பள்ளித் தேர்வில் வெற்றி
அவரது தாயாருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நான் அவரது வீட்டில் முதல் முறையாக சமைத்துப் பரிமாறினேன். ஆனால் அவர் பள்ளியில் இருந்த காரணத்தால் அவருக்குப் பரிமாறவில்லை.
நாம் குடியிருந்த காம்பவுண்ட் வீடு 15-க்கு மேற்பட்ட வாடகை வீடுகளைக் கொண்டதாகும். எனவே குடியிருப்போர் அனைவரும் சுழற்சி முறையில் பொது வாசல் வழியினை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து கோலம் போடும் வேலையினை சூரிய உதயத்திற்கு முன்னர் செய்ய வேண்டும். ஆனால் அவரது தாயாருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் செய்ய முடியாது என்பதால் அவரது தாயார் அதிகாலையில் எழுந்து கஷ்டப்படுவார்கள் என்று இரவு நேரத்தில் படுக்கையில் படுத்த சமயம் என் மனக் கண்முன் தோன்றியது.
எனவே மறுநாள் அதிகாலையில் அவரது தாயார் எழுவதற்கு முன்னர் நான் எழுந்து பொது வாசலைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து கோலம் போட்டு முடிக்கும் சமயம் அந்தப் பணியினைச் செய்ய அவரது தாயார் வந்தார்கள். அப்போது என்னிடம் இன்று நானல்லவா செய்ய வேண்டும் ஏன் நீ செய்கின்றாய் என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் உங்களுக்கு உடல் நலமில்லாத காரணத்தால் உங்களுக்குப் பதிலாக நான் செய்கின்றேன் என்று சொன்னேன். நான் கோலம் போட்டு முடிக்கும் வரையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்து விட்டு கோலம் போட்டு முடித்தவுடன் என்னைக் கட்டியணைத்துப் பாராட்டி முத்தமிட்டார்கள். எனக்கு ஒரே சந்தோஷம்.
மிக மிக சுறுசுறுப்பாக சந்தோஷமாக மாலை நேரத்தில் உரையாடி வந்த தோழியர் மற்றும் தோழர்கள் அனைவரும் பள்ளி இறுதியாண்டுத் தேர்வுக்காக மும்முரமாக படிக்க ஆரம்பித்தனர்.
சில நேரங்களில் அனைவரும் சேர்ந்து மொத்தமாக அமர்ந்து படித்தால் படிப்பில் கவனம் சிதறுகின்றது என்றெண்ணி வீட்டிற்குள்ளேயே படிக்க ஆரம்பித்தார்கள். யாரையும் வழக்கம் போல் வெளியிலே பார்க்க முடியாத அளவிற்கு படித்துக் கொண்டு இருந்தார்கள். அதனால் எனக்குத் தனிமை. அவருடைய நண்பர்கள் கூட படிக்க வேண்டிய வேலை இருப்பதாகக் கூறி அவருடன் ஊர் சுற்ற அவரை அழைக்க வருவதை குறைத்துக் கொண்டார்கள்.
ஆனால் அவர் மட்டும் அதில் விதிவிலக்கு. பள்ளிக்குச் சென்று வந்த பின்னர் நோட்டு புத்தகங்களை பகல் நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ தொடவே மாட்டார். அவருடைய படிப்பு எப்போதும் அதிகாலையில் தான். எனவே அவர் மாத்திரம் வெளியில் செல்லும் வேலை இல்லாத சமயங்களில் என்னுடன் தனிமையில் சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பார்.
இருந்தாலும் அனைவரும் இருக்கும் சமயம் நாம் எப்படி மனம் விட்டு எவ்வித பயமும் இல்லாமல் உரையாட முடிந்ததோ அது போல உரையாட முடியவில்லை. காரணம். யாருமே பார்க்கவில்லை என்றாலும் யாராவது பார்த்து ஏதாவது சொல்லி விடுவார்களோ என்னும் அச்சம் என்னுள் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் அவர் எதனையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் என்னுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார்.
பரிட்சைக்கு எல்லோரும் படித்துக் கொண்டிருக்கும் சமயம் நாம் இருவர் மட்டும் பேசிக் கொண்டிருப்பது எனக்கு ஒரு பக்கம் சந்தோஷம்.
அதே சமயம் அவர் ஏதாவது ஒரு பாடத்தில் குறைவான மதிப்பெண் பெறுவாரேயானால் அனைவரும் அவரைப் படிக்க விடாமல் தடுத்து நான் பேசிக் கொண்டிருந்ததால் தான் மதிப்பெண் குறைந்து விட்டது என்று சொல்வார்களேயென்று மறு பக்கம் பயம்.
பள்ளியிறுதி தேர்வுகள் ஆரம்பித்தன. அவர் நிறைய மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக நான் தினமும் கோயிலுக்குச் சென்று அவருக்காக பிரார்த்தனை செய்வேன். அந்த விவரம் அவருக்குத் தெரியாது. காரணம் அவர் பரிட்சை எழுதிக் கொண்டிருப்பார். நான் கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருப்பேன்.
பரிட்சைகள் முடிந்து தேர்வு முடிவுகள் வெளியானது. இரவு பகல் பாராமல் கண் முழித்து விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்த தோழியர் அனைவரும் பெற்ற மதிப்பெண்களைப் போலவே அவரும் அனைவரைக் காட்டிரும் அதிகமாக நன்றாக மதிப்பெண் பெற்று இருந்தார். எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். நான் படித்துப் பாசாகும் சமயம் கூட இவ்வாறு சந்தோஷப் பட்டதில்லை.
தேர்வில் வெற்றி பெற்றமைக்கு அவர் அனைவருக்கும் இனிப்புகள் கொடுத்தார். அதே சமயம் அவரோடு தேர்ச்சி பெற்ற மற்றவர்கள் கூட இனிப்புகள் கொடுத்தார்கள்.
எனக்கும் அவருக்கும் சேர்த்து ஒரே ஒரு இனிப்பு தான் கொடுத்தார்கள். காரணம் கேட்டதற்கு அவருக்கு நான் மிக நெருக்கம் என்பதால் எனக்கும் அவருக்கும் சேர்த்து ஒரே ஒரு இனிப்பு மாத்திரம் கொடுத்தார்கள். ஒரே ஒரு இனிப்பினை நாம்; இருவரும் பாதி பாதியாக பங்கு போட்டு சாப்பிடுவது நம் இருவருக்கும் ஒரு வகையில் சந்தோஷம்.
பொறியியல் பட்டப் படிப்பு மேற்கொண்டு படிக்கும் வகையில் புகு முக வகுப்பில் சேர்ந்து கொண்டார்.