அதிக நம்பிக்கையினால் தவறான முடிவுகள்
எனக்குத் திருமணம் ஆன பின்னர் அவர் மாதா மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையன்று என்னுடைய இல்லத்திற்கு வந்து என்னை சந்திப்பார். நானும் அவரும் பெற்றோர்களுக்குத் தெரியாமல் அறிமுகம் ஆகி பழகி வந்திருப்போம் என என்னுடைய கணவர் தவறாக நினைத்துக் கொண்டு இருந்த காரணத்தால் அவர் வரும் சமயம் அவரை சரியான முறையில் வரவேற்று உபசரித்தது கிடையாது.
என் கணவரது உறவுக் காரப் பெண்ணை அவரது பெற்றோர்கள் பார்த்து பிடித்து இருந்ததாகச் சொல்லி அவருக்குக் காண்பித்த சமயம் என் கணவரது அறிவுரைகளின் படி அந்தப் பெண்ணை வேண்டாம் என்று சொல்லி விட்டார். அதில் என் கணவருக்கு சந்தோஷம். அவரது திருமணத்திற்குப் பின்னர் அவர் குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகளினால் வெளியூருக்கு மாற்றலாகிச் சென்று விட்டார். அது பற்றி என் கணவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
அதன் பின்னர் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதே சமயத்தில் எனக்கும் இரண்டாவது குழந்தை பிறந்தது. எனக்கு தாயார் வழியிலான உறவுகள் யாரும் இல்லாத நிலையில் எனது குழந்தைக்குச் செய்ய வேண்டிய சடங்குகளான முதன் முதலில் குளிப்பாட்டுதல் தீட்டுக் கழித்து பொட்டு வைத்தல் திருஷ்டி கழித்தல் புத்தாடை அணிவித்தல் போன்ற சடங்குகளை அவரது தாயார் என்னுடைய இல்லத்திற்கு அவருடன் நேரில் வந்த சமயம் அவரது சொந்த செலவில் நிறைவேற்றியதை கண்ட பின்னர் எனது கணவர் அவரிடத்தில் மிகவும் நெருக்கமாகி விட்டார்.
ஒரு சில நேரங்களில் என்னுடைய கணவர் என்னிடத்தில் என்ன அவர் ரொம்ப நாட்களாக வரவில்லை உங்களுக்கிடையே ஏதேனும் மனஸ்தாபமா அல்லது அவருக்கு நிறைய வேலையா எனக் கேட்பார். நான் மறந்திருந்தால் கூட அவர் நினைவு படுத்தி விடுவதன் மூலம் அவ்வாறாக நினைவு படுத்திய நாட்களில் எனக்கு தூக்கமே வராது.
எனது தாயாரின் தாலாட்டினைக் கேட்டு உறங்கிய நாட்கள் எனது நினைவுக்கு வரவில்லை. காரணம் அப்போது நான் சின்னக் குழந்தையாக இருந்திருப்பேன். ஆனால் அவரோடு பேசிப் பழகிய நாட்கள் என் நினைவுகளிலிருந்து அழியவில்லை. அதன் காரணமாக உறக்கமே இல்லாத பலப்பல இரவுகள் என்னை அவரது நினைவால் வாட்டிக் கொண்டே இருக்கும்.
எனக்கும் அவருக்கும் இருந்து வந்த நெருக்கம் மற்றும் காதல் பற்றி அறிந்த சிலர் எனது திருமணத்திற்குப் பின்னர் அவரை மறந்து விட்டாயா எனக் கேட்கும் சமயம் அவர்களிடத்தில் ஆமாம் அவரை அடியோடு மறந்து விட்டேன் என பொய் சத்தியம் செய்து விட்டு ஒவ்வாரு நொடியும் அவரது நினைவாகவே இருப்பேன். என்னால் மறக்கவே முடியாத அளவுக்கு அவரது நினைவு இருந்து கொண்டே தான் இருக்கும்.
என்னை இழந்து விட்ட காரணத்தால் அவரது இதயத்திற்கு வலியைக் கொடுத்து விட்டு என்னைத் தொட்டுத் தாலி கட்டிய என் கணவரின் இதயத்திற்கு போலியான அன்பு செலுத்தி இன்பம் கொடுப்பது என்பது பச்சைத் துரோகம் என பல நேரங்களில் நினைப்பேன்.
அவ்வாறான நேரங்களில் ஒவ்வொரு முறையும் எனக்கு பலப்பல பழைய நினைவகள் வரும். அதிலிருந்து நான் மீண்டு வர எனக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் பிடிக்கும். அந்த நாட்களில் நான் மௌன விரதம் இருப்பது போல யாரிடத்திலும் எதுவும் பேசாமல் அவரது பிரிவினைத் தாங்க முடியாத மனக் கவலையில் மௌனியாக இருந்து காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பேன்.
கடவுள் நம்பிக்கையே இல்லாமல் இருந்தவருக்கு ஜாதகத்திலும் ஜோதிடத்திலும் நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தது. நான் அவருடன் கோயில்களுக்குச் சென்ற சமயம் என்னுடைய இராசி நட்சத்திரம் எதனையும் சொல்லாமல் கடவுள் பெயருக்கு அர்ச்சனை என்று சொல்வேன்.
அதே போல நாம் இருவரும் சேர்ந்து வெளியில் செல்லும் சமயம் கை ரேகை பார்த்தல் அல்லது குறி பார்த்தல் அல்லது பிரசன்ன ஜோதிடம் அல்லது கிளி ஜோதிடம் என எல்லாவற்றையும் தவிர்த்து விடுவேன். யாரேனும் வலிய வந்து குறி சொல்வதைக் கூட நான் கேட்க மாட்டேன். அவரையும் கேட்க விட மாட்டேன். அவர்கள் ஏதேனும் சொல்லி விட்டால் நம் இருவரது மனங்களும் சஞ்சலப்படும் என்னும் உள்ளுர பயம்.
என்ன தான் நான் கட்டுப்பாடாக இருந்தாலும் விதி என்று ஒன்று இருக்கின்றது. ஒரு நாள் அதிகாலை வேளையில் எங்களது காம்பவுண்ட் வீட்டுக்கு முன்னால் தெருவில் நின்று கொண்டு ஒரு குடுகுடுப்பைக்காரர் இந்த வீட்டுக்கு நல்ல சேதி வரப் போகுது. நிலையான வருமானத்துக்கான வழி பிறக்கப் போகுது எனச் சொன்னது என்னுடைய காதில் விழுந்தது. அதனை நான் கேட்டேன். அவர் கேட்கவில்லை. அவ்வாறு சொல்பவர்கள் இது ஜக்கம்மா வாக்கு என்று சொல்வார்கள். அதிகாலையில் அவர்கள் சொல்வது கட்டாயம் நடக்கும் எனச் சொல்லி கேள்விப் பட்டிருக்கின்றேன். ஆனால் அவர்களை நான் பார்த்ததில்லை.
கூட்டுக் குடும்பத்தில் இருந்து கொண்டு குடும்பத்தின் மொத்த வருமானத்துக்குக் கட்டுப்பட்டு இருந்தால் பெற்றோர் சொல்கின்ற பெண்ணைத் தான் மணமுடிக்க வேண்டி வரும் என்னும் ஒரே காரணத்திற்காக தனக்கான ஒரு நிரந்தர வருமானத்திற்காக வேலையில் சேர முடிவு செய்த சமயம் அவருக்கு அரசாங்க வேலை வெளியூரில் கிடைத்தது.
எனவே நானும் அவரும் சேர்ந்து அவருடைய ஜாதகத்தினை எடுத்துக் கொண்டு போய் முதன் முதலாக ஒரு ஜோதிடரிடம் காட்ட முடிவு செய்தோம்.
அப்போது அவர் என்னுடைய ஜாதகத்தையும் கொண்டு வருமாறு சொன்னதற்கு இனிமேல் என்னுடைய ஜாதகம் கொண்டு வந்து ஜாதகப் பொருத்தம் பார்த்து ஜாதகம் பொருந்தவில்லை என்றால் என்ன செய்வது? எனவே நம் இருவருக்கும் மனப் பொருத்தம் நன்றாக இருக்கின்றது. எனக்கு நீங்கள் உங்களுக்கு நான் என்னும் அசையாத நம்பிக்கை இருக்கின்றது. அது போதும் எனச் சொல்லி என்னுடைய ஜாதகத்தைக் கொண்டு செல்ல மாட்டேன். அவருடைய ஜாதகத்தை மட்டும் ஜோதிடரிடத்தில் காண்பித்தோம்.
அவருடைய ஜாதகத்தைப் பார்த்த ஒரு ஜோதிடர் அவரது ஜாதகம் ராமர் வம்சாவழி ஜாதகம் என்றும் இராமர் 14 ஆண்டுகள் வன வாசம் சென்றது போல வெளியூர்களில் 14 ஆண்டு காலம் வேலை செய்து முடித்த பின்னர் தான் சொந்த ஊரில் வேலை பார்க்க முடியும் என்றும் சொன்னார். அது மட்டுமல்லாமல் இராமர் வனவாசம் சென்று வந்தவுடன் எப்படி பட்டாபிஷேகம் நடந்ததோ அதே போல நிறைய நபர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய பதவியில் வந்து அமர்வார் எனச் சொன்னார். இருந்தாலும் என்னை விட்டுப் பிரிந்து செல்ல அவருக்கு மனம் இடம் தரவில்லை. எனக்கும் அதே நிலை.
ஒரு ஜோதிடர் சொல்வதனை நம்பாமல் மேலும் இரண்டு மூன்று ஜோதிடர்களிடத்திலும் காண்பித்தோம். அனைவரும் ஒரே மாதிரியாகத் தான் சொன்னார்கள்.
இந்நிலையில் இராமர் வனவாசம் சென்ற சமயம் சீதையும் கூடச் சென்றதை மனதில் கொண்டு நான் அவரைத் திருமணம் செய்து கொண்டால் சொந்த ஊரில் இருக்க முடியாது என்றும் இருவரும் வெளியூரில் உற்றார் உறவினர் சுற்றம் நண்பர்கள் அனைவரையும் மறந்து சுதந்திரமாக 14 ஆண்டுகள் சந்தோஷமாக இருக்க முடியும் எனவும் உதட்டளவில் சொல்லி அவரைத் தேற்றி அவரை வெளியூரில் உள்ள பணியிடத்தில் வேலையில் சேருவதற்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தேன். ஆனால் நான் உள்ளுர அழுது கொண்டிருந்தேன். அவரைப் பிரிய எனக்கு மனமில்லை.
அவர் வெளியூருக்கு வேலையில் சேருவதற்கு புறப்பட்ட சமயம் தனக்கென்று ஒரு வேலை தனக்கென ஒரு வருமானம் என்னும் நிலைமை வந்து விட்ட காரணத்தால் நானும் அவரும் திருமணம் செய்து கொள்வதில் எவ்விதமான பிரச்சினைகளோ அல்லது சிக்கல்களோ இருக்காது என உறுதியாக இருந்தோம். நம் இருவரது எண்ணங்களும் நமது திருமணத்தைப் பொறுத்த வரை எப்போதும் எதிர்மறையாக இல்லாமல் நேர்மறையாகவே இருந்தது. அவரது பாணியில் சொல்லப் போனால் Always Positive Thoughts.
அவர் வேலையில் சேர்ந்த பின்னர் எனக்கு என்னுடைய சொந்த ஊரே பிடிக்கவில்லை. எங்கு சென்றாலும் அவருடன் சுற்றித் திரிந்த இடங்களாகவும் அந்தந்த இடங்களில் நாம் உல்லாசமாக பேசிக் கொண்டே சென்ற நினைவுகளாகவும் தான் இருந்தன. அதே சமயம் வீட்டில் இருக்கவும் பிடிக்கவில்லை.
தினந்தோறும் கண் விழித்தவுடன் நான் அவரைக் காணத் துடிப்பது போல் அவரும் என்னைக் காணத் துடிப்பார். அவர் வெளியில் செல்லும் சமயம் என்னிடத்தில் சொல்லாமல் சென்றதில்லை. அதே போல நானும் எனது உறவினர் வீட்டிற்குச் செல்லும் சமயம் அவரிடத்தில் விடை பெறாமல் போக மாட்டேன். அவரிடத்தில் நான் நேரடியாக சொல்ல முடியவில்லை என்றால் அவருடைய தாயாரிடத்தில் கட்டாயம் சொல்லி விட்டுத் தான் செல்வேன். நான் செல்வதனைக் கேட்டு அவரது தாயார் மிகவும் வருத்தப்படுவார்கள்.
நான் எந்த உறவினர் வீட்டுக்குப் போனாலும் அந்த வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் சமயம் மாலை 5.30 மணியிலிருந்து 6.30 மணிக்குள் கட்டாயம் ஒரு முறை வந்து என்னைக் பார்ப்பார். அச்சமயம் அந்த இடத்தில் பேச முடியாத காரணத்தால் நானும் சில நிமிடங்களில் அவர் எந்தப் பக்கம் சென்றாரோ அந்தப் பக்கம் செல்வேன். அவர் அந்த தெரு முனையில் காத்திருந்து என்னிடத்தில் ஐந்து நிமிடங்களாவது பேசி விட்டுத்தான் செல்வார். அப்போது தான் நம் இருவருக்கும் அந்த இரவு நிம்மதியான தூக்கம் வரும். அந்த அளவிற்கு ஒற்றுமையாக நெருங்கி இருப்போம்.
இவ்வளவு நெருக்கமாக அந்யோன்யமாக இருந்த ஒரே காரணத்தால் நான் அவர் வெளியூருக்கு வேலையில் சேராமல் இருப்பதற்கு ஏதேனும் ஜாதகப்படி செய்ய வழியுண்டா என ஜோதிடரிடம் கலந்தாலோசித்த சமயம் என்னுடைய ஜாதகத்தினையும் நான் கொண்டு சென்றிருந்தால் ஜோதிடர் நாம் இருவரும் வாழ்க்கையில் இணைவதற்கு வழியுண்டா இல்லையா என்பது அப்போதே அறிந்து கொள்ள முடிந்திருக்கும்.
அந்த நேரத்தில் நம் இருவரது ஜாதகங்களையும் அலசிப் பார்த்து ஜோதிடர் நாம் திருமணம் செய்து கொள்வதில் ஏதேனும் தடைகள் சொல்லி இருந்தால் அதற்கான பரிகார பூஜைகள் ஏதேனும் செய்து வாழ்க்கையில் ஒன்று சேர்ந்திருப்போம். ஆனால் ஜாதகம் பொருந்தவில்லை என்றோ திருமணம் செய்து கொண்டால் இருவரில் ஒருவருக்கு ஆபத்து என்றோ சொல்லி விட்டால் என்ன செய்வது என பயந்த காரணத்தால் நம் இருவரது ஜாதகங்களையும் ஒன்றாக ஜோதிடரிடம் காட்ட என் மனம் இடம் தரவில்லை.
அதே போல அவருக்கு வேலை கிடைத்தவுடன் அவருடைய தந்தை நமது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சமயம் எனது தாயார் கட்டாயம் ஒப்புதல் தருவார்கள் என நினைத்து ஏமாறாமல் இருந்து அவர் வாங்கிக் கொடுத்த பயணச் சீட்டின் படி அவருடன் சென்றிருந்தால் நாம் இருவரும் சந்தோஷமாக இல்லறத்தில் இணைந்திருக்க முடியும். நமக்குக் குழந்தை பிறந்தவுடன் நமது பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என நினைப்பேன்.
நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போனதற்கு காசு பணம் அந்தஸ்து மட்டும் காரணமல்ல. நம் இருவருக்கிடையே உள்ள அன்பு மாறவே மாறாது. நிச்சயம் திருமணம் செய்து கொள்ள முடியும் என்னும் என்னுடைய திடமான நம்பிக்கை மற்றும் ஒரு வீட்டாராவது நமது திருமணத்திற்கு ஒப்புதல் தருவார்கள் என்னும் தவறான எண்ணம்.
ஆனால் என்னுடைய அபரிமிதமான நம்பிக்கை நாம் இருவரும் வாழ்க்கையில் இணைய முடியாத படிக்கு தவறான முடிவை எடுக்க வைத்து விட்டது என என்னை நானே குற்றம் சொல்லிக் கொள்வேன். பல நேரங்களில் நமது பிரிவுக்கு பெற்றோர்கள் மட்டும் காரணமல்ல. நான் கொண்டிருந்த அபரிமிதமான நம்பிக்கை மற்றும் நான் எனது உறவினர்களை தவறுதலாக புரிந்து கொண்டது என எண்ணும் சமயம் நானே என் தலையில் அடித்துக் கொண்டு நீண்ட நேரம் அழுது கொண்டு தூக்கம் வராமல் விழித்துக் கொண்டிருப்பேன்.
ஒவ்வொரு நாளும் காலையில் கண்விழிக்கும் சமயத்திலும் இரவு படுக்கையில் தூங்குவதற்கு முன்னரும் அவரை நான் முதன் முதலாக சந்தித்த பின்னர் எனக்கு வந்த பிறந்த நாளன்று பரிசளித்த ஆலிலைக் கிருஷ்ணன் டாலரை கண்களில் ஒற்றிக் கொண்டு படுக்கும் வழக்கம் மாறவேயில்லை. சொல்லப் போனால் அவரது கரங்கள் என்னை ஒவ்வொரு நாளும் இரண்டு முறை வருடுவது போல இருக்கும். நான் சோகமாக இருக்கும் நாட்களில் வழக்கம் போல் என் தலையணைகள் என் கண்ணீரால் நனைந்து கொண்டிருக்கும்.