தாயாரின் முதல் சம்மதம்
எத்தனை பேர் வேண்டுமானாலும் அவருக்கு வலது கரமாக இருக்கலாம். ஆனால் நான் மட்டும் தான் அவருடைய வலக்கரம் பற்றி அவருக்கு வாழ்க்கைத் துணையாக இருக்க வேண்டும் என்று சொல்லி நிறுத்திக் கொண்டேன்.
நான் சொன்ன இந்த வார்த்தைகளுக்கு அவர் இவ்வளவு பெரிய விளக்கம் கொடுப்பார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனது தோழியர் நான் தான் விளக்கம் சொல்ல வேண்டும் என்று கட்டாயப் படுத்தி இருந்தால் நான் தடுமாறி இருப்பேன். நல்ல வேளை அவர் முந்திக் கொண்டார்.
இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம். அவருடைய தாயார் என்னிடம் அன்பாக இருக்கின்றார்கள். என் அழகு மற்றும் ஆடைகளைப் பாராட்டுகின்றாhகள். ஆனால் என்னை பிடித்திருக்கின்றது என்று ஒரு வார்த்தை கூட இதுவரை சொல்லவில்லையே. அவர் என்னை கோயில் குளங்களுக்கு மாத்திரம் துணையாக கூட்டிச் சென்று விட்டு வேறு எதுவும் சொல்லாமல் விட்டு விட்டால் எனது எண்ணங்களின் நிலை என்னவாக இருக்கும்.
அதே போல அவரும் என்னைப் பற்றியும் என்னுடைய எதிர் காலத்தில் நான் அவரோடு இணைவது பற்றியும் கட்டியுள்ள மனக் கோட்டை என்னவாகும் என யோசித்தேன்.
அதனை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆவல் எனக்கு ஏற்பட்டது. மறு நாள் அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது நீங்கள் என்னை நேற்று சொன்னது போல உண்மையிலேயே திருமணம் செய்து கொள்ளப் போகின்றீர்களா அல்லது உங்களது தாயார் சொன்ன அந்த வார்த்தைகளுக்காக இவ்வாறு சொன்னீர்களா என்று தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கின்றது என்று சொன்னேன்.
அதற்கு அவர் உடனடியாக நேரடியாக பதில் சொல்லாமல் அதனையும் தன்னுடைய தாயிடம் கேட்டுச் சொல்கின்றேன் என்று சொல்லியது கண்டு நான் வியந்து போனேன்.
அதன் பின்னர் அவர் நண்பர்களுடன் சுற்றித் திரிய வெளியில் போய் விட்டார். ஆமாம் அவருக்கு நிறைய நண்பர்கள். அவர் தன்னுடைய நண்பர்களுடன் சுற்றித் திரியாத தெருக்கள் இல்லை. விட்டுப் போன சந்து பொந்துகள் கிடையாது. தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார் என்று சொல்வது போல அவரது ஒவ்வொரு நண்பர்களுக்குப் பிடித்தமான இளசுகளைக் காண அனைவரும் செல்லும் சமயம் அவரும் கூட செல்வார். அவருடைய மனதைக் கவர்ந்தவர்கள் யாரேனும் இருப்பார்களா என்பதை எண்ணிப் பார்த்தேன். எனக்கு எந்த ஒரு முடிவும் தெரியவில்லை.
மறு நாள் அனைவரும் வழக்கம் போல் விளையாட ஆரம்பித்து விட்டார்கள். சிறப்பு விருந்தினர்கள் போல என்னையும் அவரையும் நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.
அன்றைய தினம் முந்தைய வாரம் போல் இல்லாமல் வேறு வகையான விளையாட்டுக்கள். அத்தனையும் குதூகலம்.
கடைசியாக சீட்டாட்டம் ஆரம்பித்தார்கள். ஆனால் அவர் அதில் கலந்து கொள்ளவில்லை. காரணம் சீட்டாட்டம் ஆடுவதால் அதற்கு அடிமையாகி விட்டால் அதிலிருந்து மீண்டு வருவது கஷ்டம் என்று ஒதுங்கிக் கொண்டார். எனக்கு நன்றாக சீட்டாட்டம் தெரியும். ஆனால் அவர்கள் அனைவரும் பந்தயம் வைத்து விளையாடினார்கள்.
யார் ஜெயிக்கின்றார்களோ அவர்கள் ஒரு குறிப்பிட்ட சாக்லெட் வாங்கி அனைவருக்கும் கொடுக்க வேண்டும். எனக்கு ஒரே ஆச்சர்யம். அனைவரும் தோற்றுப் போனால் வாங்கி கொடுப்பார்கள். இந்த குழுவில் மாத்திரம் ஜெயித்தால் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பது எதற்கு எனத் தெரியாமல் கேட்டதற்கு ஆட்டத்தில் ஒருவர் மட்டும் ஜெயிக்கும் வரை மற்றவர்கள் காத்திருந்து வெற்றி பெற்றவருக்கு வாழ்த்து சொல்வதால் தான் என்று சொன்னார்கள்.
இருந்தாலும் அவர் என்னைப் பார்த்து ஜெயித்தே ஆக வேண்டும். ஜெயித்து விட்டால் அதற்கான செலவினை நான் ஏற்றுக் கொள்கின்றேன் என்று சொன்னார். ஆனால் நான் கடைசி நேரத்தில் தோற்றுவிட்டேன். இருந்தாலும் கடைசிவரை தாக்குப் பிடித்து விளையாண்டமைக்கு பாராட்டு தெரிவித்தார். கடைசியில் ஜெயித்தவர் அனைவருக்கும் சாக்லெட் கொடுத்தார்.
அந்த சமயம் அவர் விளையாடாத காரணத்தால் அவருக்குக் கொடுக்க முடியாது எனவும் பிரியப்பட்டால் எனக்குக் கொடுக்கப் பட்டதில் பாதியை கொடுக்குமாறும் சொன்னார்கள். நான் எனக்குப் பதிலாக அவர் சாப்பிடுவார் என்று முழுவதையும் கொடுத்ததற்கு அனைவரும் பாதி பாதி தான் இருவரும் பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்று கட்டாயப் படுத்தினார்கள்.
உடனே நான் மட்டும் ஜெயித்து இருந்தால் அவர் தானே எனக்காக முழுவதுமாகச் செலவு செய்து சாக்லெட் வாங்கி கொடுத்து இருப்பார். ஆனால் நான் தோற்று விட்ட ஒரே காரணத்தால் எனக்கும் அவருக்கும் சேர்த்து ஒரே சாக்லெட் கொடுப்பது என்ன நியாயம் என்று கேட்டேன்;.
எனது வாதம் அவர்களிடம் எடுபடாத காரணத்தால் அவர் அந்த சாக்லெட்டினை இரண்டாக தம் கரங்களால் உடைக்க முற்பட்டார். அது சமயம் எல்லோரும் நீ பாதி கடித்து மீதியை அவரிடம் கொடு என்று என்னிடம் சொல்ல நானும் கட்டாயத்தின் பேரில் அப்படியே செய்தேன். இது எனக்கு உள்ளுர முதல் சந்தோஷத்தைத் தந்தது.
இதன் பின்னர் நானும் அவரும் தனியாக இருக்கும் சமயம் என்னைப் பற்றி அவருடைய தாயார் என்ன நினைக்கின்றார்கள் என்பது பற்றி கேட்டேன்.
அவர் தம்முடைய தாயாரிடம் என்னைப் பற்றி பேசியிருக்கின்றார்.
அதற்கு அவருடைய தாயார் அவரிடம் நான் அழகாக இருப்பதாகவும் மிகவும் பிடித்திருப்பதாகவும் தெய்வ பக்கி மிகுந்தவளாக இருப்பதாகவும்; தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு முறை ஏதாவது கோயிலுக்குச் சென்று வரும் சமயம் அவளை மஞ்சள் நிற தாவணி அல்லது மஞ்சள் நிற பாவாடை அல்லது மஞ்சள் நிற ரவிக்கையில் பார்க்கும் சமயம் அவளை முழுவதுமாக மஞ்சள் நிற கூரைப் புடவையுடன் தன் வீட்டிற்கு மருமகளாக அழைத்து வரவேண்டும் என்னும் எண்ணம் தமக்கு வருவதாகவும் அதற்கு அந்த கடவுள் தான் வரமளிக்க வேண்டும் எனவும் தெரிவித்ததாக சொன்னார்.
அதே சமயம் அவரது தந்தை எதற்கெடுத்தாலும் ஜோதிடம் ஜாதகப் பொருத்தம் காசு பணம் கௌரவம் அந்தஸ்து என்று பிடிவாதமாக இருப்பார் என்றும் அவைகள் தடைக் கற்களாக வந்து விடாமல் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்றும் சொன்னதோடு அந்தப் பெண் தனக்கு மருமகளாக அவருக்கு மனைவியாக வந்து விளக்கேற்றுவாளேயானால் மிக்க சந்தோஷம் என்று சொன்னதாக அவர் தெரிவித்தார்.
எது எப்படியோ எனக்கு அவரது தாயாரின் உண்மை நிலை தெரிந்து விட்டதால் மிக மிக சந்தோஷம். அந்த சந்தோஷத்தைக் கொண்டாட நான் என் கையால் பால் பாயாசம் செய்து பூஜை பிரசாதம் என்னும் பெயரில் அனைவருக்கும் பரிமாறினேன் அவருடைய தாயாருக்கும் சேர்த்து.