந்த பின்னர் உன் உயிர் பிரிய வேண்டும். அப்போது தான் அடுத்த ஜென்மத்தில் நான் முன்னால் பிறந்து நீ பின்னால் பிறந்து என்னை மணமுடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதற்காக காத்திருந்து தான் ஆக வேண்டும் என்றார். என்னால் எதுவும் பேச முடியவில்லை.
என் கழுத்தில் உள்ள அவர் முதன் முதலாக பரிசளித்த ஆலிலைக் கிருஷ்ணன் அவதாரம் பற்றிய கதையை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தினார்.
நான் ஒன்று நினைத்தால் அவர் ஒன்று சொல்கின்றார். அவர் சொல்வது சரியா தவறா என்று சிந்தித்து அவர் சொன்னது தான் சரி என்பது எனக்குப் புரிய இரண்டு மூன்று நாட்கள் ஆனது.
நான் சொல்லச் சொல்ல அவர் தன் கரங்களால் எழுதி என்னித்தில் மிக மிக அருகே அமர்ந்து இருவரும் சேர்ந்து படித்துப் பார்த்து எனக்குப் பிடித்த பின்னர் மேலே உள்ள வலைப்பதிவு பிரசுரமாகின்றது. இனி வருங்காலங்களில் நான் எழுதிக் கொடுத்தவை பிரசுரமாகும் என்பதனை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் இருவருக்கும் மிக்க மகிழ்ச்சி.
நான் எழுதிய எனது நினைவலைகள் விரைவில் அவரால் வெளியிடப்படும் என்னும் நம்பிக்கையிடன் ஆவலாக காத்து இருக்கின்றேன். காரணம் என்னுடைய நினைவலைகளை அவர் வெளியிடும் சமயம் என்னுடைய கடந்த கால உண்மை மன நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதனை அவர் கட்டாயம் அறிந்து கொள்வார் வலைப்பதிவு வாசகர்களுடன்.
கீழே உள்ள இணைப்பினை கிளிக் செய்து "என் காதலி என் தேவதை" நினைவலைகளை காணுங்கள்