பொங்கல் பண்டிகை
என்னிடத்தில் வந்து அமர்ந்ததும் நான் எழுவதற்கு கஷ்டப் படுவதைக் கண்டு கஷ்டப் பட வேண்டாமே என்று அன்புடன் சொன்னார்கள். இருந்தாலும் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. நான் எழுந்து அமர்ந்தவுடன் பிறந்த குழந்தைக்கு தீட்டுக் கழித்து பொட்டு வைத்து விட்டீர்களா எனக் கேட்டு நான் பதில் சொல்லும் சமயம் என்னுடைய தாயாரின் மறைவினைப் பற்றி சொல்ல வேண்டியதாயிற்று. தங்கை எங்கு இருக்கின்றார் என்பதே தெரியாமல் தலைமறைவாகி விட்டார். தாயும் உயிருடன் இல்லை. இதனை அறிந்தவுடன் மிகவும் வருத்தப் பட்டார்கள். என் கணவரிடத்தில் அனுமதி பெற்று எனக்குப் பிறந்த குழந்தைக்கு தமது செலவில் புத்தாடைகள் வாங்கி வருமாறு சொல்லி தமது மகனை அனுப்பினார்கள்.
அவரும் உடனடியாகச் சென்று பிறந்த குழந்தைக்கு மாத்திரம் புத்தாடை வாங்கி வந்தால் என்னுடைய செல்லப் பெண் வருத்தப் படுவாள் என்பதனை மனதில் கொண்டு இரண்டு குழந்தைகளுக்கும் புத்தாடைகள் வாங்கி வந்தார். குழந்தையினை குளிப்பாட்டி பொட்டு வைத்து என்னையும் புத்தாடை உடுத்திக் கொள்ளச் சொல்லி என்னை போபாவில் அமர வைத்து என் கைகளில் குழந்தையைக் கொடுத்து திருஷ்டி கழித்த சமயம் இவ்வாறாக அன்பு செலுத்தும் ஒருவருக்கு நான் மருமகளாக அமைய கொடுத்து வைக்கவில்லையே என எண்ணினேன்.
அவருக்கும் எனக்கும் ஒரே மாதத்தில் குழந்தைகள் பிறந்ததை நினைத்து நான் மிகவும் சந்தோஷப் பட்டேன். அதனை விட சந்தோஷம் அவரது தாயார் அவரது சொந்த பேத்திக்கு தீட்டுக் கழித்து பொட்டு வைத்த அதே கரங்களால் என்னுடைய குழந்தைக்கும் தீட்டுக் கழித்து பொட்டு வைத்தது. அதனை விட சந்தோஷம் நான் எந்த வீட்டுக்கு மருமகளாகப் போனாலும் அவருடைய மருமகள் போலத் தான் பாவிப்பேன் என்று சொன்னது. குழந்தை பிறந்த பின்னர் முதலாவது சேலை அவர் வாங்கிக் கொடுத்தது. பிறந்துள்ள குழந்தைக்கு போடுகின்ற முதலாவது புத்தாடை அவர் வாங்கிக் கொடுத்தது. இரண்டு பேர் மட்டும் புத்தாடை உடுத்தினால் பெண் குழந்தை வருத்தப் படும் என்பதற்காக அவளுக்கும் புத்தாடை அத்தனையும் அவருடைய தாயார் அவரிடத்தில் சொல்லி அவருடைய செலவில் வாங்கி வந்தது.
உறவு விட்டுப் போனாலும் பாசம் விட்டுப் போகவில்லை என்பதற்கு இது தான் அடையாளம். அவருடைய தாயரிடத்தில் பொங்கல் விடுமுறையில் அவரை என்னுடைய வீட்டிற்கு கட்டாயம் வரச் சொல்லுங்கள் எனச் சொன்ன சமயம் அவர் என்னுடைய எண்ணங்களை அறிந்து கொண்டார்.
போகிப் பண்டிகை பொங்கல் பண்டிகை மாட்டுப் பொங்கல் திருவள்ளுவர் தினம் மற்றும் சனி ஞாயிறு என ஆறு நாட்கள் தொடர்ந்து விடுமுறை நாட்கள். அந்த நாட்களில் ஹோட்டல்கள் அனைத்தும் மூடியிருக்கும். எனவே வெளியில் எங்கும் சாப்பிட முடியாது. எங்கேனும் வீட்டிற்குச் சென்றால் தான் சாப்பிட முடியும். ஒன்று தாய் வீடு அல்லது மாமனார் வீடு. தனக்கு குழந்தை பிறந்திருப்பதாலும் குழந்தையும் மனைவியும் மாமனார் வீட்டில் இருப்பதாலும் கட்டாயம் விடுமுறை நாட்களில் அவர் தமது குழந்தையைக் காண மாமனார் வீட்டுக்கு வரும் சமயம் என்னுடைய வீட்டுக்கும் வருவார் என்பது நிச்சயம். ஆனால் எப்போது என்னுடைய இல்லத்திற்கு வருவார் என்பது தான் தெரியவில்லை.
போகிப் பண்டிகையன்று அவர் வந்து இறங்கியிருப்பார் என நான் எண்ணத் தொடங்கினேன். பொங்கல் விடுமுறையில் கட்டாயம் வந்து செல்லுமாறு சொன்னதை கேட்டுச் சென்றுள்ளார். எனவே கட்டாயம் பொங்கலுக்கு என்னுடைய இல்லத்திற்கு வருகை தருவார் என உறுதியாக இருந்தேன்.
என் கணவரிடத்தில் காலையில் சீக்கிரம் எழுந்தால் தைப் பொங்கல் தினத்தன்று பொங்கல் வைத்து முடித்து விடலாம் என சொன்னதற்கு மாலையில் பொங்கல் வைக்கலாம் எனச் சொன்னார். எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் காட்டிக் கொள்ளவில்லை. காரணம் அவரால் காலையில் வர முடியாவிட்டால் மாலையில் கட்டாயம் வருகை தருவார். நானும் என் கையால் பொங்கல் வைத்து அவருக்குக் கொடுக்க முடியும்.
காலையில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் மிக அருகில் உள்ள கடைக்குச் சென்று வாங்கி வந்தேன். பகல் உணவினை முடித்து விட்டு சற்று நேரம் ஓய்வு எடுத்து இரண்டு குழந்தைகளையும் குளிப்பாட்டி தயார் செய்தேன். மாலையில் சுமார் 5.00 மணிக்கு பொங்கல் வைக்கத் தயாரானேன்.
பொங்கல் பானையை அடுப்பில் வைத்து பால் பொங்கி வரும் சமயத்தில் பொங்கலோ பொங்கல் எனச் சொல்லும் வேளையில் கூட சேர்ந்து ஒரு குரல் கேட்டது. ஆம் அவர் தான் வந்திருக்கின்றார். எனது செல்லப் பெண் அவரிடத்தில் எங்க வீட்டிலே பொங்கல் என மழலை மொழியில் சொன்னது. அதற்கு அவர் சிரித்துக் கொண்டே அப்படீன்னா சாக்லெட் வேண்டாம் தானே என்றார்.
அதற்கு என் செல்லப் பெண் பொங்கல் செய்ய லேட் ஆகும் எனவே எனக்கு இப்போ சாக்லெட் வேணும் எனக் கேட்டு வாங்கிச் சாப்பிடடாள். அதன் பின்னர் அவர் தனது கரங்களால் சாக்லெட்டை நன்றாக நசுக்கி விட்டு எனக்கு புதிதாகப் பிறந்துள்ள குழந்தையின் நாக்கில் மிக மிகச் சிறிய துண்டினை வைத்தவுடன் சப்புக் கொட்டி ருசித்த சப்தம் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. ஆமாம் என் குழந்தைகளுக்கு எதுவாக இருந்தாலும் அவர் தான் ஆரம்பித்து வைக்க வேண்டும. காரணம் நான் அவரை மணந்து கொண்டு குழந்தைகள் அவருக்குப் பிறந்திருக்க வேண்டும். ஆனால் விதி சதி செய்து விட்டது.
அந்த சமயத்தில் அவர் சென்று வருகிறேன் எனச் சொன்ன சமயம் என் கணவர் இங்கேயே இருந்து பொங்கல் சாப்பிட்டு விட்டு பின்னர் தான் செல்ல வேண்டும் என்று சொன்னார். இவ்வாறு அவர் தன் வாயால் சொல்ல வேண்டும் என்னும் எண்ணத்தில் தான் அவர் விடை பெற்றாரே தவிர உண்மையாக புறப்படுகின்ற எண்ணம் அவரிடத்தில் கொஞ்சம் கூட கிடையாது என்பது நம் இருவருக்கு மட்டுமே தெரியும்.
நான் அவரிடத்தில் உங்கள் வீட்டில் பொங்கல் முடிந்து விட்டதா எனக் கேட்டதற்கு அதிகாலையிலேயே பொங்கல் படைத்து விட்டு குழந்தையை கோயிலுக்கு அழைத்துச் சென்று வந்தோம். கோவிலில் அதிகமான கூட்டம் இருந்தது. இருந்தாலும் நான் சிறப்பு அனுமதி பெற்ற காரணத்தால் சீக்கிரம் தரிசனம் முடித்து விட்டு வீடு திரும்பினோம் எனச் சொன்னார்.
இதனிடையே தைப் பொங்கல் தயாராகி விட்டது. வழக்கம் போல் பூஜைகளை நான் முடித்தேன். அதன் பின்னர் அவருக்கும் என் கணவருக்கும் என் செல்லப் பெண்ணுக்கும் பொங்கல் பரிமாறினேன். அவர்கள் பொங்கல் சாப்பிட்டு முடித்தவுடன் இரவு டிபன் எங்கள் வீட்டில் தான் எனச் சொன்னதற்கு இன்னொரு நாள் வருவதாகத் தெரிவித்தார்.
நான் மிகவும் கட்டாயப் படுத்தி இரவு டிபன் சாப்பிட்டு விட்டுத் தான் செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டு சீக்கிரமாக டிபன் தயார் செய்து அனைவருக்கும் பரிமாறினேன். என் கையால் இந்த ஆண்டு முதல் முறையாக டிபன் சாப்பிட்டுள்ளார். எனக்கு மிக்க சந்தோஷம்.
அவர் சென்று வருகிறேன் எனச் சொல்லி புறப்பட்ட சமயம் எத்தனை நாள் லீவு எப்போது ஊருக்கு திரும்பிச் செல்வீர்கள் எனக் கேட்டதற்கு 6 நாள் லீவு என்று இன்னும் நான்கு நாட்கள் கழித்து புறப்பட இருப்பதாகவும் சொன்னார். நான் இடையில் ஒரு முறை வர முடியுமா எனக் கேட்டதற்கு நிறைய நண்பர்களையும் உறவினர்களையும் காண வேண்டி இருப்பதால் அடுத்த முறை வரும் சமயம் வருகின்றேன் எனச் சொன்னார்.
அச்சமயம் என் கணவர் எப்போது எனக் கேட்டதற்கு அலுவலகப் பணிகளின் காரணமாக எப்போது வர முடியும் என்று சொல்ல முடியாது. வந்தாலும் ஒரே நாளில் திரும்புவது போல் வந்து செல்வேன் அப்போது இங்கு வர இயலாது எனத் தெரிவித்தார்.
அச்சமயம் இந்தாண்டு தீபாவளி இங்கு தானே அப்போது வாருங்கள் எனக் கேட்டுக் கொண்டேன். அவரும் சரியென ஒப்புக் கொண்டார். அவர் என்னிடம் விடை பெற்றுச் சென்ற பின்னர் வழக்கம் போல் எனது எண்ணங்கள் தீபாவளி எப்போது வரும் என எண்ணி ஏங்க ஆரம்பித்து விட்டன.
இரவு நேரங்களில் குழந்தையை தாய்ப் பாலூட்டி கவனிக்க வேண்டி இருந்ததாலும் அவரது நினைவு என்னை வாட்டியதாலும் வழக்கம் போல் தூக்கமின்மை என்னை நீண்ட நாட்கள் வாட்டியது. ஆனால் தற்போது அவரது ஏக்கம் மட்டுமே இருக்கின்றதே தவிர கண்ணீர் இல்லை.