முதன் முறையாக அவரது தாயாரை சந்தித்தது
அன்று வெள்ளிக் கிழமை. நான் என் தங்கையுடன் இளஞ்சிவப்பு நிற தாவணி ரவிக்கை மற்றும் மஞசள் நிறத்தில் பாவாடையுடன் கோயிலுக்குப் புறப்பட்டேன். அது அவர் பள்ளிக்குச் செல்லும் சமயம்.
நான் கோயிலுக்குப் புறப்பட்ட அதே வேளையில் அவர் எங்களுடன் காம்பவுண்டிலிருந்து வெளியே வந்து எங்களுடன் நடக்க ஆரம்பித்தார். அப்போது எங்கே போகிறீர்கள் என்று தனது கண் ஜாடையினால் என்னிடம் கேட்டார். அப்போது நான் என் தங்கைக்குத் தெரியாமல் கோயிலுக்குப் போகிறோம் என்று சைகை மூலம் தெரிவித்தேன்.
கோயிலுக்கு அவர் படிக்கும் பள்ளியைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். எனவே அவரும் எங்களுடன் நடக்க ஆரம்பித்தார். அப்போது என்னுடைய தங்கை (என்னை விட அதிக வயதுடைய திருமணமானவள்) சைக்கிளை உருட்டிக் கொண்டு ஏன் நடந்து வருகிறீர்கள். நீங்கள் சைக்கிளில் செல்லுங்கள். பள்ளிக்கு நேரமாகி விடும் என்று சொன்னார்கள். அப்போது வேண்டுதலின் காரணமாக பாத யாத்திரையாக அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவதாக என்னுடைய தங்கை அவரிடம் தெரிவித்தார். அதற்கு அவர் இவ்வளவு தூரமா என்று கேட்டது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் அவரது உள் மனது நான் இவ்வளவு தூரம் நடந்து செல்வதை விரும்பவில்லை என்பதனை சூசகமாக தெரிவித்தது.
கோயிலுக்கு நடந்து சென்று வந்த பின்னர் காம்பவுண்டில் உள்ள அனைவருக்கும் பிரசாதம் கொடுக்கும் பொருட்டு அனைவர் வீட்டிற்கும் சென்றேன்.
அவர் வீட்டிற்கு நான் கடைசியாகத் தான் சென்றேன். நான் செல்லும் சமயம் அவரது தந்தை வீட்டில் இல்லை.
அப்போது அவரது தாயார் என்னை வரவேற்று உபசரித்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. என்னை மிகவும் அன்பாக வரவேற்று அருகில் அமர வைத்து எனது பெயர் எனது ஊர் மற்றும் கூட இருப்பவர்களின் உறவு முறை அனைத்தையும் பொறுமையாக கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். நான் மிகவும் அழகாக இருப்பதாகவும் உடுத்தியிருக்கும் ஆடைகள் மிகவும் நேர்த்தியாக இருப்பதாகவும் சொல்லி மிகவும் சந்தோஷப் பட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் எனக்கு எப்படி அவரைப் பிடித்து விட்டதோ அதே போல அவரது தாயாரையும் பிடித்து விட்டது. ஆனால் அவரது தாயார் என் அழகு ஆடைகளைத் தான் பாராட்டினார்களே தவிர என்னைப் பிடித்திருக்கின்றது என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. நான் ஒரு அம்மன் படம் கொடுத்தேன். அந்த படத்தினை அவரது தாயார் அவரிடம் கொடுத்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி.
இருந்தாலும் பரவாயில்லை. தெரிந்தோ தெரியாமலோ அவரது வீட்டிற்கு எல்லோர் வீட்டிற்கும் சென்று முடித்த பின்னர் சென்ற காரணத்தால் அவரது தாயாரிடம் ரொம்ப நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பும் சமயம் நான் அங்கேயே இருந்து விட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்து விட்டது. அவரது தாயாருக்கும் அதே நிலை.
மாலையில் மீண்டும் திண்ணை சபை களை கட்டியது. என்னை காலையில் கோயிலுக்குச் செல்லும் சமயம் பார்த்த காரணத்தால் அதே போல நான் இருப்பேன் மறுபடியும் அதே கோலத்தில் பார்க்க வேண்டும் என்று எனக்காகக் காத்திருந்தார்.
ஆனால் நான் சாதாரண உடையில் சென்றேன். அப்போது உடனிருப்பவர்கள் என்ன இது ஆச்சர்யமாக இருக்கின்றது. நீ இந்த நேரத்தில் இங்கு இருப்பது கஷ்டமாச்சே எப்படி என்று அவரிடம் துருவித் துருவி கேட்டார்கள்.
அதற்கு அவர் சிரித்துக் கொண்டே காலையில் கோயிலுக்குச் செல்லும் சமயம் பார்த்த அந்த கண்கொள்ளாக் காட்சியை சொல்லியே தீருவேன் என்று என்னைப் பற்றி வர்ணிக்க ஆரம்பித்தார்.
கோயிலுக்குச் செல்லும் சமயம் என்னைப் பார்த்ததாகவும் அதன் பின்னர் அவர் பள்ளிக்குச் சென்றதாகவும் பள்ளியில் படிக்கும் சமயம் என்னுடைய அழகு முகம் மற்றும் என்னுடைய ஆடை அலங்காரம் ஆகியவை தான் அவரை ஆட்கொண்டதாகவும் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை எனவும் பேசிக் கொண்டிருந்தார். காலை முதல் மாலை வரையில் பள்ளியில் படிப்பில் கவனம் செலுத்தாமல் பொழுதைக் கழித்து விட்டு மாலையில் இல்லம் திரும்பிய சமயம் அவருடைய விழிகள் என்னைக் காணத் துடித்தன என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.
சற்று நேரத்தில் நான் அங்கு சாதாரண உடையில் இருந்த என்னை எனக்கு மீண்டும் ஒரு முறை காலையில் பார்த்த அந்த உடையில் பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருக்கின்றது
என்று அனைவர் முன்னிலையிலும் அவர் சொன்னார்.
உடனே மற்றவர்கள் அனைவரும் நாங்கள் அனைவரும் பட்டுப் பாவாடை சோளியோடு வரும் சமயம் சோளக் கொல்லை பொம்மை போல இருக்கின்றது என்று கிண்டலடித்து இப்போது இவளுக்கு மட்டும் நன்றாக இருக்கின்றது என்பதற்கான பொருள் அவள் கோபித்துக் கொள்ளக் கூடாது என்பது தானே என்று கேட்டார்கள். உடனே அவர் வேண்டுமானால் அனைவரும் புத்தாடை உடுத்தி வாருங்கள் பார்க்கலாம் என்று சொன்னார்.
அதற்கு அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இது நடக்காத காரியம் என்று சொல்லி படிக்க ஆரம்பித்து விட்டார்கள். அப்போதும் அவர் விடவில்லை. காலையில் நான் எவ்வளவு அழகாக அவரைக் கவர்ந்தேன் என்று சொல்ல ஆரம்பிததார். ஆனால் அவர்கள் யாரும் அவர் பேச்சைக் காதில் வாங்கவில்லை. காரணம் அவர் இதுவரையில் அவர்கள் யாரையும் பாராட்டாமல் என்னை மட்டும் பாராட்டியது. இது பெண்களுக்கே உண்டான குணம். எனக்கும் அவ்வப்போது வரும்.
அதன் பின்னர் அவர் என்னிடம் கண் ஜாடையினால் விடைபெற்று வெளியில் செல்ல முற்பட்டார்.
அவரை நிற்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் காலையில் நான் அவரது தாயாரைப் பார்த்து பிரசாதம் கொடுத்ததாகவும் அவர் என்னை அருகில் அமர வைத்து விசாரித்தது பற்றியும் சொல்ல ஆரம்பித்தேன். அதனை அனைவரும் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். அனைத்தையும் சொல்லி முடித்தவுடன் அவைரும் என்னிடம் அவரது தாயார் தற்போதைகக்கு உனக்கு என்ன உறவு என்று கேட்டு கிண்டலடித்தார்கள். நான் எதுவும் பேசவில்லை.
அவர்களின் பார்வை அவர் பக்கம் திரும்பியது. அவரிடம் உன்னுடைய தாயார் அவளுக்கு என்ன உறவு என்று சொல்ல அவள் மறுத்து விட்டாள். நீயாவது சொல்லலாமா என்று கேட்க ஆரம்பித்தார்கள். இதற்கு மேல் இங்கிருந்தால் மேன் மேலும் கிண்டலடிப்பார்கள் என்பது அறிந்து அவர் உடனே வெளியில் புறப்பட்டு விட்டார்.