கண்ணுக்குத் தெரியாத துணை
அவரை நான் எப்போது சந்தித்தாலும் முதன் முதலாக அவரைப் பார்த்தது போலவே என்னுடைய எண்ணங்கள் இளமையாக இருக்கின்றது. அவர் என்னிடம் செலுத்தும் அன்பு கொஞ்சம் கூட குறையவில்லை. அதே போல நான் அவரிடத்தில் செலுத்தும் அன்பு இம்மியளவு கூட குறையவில்லை.
அவரை உயிருக்கு உயிராக இளம் வயதில் காதலித்த சமயத்தில் இருந்தது போல எனக்குத் திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் பிறந்து பேரன் பேத்திகள் பிறந்து விட்ட இந்த வயதிலும் நாம் இருவரும் சேர்ந்து பேசுவதை யாராவது பார்த்து நம்மை தவறாக நினைத்து விடுவார்களோ என்னும் பயம் என்னுடைய இதயக் கோட்டைக்குள் தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கின்றது. யாருடைய கண்களுக்கும் புலப்படாமல் அவர் எனக்கு ஒவ்வொரு செயலிலும் வழிகாட்டித் துணையாக இருந்து வருகின்றார்.
நான் தனியாக நடந்து செல்கின்ற போதும் கூட யாருக்கும் புலப்படாமல் என் கையினைப் பிடித்துக் கொண்டு என்னுடன் என் காதலர் வருவதாக உணர்கின்றேன். ஒவ்வொரு நாள் காலையில் படுக்கையிலிருந்து எழும் போதும் இரவு தூங்கச் செல்லும் போதும் அவர் எனக்குப் பரிசளித்த ஆலிலைக் கிருஷ்ணன் டாலரை முத்தமிடத் தவறியதில்லை.
நான் அவரிடத்தில் எவ்வளவு அன்பாக இருந்தேன் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவரிடத்தில் நான் எவ்வளவு அன்பு செலுத்தினேனோ அந்த அளவு அன்பினை வேறு யாரிடத்திலும் என்னால் செலுத்த முடியவில்லை.
எனக்குத் திருமணமாகி விட்டது. ஒரு மகள். இரண்டு மகன்கள் என குடும்பம் பெருகி விட்டது. எனக்கு பேரன் பேத்திகள் பிறக்கும் வயதாகி விட்டது. எனக்கென்று பலப்பல உறவுகள் ஏற்பட்ட போதிலும் என்னுடைய சந்தோஷத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்ள நான் தேடுவது அவரை மட்டுமே.
எனக்கு ஆறுதல் சொல்லி என்னை சரியான பாதையில் வழி நடத்திச் செல்ல அவரால் மட்டுமே முடியும் என்று என் இதயம் அவரையே நாடுகின்றது. என் இதயம் அவரை மட்டும் தான் தேடுகின்றது என்பது அவருக்குத் தெரியாது.
என் கணவரது மறைவுக்குப் பின்னர் அவர் எனது இல்லத்திற்கு இரண்டு முறை வருகை தந்த சமயத்தில் நம் இருவரது நலம் பற்றியும் நம் இருவரது குடும்பத்தார் நலம் பற்றியும் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டோம். அது சமயம் நான் வருத்தப்பட வேண்டிய சில சம்பவங்கள் அவரது குடும்பத்தில் நடப்பது எனக்குப் பிடிக்கவில்லை.
அவர் இரண்டாம் முறை வந்த சமயத்தில் என்னிடம் எவ்வளவு சீக்கிரம் தனது காதலை வெளிப்படுத்தி என்னை காதலிக்க ஆரம்பித்தாரோ அதனை விட மிகக் குறைந்த நேரத்தில் என் மகன் காதல் வயப்பட்டுள்ளான் எனக் கண்டறிந்து அந்த மகனுக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்து தருவதாகச் சொல்லி விட்டார்.
என் கணவர் இயற்கை எய்தி ஒரு வருடம் கழித்து செய்ய வேண்டிய திவசத்தினை 48 நாட்களில் உறவினர்கள் முடிக்கச் சொன்னதற்கும் அதனை என் மகன்கள் ஆதரித்ததற்கான காரணம் முதலாவது மகனின் காதல் தான் என அவர் சொல்ல நான் தெரிந்து கொண்டேன்.
பெரியவர்கள் சேர்ந்து முடிவெடுத்து திருமணம் செய்து வைக்காவிடில் அவர்களாகவே விரைவில் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் அதனால் ஏற்படப் போகும் பின்விளைவுகளை சமாளித்தாக வேண்டும் எனவும் தெரிவித்தார். எனக்கு ஒரு பக்கம் கவலையாகவும் மறு பக்கம் பயமாகவும் இருந்தது. அவர் இன்னும் பதினைந்து நாட்களுக்குப் பின்னர் மீண்டும் வருவதாகத் தெரிவித்துள்ளார். அதற்குள் நான் என் மகனிடம் கேட்டறிந்து அவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
அடுத்து வந்த விடுமுறை நாளன்று முகூர்த்த தினமாக இருந்த காரணத்தாலும் அவர் சுட்டிக் காட்டிய அந்த உறவுக்காரப் பெண்ணும் எனது வீட்டிற்கு வந்து இருந்த நேரத்தில் அந்தப் பெண்ணை வைத்துக் கொண்டு என் மகனிடத்தில் திருமணப் பேச்சினை ஆரம்பித்தேன்.
ஒரு துக்க சம்பவம் நடந்தால் அந்த வீட்டில் வருடம் திரும்புவதற்குள் ஒரு மங்கள கரமான சுப சம்பவம் நடந்தால் நல்லது என்று பெரியவர்கள் சொல்கின்றார்கள் என்று சொல்லி என்னுடைய பேச்சினை துவக்கினேன். வருடம் முடிந்து செய்ய வேண்டிய திவசத்தினை 48 நாட்களில் முடித்து விட்ட காரணத்தால் இனி நல்ல நாள் பார்த்து பெண் பார்க்க ஆரம்பித்து திருமணத்தை ஒரு வருடத்திற்குள் நடத்தி விடலாம் என தீர்மானித்துள்ளேன் எனத் தெரிவித்த சமயம் என் மகன் சற்று கோபப் பட்டான்.
அப்போது உறவுக்காரப் பெண் அவனை சமாதானப் படுத்தி உங்களது பதிலை கோபப்படாமல் உங்கள் தாயாரிடம் எதுவாக இருந்தாலும் மெதுவாக அமைதியாக அதே நேரத்தில் சந்தோஷமாகத் தெரிவியுங்கள் எனச் சொன்னாள். அப்போது என் மகன் சமாதானம் அடைந்து அமைதியாகப் பேச ஆரம்பித்தான்.
திருமணம் என்று ஒன்று நடந்தால் இந்தப் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் இந்தப் பெண்ணைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று ஆணித் தரமாகத் தெரிவித்தான். அச்சமயத்தில் நான் நமது அந்தஸ்திற்கும் அவர்களது அந்தஸ்திற்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது எனவும் அவளது பெற்றோர் சம்மதிக்காவிடில் என்ன செய்வது என்றும் கேட்டேன்.
அப்போது அந்தப் பெண் எனது பெற்றோர் நான் இவரைத் திருமணம் செய்து கொள்ள மறுப்புத் தெரிவித்தால் நாங்கள் இருவரும் எனது படிப்பு முடிந்தவுடன் பெற்றோர் அனுமதிக்குக் காத்திருக்காமல் பதிவுத் திருமணம் செய்து கொள்வோம் எனவும் அதனை நான் ஏற்றுக் கொண்டால் என்னுடன் இருப்பார்கள் எனவும் மறுப்புத் தெரிவித்தால் என்னை விட்டுப் பிரிந்து சென்று விடுவார்கள் எனவும் தெரிவித்தாள். அதனை என் மகனும் தீர்மானமாகச் சொல்லி ஊர்ஜிதம் செய்தான்.
நான் என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்த நிலையில் என் மகன் அந்தப் பெண்ணுடன் மதிய உணவு சாப்பிட்டு விட்டு அந்தப் பெண்ணை இரண்டு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு என்னிடத்தில் எதுவும் சொல்லாமல் புறப்பட்டுச் சென்று விட்டான்.
இதுவரையில் என் மகனிடத்தில் இருந்த தாய்ப்பாசம் என்னும் எனது மரியாதை முழுவதுமாக சரிந்து விட்டது என எண்ணி வருந்தினேன். இரவு நீண்ட நேரம் கழித்து வீடு திரும்பிய காரணத்தால் நான் என் மகனிடம் எதுவும் கேட்க முடியவில்லை. அதற்குப் பின்னரும் கேட்கவில்லை.
ஆனால் அடுத்த வாரம் அந்தப்பெண் எதுவும் நடக்காதது போல என்னுடைய இல்லத்திற்கு வந்த சமயம் நான் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் நான் ஒன்றும் பேசாமல் அவரது வருகையினை எதிர்பார்த்து வழக்கம் போல சமையலில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
மதிய உணவுக்குப் பின்னர் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருநது விட்டு இருவரும் புறப்பட்டுச் சென்றனர். என்னிடத்தில் எதுவும் கேட்கவில்லை. அந்தப் பெண்ணும் என்னிடத்தில் போய் வருகின்றேன் என ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என் மனம் என் முதல் மகனால் காரணமில்லாமல் காயப் படுத்தப் படுகின்றது. என்னுடைய மனம் சங்கடப் பட்டது.
அவர் எனக்கு அறிவுரைகள் வழங்க இன்னும் பதினைந்து நாட்களுக்குப் பின்னர் மீண்டும் வருவேன் எனச் சொல்லிச் சென்று நான்கு வாரங்கள் ஆகி விட்டது. இன்னும் என்னைப் பார்க்க அவர் வரவில்லை. இதுவரையில் இல்லாத அளவிற்கு அவரது வருகைக்காக எனது மனம் ஏங்கிக் தவித்துக் கொண்டிருக்கின்றது.
அவர் என்னைத் தேடி வராதது பற்றி எனது உறவினருக்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு விசாரித்ததில் அவர் ஏற்கனவே வெள்ளிக் கிழமையன்றே என்னைக் காண புறப்பட்டு வந்து விட்டார் என்பதனை அறிந்து கொண்டேன். ஆனால் இன்னமும் வரவில்லை என்பது எனக்கு அவருக்கு நடுவழியில் ஏதேனும் ஆகியிருக்குமோ என்னும் சந்தேகம் கலந்த பயத்துடன் சோகத்தைக் கொடுத்தது.
அவர் என்னைக் காண ஞாயிற்றுக் கிழமையன்று வராமல் மறு நாள் திங்கட் கிழமையன்று காலையில் வருகை தந்தார். நான் காரணம் கேட்டதற்கு விடுமுறை நாட்களில் மகன்கள் இருப்பார்கள் எனவும் அநேகமாக வருங்கால மருமகள் கூட வந்திருக்கலாம் எனவும் அந்த நேரத்தில் பேச முடியாது என்பதனால் அலுவலக நாளான திங்கட் கிழமை வந்துள்ளதாகவும் தெரிவித்தார். அவர் என்னிடத்தில் அவருடைய கணிப்பு சரி தானா எனக் கேட்ட சமயம் நான் விசும்பி விசும்பி அழ ஆரம்பித்து விட்டேன்.
அவர் என்னிடத்தில் ஏதேனும் தவறாக கணித்து விட்டேனா எனக் கேட்ட சமயம் அவரது கணிப்பு சரிதான் எனவும் அவர்களின் அந்தஸ்திற்கு எனது அந்தஸ்து மிகவும் குறைவானது என்றும் அவர்கள் என் மகனுக்கு பெண் கொடுப்பார்களா என்று தெரியவில்லை எனவும் சொன்னேன்.
அவர் உடனே என்னிடத்தில் காசு பணம் அந்தஸ்து இன்று வரும் நாளை போகும். உதாரணத்திற்கு என்னுடைய தாயார் சொத்து சுகம் நிறைய இருக்கின்றதென்று இந்த இடத்தில் திருமணம் செய்து கொடுத்தார்கள். ஆனால் இன்றைய நிலை என்னவாயிற்று எனக் கேட்டார். என்னால் பதில் சொல்ல முடியாத நிலையில் அந்தஸ்தினைப் பற்றி எந்தக் கவலையும் வேண்டாம் எனச் சொல்லி விட்டு அந்தப் பெண்ணின் பெற்றோர் பற்றிய விவரங்களை முழுமையாகச் சொல்லும் படி கேட்டார். .
நான் அந்தப் பெண்ணின் பெற்றோர் பற்றிய முழு விவரங்களையும் அவரிடத்தில் தெரிவித்த போது பெண்ணின் தந்தை என்ன உத்யோகத்தில் இருக்கின்றார் எனக் கேட்டார். நான் அதனையும் சொல்லி முடித்தவுடன் பெண்ணின் தந்தை அவருடன் படித்தவர் என்றும் அவருக்கு நன்கு அறிமுகமான நண்பர் என்றும் நான் அவரைக் காதலிக்கும் சமயம் என்னுடன் அவர் ஊர் சுற்ற வேண்டிய சூழ்நிலையில் நண்பர்களின் எண்ணிக்கை குறைந்ததில் அவரும் ஒருவர் எனத் தெரிவித்தார்.
அதன் பின்னர் அவருக்கு இரண்டு மகள்கள் இருப்பதாகவும் இது முதலாதவது பெண் என்றும் சொல்லி என்னிடத்தில் சரியென ஊர்ஜிதப் படுத்திக் கொண்டார். அதன் பின்னர் அவர் என்னிடத்தில் அந்த பெண்ணை எனது மகனுக்குப் பேசி முடித்து திருமணம் செய்து வைக்க வேண்டியது தமது பொறுப்பு என்றும் எதனைப் பற்றியும் கவலைப் படாமல் நிம்மதியாக ஓய்வு எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
அதன் பின்னர் அவர் என்னிடத்தில் நாம் ஏற்கனவே எனது வீட்டில் நடைபெறும் எந்த விசேஷங்களிலும் அவர் கலந்து கொள்வதில்லை என்றும் அதே போல அவரது வீட்டில் நடக்கும் எந்த விசேஷங்களிலும் நான் கலந்து கொள்வதில்லை என்றும் முடிவெடுத்த படி திருமணத்தை பேசி முடித்து இருவரையும் சேர்த்து வைக்கும் திருமண வைபவத்தில் அவர் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதன் காரணமாக அன்றைய தினமே கல்யாண விருந்து போல அப்பளம் பாயசத்துடன் உணவு பரிமாறுமாறு கேட்டுக் கொண்டார்.
நானும் அவர் கேட்டுக் கொண்டபடி உடனடியாக அப்பளம் பொறித்து பாயசம் தயார் செய்து உணவு பரிமாறினேன். அந்த சமயத்தில் நானும் அவரும் ஒரே இலையில் உணவு சாப்பிட வேண்டும் என என் விருப்பத்தைத் தெரிவித்த சமயம் அவர் சொன்னபடி எனக்கு அவரது கையினால் உணவு ஊட்டி பரவசப் படுத்தினார். எனக்கு எல்லையில்லாத இரட்டிப்பு ஆனந்தம்.
அவர் என்னிடத்தில் ஊருக்குச் சென்று திருமண ஏற்பாடுகளை செய்ய இருப்பதாகவும் அந்தப் பெண்ணின் தந்தை எனது வீட்டிற்கு கணவர் இறந்த துக்கம் விசாரிப்பது போல வந்து திருமணப் பேச்சினை ஆரம்பிக்கும் சமயம் ஒப்புதல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார். எனக்கு இவ்வளவு ஆணித்தரமாக அவர் சொல்லிச் சென்றது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது.
அவர் இருந்த வரையில் எனது உதடுகள் புன்னகையுடன் இருந்த போதிலும் அவர் திரும்பிச் சென்றவுடன் என் கண்களில் நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்து விட்டது. அவரது வாக்குறுதி நிறைவேறினால் என் மகனும் மருமகளும் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள். ஆனால் இதே போல நம் இருவரைச் சேர்த்து வைக்க அந்தக் காலத்தில் நம் இருவருக்கும் உதவ யாரும் முன்வரவில்லை என்பதனை நினைத்து நான் இரவு முழுக்க அழுது கொண்டிருந்தேன்.
யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல அவர் திருமணம் தொடர்பாக என் மகன் காதலித்து வரும் அந்தப் பெண்ணின் இல்லத்திற்குச் சென்ற சமயம் அவரது நண்பர் வீட்டில் நடக்கக் கூடாத சம்பவம் ஒன்று நடந்து விட்டது. அந்தச் சம்பவம் வெளி உலகிற்கு தெரிய வருவதற்கு முன்னர் மகளின் திருமணத்தை யாருக்கும் தெரியாமல் காதும் காதும் வைத்தது போல என் மகனுடன் முடித்து விடுமாறு அவர் அந்தப் பெண்ணின் தந்தையிடம் அறிவுறுத்தியதன் பேரில் அந்தப் பெண்ணின் பெற்றோர் எனது இல்லத்திற்கு துக்கம் விசாரிக்க வந்தது போல வந்து சேர்ந்தனர். எனக்கு ஒரே ஆச்சர்யம்.
அவர் என்னிடம் என்ன சொல்லி விட்டுச் சென்றாரோ அதே போல என் மகனின் திருமண ஏற்பாடுகள் நடந்தேறியது. அவர் வந்து என்னிடத்தில் பேசிச் சென்ற ஒரு மாதத்திற்குள் என் மகனுக்கும் திருமண நாள் நிச்சயிக்கப்பட்டது. என் கழுத்தில் மங்கல நாண் இல்லாத காரணத்தால் என்னால் சொந்த ஊருக்குச் சென்று உறவினர்கள் யாரையும் அழைக்க முடியாத சூழ்நிலை. அவரை நேரில் சென்று அழைக்க முடியாதவாறு ஹிந்து மத சம்பிரதாயம் தடுத்து விட்டது. என் மகனிடத்தில் அவரை அழைக்குமாறு சொல்லியும் கூட அழைக்கவில்லை. எனவே எனது இரண்டாவது மகனிடத்தில் சொல்லி அழைப்பிதழை தபால் மூலம் அனுப்பி வைத்தேன்.
தமது மகளின் திருமணத்தினை ஏற்பாடு செய்த காரணத்தால் பெண் வீட்டார் அவருக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து அவரது வீட்டிற்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வந்தார்கள் எனவும் தெரிந்து கொண்டேன்.
எனக்கு வரப்போகின்ற சம்மந்திக்கு என்னைப் பற்றியும் என்னுடன் அவருக்கு இருந்த உறவு பற்றியும் நன்றாகத் தெரியும் என்பது நம் மூவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அதனை அவரது நண்பரான சம்மந்தி வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
என் மகனுக்குத் திருமணம் இனிதே நடந்தேறியது. அவர் எனக்குப் பரிசளித்த டாலரைத் தொட்டுத் தடவிக் கொண்டே மணமக்களை ஆசீர்வதித்தேன். திருமணத்தின் போது நான் அவருடன் யாருக்கும் புலப்படாமல் மானசீகமாக ஆசீர்வதிப்பது போல இருந்தது. யார் கண்களுக்கும் புலப்படாமல் என் கரங்களைப் பற்றிக் கொண்டு அவர் என்னை வழி நடத்திச் செல்வதாக உணர்கின்றேன்.
அவர் என் குடும்பத்தில் என் கணவர் உயிருடன் இருந்த போது மகளின் திருமணத்திற்காகவும் என் கணவர் உயிருடன் இல்லாத நிலையில் என் மகனின் திருமணத்திற்காகவும் செய்துள்ள உதவிகளை நான் இறக்கும் நிலை வந்தாலும் மறக்கும் நிலை வராது. எப்போதும் என் மூச்சுக் காற்றுடன் அவர் இருக்கின்றார்.
வீட்டில் என்ன தான் சுக துக்கங்கள் நடந்தேறினாலும் அவரைப் பற்றிய நினைவுகள் பலப்பல இரவுகள் என்னைத் துயரத்திற்கு உள்ளாக்கி விடுகின்றன.
ஒரு பக்கம் மகனுக்கு சந்தோஷமான முதலிரவு என்பதனால் கண்களில் ஆனந்தக் கண்ணீர். மறு பக்கம் நான் அவரை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்னும் ஏக்கத்தின் காரணமாக கண்களில் சோகக் கண்ணீர். கடைசியில் ஜெயித்தது சோகக் கண்ணீர்.