இருவருக்கும் கடினமான காலம்.
கண்ணில் தூக்கம் இல்லை. வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை. மனதில் நிம்மதி இல்லை. மேலும் மேலும் செலவுகள் செய்வதற்கு கையில் போதுமான பணம் இல்லை. அனைத்துக்கும் காரணம் என் கணவரின் உடல் நிலை சரியில்லை.
என் கணவருக்கு உடல் நிலை பாதிக்கப் பட்டதற்கு காரணம் நமது மகளை கடற்கரையினை ஒட்டி அமைந்திருக்கும் ஒரு துறைமுக நகரத்தில் பணியாற்றி வருகின்ற மாப்பிள்ளைக்கு மணமுடித்துக் கொடுத்ததும் அந்த ஊர் அடிக்கடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப் படுகின்றது என்னும் எண்ணம் என் கணவருக்கு ஏற்பட்டதும் தான்.
மகள் மருமகனுடன் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றாள். அவர்கள் பாது காப்பான இடத்தில் வலுவான கட்டிடத்தில் நான்காவது மாடியில் பத்திரமாக குடியிருந்து வருகின்றார்கள் என எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவருக்கு ஏற்பட்ட அச்சம் உள் மனதில் நன்றாக பசு மரத்தாணி போல பதிந்து விட்ட காரணத்தால் அவரது கவலைகள் அதிகமாகி உடல் நலம் பாதிக்கும் அளவிற்கு போய் விட்டது.
மாப்பிள்ளை பணியாற்றும் துறை சார்ந்த அலுவலகங்கள் துறைமுக நகரங்களில் மட்டுமே இருக்கும் என்பதும் அங்கிருந்து மாற்றலானால் வேறு ஒரு கடற்கரை துறைமுகம் உள்ள இடத்திற்கு தான் மாற்றலாகி செல்ல முடியும் என்பதும் இரண்டாவது கவலை. காற்று மழை புயல் காலங்களில் மகளின் வீட்டிலிருந்து கடற்கரையினை நோக்கி சீறிப் பாய்ந்து வரும் கடல் அலைகளைப் பார்த்தால் எனக்கே பயமாக இருக்கும்.
என் சந்தோஷத்தையும் துன்பத்தையும் பகிர்ந்து கொள்ள நான் தேடுவது என்னை உயிருக்கு உயிராக காதலித்த அவரை மட்டுமே. ஆனால் அவருக்கும் உடல் நிலை சரியில்லை என்பதனை நான் தெரிந்து கொண்ட போது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.
அவருக்குத் திருமணமானவுடன் என்னிடம் விடைபெற்றுச் செல்லும் சமயம் அவர் எனக்குச் சொன்ன அறிவுரைகளை நான் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றேன். அதன் காரணமாக என் வீட்டில் எனக்கு எந்தப் பிரச்சினைகளும் இதுவரையில் எனக்கு வரவில்லை.
அவர் சொன்னபடி அவரது இல்லத்திற்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசியதில்லை. அதனை அவரும் கடைப் பிடிக்கின்றார். அவரது இல்லத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினால் தொலைபேசி கட்டண பட்டியலில் வெளியூருக்குப் பெசிய தொலைபேசி எண்கள் மற்றும் அதற்கான கட்டணங்கள் தெரிய வரும் எனச் சொல்லி அதிக தொலை பேசி கட்டணம் வருமேயானால் எனக்கு நிறைய சிக்கல்கள் வரும் என அறிவுறைகள் சொல்லி இருந்தார்.
எனவே எனக்கு அவரைப் பார்க்க வேண்டும் அல்லது அவரைப் பற்றி ஏதேனும் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அவரது நண்பரான எனது உறவினரது தொலை பேசிக்கு அழைத்து துண்டித்து விடுவேன். தொலை பேசி அழைப்பு என்னுடைய இல்லத்திலிருந்து வந்துள்ளது என்பதனை அறிந்து கொண்டு அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயம் என்னை சாதாரணமாக குசலம் விசாரிக்க அழைப்பது போல மீண்டும் அழைப்பார். அந்த நேரத்தில் என் உறவினரிடத்தில் நான் அவரைப் பற்றி விவரமாகத் தெரிந்து கொள்வேன்.
இவ்வாறு செய்வதன் காரணமாக என் வீட்டு தொலை பேசி எண்ணுக்கு தொலைபேசிக் கட்டணம் வராது. நான் அவரைப்பற்றி என் உறவினர் மூலமாக தொலை பேசியில் தெரிந்து கொண்டாலும் எனது வீட்டில் யாருக்கும் தெரிய வராது.
அவ்வாறு எனது உறவினரது இல்லத்திற்கு தொடர்பு கொண்டு அவரைக் காண வேண்டுமெனில் அவரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்வேன். அதே போல அவரது உடல் நலம் பற்றி அடிக்கடி கேட்டறிவேன். அவ்வாறு கேட்கும் சமயம் அவரது மகளின் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அவருக்கு நெஞ்சு வலி வந்து ஊசி போட்டதனையும் டாக்டர் ஆறு மாதத்துக்குள் மறுபடியும் வலி வரக்கூடாது எனச் சொல்லியிருந்தார் என்பதனையும் தெரிவித்தார்.
மகளுக்கு திருமணம் முடிந்த இரண்டு மாதங்களுக்குள் இரண்டாம் முறையும் வலி ஏற்பட்ட காரணத்தால் முதலில் போட்ட ஊசியினை விட சக்தி வாய்ந்த வேறு ஒரு விலையுயர்ந்த ஊசியினை போட்டுள்ளதாகவும் அந்த ஊசியின் வீரியத்தின் படி இரண்டு வருடங்களுக்கு வலி ஏற்படக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார் என்பதனையும் தெரிவித்தார். இரண்டாம் முறை மருத்துவம் பார்த்ததைக் கூட வீட்டில் சொல்லாமல் மறைத்துள்ளார் என்பதனையும் தெரிந்து கொண்டேன்.
இரண்டு வருடங்களுக்கு வலி வரக்கூடாது என்று மருத்துவர் சொன்ன போதிலும் அவருடைய மகளுக்கு திருமணம் முடிந்த ஆறு மாதங்களில் மூன்றாம் முறையாக வலி வந்து மூன்றாவது ஊசி போட்டு சிகிச்சையில் இருந்து வருவதாகத் தெரிவித்தார். இவ்வாறு மூன்று முறை மருத்துவ சிகிச்சை எடுத்த காரணத்தால் என்னைப் பார்க்க வர முடியாமல் அவர் தவித்து வருவதாகத் தெரிவித்தார். அதே நேரத்தில் இது தொடர்பான விவரங்கள் எதனையும் உறவினர்கள் யாரிடத்திலும் சொல்லாமல் அலுவலகத்தில் குறிப்பிட்ட நண்பர்களிடத்தில் மட்டும் தெரிவித்து விட்டு தினந்தோறும் அலுவலகத்திற்கு சென்று வருவதாகவும் தெரிவித்தார்.
எனது உறவினர் அவரது உடல் நலம் பற்றி மேலும் கூறுகையில் அவருக்கு கடைசியாக போடப்பட்ட ஒரே ஒரு ஊசியின் விலை ரூபாய் 14500.00 எனவும் மீண்டும் நெஞ்சு வலி வந்தால் மருத்துவ மனையில் சேர்ந்து தான் சிகிச்சை பெற முடியும் எனவும் லட்சக் கணக்கான ரூபாய் செலவாகும் எனவும் டாக்டர் சொல்லியிருப்பதாக தெரிவித்தார்.
அதன் காரணமாக தமது வாரிசுகளின் பெயரில் புதிதாக ஒரு வியாபாரம் ஆரம்பிக்க முழு முயற்சிகள் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் வியாபாரம் ஆரம்பித்து அது நன்றாக நடக்க ஆரம்பித்தவுடன் ஓய்வு எடுக்கப் போவதாகவும் சொன்னதாகத் தெரிவித்தார். எனது வீட்டில் நடைபெறும் அனைத்து நல்ல செயல்களையும் நானும் என் கணவரும் சேர்ந்து அவருடன் கலந்து ஆலோசித்த பின் தான் முடிவு செய்வோம். அதேபோல அவருடைய இல்லத்தில் நடைபெறவிருக்கும் அனைத்தையும் என்னிடம் சொல்லி விட்டுத் தான் தொடங்குவார் அல்லது தெரியப் படுத்துவார்.
அவர் என்ன வியாபாரம் ஆரம்பிக்கப் போகின்றார் என்பது பற்றித் தெரிவிக்க எனது இல்லத்திற்கு விரைவில் சென்று வர இருப்பதாகத் தெரிவித்துள்ளார் என்பதனை கேட்ட எனக்கு உள் மனதில் மிக்க சந்தோஷம் ஏற்பட்டது. ஆனால் அந்த சந்தோஷம் எனக்கு நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. எனது மகளின் திருமணத்திற்குப் பின்னர் உடல் நலமின்றி இருந்த என் கணவர் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தி விட்டார்.
என் கணவர் இயற்கை எய்திய நிலையில் என் கழுத்தில் இருந்த மங்கல நாண் ஹிந்துமத சம்பிரதாயப்படி அகற்றப்பட்டு விட்டது. எத்தனையோ ஆண்டுகளாக அவர் எனக்குப் பரிசளித்த ஆலிலைக் கிருஷ்ணன் டாலரை நான் சில நாட்கள் என் கழுத்தில் அணிய முடியாத சூழ்நிலை. அவர் எனக்குப் பரிசளித்த டாலரை கண்ணில் ஒற்றிக் கொள்ள முடியாத நிலை.
நான் தூங்கி விட்டால் தட்டி எழுப்ப என் கணவர் உயிருடன் இல்லை. என்னுடைய துயரத்தை துடைக்கவும் தூண் போல் நின்று துணையாய் காக்கவும் என் காதலரால் என்னைப் பார்க்க முன்பு போல வர முடியவில்லை. என் மனமென்னும் சிப்பிக்குள் முத்து போல சேமித்து வைத்துள்ளேன் என் காதலரின் நினைவுகளை. அவரது வருகையினை எதிர் பார்த்து வழி மீது விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றேன். என்னுடைய கவலைகளை அவரிடத்தில் சொல்லி அழுவதற்கும் அவருக்கு உடல் நலம் இல்லாத சமயத்தில் ஆறுதல் சொல்வதற்கும் என் இதயம் ஏங்கிக் கொண்டிருக்கின்றது.
என் கணவர் இயற்கை எய்திய சமயம் அவரது நண்பரான எனது உறவினர் வந்திருந்தார். அவரது மனம் துன்பப்படக் கூடாது என்பதற்காக என் உறவினரிடத்தில் என் கணவர் இயற்கை எய்திய விவரத்தை தெரிவிக்க வேண்டாமென கேட்டுக் கொண்டேன். அவரும் சரியெனச் சொல்லி அவரிடத்தில் எதுவும் தெரிவிக்கவில்லை.
என் கணவர் இயற்கை எய்தி ஒரு மாத காலம் கழித்து அவர் எனது இல்லத்திற்கு வருகை தந்தார். நான் மாடியிலிருந்து அவரை சைகை மூலம் வரவேற்றேன். எனது இல்லத்தில் நுழைந்தவுடன் எனது கணவரது படத்திற்கு மாலை போடப் பட்டுள்ளதைக் கண்டு என் கணவரது மறைவு பற்றிக் கேட்டு அறிந்து மிகவும் வருத்தப்பட்டார்.
அவர் என்னிடத்தில் கணவரது மறைவு பற்றி ஏன் சொல்லவில்லை எனக் கேட்ட சமயம் மருத்துவ மனையில் சிகிச்சையின் போது திடீரென இயற்கை எய்திய காரணத்தால் உடனடியாக இறுதிச் சடங்கு செய்ய வேண்டிய சூழ்நிலையில் அனைவருக்கும் தகவல் சொல்ல முடியவில்லை எனச் சொன்னேன். அப்போது அவரது நண்பரான எனது உறவினர் ஏன் அவரிடத்தில் சொல்லவில்லை எனக் கேட்டபோது நான் தான் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு அவரது உடல்நிலை தான் காரணம் எனவும் தெரிவித்தேன்.
அவர் புதிதாக தொடங்கியுள்ள வணிகம் பற்றித் தெரிவிக்க எனது இல்லத்திற்கு வருகை தந்துள்ளார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் என்னுடைய கணவர் இயற்கை எய்தி நான் சோகத்தில் உள்ள காரணத்தால் அந்த விவரத்தை என்னிடத்தில் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை.
அவருடன் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் அவருக்கு மூன்று முறை நெஞ்சு வலி வந்து மருத்துவரிடத்தில் காண்பித்து சிகிச்சை பெற்றதனை அறிந்து மிகவும் வருத்தப்பட்டதாகத் தெரிவித்தேன். அதன் பின்னர் அவரிடத்தில் நான் வாங்கி வந்த வரம் என் மாங்கல்யத்தை விரைவில் இழக்க நேரிட்டு விட்டது. இதனால் தானோ என்னவோ நம் இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை எனவும் அவர் என்னைத் திருமணம் செய்திருந்தால் என்னுடைய தாலி பாக்கியம் அவரை என்னிடமிருந்து பிரித்திருக்கும் எனவும் சொன்னேன். நான் சொன்னதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
அதன் பின்னர் நான் அவரிடத்தில் ஒரு வருடத்திற்குப் பின்னர் செய்ய வேண்டிய திவசத்தை 48 நாட்களில் செய்து முடிக்குமாறு உறவினர்கள் சொல்லி வற்புறுத்தி வருவதாகவும் அதனை பிள்ளைகளும் ஆதரிக்கின்றார்கள் என்றும் பிள்ளைகள் ஏன் ஆதரிக்கின்றார்கள் என்பது தெரியவில்லை எனவும் மேற்கொண்டு என்ன செய்வதென்று குழப்பமாக இருக்கின்றது எனவும் அவரிடத்தில் தெரிவித்தேன்.
உறவினர்களில் யாருக்கேனும் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தாலோ அல்லது யாருக்கேனும் வரன் பார்த்துக் கொண்டிருந்தாலோ அல்லது கிரஹப் பிரவேசம் அல்லது நிச்சயதார்த்தம் போன்ற சுப காரியங்கள் ஏதேனும் உறவினர்கள் வீடுகளில் நடைபெறுவதாக இருந்தாலோ உறவினர்களின் வேண்டுகோளை ஏற்று 48 நாட்களில் திவசத்தை முடிக்குமாறு எனக்கு அறிவுரை வழங்கினார். அவரிடத்தில் 48 நாட்களில் திவசம் முடிந்த பின்னர் கட்டாயம் என்னுடைய இல்லத்திற்கு வர வேண்டும் எனவும் அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு அறிவுரைகள் வழங்கி வழி நடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டேன். அவரும் சரியென ஒப்புக் கொண்டார்.
நான் அவரை திருமணம் செய்து கொண்டு தீர்க்க சுமங்கலியாக அவரது மடியில் உயிரை விட வேண்டும் என நினைத்து வந்ததையும் நானும் அவரும் திருமணம் செய்து கொள்ள முடியாத நிலையில் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு தற்போது விதவையாக நிற்பதையும் நினைத்து மிகவும் வருந்துவதாகத் தெரிவித்தேன்.
நான் அவருடனும் அவருடைய குடும்பத்தாருடனும் புனித யாத்திரை சென்ற போது அவருடைய தாயாருடன் நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு மரத்தை சுற்றி வந்து சத்யவான் சாவித்திரி நோன்பு பூஜையில் கலந்து கொண்டு வழி பட்டதையும் அந்த சமயத்தில் ஒருவருக்கு தெரியாமல் மற்றவர் உயிரை காலன் பறிக்க முடியாது எனச் சொன்னதையும் ஞாபகப் படுத்தி உங்களுக்குத் தெரியாமல் என் உயிர் பிரியாது அது போல என் அனுமதி இல்லாமல் எமன் உங்களை அழைத்துச் செல்ல முடியாது எனச் சொன்னேன். உதாரணத்திற்கு அவரது தாயாரின் உயிர் பிரிவதற்கு முன்னர் பயணத்தின் போது கனவில் வந்து மாரியம்மன் சொன்னதை எடுத்துக் காட்டினேன்.
அதன் பின்னர் அவரிடத்தில் இதுவரையில் அவர் மூன்று ஊசிகள் போட்டுள்ளதாகவும் இனிமேல் அது போன்ற வலி வராது எனவும் அதற்குக் காரணம் அவர் எனக்குப் பரிசளித்த ஆலிலைக் கிருஷ்ணன் டாலரை மீண்டும் தங்க செயினில் போட்டு கழுத்தில் போட்டுக் கொண்டுள்ளதாகவும் தினமும் காலையிலும் மாலையிலும் அவரது நலம் வேண்டி கண்ணில் ஒற்றி வழிபட்டு வருவதாகவும் அதன் காரணமாக இனிமேல் நெஞ்சு வலி வந்து மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டிய நிலை அவருக்கு ஏற்படாது எனவும் தெரிவித்தேன்.
இவ்வாறு அவரிடம் பேசும் சமயம் நான் என்னுடைய துக்கங்களிலிருந்தும் எதிர்காலத்தினை எப்படி எதிர்கொள்வது என்னும் பயத்திலிருந்தும் விடுபட்டு சற்று நிம்மதியாக இருந்தேன்.
அதன் பின்னர் அவரிடத்தில் எங்கள் வீட்டில் ஏதேனும் சாப்பிடலாமா எனக் கேட்டதற்கு இது எப்பொழுதுமே நமது வீடு தான் என சொல்லி விட்டு அப்போதைக்கு டீ அல்லது காபி மட்டும் போதும் எனவும் வேறு எதுவும் வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
நான் என் கணவர் உயிரோடு இருக்கும் போதே பாதி டம்ளர் காபி குடித்தவள். இப்போதும் பாதி குடித்தேன். அவரிடத்தில் ஒரு முறையாவது இருவரும் ஒரே இலையில் உணவு உண்ண விரும்புகின்றேன் எனத் தெரிவித்த சமயம் அவரே எனக்கு ஊட்டி விடுவதாகத் தெரிவித்தார். என்னுள் இருந்த கவலைகள் அனைத்தையும் மறந்து அவரது நினைவுகளுக்குள் மூழ்கி விட்டேன்.
அதற்குப் பின்னர் அவரிடத்தில் என்னிடத்தில் சொல்வதற்கு எந்த ஒரு விசேஷங்களும் இல்லையா எனக் கேட்ட சமயம் நான் கவலையில் இருந்த சமயம் அவர் வீட்டில் நடந்த விசேஷத்தினைப் பற்றி சொல்ல மனம் இடம் தரவில்லை என தெரிவித்தார். நான் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.
என்னிடமிருந்து அவர் விடைபெறும் சமயம் நான் அவரிடத்தில் தனி மரமாக நிற்கும் எனக்கு அடிக்கடி நேரில் வந்து அறிவுரைகள் வழங்குமாறு கேட்டுக் கொண்டு விடை கொடுத்தேன். கண்களில் கண்ணீர் மல்க பிரிவதற்கு மனமில்லாமல் அவர் விடைபெற்றது நம் இருவருக்கும் சங்கடமாக இருந்தது.