மறுபடியும் சந்தித்தல்
கட்டாயத் திருமணம் நடந்தேறிய நாளன்று இரவோடு இரவாக தங்கையின் தயவில் அவரது வீட்டில் என் தாயாருடன் வாழ்ந்து வந்த நான் அங்கிருந்து புறப்பட்டு எனக்கு தாலி கட்டியவர் வீட்டிற்கு வந்து விட்டேன்.
என்னுடைய காதல் விஷயம் தாலி கட்டியவருக்குத் தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவும் நான் ஏதேனும் விபரீத முடிவுகளை எடுப்பதிலிருந்து பாது காக்கும் பொருட்டும் என்னுடைய உறவினர்கள் இங்கேயே நீண்ட நாட்கள் தங்கியிருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் திரும்பினர்.
எனது விருப்பம் இல்லாமலே திருமணம் ஆகியிருந்த போதிலும் தீபாவளியன்று ரத்த காயங்களுடன் திரும்பிய அவர் எப்படி இருக்கின்றாறோ என்றும் எனது தாயார் தள்ளிவிடும் சமயம் பின் பக்கமாக விழுந்ததால் தலையில் ஏதேனும் பலத்த அடி பட்டிருக்குமோ என்றும் அவருடைய உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்குமோ என்றும் பயந்து பயந்து தினமும் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். அவருக்கு வேலை கிடைத்த பின்னர் ஒரு முறை கூட அரைக் காண முடியவில்லை அவருடன் பேச முடியவில்லை என்பது எனது மிகப் பெரிய கவலை.
நான் வீட்டின் மாடியிலிருந்து கீழே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர் நான் முன் பின் பார்த்திராத ஒரு நண்பருடன் என்னுடைய வீடு இருக்கும் தெருவில் நடந்து வருவதை தூரத்திலிருந்து பார்த்தேன். அவரைப் பார்த்தவுடன் தான் எனக்கு மன நிம்மதி கிடைத்தது. சொர்க்கமே என்னை நாடி வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.
அவரைப் பார்த்தவுடன் நான் அழ ஆரம்பித்து விட்டேன். என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. முதலில் அவரது நண்பர் என்னைப் பார்த்தார். நான் அழுது கொண்டிருப்பதை அவரிடம் அவரது நண்பர் சொன்னவுடன் அவர் என்னைத் திரும்பிப் பார்த்தார். என்னைப் பார்த்தவுடன் அவரும் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தார்.
நான் என்னுடைய கைகளை அசைத்து அவரை அழைத்தேன். அவர் முதன் முதலாக வேலையில் சேர்ந்த நாளிலிருந்து எப்போது அவரைக் காண முடியும் என்று நான் ஏங்கி ஏங்கித் தவித்த நேரத்தில் வந்த அவரை என் இரு கரம் கூப்பி வரவேற்றேன். உடனே அவர் மாடியில் உள்ள என்னுடைய வீட்டில் நுழைந்து முதல் காலடி வைத்தார்.
அவர் என்னுடைய வீட்டில் காலடி எடுத்து வைத்தவுடன் அவரது கால்களில் விழுந்து கும்பிட்டேன். நான் தலை நிமிர்ந்த சமயம் என்னுடைய கழுத்தில் தாலியும் காலில் மெட்டியும் இருப்பதனைக் கண்டார்.
என் கழுத்தில் தாலியைக் கண்ட அடுத்த நொடி வீட்டை விட்டு வெளியேற முயற்சித்தார். அதற்கு அவர் பின்னால் வந்த அவரது நண்பன் தடுத்து வீட்டிற்குள் அவரை அழைத்து வந்து அமர வைத்தார்.
என்னாலும் பேச முடியவில்லை. அவருக்கும் பேச்சு வரவில்லை. இரண்டு பேரும் அழுது கொண்டே இருந்தோம். அப்போது அவருடைய நண்பர் அவரிடம் இப்படி அழுது கொண்டிருந்தால் கீழே உள்ள யாராவது வந்து விடுவார்கள். எனவே என்னுடைய அழுகையை நிறுத்த முயற்சி மேற்கொள்ளுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டார்.
அவரால் என்னுடைய இழப்பை தாங்க முடியாமல் மிகவும் துயரமாக இருந்தார். நானாகவே பேச ஆரம்பித்தேன்.
அப்போது என்னுடைய தாயாரும் உங்களுடைய தந்தையும் நீங்கள் வேலையில் சேர்ந்த நாளிலிருந்து நம்மை பிரிக்க என்னென்ன சதி வேலைகள் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்து நம்மை பிரித்து விட்டார்கள். எனக்கு உங்களைத் தவிர வேறு யாருடனும் சேர்ந்து வாழும் ஆசையில்லை.
கட்டாயத் திருமணம் செய்து கொண்டிருந்தாலும் கூட அன்றிரவே பஸ்ஸில் பயணம் மேற்கொண்ட சமயம் அழுத காரணத்தால மயக்கமடைந்து முதலுதவி சிகிச்சை பெற்று தான் இந்த வீட்டிற்கு வந்தேன்.
என்னுடைய உறவினர்கள் அனைவரும் இரண்டு நாட்கள் முன்னதாகத் தான் தங்கை மகள்களின் திருமணம் நெருங்குவதால் ஊருக்குத் திரும்பி இருக்கின்றார்கள். தினந்தோறும் நான் மாடியிலிருந்து கீழே பார்ப்பது வேடிக்கை பார்ப்பதற்காக அல்ல. மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளத் தான். அவ்வாறு பார்க்கும் சமயம் தான் இன்று உங்களைக் கண்டிருக்கின்றேன் என்று சொன்னேன்.
உங்களை நினைத்து நினைத்து அழுது கொண்டே இருக்கும் காரணத்தால் நான் மனதளவில் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளேன்.. எனவே மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பதால் இதுவரையில் நான் நாம் இருவரும் ஒன்றாக இருக்கும் பொழுது எப்படி இருந்தேனோ அதே போலவே இருக்கின்றேன். எனக்கு மனதளவிலும் உடலளவிலும் எந்த விதமான மாற்றங்களும் இல்லை.
எனவே இப்போது கூட நீங்கள் வாழச் சொன்னாலும் சரி அலலது சாகச் சொன்னாலும் சரி என்னுடைய கட்டுப் பாட்டினை மீறி இந்த தவறு நடந்து விட்டது. எனவே நீங்கள் என்ன சொன்னாலும் நான் கட்டுப்படத் தயாராகவே இருக்கின்றேன். தயவு சென்து என்னை மன்னித்து என் பக்கம் திரும்பி பாருங்கள் என்று சொன்னேன். ஆனால் அவர் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
அவரது நண்பர் கட்டாயப் படுத்திய பின்னர் என் பக்கம் திரும்பிப் பார்த்தார். அப்போது நான் எனது தாலிச் சரடினை காட்டப் போகிறேன் என்று தெரிவித்தேன். அப்போது தான் அவர் முதன் முதலாக பேசினார்.
நான் கட்ட வேண்டிய தாலியை வேறு யாரோ ஒருவர் கழுத்தில் கட்டியிருப்பதை நான் ஏன் பார்க்க வேண்டும் என்று கேட்டார்.
உடனே நான் தாலியை நீங்கள் பார்க்க வேண்டாம் நான் காட்டுவதை மட்டும் பாருங்கள் என்று சொன்னேன். அதன் பின்னர் தான் அவர் என் பக்கம் திரும்பினார்.
என்னுடைய கழுத்தில் தாலிக் கயிற்றில் தாலி இரண்டு முடிச்சுகளுக்கு நடுவே இருந்ததைக் கண்டார். அதே சமயம் அவர் என்னுடைய பிறந்த நாளன்று முதல் முதலில் ஆசை ஆசையாக வாங்கிக் கொடுத்த ஆலிலைக் கிருஷ்ணன் டாலரைப் பார்த்தார்.
தாலிக்கு இரண்டு பக்கங்களிலும் இருக்க வேண்டிய குண்டுகள் மற்றும் சொரைகள் ஆலிலைக் கிருஷ்ணன் டாலரின் இரண்டு பக்கங்களிலும் இருந்ததைக் கண்டார். உடனே அவர் என்னிடம் ஏன் இப்படி என்று கேட்டார்.
நீங்கள் இந்த டாலரை வாங்கி முதன் முதலாக கோயிலுக்குச் சென்று அணிந்த நாளிலிருந்து தினந்தோறும் இரவு தூங்கப் போகுமுன்னர் சுமங்கலிப் பெண்கள் எப்படி தங்களது தாலியை கண்களில் ஒற்றிக் கொள்வார்களோ அதே போல நான் என் கண்களில் ஒற்றி கடைப் பிடித்து வருகின்றேன்.
அதே போல தினமும் காலையில் உறக்கத்திலிருந்து எழும் சமயம் இந்த ஆலிலைக் கிருஷ்ணன் டாலரை ஒரு முறை முத்தமிடுவேன். நான் இந்த ஆலிலைக் கிருஷ்ணன் டாலரை முத்தமிட்டு படுக்கையிலிருந்து எழுந்தால் அன்றைய நாள் மிகவும் சந்தோஷமான இருக்கும். என் அருகில் வேறு யாரேனும் இருந்தார்கள் என்றால் என்னால் டாலரை முத்தமிட முடியாது எனவே அன்றைய நாளில் எனக்கு ஏதேனும் பிரச்சினைகள் வந்து கொண்டே தானிருக்கும். எனவே எனது வீட்டில் உள்ள மற்றவர்கள் படுக்கையிலிருந்து எழுந்திருக்கு முன்னரே நான் முதலாவதாக எழுந்து இந்த டாலரை முத்தமிடுவேன்.
இந்த பழக்கம் இதுவரையில் மாறாத காரணத்தால் ஆலிலைக் கிருஷ்ணன் டாலருக்கு இரு புறமும் குண்டுகளும் சொரைகளும் உள்ளன. என்னுடைய தாலிக்குக் கொடுக்கும் மரியாதையை விட இந்த டாலருக்கு நான் அதிக மரியாதை கொடுக்து வருகின்றேன்.
எந்த நேரத்திலும் நான் உங்கள் நினைவுடன் தான் இருப்பேன். நீங்கள் என்னை நினைப்பதையோ நான் உங்களை நினைப்பதையோ யாராலும் அறியவும் முடியாது தடுக்கவும் முடியாது. எனவே நான் உயிரோடு இருக்கும் வரையில் இந்த ஆலிலைக் கிருஷ்ணன் டாலர் என்னுடைய தாலிக் கயிற்றில் தாலிக்கு உண்டான முழு மரியாதைகளுடன் இருக்கும். அதனை யாராலும் தடுக்க முடியாது. தாலி கட்டய ஒரே காரணத்தால் உடல் மட்டும் அவருக்குச் சொந்தம்.
நான் எப்போதும் உங்கள் நினைவாகவே இருப்பதாலும் உங்களைச் சந்தித்த நாளிலிருந்து நீங்கள் டாலர் அணிவித்த நாளிலிருந்து உங்களை என் மனதில் மானசீகமாக கணவராகவே நினைத்து வாழ்ந்து வருவதால் உயிர் உங்களுக்குச் சொந்தம். உடல் அவருக்கு உயிர் உங்களுக்கு.
இந்த காரணத்தால் எனக்கு ஏதேனும் பிரச்சினைகள் எழுமாயின் அடுத்த கணம் என் உடலை விட்டு என் உயிர் பிரிந்திருக்கும். அந்த உயிர் உங்களைச் சுற்றியே வலம் வரும். இது சத்தியம் என்று சொல்லிக் கொண்டே மீண்டும் கண்ணீர் வடிக்க ஆரம்பித்து விட்டேன்.
நான் பேசியது அனைத்தையும் கேட்டு விட்டு போகிறேன் என்று சொல்லிக் கொண்டே அவர் புறப்பட்டார். நான் போய் வருகிறேன் என்று சொல்லுங்கள் என்று கட்டாயப் படுத்தியதின் பேரில் மீண்டும் அமர்ந்து அவர் தன் தாயிடம் தீபாவளி தினத்தன்று பேசி வந்த விவரங்களையும் புத்தாடை கூட உடுத்தாமல் தாயாரை வருத்தப்பட வைத்து விட்டு ஊருக்குத் ;திரும்பிச் சென்ற விவரத்தினையும் எடுத்துச் சொன்னார்.
அதன் பின்னர் இந்த பக்கம் ஏன் வந்தீர்கள் என்று கேட்டதற்கு அவரது நண்பர் பொங்கல் முடிந்தவுடன் தை மாதத்தில் நல்ல நாள் பார்த்து உங்களை பதிவுத் திருமணம் செய்து அழைத்து வந்து குடித்தனம் வைப்பதற்காக வீடு பார்த்துக் கொண்டிருப்பது அறிந்து மீண்டும் நான் அழ ஆரம்பித்து விட்டேன்.
அதனைக் கேட்ட எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அத்துடன் எனக்குத் திருமணமான விவரம் இப்போது தான் இவருக்குத் தெரிந்திருக்கின்றது. அதே போல எனது திருமண விவரம் இவரது தாயாருக்குத் தெரியவரும் சமயம் அவர் எப்படி கஷ்டப் படப் போகின்றார்களோ என்பதனை நினைக்கும் போது என்னுடைய தாயார் மீது வெறுப்பு அதிகமாகி விட்டது
நான் தேம்பித் தேம்பி அழுவதைப் பார்த்த அவர் சற்று சமாதானம் அடைந்தார். அதன் பின்னர் அவரிடம் மாதம் ஒரு முறையாவது கட்டாயம் வந்து என்னைப் பார்த்து விட்டுச் செல்ல வேண்டும் எனவும் கட்டாயம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை எதிர் பார்ப்பேன் என்றும் சொன்னேன்.
அதற்குப் பின்னர் மூவருக்கும் சேர்த்து இரண்டு டம்ளர்களில் காப்பி கொண்டு வர அவரது நண்பர் நீங்களும் பருகலாமே என்று என்னிடம் சொன்னவுடன் நான் ஒரு டம்ளர் காப்பியினை நாம் இருவரும் பகிர்ந்து பருகுவோம் என்று சொன்னவுடன் அவர் பாதி காப்பி குடித்து விட்டு மீதியை எனக்கு கொடுத்து பெற்றுக் கொண்டவுடன் தேவ லோக அமிர்தமே எனக்குக் கிட்டி விட்டது போன்ற சந்தோஷத்தில் பருகி விட்டேன்.
அதன் பின்னர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அடுத்த மாதம் கட்டாயம் வருவதாக அவர் தாங்க முடியாத மன வேதனை மற்றும் துன்பத்துடன் சொல்லி விட்டு திரும்ப மனமில்லாமல் என்னுடைய வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க கையசைத்து அவரை வழியனுப்பி வைத்தேன்.
தீபாவளியன்று ஆரம்பித்த மன உளைச்சல் மன வேதனை துன்பம் துயரம் ஆவேசம் கோபம் அனைத்தும் அவர் உயிரோடு நலமாக இருக்கின்றார் இனிமேல் அவர் அடிக்கடி வருவார் என்னும் எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கை வந்த காரணத்தால் அன்றிரவு நிம்மதியான தூக்கம் வந்தது. தூக்கத்திலும் அவரது கனவு.