சாதாரண உரையாடல்
அவர் அவரது அண்ணன் மற்றும் அண்ணியுடன் வந்து என்னை நேரில் சந்தித்து விட்டு திரும்பிய பின்னர் அடுத்த மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையன்று அவரது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அவர் வழக்கமாக வருகின்ற நேரத்தில் வரவில்லை.
அவரை எதிர்பார்த்து நான் காத்திருப்பது எனக்கும் எனது உள் மனதுக்கும் மட்டும் தான் தெரியும். வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் என் குழந்தை பாபா ஏன் இன்னும் வரவில்லை. எனக்காக நிறைய சாக்லெட் வாங்கி வரச் சென்றவர் இன்னும் காணோம் என்று ஒரு மாதமாக என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாள். ஆமாம் என் தவிப்பு எனக்கு அவள் தவிப்பு அவளுக்கு.
அவரது வருகை சற்று தாமதமாக இருந்தது. இருந்தாலும் என் செல்லப் பெண் பாபா வந்துட்டார் என்று சந்தோஷத்துடன் துள்ளிக் குதித்தது கண்டு அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவரிடம் எனக்கு சாக்லெட் இல்லையா என என் குழந்தை கேட்க அவர் தம் பையிலிருந்து ஒரு சாக்லெட் கொடுத்தார். என் அம்மாவுக்கு என்று கேட்டதும் கொண்டு வரவில்லை என்று சொன்னவுடன் ஒரு சாக்லெட்டை மூன்று பேரும் சாப்பிடலாம் என்று சொன்னது கேட்டு நான் என்னைப் போன்றே என் குழந்தையும் அவரை மனதார ஏற்றுக் கொண்டது என்பதனை அறிந்து மிகவும் சந்தோஷப் பட்டேன்.
அதன் பின்னர் அவர் கொண்டு வந்திருந்த சாக்லெட் மற்றும் சுவீட் பெட்டியினை என்னிடம் கொடுத்தார். அன்றைய தினம் நான் சிற்றுண்டி எதுவும் தயாரிக்காத காரணத்தால் அவர் கொண்டு வந்த இனிப்பு மற்றும் காரத்தை அவருக்கே கொடுத்து பகிர்ந்து உண்டோம். அவரது நண்பர் ஒருவர் வழியில் கண்டு பேச ஆரம்பித்து விட்டார் என்று தாமதத்திற்கு காரணம் சொன்னதும் என் குழந்தை வழியில் யாரிடமும் பேசாதே நேராக எங்கள் வீட்டிற்கு வா என செல்லமாக சொன்னது. அவரும் சரியென ஒப்புக் கொண்டார்.
அவராகவே திருமண பேச்சினை ஆரம்பித்தார். எனக்கு ரொம்ப சந்தோஷம்.
அண்ணன் அண்ணி இங்கு வந்து சென்ற பின்னர் அண்ணி மட்டும் சொந்த ஊரில் தங்கி அவருக்காக பெண் பார்த்து வருவதாக தெரிவித்தார். இடைப் பட்ட காலத்தில் நிறைய நாட்கள் சுற்றுப் பயணம் இருந்த காரணத்தால் அவர்கள் வரச் சொன்ன நாளில் சொந்த ஊருக்கு செல்ல முடியாத காரணத்தால் எங்கும் பெண் பார்க்கச் செல்லவில்லை என்றும் இந்த ஊரிலேயே பணியாற்றும் ஒரு பெண்ணை அலுவலகத்திற்குச் சென்று நேரில் சந்தித்து பிடித்திருந்தால் தகவல் தெரிவிக்குமாறும் வீட்டிலிருந்து சொல்லி இருந்தார்கள் என்று தெரிவித்தார்.
நான் பெண்ணை பார்த்தீர்களா என்று கேட்டேன். என் வீட்டார் பார்க்கச் சொன்ன பெண் இதே ஊரில் ஒரு அலுவலகத்தில் பணியாற்றி வருவதாகவும் ஹாஸ்டலில் தங்கியுள்ளதாகவும் அந்தப் பெண்ணை பணியாற்றும் அலுவலகத்திற்கு சென்று பார்த்து விட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
நான் பெண்ணைப் பிடித்திருக்கின்றதா எனக் கேட்டதற்கு அவர் அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்கு அவரது அண்ணனை அழைத்துச் சென்றதாகவும் என்னைப் பார்த்து விட்டுச் சென்ற அவரது அண்ணன் அந்தப் பெண்ணை வேண்டாம் என்று நேரடியாக அவரது வீட்டிற்கு தகவல் சொல்லி விட்டதாகவும் தெரிவித்தார். நான் மேற்கொண்டு எந்த விவரமும் கேட்கவில்லை.
இதனை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்த என் செல்லப் பெண் என்னிடம் பெண் பார்ப்பது என்றால் என்ன என்று கேட்க நான் என் மகளிடம் பாபாவுக்கு கல்யாணம். பாபா கல்யாணம் பண்ணிக்க பெண் பார்க்கின்றார்கள் என்று சொன்னேன். உடனே என் குழற்தை அவரிடம் நீ பெண் பார்க்கப் போகாதே என் அம்மாவை பார். கல்யாணம் பண்ணிக்கோ என்று சொன்னது. இருவருக்கும் சோகமான சுகம். என்று சொல்வதா அல்லது சுகமான சோகம் என்று சொல்வதா என்பது தெரியவில்லை.
நான் அவரிடத்தில் ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருக்கின்றதா என்றும் பரிகாரங்கள் ஏதேனும் செய்ய வேண்டியுள்ளதா என்றும் கேட்டேன். அதற்கு அவர் ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தால் என்னைப் பார்த்தவுடன் காதல் வந்திருக்காது நம் இருவரது திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டதை என் தாயாரும் அவரது தந்தையும் தான் மாற்றி விட்டார்கள் என்று சொன்னார். அதோடு நிற்காமல் ஜாதகத்தில் தோஷங்கள் இருந்து அவருக்குத் திருமணம் ஆகாமல் இருந்தால் என்னுடைய நினைவிலேயே காலத்தைக் கழித்து விடுவேன் என்று சொன்னதைக் கேட்ட எனக்கு அழுகை வந்து விட்டது. நான் அழுதால் என் குழந்தையும் அழும் என்பதற்காக அடக்கிக் கொண்டேன்.
என்னை சமாதானப் படுத்துவதற்காக அவர் ஜாதகத்தில் எந்த தோஷங்கள் இருந்தாலும் நானும் அவரும் நான்கு நாட்கள் புனித யாத்திரை மேற்கொண்ட சமயம் அத்தனை தோஷங்களும் விலகி இருக்கும் என்றும் நான் வாரா வாரம் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ராகு கால பூஜை செய்து வந்த சமயம் எந்த வகையான தோஷங்கள் இருந்தாலும் அனைத்தும் விலகி இருக்கும் என்றும் சொன்னார். அவர் அடிக்கடி சொல்வது மீண்டும் என்னுடைய ஞாபகத்திற்கு வந்தது. என்னவெனில் எந்த வகையான தோஷங்கள் எனக்கு இருந்தாலும் பரவாயில்லை. இரண்டு பேரும் சந்தோஷமாக இருந்தால் போதும். ஆனால் அது மட்டும் முடியவில்லை.
அவருடைய அலுவலகத் தோழிகள் நலம் பற்றி விசாரித்தேன். இது வரை நான் அவர்களைப் பார்த்ததே கிடையாது எப்படி நலம் விசாரிக்கின்றாய் எனக் கேட்டார். அதற்கு நான் தொலைக் காட்சியில் வாரா வாரம் உங்கள் தோழியை நான் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றேன். அவர்கள் பற்றி விசாரிக்கக் கூடாதா என்று கேட்டேன். அதற்கு அவர் வாரா வாரம் நாளொரு சேலையும் பொழுதொரு மேக்கப்புமாக உனக்குக் காட்சி கொடுக்கின்றாளே அதிலிருந்து தெரியவில்லையா அவளது உடல் நலம் என்று கேட்டார்.
அப்படியானல் அந்த முஸ்லீம் பெண் பற்றிச் சொல்லுங்கள் என்று கொன்னேன். அவருடைய நாற்பதுக்கு மேற்பட்ட பெண் சிநேகிதிகள் அனைவரும் மிகவும் நலமாக இருக்கின்றார்கள் என்று சொல்லி விட்டு நானும் அவரும் ஊரில் இருக்கும் சமயம் என்னிடத்தில் மாத்திரம் ஜாடையாக அல்லது சைகையாக சொல்லி விட்டு சென்று வந்தாரென்றும் தற்போது அனைவரிடத்திலும் அனுமதி பெற்று சென்று வரவேண்டி இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஒரு முறை பெண் பார்ப்பதற்கு சொந்த ஊர் செல்வதாக அவர் சொன்ன சமயம் அவர்களில் யாரையேனும் பிடித்திருந்தால் தயங்காமல் சொல்லும் படியும் அவர் விரும்பும் நபர் யாராக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள உடன் பட்டால் ஜாதி மதம் மொழி இனம் ஆகியவற்றை ஒதுக்கி விட்டு திருமணம் செய்து கொள்ள முயற்சி மேற்கொள்ளலாம் என்றும் சொன்னதாக தெரிவித்தார்.
நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர் என்னைத் தவிர யாரையும் மனதால் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்றும் என் முன்னிலையில் அவருடைய தாயாரிடம் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லி விட்ட ஒரே காரணத்தால் தான் திருமணம் செய்து கொள்ள பெண் பார்க்க சென்று வருவதாகவும் இல்லையெனில் அவரது குடும்பத்தாரை அப்படியே ஒதுக்கி இருப்பேன் என்றும் சொன்னதாக சொன்னார்.
இதற்கு மேல் பேசிக் கொண்டிருந்தால் அவர் அவரது தந்தை மீது உள்ள கோபத்தையும் நான் என் தாய் மீது உள்ள கோபத்தையும் நினைத்துப் பார்த்து மீண்டும் ஒரு முறை இருவரும் ஆவேசப் படுவோம் என்பதற்காக அந்தப் பேச்சினை நிறுத்திக் கொண்டேன். அடுத்து வரும் மாதங்களில் அவர் என்னை நினைத்துக் கொண்டிருப்பாரா அல்லது மறந்து விடுவாரா என்பது தெரியவில்லை.
சிறிது நேரம் சந்தோஷமாக உரையாடிய பின்னர் வழக்கம் போல் இதயம் அழுதபடி உதடுகள் சிரித்த படி அவரை வழியனுப்பி வைத்தேன்.