மண மகள் தேடலில் இறுதி முடிவு
முன் திட்டமிடல் ஏதும் இல்லாமல் நான் என் செல்லக் குழந்தையுடன் சொந்த ஊரில் அவரது தாயாரையும் அவரது அண்ணியையும் நடு வழியில் சந்தித்து அவர்களுடனேயே அவரது வீட்டிற்குச் சென்று வந்தது எனக்கு எதிர் பாராத இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
எனக்குத் திருமணமாகி குழந்தை பிறந்த பின்னர் கூட அவரது தாயார் என்னை தன்னுடைய மருமகளாக அடைய முடியவில்லை என்று வருத்தப் படுவதையும் என் குழந்தையை பெற்றுக் கொண்டு அவர்களது பேத்தியாகப் பிறக்க வேண்டிய குழந்தை என்று சொல்லி கண்ணீர் விடுவதையும் பார்த்த எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அதன் காரணமாக தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் தூக்கமின்றித் தவித்தேன்.
என் குழந்தை என்னிடத்தில் பாபா எப்போது வருவார் என்று கேட்பது என்னை விட அதிகம் தவிப்பது என் குழந்தை தான் என்பதனை எனக்கு உணர்த்தியது. நானும் நிலாச் சோறு ஊட்டுவது போல பாபா இன்று வந்து விடுவார் என்று தினந்தோறும் ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றேன்.
இன்றைக்கு அவர் என்னுடைய இல்லத்திற்கு வரவேண்டிய நாள். அவர் வருவாரா மாட்டாரா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அவர் உள்ளுரில் இருக்கின்றாரா அல்லது பெண் பார்ப்பதற்காக சொந்த ஊருக்குச் சென்றுள்ளாரா என்பது தெரியாமல் நான் காத்திருந்தேன்.
என் காத்திருப்பு வீண் போகவில்லை. நான் உடை மாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் எனது வீட்டின் கதவினை தட்டுகின்ற சப்தம் கேட்டது. நான் மிக்க ஆர்வத்துடன் கதவினைத் திறந்தேன். ஆமாம். அவர் சற்று தாமதமாக என்னுடைய வீட்டிற்கு என்னுடைய உறவினரான அவருடைய நண்பருடன் சேர்ந்து இருவரும் வருகை தந்தார்கள். எனக்கு ஒரே ஆச்சர்யம். வந்ததும் என் குழந்தை அவருடைய கால்களைப் பிடித்துக் கொண்டு சொந்தம் கொண்டாடிய பின்னர் அவருடைய மடியில் அமர்ந்து கொண்டது.
என் உறவினர் என் குழந்தையின் மிக நெருக்கமான நடவடிக்கையினைப் பார்த்து நீங்கள் இவரை விரும்பியது இலை மறைவு காய் மறைவாக இருந்தது. ஆனால் உங்கள் குழந்தையின் செயல் என்னை ஆச்சர்யத்தில் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றது என்று சொன்னார். நான் உடனே இது மட்டுமல்ல. இன்னும் வேடிக்கை இருக்கின்றது பாருங்கள் என்று சொன்னேன்.
சற்று நேரத்தில் என் குழந்தை அவரிடத்தில் நான் உட்கார்ந்து இருக்கும் இடம் குத்துகின்றது. எனவே உங்கள் பாக்கெட்டில் உள்ளதை வெளியே எடுங்கள் என்று சொன்னது. அவர் என் செல்லப் பெண்ணின் நோக்கத்ததை தெரிந்து கொண்டு அவரது பாக்கெட்டிருந்து சாக்லெட்டுகளை எடுத்துக் கொடுத்தார். மொத்தம் நான்கு சாக்லெட்டுகள் இருந்தது.
எனது உறவினருக்கு ஒன்று கொடுத்து விட்டு தம்மிடம் இரண்டை வைத்துக் கொண்டு என்னிடம் ஒன்றைக் கொடுத்தது. உடனே நான் உன்னுடைய பாபாவுக்கு சாக்லெட் இல்லையா என்றவுடன் நீ பாதி கடித்து விட்டு பாதியை மட்டும் பாபாவுக்குக் கொடு போதும். பாபா எப்பொதும் பாதி தான் சாப்பிடுவார் என்று சொன்னதைக் கேட்டு அவர் சந்தோஷத்தில் சிரித்து விட்டார். வழக்கம் போல் சாக்லெட் பரிவர்த்தனை முடிந்தது.
என் உறவினர் என் உடல் நலம் பற்றியும் என் கணவர் உடல் நலம் பற்றியும் விசாரித்தார். நான் சொல்லி முடித்து விட்டேன்.
அதன் பின்னர் அவரிடத்தில் பெண் பார்க்க சொந்த ஊருக்கு வருவீர்கள் அங்கே நான் உங்களை சந்தித்து என் குழந்தையுடன் கோயிலுக்கு சென்று வர வேண்டும் என்று நான் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருந்தேன். அந்த சமயத்தில் நடு வழியில் உங்கள் தாயாரையும் அண்ணியையும் சந்தித்தேன். அவர்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்தவுடன் என்னையும் அறியாமல் கன்றுக் குட்டி தாய்ப் பசுவுடன் செல்வது போல அவர்களுடனேயே சென்று விட்டேன். அவர்கள் என்னை மருமகளாக அடைய முடியவில்லை என்னும் ஏக்கத்திலிருந்து இன்னும் வெளி வரவில்லை என்பதனை உணர்ந்த எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது என்று சொன்னேன்.
அவரது வருகைக்காக மேலும் சில நாட்கள் சொந்த ஊரில் தங்கியிருந்த சமயம் என்னுடைய பழைய வீட்டிற்கு சென்று வந்ததைப் பற்றியும் அந்த வீட்டிற்கு புதிதாக வாங்கியிருப்பவர் அன்னை இல்லம் என்று பெயர் சூட்டியிருப்பது பற்றியும் அதன் காரணமாக எனக்குள் ஏற்பட்ட மன வருத்தம் பற்றியும் தெரிவித்தேன். அடுத்த முறை ஊருக்குச் செல்லும் சமயம் அந்த வீட்டினைப் பார்ப்பதாகத் தெரிவித்தார்.
அதன் பின்னர் அவரது தாயார் எனது வீட்டில் பார்த்த பெண்ணை அவரது குடும்பத்தார் பெண் பார்த்து வந்தது பற்றித் தெரிவித்ததையும் அந்தப் பெண்ணைப் பற்றிய விவரங்களையும் எடுத்துச் சொல்லி வந்ததாகத் தெரிவித்தேன்.
இதனை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்த என் செல்லப் பெண் பாபாவை நீ கல்யாணம் பண்ணிக்கோ. வேறு எங்கும் பெண் பார்க்க வேண்டாம் என்று சொல்லி விட்டு பாபாவுக்கு காபி கொண்டு வா என்று சொன்னது கேட்டு என் உறவினர் அசந்து விட்டார். பின்னர் நான் அவருக்கும் அவருடன் வந்திருந்த என் உறவினருக்கும் காபி கொடுத்தேன். உடனே என் குழந்தை பாபா பாதி தானே சாப்பிடுவார் ஏன் டம்ளர் நிறைய காபி என்று கேட்டவுடன் வழக்கம் போல் அவர் பாதி குடித்து விட்டு மீதியை நான் சாப்பிட்டேன்.
அதன் பின்னர் அவர் என்னிடம் பேச ஆரம்பித்தார். தான் விரும்பிய பெண் (அதாவது நான்) தனக்குக் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் தம்மை விரும்பும் பெண்ணையாவது (அதாவது தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கும் கர்நாடகத்துப் பெண்) திருமணம் செய்து வைக்குமாறு கேட்டமைக்கு அவரது தந்தை ஜாதகப் பொருத்தம் பார்த்து நம் மொழி பேசும் பெண்ணைத் தான் திருமணம் செய்து வைப்பேன் என்று பிடிவாதம் செய்த காரணத்தால் அடுத்த முறை வரும் சமயம் விருப்பமோ அல்லது வெறுப்போ காட்டாமல் எந்தப் பெண்ணைக் காட்டினாலும் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளப் போவதாக தெரிவித்து விட்டு திரும்பி விட்டதாகத் தெரிவித்தார்.
இந்த விஷயத்தினை அந்தப் பெண்ணிடமும் தெரிவித்து விட்ட காரணத்தால் அந்தப் பெண் அழுது கொண்டு இருப்பதாகச் சொல்லும் சமயம் அவர் முகத்தில் சந்தோஷம் இல்லை. சோகம் கவ்விக் கொண்டது.
அவ்வாறு மிகக் கடுமையாக அவர் தந்தையிடம் சொல்லி வந்ததற்கு காரணம் மாதத்தில் பல முறை அலுவலக வேலையாக பல ஊர்களுக்கு இரவு பகல் என்று பார்க்காமல் சென்று திரும்புவதால் ஓய்வே கிடைக்காமல் இருப்பதும் பெண் பார்ப்பதற்கு என்று நல்ல நாள் நட்சத்திரம் பார்த்து அதற்கென்று தனியாக மறுபடியும் சொந்த ஊர் சென்று திரும்புவதும் அதனால் ஏற்படும் பணப் பற்றாக் குறைக்கு அந்த கர்நாடகப் பெண்ணிடம் பணம் பெற்றுச் செல்லும் சமயம் அந்தப் பெண் தம்மிடம் கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவது போல இருக்கின்றது என்று சொல்வதும் தான் என்று சொன்னார்.
ஆமாம் அவர் சொல்வது முழுக்க முழுக்க சரிதான். அவர் சொல்வதில் எந்த விதமான ஆட்சேபணையோ அல்லது மறுப்போ இல்லை. உண்மையைத் தான் மறைக்காமல் மனதில் பட்டதை சொல்கின்றார்.
நான் அவரை முதன் முதலாக சந்தித்த சமயம் எனக்கு அவர் தான் எல்லாம் என்றும் அவருக்கு நான் தான் உலகம் என்றும் இருந்தோம். வேறு எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் எந்தக் கவலையும் இல்லாமல் இருந்தோம். இப்போது நான் அவருக்குக் கிடைக்கவில்லை என்பதால் தன் குடும்பத்தை மிகவும் வெறுக்கத் தொடங்கி விட்டார்.
ஆரம்ப காலத்தில் குறுகலான வட்டத்திற்குள் இருந்த அவரது உற்றார் உறவினர் சுற்றம் நண்பர்களைத் தாண்டி தற்போது ஜாதி மதம் மொழி இனம் ஆகியவற்றைக் கடந்து அனைவருடனும் பழகி ஆக வேண்டிய சூழ்நிலையில் யாரையும் வெறுத்து ஒதுக்காமல் அவரது பணியின் தன்மை காரணமாக அனைவரையும் அரவணைத்துச் செல்ல ஆரம்பித்து விட்டார் தன் குடும்பத்தாரைத் தவிர.
நம் இருவருக்குமிடையே இருந்த நெருக்கமான உறவினைப் பற்றி ஒளிவு மறைவு இல்லாமல் அனைவருடனும் பகிர்ந்து கொண்ட காரணத்தால் அவர் மீது என்னைத் தவிர வேறு சில பெண்கள் அன்பு செலுத்த ஆரம்பித்து விட்டனர். என்னை விட அதிகமாக அவரது உடல் நலனில் அக்கரை செலுத்தி அன்பு காட்டி நேசிப்பதோடு காதலிக்கவும் ஆரம்பித்து விட்டனர்.
இந்த கால கட்டத்தில் இன்னும் ஜாதகம் ஜோதிடம் அந்தஸ்து மொழி ஆகியவற்றைக் காரணம் காட்டி அவரது அபிலாஷைகளை அவரது தந்தை நிராகரிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை என்பதனை நானும் உணர ஆரம்பித்து விட்டேன்.
நான் ஆவலுடன் எதிர்பார்த்து என் இல்லத்திற்கு அவர் வந்த சமயம் என்னுடைய உறவினருடன் சேர்ந்து வந்த காரணத்தால் நாங்கள் இருவரும் மனம் விட்டுப் பேச முடியவில்லை என்றாலும் நான் அவருடைய உள் மனதின் அப்போதைய நிலையினை ஆழமாக புரிந்து கொள்ள முடிந்தது.
உள்மனதில் என்ன தான் உணர்ச்சிகள் எனக்குள் இருந்தாலும் கட்டுப் படுத்த வேண்டியதாயிற்று. இது தான் கலாச்சாரக் கைதிகளின் நிலை. அவர்கள் இருவரும் என்னிடம் விடை பெற்ற சமயம் என் கண்களில் நீர் சுரக்க ஆரம்பித்தது. ஆனால் என் குழந்தை அழ ஆரம்பித்து என்னை அவருடன் செல்ல அழைத்தது. என் நிலைமை என் குழந்தைக்குப் புரியவில்லை.