நிச்சயதார்த்தம்
எந்தப் பெண்ணைக் காட்டினாலும் விருப்போ வெறுப்போ காட்டாமல் கட்டாயம் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டு வருவேன் என்று என்னிடம் சொல்லி விட்டு அவர் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.
அந்த அளவிற்கு அவர் மன விரக்தி அடைவதற்கு முதல் காரணம் நான் தான். இரண்டாவது அந்த முஸ்லீம் பெண். மூன்றாவது தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் கர்நாடகத்துப் பெண்.
அவருடைய குடும்பத்தாருக்கு அவருக்கும் அந்த முஸ்லீம் பெண்ணுக்கும் ஏற்பட்ட தொடர்பு பற்றி கொஞ்சம் கூட தெரியாது. எனக்கு கூட அவருடைய மிக நெருங்கிய தோழியான கர்நாடகத்துப் பெண் சொல்லித் தான் தெரியும். ஆனால் அவர் மீது அன்பு செலுத்துவதில் மூவரும் ஒருவருக் கொருவர் சளைத்தவர்கள் அல்ல.
எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட உறவு பற்றியும் நம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரிவு பற்றியும் ஏற்கனவே விரிவாக சொல்லி விட்டேன்.
அலுவலகத்தில் அவர் சாப்பிட்ட எச்சில் தட்டினைக் கூட அந்த முஸ்லீம் பெண் கழுவி வைக்கும் அளவிற்கு அவர்களுக்குள் அந்நியோன்யம் இருந்திருக்கின்றது. அவரைப் பிரிவதற்கு மனமில்லாமல் மாலை நேரங்களில் அவருடன் உல்லாசமாக நடந்து சென்று நீண்ட நேரத்திற்குப் பின்னர் தான் அந்தப் பெண் வீட்டினை அடைந்துள்ளாள். அந்த அளவிற்கு அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்னும் ஆவல் மற்றும் நெருக்கம் இருந்திருக்கின்றது.
அந்த முஸ்லீம் பெண் அவரைப் பற்றி உள் மனதில் கட்டிய கற்பனைக் கோட்டைகளை அவளது பெற்றோர்களிடம் தெரியப்படுத்தி அவளது தந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வந்து ஒரு மிகப் பெரிய முக்கியஸ்தர் முன்னிலையில் மத மாற்றம் செய்து கொண்டு திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு அவர் மறுத்து விட்டார் என்பதனை நான் தெரிந்து கொண்டேன்.
அவர்கள் மதமாற்றம் செய்து கொள்வதற்குச் சொன்ன காரணம் மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொண்டால் அவர்களது சமூகத்தினர் அவரை ஏற்றுக் கொள்வார்கள். அதே சமயம் மதமாற்றம் செய்யாமல் அவரது விருப்பப்படி திருமணம செய்து கொண்டால் இரண்டு வீட்டிலும் இருவரையும் ஒதுக்கி வைத்து விடுவார்கள். எத்தனை உறவுகள் இருந்தாலும் யாருமற்ற அநாதைகள் போலத்தான் அவர்கள் வாழ வேண்டியிருக்கும் என்பது தான். இதில் எந்த விதமான தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
மூன்றாவதாக அவருக்கு மிகவும் அருகில் நெருக்கமாக அமர்ந்து பணியாற்றும் அந்த கர்நாடகாவைச் சேர்ந்த பெண். அவள் கொள்ளை அழகு சுத்த சைவம். இருந்தாலும் அவரது உடல் நலனில் அவள் காட்டிய அக்கரை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவருக்கு உடல் நலம் சரியில்லை என்று டாக்டரிடம் காட்டிவிட்டு வரும் சமயம் அவருக்குக் கொடுக்கப் பட்ட மாத்திரைகளை அவர் முதலில் சாப்பிட்டு அவருக்குக் கொடுத்துள்ளார். காரணம் கேட்டதற்கு அவரது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அவருக்கு முன்னர் தனது உயிர் பிரிய வேண்டும் என்னும் நோக்கில் எந்த விதமான நோயும் இல்லாமல் அவருக்குக் கொடுக்கப் பட்ட மாத்திரைகளை பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் சாப்பிடுவது என்பது உடன் கட்டை ஏறுவது போன்ற ஒரு செயலாகும்.
இவ்வாறு இருக்கும் அந்தப் பெண்ணின் தாயார் தமது வாழ்க்கையில் தமக்கு ஏற்பட்ட சொந்த அனுபவங்களின் காரணமாக இரு வீட்டார் சம்மதத்துடன் தான் இருவரும் மணந்து கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கின்றார். அந்தப் பெண்ணால் தாயின் சொல்லைத் தட்ட முடியவில்லை காரணம் அவளை வளர்க்க அந்தப் பெண்ணின் தாயார் பட்ட கஷ்டத்தினை அவர் நன்றாக அறிந்துள்ளார். இந்த காரணத்தால் அவர் சென்ற முறை பெண் பார்ப்பதற்கு சொந்த ஊர் சென்றிருந்த சமயம் தாம் விரும்பிய பெண் கிடைக்கவில்லை எனவே தம்மை விரும்பும் பெண்ணை மணமுடித்து வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அவருடைய தந்தை அதற்கும் மறுப்பு தெரிவித்து விட்டார். அந்த விவரத்தினை அவர் அந்தப் பெண்ணிடம் நேரடியாக தெரிவித்து விட்ட படியால் அந்தப் பெண் அழுது கொண்டு இருக்கின்றாள் என அவர் சொல்ல நான் தெரிந்து கொண்டேன்.
பெண் பார்ப்பதற்காக சொந்த ஊர் சென்று திரும்பிய பின்னர் என்னைச் சந்திக்க என்னுடைய இல்லத்திற்கு வந்தடைந்தார். வழக்கமாக அவர் முகத்தில் இருக்கும் புன்சிரிப்பு மற்றும் சந்தோஷம் இல்லை.
நிச்சயதார்த்தம் முடிந்து விட்டு ஊருக்கு திரும்பி அந்த விவரம் தெரிவிக்க என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். என்ன நடந்தது என்பதனை வெளிக் காட்டிக் கொள்ளாமல் குழந்தையிடம் சாக்லெட் கொடுத்து விட்டு எனக்கும் கொடுத்தார். நான் வழக்கம் போல் பாதி சாக்லெட் சாப்பிட்டு விட்டு அவரிடத்தில் மீதியை கொடுக்கும் சமயம் இந்த பாக்கியம் இனியும் தொடருமா என்று ஆவலுடன் கேட்டேன். அதற்கு அவர் நம் இருவரது உயிர் பிரியும் வரை இந்த பழக்கம் தொடரும் என்றும் மாற்றம் இல்லையென்றும் தெரிவித்தார். சற்று நேரம் இனம் புரியாத சோகத்துடன் அமைதியாகவே இருந்தார்.
நானாகவே அவரிடம் பேச ஆரம்பித்தேன். சொந்த ஊருக்குச் சென்ற சமயம் நான் சென்ற முறை பார்த்ததாகச் சொன்ன எனது பழைய வீட்டினைப் பார்த்தீர்களா அதனால் எதுவும் மனச் சங்கடமாக இருக்கின்றதா எனக் கேட்டேன். அதற்கு அவர் அந்த வீட்டுப் பக்கமே செல்லவில்லை என்று தெரிவித்தார். அதன் பின்னர் அவராகவே தொடர்ந்து பேசினார்.
இந்த முறை ஊருக்குச் சென்றிருந்த சமயம் ஜாதகப் பொருத்தம் எனக்கூறி இரண்டு மூன்று பெண்களைக் காண்பித்தார்கள். அதில் இரண்டு பெண் வீட்டாரிடமிருந்து இன்னமும் பதில் வரவில்லை. காரணம் இன்னும் அதிகம் படித்த மாப்பிள்ளைகளை எதிர்பார்த்துக்
காத்திருப்பதாக தரகர் தெரிவித்தார்.
அந்த சமயத்தில் முதன் முதலாகப் பெண் பார்த்து வந்த (அவர் குழந்தைப் பருவத்தில் ஒரே காம்பவுண்டில் குடியிருந்த) பெண்ணை நன்கு பிடித்து இருப்பதாகவும் அந்தப் பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறாமல் இருந்தால் அந்தப் பெண்ணையே நிச்சயதார்த்தம் செய்து மணமுடித்து வைக்குமாறும் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார். அதற்கு அவருடைய தாயார் முழு சம்மதம் தெரிவித்தார் என்று சொன்னார். ஆனால் அவருடைய தந்தை ஒரு முறை வேண்டாம் என்று சொல்லி விட்டு மீண்டும் நாமாகவே வலியச் சென்று அந்த வீட்டில் பெண் கேட்பது சரியல்ல என்று வீண் பிடிவாதம் செய்து மறுத்து விட்டார் என வருத்தத்துடன் சொன்னார்.
அவர் என்னிடத்தில் பல முறை சொல்லி வந்த விஷயத்தினை மீண்டும் ஒரு முறை எடுத்துரைத்தார். அதாவது ஜாதகப் பொருத்தம் மட்டும் பார்த்து வரன் பார்த்தால் படிப்பு அந்தஸ்து அறிவு மற்றும் அழகு இவற்றினை விட்டுக் கொடுக்க வேண்டும். அழகு மட்டுமே பார்த்து வரன் பார்ப்பது என்றால் ஜாதகப் பொருத்தம் மற்றும் அந்தஸ்து ஆகியவற்றை எதிர்பார்க்கக் கூடாது. கல்லூரியில் படிக்கும் சமயம் ஏற்படும் காதலிலோ அல்லது ஒன்றாகப் பணியாற்றும் அலுவலகத்தில் ஏற்படும் காதலிலோ உண்மையான புரிதல் இருவருக்கும் இடையே நெருக்கமாக இருக்கும். அவ்வாறான பந்தத்தில் ஜாதகப் பொருத்தம் அழகு அந்தஸ்து ஜாதி மதம் மொழி மற்றும் இனம் ஆகியவைகளை எதிர்பார்க்க முடியாது.
அதே போல பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணங்களில் பரம்பரை உறவுகள் நிலைத்திருக்கும். காதல் திருமணங்களிலும் கலப்புத் திருமணங்களிலும் உறவுகளை விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கும்.
அவர் தொடர்ந்து பேசும் சமயம் சென்ற முறை சொன்னது போலவே எந்தப் பெண்ணைக் காட்டினாலும் சரியென்று சொல்லிவிட்டு திருமணம் செய்து கொள்வது என்னும் முடிவில் மாற்றம் இல்லாமல் பெற்றோர் சொன்ன பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்பதனை தெரிவித்தார். அதன் பின்னர் பெண்ணைப் பற்றியும் திருமணத் தேதி பற்றியும் கேட்ட சமயம் திருமண அழைப்பிதழ் கொடுக்கும் சமயம் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்து விட்டு மேற்கொண்டு எதுவும் கேட்க வேண்டாம் என்று சொல்லி விட்டார். எனவே நான் மேலும் எதுவும் கேட்டு அவரை சங்கடப் படுத்த வேண்டாம் எனும் எண்ணத்துடன் அமைதியாக அவருக்கு எதிரில் அமர்ந்து இருந்தேன்.
அதன் பின்னர் அவருக்கு காபி கொடுத்தேன். ஆனால் என் மீதுள்ள அன்பு கொஞ்சம் கூட குறையாமல் முன்பிருந்த அதே அன்பு மற்றும் பாசத்துடன் அவர் பாதி குடித்து விட்டு என்னிடத்தில் பாதி கொடுத்த சமயம் அவரது உள் மனதில் எவ்வளவு பாதிப்புடன் இருக்கின்றார் என்பதனையும் என் மீது உள்ள அன்பு சற்று கூட குறையவில்லை என்பதனையும் என்னால் உணர முடிந்தது.
என்னிடத்தில் அவர் சென்று வருகின்றேன் என்று சொல்லி விட்டு அவரது இருப்பிடம் செல்ல முயன்ற சமயம் நான் வழக்கம் போல் கண்களில் நீர் ததும்ப வழியனுப்பி வைத்தேன். அவருக்கும் அதே நிலை.