வளைகாப்பு
சென்ற மாதம் அவரும் அவருடைய பெற்றோரும் எனது வீட்டிற்கு வந்து சென்றதை நினைக்கும் போது எனக்கு எல்லையில்லாத ஆனந்தமாக இருந்தது. அவரது தாயார் எனக்கு ஒரு முறை ஊட்டி விட்டு அவர் ஒரு முறை உண்டதை நினைக்கும் போது நான் ஏன் அவரை மணக்கத் தவறிவிட்டேன் என்னும் கவலைகள் என்னிடம் வளர்ந்து கொண்டே இருந்தன.
அவர் என்னிடம் ஆரம்பத்திலிருந்து எப்படி நடந்து கொண்டாரோ அதில் எந்த வித மாற்றமும் இல்லாமல் தற்போது வரை என் மீது அன்புடன் தான் நடந்து கொண்டு இருக்கின்றார். அவரது பெற்றோர் மற்றும் என் தாயார் ஆகியோர் என்ன சொன்னாலும் கேட்காமல் என்னை மணமுடிக்க தயாராக இருந்துள்ளார் என்பது அவரது தாயாரின் பேச்சின் மூலம் அறிந்து கொண்டேன்.
நாம் இருவரும் சேர்ந்து பல கோயில்களுக்குச் சென்ற பின்னர் கிடைத்த வேலையில் சேர்ந்து கொண்டு முதல் மாதச் சம்பளம் பெற்றவுடன் அவருடைய தந்தையிடம் நம் இருவரின் திருமணத்திற்கு சம்மதம் கேட்டு அவரது தந்தை ஜாதகம் அந்தஸ்து என்று காரணம் காட்டி மறுத்து இருக்கின்றார்.
உடனே என்னை மணப்பதற்காக என்னென்ன முயற்சிகள் மேற் கொள்ள முடியுமோ அத்தனையும் மேற்கொண்டுள்ளார். நம் இருவரது குடும்பத்தாரின் ஒப்புதல் பெறாமலேயே என்னைத் திருமணம் செய்து கொள்ள நான் அனுப்பி வைக்கப் பட்டிருந்த அனைத்து உறவினர் வீடுகளுக்கும் அலைந்து திரிந்து முயற்சித்துள்ளார். ஆனால் அவரால் நான் அனுப்பி வைக்கப் பட்டிருந்த இடத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே அவர் என்னை காந்தர்வ மணம் முடிக்க முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார்.
தீபாவளியன்று என் தாயாரிடம் சம்மதம் கேட்டு அவமானப் பட்டிருக்கின்றார். எப்படியெனில் அவர் என்னுடைய தாயாரிடம் தீபாவளியன்று வந்து என்னை அவருக்கு திருமணம் செய்து வைக்குமாறு வேண்டிய சமயம் என் தாயார் அவரை ரத்த காயம் ஏற்படும் அளவிற்கு நடு ரோட்டில் தள்ளி விட்டு கதவினை தாளிட்டதும் என்னை தனி அறையில் பூட்டி வைத்ததும் அடுத்து வந்த நாட்களில் நான் அவரையோ அல்லது அவரது குடும்பத்தாரையோ சந்திக்க விடாமல் தடுத்ததும் அவசர கோலமாக அவருக்கு ரத்த காயங்கள் குணமாகும் முன்னரே வலுக் கட்டாயமாக என்னை இந்த நரகத்தில் என்னுடைய தாயார் தான் தள்ளி விட்டார்கள் என்பதனை அறிந்து கொண்டேன்.
இந்த நிலையில் நான் அவரிடம் ஆரம்பத்தில் இருந்த தைரியம் போய் விட்;டதா என்றும் கோழையாகி விட்டீர்களா என்றும் கேட்டது என்னைப் பொறுத்த வரையில் மன்னிக்க முடியாத குற்றம் என்று தெரிந்து கொண்டேன்.
அவர் இன்று மதியம் கட்டாயம் வருவார். அவர் வந்தவுடன் அவரிடம் கட்டாயம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு சமையறையில் அவர் வருவதற்கு முன்னர் எல்லா வேலைகளையும் முடிக்க வேண்டும் என்று மும்முரமாக இருந்தேன். அப்போது என்னைத் தொட்டுத் தாலி கட்டிய கணவர் வீட்டில் இருந்தார்.
அவர் எதிர்பாராத வகையில் பிற்பகலுக்குப் பதிலாக முற்பகல் நேரத்திலேயே வந்து விட்டார்.
அவர் வந்த சமயம் வீட்டில் இருந்த என்னைத் தொட்டுத் தாலி கட்டியவர் என்னைப் பெயர் சொல்லி அழைத்து “உன்னைத் தேடி உனக்குத் தெரிந்தவர்” வந்து இருக்கின்றார் என்று சொன்னார்.
வந்திருப்பது யாரோ என்று எட்டிப் பார்த்த சமயம் வந்திருப்பது என்னுடைய இதயத்திற்கு சொந்தக் காரர் என்று தெரிந்து கொண்டு விரைந்து சென்று சோபாவில் அமருமாறு கேட்டுக் கொண்டேன்.
அவர் அமர்ந்தவுடன் அவரைப் பற்றியும் அவர் பணியாற்றும் அலுவலகம் பற்றியும் பார்த்துக் கொண்டிருக்கும் உத்தியோகம் பற்றியும் கேட்டு அறிந்து கொண்டார். அந்த சமயம் நீங்கள் பார்க்கும் உத்தியோகத்திற்கு தமிழ் நாடு முழுவதும் அடிக்கடி சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்குமே எப்படி சமாளிக்கின்றீர்கள் என்று கேட்டார். அவர் அதற்கு பதில் சொல்லிக் கொண்டே இருந்தார். இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டே இருந்தார்கள்.
அவர் வந்திருக்கும் சமயம் என்னுடன் அவரை பேச விடாமல் அவர்கள் இருவர் மட்டும் பேசிக் கொண்டிருப்பது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. எனவே நான் இடையில் புகுந்து உங்களுடைய பெற்றோர் எப்படி இருக்கின்றார்கள் எனக் கேட்டேன்.
அப்போது அவரது பெற்றோர் இந்த ஊருக்கு வந்திருந்த சமயம் அவருக்கு பார்த்து வைத்திருந்த பெண்ணுக்கு வேறு ஒரு இடத்தில் அவசரமாக திருமணம் நடந்து விட்டதை தெரிந்து கொண்ட காரணத்தால் அவருடைய தாயாருக்கு ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக சுமார் பத்து பதினைந்து நாட்கள் உடல் நலம் பாதிக்கப் பட்டு படுக்கையில் இருந்தார்கள் என்றும் குணமான பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி விட்டார்கள் என்றும் தெரிவித்தார். அவர் சொல்வது என்னைப் பற்றித் தான் என்பதை என்னைத் தொட்டுத் தாலி கட்டியவரால் கண்டு பிடிக்க முடியவில்லை.
அதன் பின்னர் அவர் ஊருக்குச் சென்று திரும்பினாரா என்று கேட்டதற்கு ஆம் என்றும் அவரது பெற்றோர் சொந்த வீடு வாங்கிய விவரம் பற்றியும் கேட்டமைக்கு இன்னொரு நாள் சொல்வதாகவும் கூறினார்.
சிறிது நேரத்தில் என் கணவருடன் அவர் பிஸ்கட் சாப்பிட்டு விட்டு காபியினை அவர் முன்னால் எனக்குக் கொடுக்க முடியாமல் பாதியினை குடிக்காமல் வைத்து விட்டு விடை பெற்றுச் சென்றார்.
அவரது பாதி குடித்து விட்டு மீதம் வைத்த காபியினை சமையலறைக்கு எடுத்துச் சென்று குளிர் பானம் போல குடித்து சந்தோஷப் பட்டேன்.
அவரது வருகைக்காக நான் ஏங்கிக் காத்துக் கொண்டிருப்பது 30 நாட்கள். ஆனால் 30 நிமிடங்கள் கூட என்னிடம் அவர் பேச முடியாத சூழ்நிலை. எல்லாம் என் தலை விதி. அடுத்த சந்திப்பிற்கு மீண்டும் ஒரு மாத காலம் காத்திருக்க வேண்டும் என்று நினைத்தாலே எனக்கு மிகுந்த கவலையாக இருந்தது.
அதற்கு அடுத்தபடியாக அவர் எனது வீட்டிற்கு வரும் சமயம் நான் ஐந்து மாதம் கர்ப்பமாகி என் உடல் பருமன் என் வயிற்றில் ஒரு உயிர் உண்டாகி விட்டதை காண்பிக்கும் அளவிற்கு பெருகி இருந்தது.
அப்போது எனக்குத் தாலி கட்டித் திருமணம் செய்து கொண்டவர் என்னிடம் “உன்னைத் தேடி உனக்கு வேண்டியவர்” வந்திருக்கின்றார் என்று சொல்லிக் கொண்டே விடைபெற்றுச் சென்று விட்டார். அவரிடம் வாருங்கள் என்று அழைக்கவோ அமருங்கள் என்று சொல்லவோ இல்லை.
என் கணவர் வெளியில் சென்றவுடன் அவரை நான் சோபாவில் அமரச் சொல்லி விட்டு அவர் அமர்ந்த பின்னர் நான் அவர் அருகே நானும் அமர்ந்து கொணடேன்.
அதன் பின்னர் அவரிடம் என்ன சாப்பிடுகின்றீர்கள் சாப்பாடு தயாராக இருக்கின்றது என்று சொன்ன போது என்னைக் கண்டதும் உன்னுடையவர் உன்னிடம் உனக்கு வேண்டியவர் வந்திருக்கின்றார் என்று சொல்லிக் கொண்டே வெளியில் சென்று இருக்கின்றார். அவர் திரும்பி வரும் சமயம் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் சந்தேகம் மேலும் வலுவடையும் என்று காபி மட்டும் போதும் என்று சொன்ன காரணத்தால் பெரிய டம்ளரில் காபி கொடுத்தேன். வழக்கம் போல் அவர் ஒரு பங்கு சாப்பிட்டு விட்டு எனக்கு இரண்டு பங்கு கொடுத்தார். நான் சந்தோஷமாக பருகினேன்.
அதன் பின்னர் அவர் முதல் முதலாக என்னைப் பார்த்து வேறு எதுவும் பேசாமல் நான் முதல் முறை பார்த்த சமயம் என்னை யாரோ ஒருவர் என்று சொன்னார். இரண்டாம் முறை பார்த்த சமயம் உனக்குத் தெரிந்தவர் என்று சொன்னார். இப்போது தான் மூன்றாவது முறை பார்த்து இருக்கின்றேன். தற்சமயம் உனக்கு வேண்டியவர் என்று சொல்லிச் செல்கின்றார் என்றும் நமது காதல் விஷயம் அவருக்குத் தெரிந்து விட்டதா என்றும் கேட்டார்.
அதற்கு நான் தங்கையின் மகள் திருமணத்திற்குச் சென்று வந்ததிலிருந்து அவருடைய பேச்சு ஒரு மாதிரியாக இருக்கின்றது என்று சொன்னேன். வேறு விவரம் எதுவும் எனக்குத் தெரியாது என்று சொல்லி விட்டேன்.
உடனே அவர் என்னிடம் நமது பழைய கால உறவு முறை பற்றி உன் தாயார் அவரிடம் ஏதேனும் சொன்னார்களா என்று கேட்டதற்கு நான் தெரியாது என்றும் அந்த அளவிற்கு என்னுடைய தாயாருக்கு அவரிடத்தில் என்னைக் காட்டிக் கொடுக்கும் தைரியம் இல்லை என்றும் அவ்வாறு காட்டிக் கொடுத்தால் அவர் என்னை என் தாயார் வீட்டிற்கு வாழா வெட்டியாக அனுப்பி விட்டால் எனக்கு சோறு போடும் வசதி இல்லை என்றும் சொல்லி விட்டேன்.
எனக்கே சோறு போட முடியாத என் தாயார் எனக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு எப்படி சோறு போட முடியும் என்று கேட்டேன்.
எனக்கு ஏதேனும் புளிப்பாக சாப்பிட வேண்டும் போல் இருந்த சமயத்தில் அவர் எனக்காக மாங்காய் கிடைக்கவில்லை என்பதால் வெயிலில் காய வைக்கப்பட்ட மாவடுவினை கொண்டு வந்திருந்தார். நான் இதனை எங்கே வாங்கினீர்கள் என்று கேட்டதற்கு அவர் அவருடன் அருகில் அமர்ந்து பணியாற்றும் பெண்ணிடம் கேட்டு வாங்கி வந்ததாகச் சொன்னார்.
உடனே எனக்கு ஞாபகம் வந்தது அவர் ஒருமுறை அவருக்கு அறிவுறைகள் வழங்கியதாகச் சொன்ன கேரளத்துப் பெண். நான் உடனே கேரளத்துப் பெண் தானே என்று கேட்டதற்கு அவள் அல்ல தற்போது கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு கன்னடத்து ஐயர் பெண் என் அருகில் அமர்ந்து பணியாற்றுகின்றாள். அவள் வீட்டிலிருந்து கொண்டு வந்து கொடுத்தது என்று சொன்னார்.
உடனே அவரிடம் நான் கர்ப்பமாக இருப்பது உங்கள் அலுவலகத்தில் உள்ள இன்னும் எத்தனை பேருக்குத் தெரியும் என்று கேட்டேன். அதற்கு அவர் தன்னுடன் பணியாற்றும் தனக்கு மிகவும் நெருக்கமான தோழிகள் மொத்தம் 40 பேருக்கு தெரியும் என்று சொன்னதைக் கேட்டவுடன் ஆச்சர்யப் பட்டேன்.
அப்போது என்னிடம் ஒரு அட்டைப் பெட்டி கொடுத்தார். என்னவென்று கேட்டேன். திறந்து பார் என்று சொன்னார். நான் என்னவென்று அறிய மிகுந்த ஆவலுடன் திறந்து பார்த்த சமயம் அந்த அட்டைப் பெட்டி நிறைய கண்ணாடி வளையல்கள். எதற்கு என்று கேட்டேன். அதற்கு அவர் என்னுடைய வளை காப்பிற்காக அவரது தோழிகள் அனைவரும் சேர்ந்து வாங்கிக் கொடுத்த பரிசு என்று சொன்னார்.
கர்ப்பமான பெண்கள் வலது பக்கம் திரும்பி படுக்க வேண்டும் அல்லது இடது பக்கம் திரும்பி படுக்க வேண்டும் அல்லது நேராகப் படுக்கலாம் முகம் மற்றும் வயிறு கீழ்ப்பக்கம் வருமேயானால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு அழுத்தத்தைக் கொடுத்து குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வளைகாப்பு அல்லது சீமந்தம் என்னும் பெயரில் நமது முன்னோர்கள் கர்ப்பம் தரித்த ஐந்தாவது அல்லது ஏழாவது மாதங்களில் கண்ணாடி வளையல்களை அணிவிக்கின்றார்கள். அவ்வாறு கண்ணாடி வளையல்களை அணிந்த கர்ப்பிணிப் பெண்கள் ஒவ்வொரு முறை திரும்பி படுக்கும் சமயமும் கண்ணாடி வளையல்கள் ஓசையினை எழுப்பி கருவினை சுமக்கும் பெண்ணுக்கு எச்சரிக்கை செய்யும் எனவே தான் ஹிந்து மதத்தில் நமது முன்னோர்கள் வளைகாப்பு என்னும் சடங்கினை வைத்துள்ளார்கள் என்று அவர் கொண்டு வந்துள்ள வளையல்களுக்கு நீண்டதொரு விளக்கம் அளித்தார்.
அவர் மேலும் தொடர்ந்து சொன்னது என்னவெனில் அடுத்த மாதம் முதலாவது வெள்ளிக் கிழமையன்று உன்னுடைய வளைகாப்பினைக் கொண்டாடும் வகையில் அவருடன் பணியாற்றும் தோழிகள் அனைவரும் கண்ணாடி வளையல்கள் நிறைய அணிந்து கொண்டு அலுவலகம் வருவார்கள் என்பதும் அன்றைய நாளில் அவருக்கு ஸ்பெஷல் டிரீட் கொடுக்கப் போவதாகவும் சொன்னார். இதனைக் கேட்ட நான் சந்தோஷக் கடலில் மூழ்கிப் போனேன்.
இத்தனை பேருடன் வேலை பார்த்தும் கூட என்னை மறக்காமல் என் வீடு தேடி வந்து குறிப்பிட்ட நாளில் என்னை இவ்வளவு தூரம் கவனிக்கின்றார் என்றால் அது தான் உண்மையான காதல் என்பது எனக்கு அப்போது தான் மீண்டும் ஊர்ஜிதமானது.
அப்போது அவர் வளைகாப்பு ஐந்தாம் மாதம் வைக்க வேண்டும் அது எப்போது என்றும் அதில் நான் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பாயா என்று கேட்டார். அதற்கு நான் எனக்கு வளைகாப்பு செய்ய என்னைத் தொட்டுத் தாலி கட்டியவருக்கு விருப்பம் இல்லை. ஏனெனில் பணம் செலவாகி விடும் என்று கருதுகிறார். அதே சமயம் என்னுடைய தாயாரிடம் அந்த அளவிற்கு வசதி கிடையாது என்பது உங்களுக்குத் தெரியும்.
அதற்குப் பின்னர் நான் தொடர்ந்து அவரிடம் சொன்னது இது வரை பிரசவ தேதி எப்போது வரும் என்பதனை எனக்குத் தாலி கட்டியவரோ அல்லது என்னைப் பெற்றவளோ இதுவரை கேட்டுத் தெரிந்து கொள்ள வில்லை அப்படி இருக்கையில் அவர்கள் எப்படி வளை காப்பு பற்றி யோசிப்பார்கள்.
தெருவில் நடந்து சென்றால் எனக்குத் தெரிந்தவர்கள் அனைவரும் வளைகாப்பு எப்போது என்று கேட்பதைக் கேட்க எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கின்றது என்று சொல்லி அவரிடம் வருத்தப் பட்டேன்.
அத்துடன் தற்சமயம் நான் வேலை செய்ய முடியாமல் சிரமப் படுகின்றேன் சிறிது நேரம் வேலை செய்தாலும் கூட களைப்பு வந்து விடுகின்றது. நீங்கள் வரும் சமயம் மாத்திரம் நான் உற்சாகமாக இருக்கின்றேன். நீங்கள் என்னை விட்டுப் பிரிந்தவுடன் நான் சோர்வாகி விடுகின்றேன் என்றும் நீங்கள் வரும் சமயம் மாத்திரம் எனக்கு சந்தோஷம் மற்ற நேரங்களில் சோகம் என்றும் சொல்லி நான் என் அழுகையை அடக்க முடியாமல் அழுது விட்டேன்.
என்னுடைய வளை காப்பிற்கு அவரை அழைக்கும் உத்தேசம் உண்டா மீண்டும் கேட்டார்.
அதற்கு நான் எனக்கு வளைகாப்பு நடத்துவார்கள் என்னும் நம்பிக்கை சுத்தமாக இல்லை. அவ்வாறு எனக்கு வளைகாப்பு நடத்தி வைத்தாலும் கட்டாயம் உங்களை நான் என்னுடைய வளைகாப்பிற்கு வாருங்கள் என்று அழைக்க மாட்டேன் என்று உறுதியாகச் சொன்னேன்.
அவர் உடனே அழைக்காமைக்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா என்று கேட்டார்.
அதற்கு நான் எனது வீட்டில் நடக்கும் அனைத்து சுப காரியங்களையும் உங்களைக் கலந்து ஆலோசிக்காமல் எந்த விதமான முடீவுகளும் எடுக்க மாட்டேன். அதே சமயம் என் வீட்டில் நடக்கும் அனைத்து சுப காரியங்களுக்கும் உங்களை அழைக்காமல் இருக்க மாட்டேன். என்னிடமிருந்து அழைப்பு வரும். ஆனால் அதில் நீங்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டேன் என்று சொன்னேன். அவர் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஏனென்று என்னிடம் கேட்டார்.
நான் உங்களை வளைகாப்பிற்கு அழைத்தேன் என்றால் என் வயிற்றில் உங்கள் கருவினை சுமக்காமல் இருப்பது எனக்கு மிகுந்த வேதனையை தரும். எனக்கு குழந்தை பிறந்த பின்னர் பெயர் சூட்டு விழாவிற்கு அழைத்தால் அந்த குழந்தையை உங்கள் மூலம் பெற்றெடுக்க முடியாத காரணத்தால் நான் வருத்தப்படுவேன்.
இதே போல எதிர் வருங்காலங்களில் எனது மகளுக்கோ அல்லது மகனுக்கோ திருமணம் என்னும் வைபவங்கள் வரும் சமயம் கூட உங்களுக்கு திருமண பத்திரிக்கை மட்டும் அனுப்பி வைப்பேன். ஆனால் நீங்கள் கட்டாயம் வர வேண்டும் என்று எதிர் பார்க்க மாட்டேன்.
அதற்கான காரணம் பெண் குழந்தையாக இருந்தால் நாம் இருவரும் சேர்ந்து கன்னிகாதானம் செய்ய முடியவில்லை என்று கவலைப் படுவேன். ஆண் குழந்தையாக இருந்தால் ஹோமத்தில் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து அமர முடியவில்லை என்று கவலைப் படுவேன். என்னுடைய வீட்டில் நடக்கும் எந்த ஒரு நல்ல காரியத்திலும் நீங்கள் கலந்து கொண்டால் நாம் இருவரும் சேர்ந்து செய்ய முடியவில்லை என்று என் உயிர் என்னை விட்டுப் பிரியும் வரை கவலைப் பட்டுக் கொண்டே இருப்பேன்.
அது மட்டுமல்ல உங்கள் வீட்டில் உங்களுக்குத் திருமணம் நடக்கும் போது கூட நான் மணப் பெண்ணாக அமர முடியவில்லை என்று என்னை அழைத்தால் அந்த கல்யாண மண்டபத்திலேயே நான் கண்ணீர் விட்டு அழுது விடுவேன். உங்களுக்கு குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு திருமணம் போன்ற விழாக்கள் நடைபெறும் சமயம் நாம் இருவரும் சேர்ந்து ஹோமத்தில் அமர முடியவில்லை என்று என்னுடைய வாழ்நாள் முழுவதும் அழுது கொண்டே தான் இருப்பேன்.
எனவே அழைப்புகள் இல்லாமல் எதுவும் நடைபெறாது. ஆனால் எந்த விசேஷங்களிலும் கலந்து கொள்ளாமல் அடுத்த சில தினங்களில் சந்தித்து ஆசி வழங்கினால் போதும் என்று நினைப்பேன் என்று சொல்லும் சமயம் என் கண்களில் பொங்கும் கண்ணீருடன் தேம்பித் தேம்பி அழுது விட்டேன்.
அப்போது அவர் முதல் முறையாக எனக்கு மிக அருகே அமர்ந்து கொண்டு குழந்தை பெற்றெடுக்கும் வரையில் இனிமேல் பழையனவற்றை நினைத்துப் பார்த்து அழவே கூடாது. அவ்வாறு அழுது கொண்டே இருந்தால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் எனவே எப்பொழுதும் சிரித்துக் கொண்டே சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு நான் என்னால் அவ்வாறு இருக்க முடியவில்லை என்று சொன்னதற்கு அப்படியானால் நான் அடிக்கடி வந்தால் கூட என் நினைவு உன்னை பாதிக்கும் என்று கருதி நான் இங்கு வருவதை குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்றார்.
உடனே நான் இனிமேல் எக்காரணம் கொண்டும் அழ மாட்டேன். எப்போதும் சந்தோஷமாக இருப்பேன். தயவு செய்து வந்து செல்வதை மட்டும் நிறுத்தி விடாதீர்கள் என்று கொன்னேன். நான் அவரிடத்தில் சந்தோஷமாக சொல்வது போலத் தோன்றினாலும் என் உள் மனம் அழுது கொண்டு தான் இருந்தது.
அவர் என்னிடமிருந்து விடைபெறும் சமயம் உதட்டினில் பொய்யான புன்னகை. உள்ளத்தில் உண்மையான அழுகை.