கடைசி தீபாவளிப் பரிசு
என்னுடைய செல்லப் பெண்ணிடத்தில் நான் பல முறை அம்மா அம்மா என்று சொல்லிக் கொடுத்தும் கூட என்னிடத்தில் எதுவும் பேசாமல் அவர் வந்திருந்த சமயம் அவர் அம்மா அம்மா என்று சொல்லிக் கொடுத்தவுடன் அவரிடத்தில் பாபா பாபா என்று சொல்லி முதன் முதலாகப் பேச ஆரம்பித்தாள். அன்று முதல் இன்று வரையில் அவரை பாபா என்றே என் செல்லப் பெண் அழைத்துக் கொண்டிருக்கின்றாள்.
அவரது மகள் என்னைப் பார்த்த அடுத்த கணமே என்னை அம்மா என்று அழைத்ததைக் கேட்ட நான் திக்குமுக்காடிப் போனேன். அதனை நினைக்கையில் நான் எல்லையில்லாத சந்தோஷத்தை உணர்கின்றேன். அவர் என்னைப் பார்த்ததுமே என்னிடத்தில் எதுவும் கலந்து ஆலோசிக்காமல் என் விருப்பத்தை அறிந்து கொள்ளாமல் திடீரென அனைவர் முன்னிலையிலும் என்னைத் தான் அதிகம் பிடிக்கும் எனவும் அதற்குக் காரணம் அவரது வயதுக்குப் பொருத்தமான வயதுடன் நான் இருப்பதாகவும் சொல்லி என்னை காதலிக்க ஆரம்பித்தார்.
அவரைப் போன்றே முதன் முதலில் அவரது மகள் என்னை அம்மா என்றழைத்து விட்டு அதன் பின்னர் அவரிடத்தில் இவர்கள் யார் எனக் கேட்டவுடன் என்ன சொல்லி அழைத்தாயோ அவ்வாறே வைத்துக் கொள் எனச் சொன்னதைக் கேட்ட எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவரைப் போலவே அவரது மகளும் கூட தன் மனதில் நினைத்ததை உடனடியாக சொல்லுவது எனக்கு மிகவும் பிடித்து இருக்கின்றது. அவருடைய ரத்தமல்லவா? எப்படியோ நான் அவரது இதயத்தில் இடம் பிடித்தது போலவே அவரது மகளின் இதயத்திலும் இடம் பிடித்து விட்டேன் என நினைக்கும் போது மிக்க சந்தோஷமாக இருக்கின்றது என எண்ணிக் கொண்டிருந்தேன்.
அவரை மீண்டும் காண்பதற்கு இரண்டு அல்லது மூன்று மாத காலம் காத்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் சமயம் திடீரென அவர் ஒரு அட்டைப் பெட்டியுடன் என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்தார். எனக்கு மிக்க சந்தோஷமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. திடீர் விஜயம் பற்றிக் கேட்டதற்கு குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் மட்டுமே ஆகி இருப்பதால் தீபாவளியை இந்த ஊரிலேயே கொண்டாட வந்துள்ளதாகத் தெரிவித்த சமயம் தான் அவருக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ள விவரம் ஞாபகத்திற்கு வந்தது.
நாளைய தினம் தீபாவளி என்றால் இன்றைக்கு அவர் என் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். கையில் ஒரு அட்டைப் பெட்டி. மற்றும் ஒரு கைப்பை. கைப்பையிலிருந்து சாக்லெட் மற்றும் இனிப்பு பண்டங்களைக் கொடுத்தவுடன் பெற்றுக் கொண்டேன். அதன் பின்னர் அந்த அட்டைப் பெட்டியினை என்னிடம் கொடுத்து தீபாவளிக்கான புத்தாடைகள் எனச் சொன்ன சமயம் நான் பிரமித்துப் போனேன்.
நான் எப்படி இதனைக் கொண்டு வர முடிந்தது எனவும் அவரது மனைவி கேட்கவில்லையா எனவும் கேட்டேன். அவ்வாறு கேட்ட சமயம் புத்தாடைகளை பணியாற்றும் ஊரிலிருந்து பார்சல் மூலம் அனுப்பி விட்டு எனது இல்லத்திற்கு வரும் சமயம் டெலிவரி எடுத்துக் கொண்டு வருவதாகத் தெரிவித்தார். எனக்கு அப்போதே பிரித்துப் பார்க்க வேண்டும் என்னும் ஆவல் வந்து விட்டது.
எனவே அந்த பார்சலை பிரிக்க ஆரம்பித்து விட்டேன். அப்போது அவர் யாரேனும் வந்து விட்டால் என்ன செய்வது நாளை பிரித்துப் பார்க்கலாமே எனச் சொன்ன சமயம் எனது கணவர் இரவு நீண்ட நேரம் கழித்து தான் திரும்புவார். எனவே உடனடியாக பிரித்து பார்த்து விடுகின்றேன் எனச் சொல்லி அந்த அட்டைப் பெட்டியினைப் பிரித்தேன். உள்ளே ஒரு அட்டைப் பெட்டி.
எனக்கு மாத்திரமல்ல. எனக்குப் பிறந்துள்ள மூன்று குழந்தைகளுக்கும் சேர்த்து சரியான அளவுகளில் நேர்த்தியான வடிவில் எனக்கு சேலையும் ரவிக்கையும் உள்ளாடைகள் என அனைத்தையும் ஒன்று விடாமல் வாங்கி வந்திருந்தார். குழந்தைகளுக்கும் கூட ரெடிமேட் ஆடைகளை வாங்கி வந்திருந்தார். எனது கணவர் கூட குழந்தைகளை அழைத்துச் சென்று ரெடிமேட் ஆடைகளை வாங்கும் சமயம் குழந்தைகளின் பின் பக்கமாக ஆடைகளை வைத்து அளவு சரி பார்த்து வாங்குவார். ஆனால் அவர் சரியான அளவுகளில் நல்ல டிசைன்களில் தரமான ஆடைகளை வாங்கி வந்திருந்தார். எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
அவர் கொண்டு வந்திருந்த மேற் புற அட்டைப் பெட்டியினை மாத்திரம் காலியாக அவரிடத்தில் கொடுத்து வெளியில் செல்லும் சமயம் யார் பார்த்தாலும் கவலையில்லை. போகும் வழியில் போட்டு விடுங்கள் எனக் கேட்டுக் கொண்டேன். உள்புறம் இருந்த அட்டைப் பெட்டியை நானே வைத்துக் கொண்டேன். ஏனெனில் அது மிகவும் அழகாக இருந்தது.
அதற்கு அவர் இவ்வளவு புத்திசாலித் தனமாக இருப்பது போல அவர் வேலையில் சேர்ந்தவுடன் பதிவுத் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையினை ஆரம்பிக்கலாம் எனச் சொன்ன சமயம் இருந்திருக்கலாமே அவ்வாறு இருந்திருந்தால் பிரிந்திருக்க வேண்டியதில்லையே எனச் சொன்னார். ஆமாம் அவர் சொல்வது சரி தான்.
அந்த கால கட்டத்தில் நான் என்னுடைய உறவினர்கள் எப்படியாவது என்னை அவருடன் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள். எங்களைப் பிரிக்க மாட்டார்கள் என கள்ளங்கபடமின்றி இருந்த காரணத்தால் ஏமாந்து விட்டேன். ஆனால் பிற்காலத்தில் அனைத்தும் புரிந்து விட்டது. எனவே தான் ஏமாறாமல் அதே சமயத்தில் வரம்பு மீறாமல் பிறரை ஏமாற்ற ஆரம்பித்து விட்டேன். வேறு வழியில்லை. அன்பு எங்கு நிலைத்திருக்கின்றதோ அதனை விட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றேன்.
நானாகவே அவரிடத்தில் தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னர் எப்போது பணியாற்றும் ஊருக்குத் திரும்பப் போகின்றீர்கள் எனவும் நேரம் கிடைத்தால் தீபாவளி பண்டிகை கொண்டாடி முடித்தவுடன் மீண்டும் ஒரு முறை என்னுடைய இல்லத்திற்கு வந்து செல்லுமாறும் கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர் தீபாவளி முடிந்தபின் இரண்டு நாட்கள் தங்கி பின்னர் தான் செல்லப் போவதாகத் தெரிவித்தார்.
நான் உடனே முந்திக் கொண்டு தீபாவளி முடிந்தவுடன் நீங்கள் இங்கு வந்தால் நீங்கள் வாங்கிக் கொடுத்துள்ள சேலையினை உடுத்திக் கொண்டு நான் எப்படி இருக்கின்றேன் என பார்த்து விட்டு செல்லலாமே எனச் சொன்னேன். அதற்கு அவர் நான் எந்த உடைகள் அணிந்து கொண்டாலும் அழகாகத் தான் இருப்பேன் எனவும் அவருடைய விருப்பப்படி சேலையினை வாங்கியிருப்பதால் இன்னும் அழகாக இருப்பேன் என்றும் சொன்னவுடன் நான் அவரிடத்தில் கட்டாயம் தீபாவளி முடிந்த பின்னர் என்னைக் காண வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்.
அதற்கு அவர் தீபாவளியன்று என்னைப் பிரிந்த காரணத்தால் தீபாவளி அன்றும் தீபாவளி முடிந்த பின்னரும் என்னைப் பார்த்து கவலைப்பட விருப்பமில்லை என தெரிவித்தார். என்னுடைய தாயார் செய்த காரியம் அவரது மனதில் கொஞ்சம் கூட மாறாத வடுவாக இருக்கின்றது என்பதனை அறிந்து கொண்டேன். எனவே அவரது மன நிலையை நான் மாற்ற முடிவு செய்தேன். அவருக்குப் பக்கத்தில் மிகவும் நெருக்கமாக அமர்ந்து கொண்டேன். அவருக்கு ஆச்சர்யம். அவரிடத்தில் நான் பேச ஆரம்பித்தேன்.
நாம் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்ததை யாரும் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது. ஏன் அந்த ஆண்டவன் நினைத்தாலும் கூட நம் இறுதி மூச்சு நிற்கும் வரையில் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டிருப்பதை தடுக்க முடியாது எனச் சொன்னேன்.
நான் அவரிடத்தில் நீங்கள் என்னை மலரும் நினைவுகளோடு சந்தோஷமாக எப்போது வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம். உங்களுக்கு பதவி உயர்வு வரும் சமயம் எனக்கு புத்தாடை வாங்கித் தாருங்கள். உங்களுடைய பிறந்த நாளுக்கோ அல்லது என்னுடைய பிறந்த நாளுக்கோ நீங்கள் எனக்கு புத்தாடை வாங்கித் தாருங்கள்.
நாம் இருவரும் தீபாவளி திருநாள் அன்று தான் பிரிந்தோம் என்பதனை நாம் இந்த வாழ்நாளில் மறக்க முடியாது. எனவே இனிமேல் நம் இருவரையும் வாழ்நாள் முழுவதும் பிரித்த தீபாவளிக்கு எனக்கு புத்தாடை வாங்கி வர வேண்டாம். அதுவும் தவிர எனக்கு மாத்திரம் பரிசு கொடுத்தால் போதும். ஏனெனில் நான் மட்டும் தான் உங்களை காதலித்தேன். என் குழந்தைகள் அன்பு மட்டுமே செலுத்துகின்றார்கள். என் குழந்தைகளுக்கும் சேர்த்து வாங்கி வர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டேன். அவருக்கு அதில் திருப்தியில்லை.
அவர் கொண்டு வந்திருந்த சேலையினை அப்போதே கட்டிக் கொண்டு அவர் முன்னால் வந்து நின்று அவர் என்னை ரசிப்பதைக் கண்டு நான் சந்தோஷமடைந்தேன். காரணம் அவர் என் இல்லத்திற்கு வந்தால் மனக் கவலையுடன் திரும்பக் கூடாது. மனதில் சந்தோஷத்துடனும் மன திருப்தியுடனும் அவர் என்னுடைய இல்லத்திலிருந்து திரும்ப வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.
அவருக்கு வழக்கம் போல் சிற்றுண்டி பரிமாறி முடித்தவுடன் அரை டம்ளர் காப்பியினை அவரிடமிருந்து பெற்று அருந்தியவுடன் நான் சொர்க்கத்தில் மிதப்பதாக உணர்ந்தேன்.
சிறிது நேரம் பேசி விட்டு அவர் என் இல்லத்திலிருந்து புறப்பட்டார். அடுத்த நாள் தீபாவளி. தீபாவளியன்று நான் முதல் நாள் அவருடன் எவ்வளவு சந்தோஷமாக இருந்தேனோ அந்த அளவிற்குக் கூட சந்தோஷமாக இல்லை. காரணம் தீபாவளியன்று தான் நாம் இருவரும் பிரிய நேரிட்டது என்னும் நினைவுகள் என்னை வாட்டிக் கொண்டே இருந்தன. தொடர்ந்து சில இரவுகள் தூக்கமில்லாமல் கண்ணீருடன் கழிந்தன.