திருமண அழைப்பிதழ்.
ஆமணக்கு எண்ணை ஊற்றி தீபம் ஏற்றி அந்த தீபத்தை புகை வரும்படி பெரியதாக எரிய விட்டு ஒரு சுத்தமான தோசைக் கரண்டியில் இரு புறங்களிலும் ஆமணக்கு எண்ணை தடவி எரிந்து கொண்டிருக்கும் தீபத்திற்கு மேல் பிடிக்கும் போது அதிலிருந்து வரும் கருமை நிற புகை அந்தக் கரண்டியில் படிமனாகப் படியும். அந்த கரண்டியில் கருமை நிறத்தில் படியும் படிமனை கண்மை என்று பூசிக் கொள்வார்கள். விளக்கெண்ணை அதாவது ஆமணக்கு எண்ணை உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும் அந்த முறையில் தயாரிக்கப்பட்ட கண்மை கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.
அவருடன் நெருக்கமாக பழகி வரும் சமயம் ஒரு நாள் நான் அவரிடத்தில் உங்களைப் போல நான் தினமும் கண்மை இட்டுக் கொள்ள வேண்டுமா என்று கேட்ட போது அவரது தாயார் திடீரென வந்து விட்டார். உடனே அவரது தாயார் என்னிடத்தில் என்ன என் மகன் கண்களுக்கு மை தீட்டுகின்றானா எனக் கேட்டார். நான் கொஞ்சம் கூட தயங்காமல் ஆமாம் என்றேன். உடனே அவனுக்கு அந்தப் பழக்கம் கிடையாது. எனது வீட்டிலும் கண்மை கிடையாது என்று சொன்னார்கள்.
அதற்கு நான் வீட்டில் கண்மை இல்லாவிட்டால் என்ன? அவரது இடது கண்ணில் கீழ் இமையைப் பாருங்கள் என்றேன். அப்போது தான் அவரது தாயாருக்கு கண்ணுக்கு மை போடுவது போல கருமை நிறத்தில் இடது இமையில் சிறிய அளவிலான மச்சம் இருப்பது தெரிந்தது. என்னுடைய மகனை இவ்வளவு உன்னிப்பாக கவனித்து வரும் நீ தான் அவனுக்கு சரியான வாழ்க்கைத் துணை என்று மனமாற வாழ்த்தினார். ஆனால் வாழ்த்து பலிக்கவில்லை.
இது வரையில் அவருக்கும் எனக்கும் இடையே இருந்த நெருக்கம் கண் இமைகளில் கண்மை இடுவது போல இருந்து வந்தது. தற்போது அவருடைய நிச்சயதார்த்தத்துக்குப் பின்னர் நம்மிடையே இருக்கும் நெருக்கம் கண்மையினை புருவத்திற்கு இடுவது போல சற்று விலகி இருக்கின்றது. அவருடைய திருமணத்திற்குப் பின்னர் நம்மிடையே இருக்கப் போகும் நெருக்கம் கன்னத்திலோ அல்லது உதட்டுக்கு அருகிலோ வைக்கும் திருஷ்டி பொட்டு போல வெகு தூரத்திற்கு மாறிவிடும் போல இருக்கின்றது. வர வர நாம் உபயோகிக்கும் கண்மை கண்ணின் இமைகளிலிருந்து வெகு தூரத்திற்கு விலகி விடுவது போல நான் அவரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பிரிவதனை உணர்கின்றேன்.
இருந்தாலும் அவர் எனக்கு முதன் முதலாக என்னைக் காதலிக்க ஆரம்பித்தவுடன் பிறந்த நாளுக்கு அன்பாகப் பரிசளித்த அந்த ஆலிலைக் கிருஷ்ணன் டாலர் மட்டும் எப்போதும் என் நெஞ்சத்தில் இருக்கின்றது. என் இதயத்திற்குப் பக்கத்தில் அவரது டாலர் இருப்பது போல அவரது இதயத்தில் என்னை வைத்துக் கொள்வார் என்னும் நம்பிக்கை என்னுள் இருக்கின்றது.
அவரது திருமணத்திற்கு இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருக்கின்றது. கீழே காலியாக உள்ள அறையில் வந்து குடியேறுமாறு நான் அழைத்தேன். அவர் ஏற்கவில்லை. என்னிடம் கலந்து ஆலோசிக்காமல் எனது கணவர் நேரடியாக அவரிடத்தில் அடுத்த மாதம் நல்ல நாள் பார்த்து கீழே காலியாக உள்ள போர்ஷனில் குடிவரலாமே எனக் கேட்ட சமயம் அவரிடத்திலும் மறுத்து விட்டார். அவர் கீழே காலியாக உள்ள போர்ஷனுக்கு குடிவந்து விட்டால் நாள் தோறும் நான் அவரைக் காண முடியும். அவ்வாறு அவர் குடி வந்து விட்டால் சொர்க்கமே என்னைத் தேடி வந்தது போல நான் மிகவும் சந்தோஷப் படுவேன். ஆனால் அவர் வர மறுக்கின்றார். என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை.
அடுத்த மாதம் அவர் என்னைத் தேடி வந்த நாளன்று என்னுடைய உறவினர் ஒருவர் திருமணத்திற்காக நான் சொந்த ஊர் சென்று விட்டேன். அவருக்கும் எனக்கும் திருமணம் நடந்திருந்தால் அந்த உறவினர் அவருக்கும் சொந்தமாகி இருப்பார். ஆனால் நாம் இருவரும் பிரிந்து விட்ட நிலையில் அவருக்கு சொந்தங்கள் வேறு எனக்கு சொந்தங்கள் வேறு என்று ஆகி விட்டது.
எனவே என்னோடு அவர் வர முடியாத சூழ்நிலை. உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்ட நேரம் அவர் என்னைத் தேடி வந்திருப்பார் என்னும் எண்ண அலைகள் தான் என்னிடத்தில் இருந்ததே தவிர திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றோம் என்னும் சந்தோஷம் கொஞ்சம் கூட இல்லை. எனக்கே இப்படி என்றால் என்னைத் தேடி வந்திருந்த அவரது நிலை எப்படி இருந்திருக்கும். நாம் ஒன்று நினைக்க கடவுள் ஒன்று நினைத்தது என்பது இது தான்.
அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நெருங்கி விட்டது. அவரது திருமணத்திற்கு முன்னர் அவர் என்னைத் தேடி வருவாரா அல்லது மாட்டாரா என்னும் எண்ணங்கள் என்னிடத்தில் இருந்து கொண்டே இருந்தது.
இந்த மாதம் ஹிந்துக்களின் மிக முக்கியமான பண்டிகை வருகின்றது. இந்த பண்டிகை நாளன்று தான் என்னுடைய தாயார் அவரை வீட்டிலிருந்து வெளியே தள்ளி விட்டு இரத்த காயங்களுடன் அவர் பண்டிகை கூட கொண்டாடாமல் பணியாற்றும் ஊருக்கு திரும்பினார். அவர் ஊருக்கு திரும்பிய மூன்று நாட்களில் எனக்கு கட்டாயத் திருமணம் நடந்தது.
மிகவும் சந்தோஷமாக கொண்டாட வேண்டிய ஒரு பண்டிகை நம் இருவருடைய இல்லற வாழ்க்கைக்கு சாவு மணி அடித்து விட்டது. எல்லோரும் மிக மிக சந்தோஷமாக கொண்டாடும் இந்த பண்டிகை எனக்கு மட்டும் வாழ்நாள் முழுவதும் சோகத்தைக் கொடுத்து விட்டது. எனக்கு மட்டுமல்ல அவருக்கும் தான்.
நான் அவரை விரும்பியதாலோ அல்லது அவர் என்னை விரும்பியதாலோ என்னவோ நம் இருவருக்கும் தீபாவளிப் பண்டிகை முடிந்தவுடன் திருமணம் நடக்கின்றது. எனக்கு தீபாவளிப் பண்டிகை முடிந்த மூன்று நாட்களில் திருமணம் நடந்தது. அவருக்கும் தீபாவளிப் பண்டிகை முடிந்த ஒரு வார காலத்தில் திருமணம் நடக்கின்றது. தீபாவளிக்குப் பின்னர் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளதாக அவர் என் கணவரிடத்தில் தெரிவித்து இருந்தார். எனவே அவர் என்னைப் பார்க்க வருவாரா என்று ஏக்கத்துடனும் வருத்தத்துடனும் நான் காத்திருந்தேன்.
அவர் வந்தவுடன் என்னுடைய செல்லப் பெண் பாபா பாபா என்று சொல்லிக் கொண்டே அவருடைய மடியில் அமர்ந்து கொண்டாள். அதன் பின்னர் பாபா வந்து விட்டார் சீக்கிரம் வா என்று என்னை அழைத்தாள். அவருடன் வந்த அவருடைய அண்ணன் மற்றும் அண்ணி இருவரும் சந்தோஷக் கடலில் மூழ்கினர்.
அவருடைய அண்ணன் மற்றும் அண்ணி இருவருடன் சேர்ந்து அவரது திருமண பத்திரிகையை என்னிடம் அவர் கொடுத்தார். நான் எந்த வித சலனமும் இல்லாமல் அந்த திருமண பத்திரிகையை பெற்றுக் கொண்டேன். அனைவரும் சேர்ந்து என் குடும்பத்தாருடன் திருமண நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று சம்பிரதாயப்படி அழைத்தார்கள்.
அப்போது நான் அவரது அண்ணியை கட்டிப் பிடித்துக் கொண்டு இதுவரை எனக்கு இருந்த ஒரே ஆதரவு இப்போது என்னை விட்டுப் பிரிகின்றது. நான் எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. மாதம் ஒரு முறை வந்தாலும் சில நிமிடங்கள் மாத்திரமே இருவரும் பேசிக் கொண்டு இருந்தாலும் என்னுடைய கவலைகளை மறந்து நடைப் பிணமாக உயிருடன் இருந்தேன். நமது பிரிவுக்கு காரணம் என்னுடைய தாயாரும் இவருடைய தந்தையும் தான் என்று சொன்னது கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.
இப்போது இவருக்கு திருமணம் ஆகி விட்டால் என்னைப் பார்க்க வருவாரா வரமாட்டாரா என்பது தெரியவில்லை. நான் இரண்டு மூன்று மாதங்கள் இவரைப் பார்க்காமல் இருந்தால் எனக்கு பைத்தியமே பிடித்து விடும். மேற்கொண்டு இவர் என்னைப் பார்க்காமல் இருந்தால் நான் உயிருடன் இருப்பேனா என்பது தெரியவில்லை என்று சொன்ன சமயம் என்னை அறியாமலே நான் அழ ஆரமப்பித்து விட்டேன்.
நான் அழுவதைப் பார்த்த என் குழந்தை அம்மா ஏன் அழுற என மழலை மொழியில் கேட்டது. அதற்கு நான் குழந்தையிடம் உனது பாபாவுக்கு கல்யாணம் என்று சொன்னவுடன் குழந்தை அவரிடத்தில் பாபா நீ அம்மாவை கல்யாணம் பண்ணிக்கோ அம்மா அழ மாட்டா என்று சொன்னது கேட்டு அவரது அண்ணன் அண்ணி இருவரும் சோகமாகி விட்டார்கள்.
உடனே எனக்குத் திருமணம் ஆகி விட்டாலும் உன்னைப் பார்க்க வராமல் இருக்க மாட்டேன். கட்டாயம் வந்து பார்ப்பேன். உன்னை விட அழகான தொலைக் காட்சியில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கும் பெண்கள் மற்றும் எனது உடல் நலம் பேணும் பெண்கள் என எத்தனையோ பேர் என்னுடன் பழகிய போது கூட மாதா மாதம் தவறாமல் உன்னை நான் பார்க்க வந்தது போல் திருமணத்திற்குப் பின்னர் கூட நான் உன்னைப் பார்க்க வருவேன் என்று சொல்லி ஆறுதல் கூறினார்.
அப்போது என் செல்லப் பெண் அவரிடத்தில் நீ இங்கேயே இரு போகாத என்று மழலை மொழியில் கேட்டுக் கொண்டது.
நான் என் கவலைகளை அடக்க முடியாமல் அழுது கொண்டே உள்ளே சென்று காப்பி கொண்டு வந்து கொடுத்தேன். அவரது அண்ணன் அண்ணி குடித்து விட்டார்கள். ஆனால் அவர் வழக்கம் போல் பாதி குடித்து விட்டு மீதியை என்னிடத்தில் கொடுத்தார். அதனை வாங்கி பருகிய பின்னர் நான் சற்று சாந்தமடைந்து நம் இருவருக்கும் இடையே உள்ள உறவு இப்படியே என்னுடைய வாழ்நாள் முடியும் வரை தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். நான் சென்ற பின்னர் அழுது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளாதே என்று அவர் எனக்கு அறிவுரை சொன்னார்.
உடனே அவரது அண்ணன் மற்றும் அண்ணி இருவரும் திருமணத்திற்கு எப்போது வருவீர்கள் என்று கேட்டனர். அப்போது நான் என்னுடைய வீட்டில் நடக்கும் விசேஷங்கள் அனைத்தும் இவருடைய ஆலோசனைகளின் படி தான் நடக்கும். இவரைக் கேட்காமல் நான் எதுவும் செய்ய மாட்டேன். இவர் வரவில்லை என்றால் வரும் வரை காத்திருந்து அதன் பின்னர் தான் முடிவு செய்வேன். அதே போல இவருடைய வீட்டில் நடக்கும் அனைத்து சுப நிகழ்ச்சிகளையும் எனக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஆனால் இருவரும் கலந்து கொள்ள மாட்டோம் என்று ஏற்கனவே முடிவெடுத்து விட்டோம்.
காரணம் இவருடைய திருமண நிகழ்ச்சிக்கு வந்தால் நான் மணப் பெண்ணாக அமர முடியவில்லையே என்று நினைத்து கல்யாணப் பந்தலிலேயே அழுது விடுவேன். அதே போல இனிமேல் நடை பெறப் போகின்ற ஒவ்வொரு சுப காரியங்களிலும் நானும் இவரும் சேர்ந்து செய்ய முடியவில்லை என்னும் ஏக்கம் எனக்கு கட்டாயம் ஏற்படும். அதே போலத் தான் இவருக்கும் ஏற்படும். ஆனால் இவர் என் மீது வைத்துள்ள அன்பும் நான் இவர் மீது வைத்துள்ள அன்பும் நம் இருவரது கடைசி மூச்சு வரை தொடரும். யாராலும் எங்களைப் பிரிக்க முடியாது என்று கொன்னேன்.
அப்போது அவருடைய அண்ணி நீங்கள் தான் மருமகளாக வரவேண்டும் என்னும் எண்ணம் இருந்தும் அது நிறைவேறாத காரணத்தால் எனது மாமியாருக்கு உங்களது நிலைமை தெரிந்து உடல் நலம் இல்லாமல் போய் விட்டது. அதற்காகத் தான் அவர் அவரது கடந்த கால உறவுகளை அதாவது உங்களை கட்டாயம் அழைக்க வேண்டும் என்று அன்புக் கட்டளை பிறப்பித்து உள்ளார்கள் என்று சொல்லியதைக் கேட்ட நான் இப்படிப்பட்ட ஒரு நல்ல உள்ளம் படைத்தவர் எனக்கு மாமியாராக வருவதற்கு நான் கொடுத்து வைக்கவில்லை என்று அழுது புலம்பினேன்.
அவர்கள் என்னிடத்தில் திருமணத்திற்கு எப்போது வருவீர்கள் என்று மீண்டும் கேட்ட சமயம் திருமண நாளன்று திருமண மண்டபம் முழுவதும் சந்தோஷத்தால் நிரம்பி வழிந்து ஆனந்தக் கண்ணீராக இருக்கும். இங்கே நான் மட்டும் தனியாக எனது குழந்தையுடன் கண்ணீரும் கம்பலையுமாக சோகமாக அழுது கொண்டே இருப்பேன். அந்த சோகம் எத்தனை நாள் என்னிடத்தில் இருக்கும் என்பதனை என்னால் இப்போது சொல்ல முடியாது என்று சொன்ன சமயம் வெளியில் போயிருந்த என்னுடைய கணவர் உள்ளே நுழைந்தார்.
அவரிடம் மீண்டும் ஒரு திருமண பத்திரிக்கை கொடுத்து அழைத்து விட்டு சற்று நேரத்தில் என்னுடைய இல்லத்திலிருந்து புறப்பட்டனர்.
அவருடைய நிசசயதார்த்தத்துக்குப் பின்னர் அவரை இதுவரையில் தனிமையில் சநதித்து மனம் விட்டு பேச முடியவில்லை என்பதனை நினைக்கும் போது நான் மிகவும் கவலைப் படுகின்றேன். அவர்கள் என் இல்லத்தை விட்டு பறப்பட்டுச் சென்ற நாளன்று இரவு முழுக்க தூக்கம் இல்லாமல் அழுது கொண்டிருந்தேன்.