கோவில் படிகளின் மகிமை
அவரது இல்லத்தில் நிகழ்ந்த துயர நினைவுகள் என்னை மிகுந்த துயரத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தன. எனக்குச் சிறகுகள் இருந்தால் பறந்து சென்று அவரைச் சந்தித்து ஆறுதல் சொல்லி விட்டு அவரது மனதிலுள்ள சோகங்களை என்னால் முடிந்த வரை குறைத்து விட்டு வந்து இருப்பேன்.
நானும் அவரும் சேர்ந்து கண்டு களித்த மாயா ஜால திரைப் படங்களில் வருவது போல் ஓரிடத்தில் மறைந்து மற்றோர் இடத்தில் தோன்றும் சக்தி மட்டும் என்னிடத்தில் இருந்திருந்தால் கண் இமைக்கும் நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அவரது இருப்பிடத்திற்குச் சென்று அவர் துயரத்தில் இருக்கும் சமயத்தில் ஆறுதல் சொல்லி அவரது துன்பத்தில் பாதியினை நான் பகிர்ந்து கொண்டிருப்பேன். அவருக்கு சற்று மன நிம்மதி கிடைத்திருக்கும்.
என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. யாரிடத்திலும் மனம் விட்டு சந்தோஷமாக பேச முடியவில்லை. எப்போதும் மனதில் ஒரு இறுக்கம் இருந்து கொண்டே இருந்தது. நான் எனது சொந்த ஊருக்குச் சென்றால் உரிமையுடன் தங்குவதற்கு எனக்கு தாய் வழி உறவினர்களின் இல்லங்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் இல்லங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் செல்ல முடியவில்லை. ஆண்களைப் போல பெண்கள் தங்கும் விடுதிகளில் தினசரி வாடகைக்கு அறை எடுத்து தங்க முடியுமானால் கட்டாயம் அதனைச் செய்திருப்பேன்.
தாலி கட்டிய கணவருடன் சென்றால் கூட நடு நிசியில் தங்கும் விடுதிகளில் அறைகளின் கதவுகளைத் தட்டுகின்ற காலத்தில் நான் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு தனிமையில் தங்கினால் என் நிலைமை என்னவாகும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது. தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி அவரைச் சந்திப்பதும் சாத்தியமில்லாமல் இருந்தது.
அவருக்கு நான் ஆறுதல் சொல்லியே தீர வேண்டும் என என் மனது துடித்துக் கொண்டிருந்தது. சொந்த ஊருக்குச் சென்று வந்து நான்கைந்து மாதங்கள் கூட ஆகாத நிலையில் மீண்டும் சென்று வருவதற்கு என் மகன்கள் நிச்சயம் சம்மதிக்க மாட்டார்கள். ஏதேனும் ஒரு சாக்கு கிடைத்தால் கட்டாயம் சொந்த ஊருக்குச் சென்று துயரத்தில் இருக்கும் அவரை ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் சந்தித்து நான் ஆறுதல் சொல்லி விட்டு எதிர் காலத்தை நினைத்து கவரைப்பட வேண்டாம் என்று அவருக்கு தைரியமூட்டி விட்டு வரத் துடித்து கடவுளிடம் எனது கோரிக்கையினை வைத்தேன்.
கடவுள் நம்பிக்கையே இல்லாமல் உழைப்பின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்திருந்த அவருக்கு கடவுள் நம்பிக்கை வர வைப்பதற்காக என்னுடன் தனிமையில் நீண்ட நேரம் உறவாட வேண்டும் என்னும் ஒரே எண்ணத்தில் நாம் இருவரும் கோயில் குளங்களுக்கு பக்திக்காக அல்லாமல் பொழுது போக்கிற்காகச் சென்று வந்தோம். அது அவருக்கு கடவுள் மீது நம்பிக்கை ஏற்படச் செய்து பிற்காலத்தில் அவர் எனக்கு ஆன்மீக அறிவுறைகள் சொல்லும் அளவிற்கு மாற்றி விட்டது. கடவுளின் ஆசியும் அவருக்கு பரிபூரணமாக கிடைத்து விட்டது.
அவர் என்னிடத்தில் சொன்னது போல கருங்கல்லினால் கோயில்களில் உள்ள சிற்பங்களை வடிவமைக்கின்றார்கள். அதே கருங்கல்லினைக் கொண்டு கோயிலுக்கு உள்ளே செல்வதற்கு படிக்கட்டுகள் அமைக்கின்றார்கள். கோயிலுக்கு உள்ளே உள்ளது கருங்கல்லில் செதுக்கப்பட்ட சிற்பம் அல்லது சிலை. வெளியே உள்ளது அதே மலையிலிருந்து எடுக்கப்பட்ட அல்லது அதே போன்ற கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட படிகள். எனவே தான் நாம் கோயிலுக்குச் செல்லும் சமயம் நமது கால்களில் காலனிகள் இல்லாமல் வெறும் காலுடன் படிகளைத் தொட்டு வணங்கி விட்டு அதன் பின்னர் கோயிலுக்குள் செல்கின்றோம்.
கோயில் வாசலில் உள்ளவை படிக்கட்டுகளாக இருந்தாலும் முதல் படியில் காலினை வைத்து அடுத்தடுத்த படிகளில் ஏறி கோயிலுக்குள் சென்று கர்ப்பக்கிரஹத்தில் உள்ள கடவுளை இரு கரம் கூப்பி வணங்கி முடிக்கும் வரையில் நான் மற்றும் எனது என்னும் அகந்தை மற்றும அகங்காரம் இல்லாமல் பணிவுடன் குனிந்து வணங்கினால் மட்டுமே படிப் படியாக வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து உயர்வுக்கு வர முடியும் என்பதன் அறிகுறியாகவும் வைத்துக் கொள்ளலாம்.
ஒரே கருங்கல்லிலிருந்து எந்த கடவுள் சிற்பத்தையும் வடிவமைக்க முடியும். கோயிலில் செதுக்கப் பட்டுள்ள விக்ரஹங்களுக்கு ஆண் பெண் வாகனம் விலங்கு பலி பீடம் என பலப்பல வித்தியாசங்கள் உண்டு. சொல்லுகின்ற மந்திரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளில் வித்தியாசம் உண்டு. அபிஷேக ஆராதனைகளில் வித்தியாசம் உண்டு. சைவம் வைணவம் என்னும் பாகு பாடு உண்டு. சாந்தமான கடவுள் உக்கிரமான கடவுள் என வித்தியாசம் உண்டு. கடவுள் சிலைகளுக்கு படைக்கப் படுகின்ற நைவேத்தியங்களுக்குள் கூட வித்தியாசம் உண்டு.
இவற்றை எல்லாம் தாண்டி அனைவராலும் வழி படக் கூடியது சிற்பங்களாக செதுக்கப் படும் பாக்கியத்தினைப் பெறாத கருங்கல் பாறைகளால் வடிவமைக்கப்பட்ட படிக்கட்டுகள். அதாவது கோயில் நுழைவு வாயில்களில் வடிவமைக்கப்பட்ட படிக்கட்டுகள். எனவே தான் கோயில்களில் உள்ள படிக்கட்டுகளுக்கு கோயில் சார்பாக சிறப்பு பூஜைகள் நடத்தப் படுகின்றன. பக்தர்கள் ஒவ்வொரு படிக்கட்டிலும் தீபம் அல்லது சூடம் ஏற்றி வழிபட்டுக் கொண்டே கோயில்களுக்குச் செல்கின்றார்கள்.
ஜாதகம் பார்க்கும் ஜோதிடர்களின் அறிவுறைகளின்படி ஒரு குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வேளையில் குறிப்பிட்ட ஹோரையில் குறிப்பிட்ட கோயிலில் குறிப்பிட்ட தெய்வங்களை குறிப்பிட்ட காலம் வழிபடச் சொல்வார்கள். அவ்வாறு சொல்லப்பட்ட கோயிலில் பலப்பல கடவுள் விக்ரஹங்கள் இருந்தாலும் கூட ஜோதிடர் சொன்ன அந்த குறிப்பிட்ட கடவுள் விக்ரஹத்திற்கு மட்டும் சிறப்பு வழிபாடு செய்து விட்டு இல்லம் திரும்புவார்கள். அதே போல அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கும் பலர் கோயிலுக்குச் சென்று திரும்புவார்கள். ஆனால் அனைவரும் பாகு பாடு இல்லாமல் குனிந்து தொட்டுக் கும்பிட்டு வழிபடுவது கோயில் நுழைவு வாசல்களில் உள்ள படிக்கட்டுகளை மட்டுமே.
நான் ஒரு கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்த பின்னர் கோயிலில் உள்ள மூன்றாவது படிக்கட்டில் அமர்ந்து கொண்டு என்னுடைய பிரார்த்தனையை உள்ளே உள்ள கடவுளிடத்தில் வைத்தேன். எனது கோரிக்கை கர்ப்பக் கிரஹத்திலுள்ள கடவுளால் இரட்டிப்பாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.
நான் கோயிலுக்குச் சென்று அவர் செய்வது போல மூன்றாவது படிக்கட்டில் அமர்ந்து கொண்டு வேண்டிக் கொண்ட இரண்டு மூன்று தினங்களில் எனது முதல் சம்மந்திக்கு கறுவுற்றிருக்கும் தமது மகளை காண வேண்டும் என்னும் ஏக்கம் இருப்பதாகவும் அவருக்கு பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு உடல் நலம் இடம் கொடுக்காத காரணத்தால் அவரால் வர முடியவில்லை எனவும் அதன் காரணமாக எனது மகன் மற்றும் மருமகள் இருவரையும் சொந்த ஊருக்கு வருமாறும் கடிதம் வந்தது.
இதனை சாதகமாக பயன் படுத்திக் கொண்டு உடல் நலம் குன்றியிருக்கும் சம்மந்தியை நான் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரிக்க வேண்டும் எனக் காரணம் சொல்லி என் மகன் மற்றும் மறுமகளுடன் சொந்த ஊருக்குச் சென்று ஒரு வார காலம் தங்கியிருந்தேன்.
எனது சம்மந்தி அவருக்கும் நண்பர் என்னும் காரணத்தால் நாங்கள் புறப்படுவதற்கு முதல் நாளே எனது உறவினர் மூலம் அவருக்கு நான் என் வருகை பற்றி தெரியப் படுத்தினேன். அவர் எனது உறவினருடன் நேரில் வந்து எனது சம்மந்தியிடம் உடல் நலம் பற்றி விசாரித்து விட்டு திரும்புகையில் நான் அவரிடத்தில் அவரை தனிமையில் அவரது நண்பர் இல்லத்தில் சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தேன். உடனே இருவரும் சேர்ந்து ஞாயிற்றுக் கிழமையன்று பகல் விருந்திற்கு வருமாறு அழைத்தனர். அதனை ஏற்றுக் கொண்டு அவ்வண்ணமே நான் மட்டும் விருந்தில் கலந்து கொண்டேன்.
நம் இருவருக்கிடையே உள்ள உறவு என் உறவினரான அவரது நண்பரின் மனைவிக்கு நன்றாகத் தெரியும் என்பதாலும் நாம் இருவரும் திருமண பந்தத்தில் இணைய முடியாததை தெரிந்து வைத்திருந்த காரணத்தாலும் எனக்கு எப்போதும் ஆறுதலாகவும் சாதகமாகவும் இருப்பதன் காரணமாக எனக்கும் அவருக்கும் ஒன்றாக விருந்து படைப்பதில் அவருக்கு ஒரு வகையில் எல்லையில்லா சந்தோஷம். நான் ஞாயிற்றுக் கிழமை காலையிலேயே எனது உறவினர் வீட்டுக்குச் சென்று உறவினரின் மனைவிக்கு உணவு தயார் செய்வதில் உதவி செய்தேன். அவருக்கு எந்த மாதிரியான உணவு வகைகள் பிடிக்கும் என்பதனை என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட பின்னர் அவ்வாறே நாம் இருவரும் சேர்ந்து சமைத்தோம். மதிய உணவு விருந்து முடிந்த பின்னர் அனைவரும் பேசுவதன் பொருட்டு மாடிக்குச் சென்றோம்.
அவரிடத்தில் கவலைகள் சற்று குறைந்து இருந்தது. இருந்தாலும் நான் அவரிடத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஏற்பட்டுள்ள சுமைகளைக் கண்டு கலங்கிட வேண்டாம் எனவும் என்னைத் திருமணம் செய்து கொள்வதற்காக இஞ்ஜினியர் ஆக வேண்டும் என்னும் எண்ணத்தை துறந்து விட்டு எப்படி வேலை தேடி வழிபாடுகள் மேற்கொண்டு அரசாங்க வேலை கிடைத்ததோ அது போல நினைத்துக் கொள்ளுங்கள் எனச் சொன்னேன்.
அப்போது அவர் அந்தக் காலத்தில் என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்னும் உந்துதல் இருந்த காரணத்தாலும் வேலைக்குச் செல்லும் அளவிற்கு வயது இருந்ததாலும் அவ்வாறு செய்ய முடிந்ததாகச் சொல்லி விட்டு அது போன்ற ஒரு உந்துதல் இல்லை என்பதனைத் தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல் சொந்த ஊரில் யாரிடத்திலும் வேலை வேண்டும் என்று கேட்க முடியாத அளவிற்கு தமக்கு மதிப்பு மரியாதை உயர்ந்து விட்ட காரணத்தால் யாரிடத்திலும் சென்று வேலை கேட்கும் நிலை இல்லையெனச் சொன்னார். இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக நிச்சயம் எதிர்காலத்தில் எந்த விதமான சவால்கள் ஏற்பட்டாலும் தனியாக சந்திக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில் அவருக்கு மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கடவுளுக்கு கோயில் கட்ட ஆரம்பித்து வைக்கும் பிராப்தம் கிடைத்துள்ளதால் அதில் கவனம் செலுத்தி வருவதன் காரணமாக மன நிம்மதி கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். நான் மேற்கொண்டு விவரங்கள் எதுவும் கேட்கவில்லை. இருந்தாலும் நிச்சயம் அவரால் அவ்வாறான பணிகளை மேற்கொள்ள முடியும் என்பது எனக்கு மிகுந்த நிம்மதியினைக் கொடுத்தது.
ஒரு கோயிலில் உள்ள மூன்றாவது படிக்கட்டில் அமர்ந்து கொண்டு அவரை சந்திக்க வேண்டும் என வேண்டிக் கொண்ட பின்னர் தாமாகவே அந்த சந்தர்ப்பம் எனக்கு கிடைத்ததாக அவரிடத்தில் தெரிவித்த சமயம் மீண்டும் ஒரு முறை நாம் இருவரும் காதலிக்கும் சமயம் குளக்கரை படிக் கட்டுகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போல பேசி மகிழ்ந்து தமது கவலைகளை மறக்க வேண்டும் எனச் சொன்னார்.
அதனை நான் ஏற்றுக் கொண்டு அவருடன் ஒரு கோயிலுக்குச் சென்று நீண்ட நேரம் குளக்கரையில் அமர்ந்து கொண்டு அவருக்கு ஆறுதல் சொல்லுகின்ற பொருள் பற்றி மட்டுமே பேசினேன். என்னுடைய இல்லத்தில் உள்ள பிரச்சினைகள் எதனையும் அவரிடத்தில் பேசவில்லை. அது பற்றி அவரே என்னிடத்தில் கேட்ட சமயம் அவருக்கு ஆறுதல் சொல்லவே நான் வந்திருப்பதாகவும் எனது வீட்டுப் பிரச்சினைகளை வேறொரு நாளில் எனது இல்லத்தில் வைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தேன். அது பற்றிப் பேச ஓரிரு மாதங்களில் என்னுடைய இல்லத்திற்கு வருமாறு அன்புடன் அழைத்தேன். அவர் மறுப்பு எதுவும் சொல்லாமல் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார்.
வெவ்வேறு இடங்களில் இருவரும் சந்தித்து இரண்டு அல்லது மூன்று முறை கலந்துரையாடினோம். இருவருக்கும் மனக் கவலைகள் அனைத்தும் குறைந்து விட்டதாக உணர்ந்தோம். மீண்டும் ஒரு வசந்த காலம் வந்தது போல இருவரும் ஒன்றாகச் சேர்ந்து கோயிலுக்குச் சென்று வழிபாடு முடிந்ததும் நீண்ட நேரம் கலந்துரையாடி விட்டு ஹோட்டலுக்குச் சென்று இருவரும் சிற்றுண்டி மற்றும் குளிர் பானம் அருந்தினோம். அப்போது தான் தெரிந்தது அவர் இது வரை வகித்து வந்த பதவியின் பெருமை. கோயிலிலும் சரி சிற்றுண்டி சாப்பிட்ட ஹோட்டலிலும் சரி இதர இடங்களிலும் சரி அவருக்கு கிடைத்தது நல்ல மரியாதை மற்றும் அன்பான உபசரிப்புடன் கூடிய வரவேற்பு. அதனைக் கண்ட எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
என்ன தான் ஆசை ஆசையாக தனக்கென்று ஒரு குழந்தை வேண்டும் என்று கர்ப்பம் தரித்தாலும் குழந்தை பிறக்கும் போது பிரசவ வலி ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படத் தான் செய்யும் அதனால் குழந்தை பெறுகின்ற பெண்ணுக்கு அழுகை வந்தே தீரும் என்பது போல நாம் இருவரும் எவ்வளவு தான் ஆறுதல் சொல்லி மகிழ்ந்தாலும் கூட இருவரும் ஒருவரிடத்தில் மற்றொருவர் சென்று வருகின்றேன் எனக் கூறும் சமயம் என்னை அறியாமலேயே என் கண்களில் கண்ணீர். இது ஆனந்தக் கண்ணீரா அல்லது சோகக் கண்ணீரா என்பது வீட்டிற்குச் சென்று தனிமையில் படுக்கையில் படுத்தால் தான் தெரியும். இது தான் உண்மை எதார்த்தம்.