தந்தை மீது கோபம்
அவரும் நானும் சேர்ந்து அவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு குறிப்பிட்ட விநாயகர் விக்ரஹத்தை நீண்ட நாட்கள் தேடிக் கண்டுபிடித்து அந்த விக்ரஹத்தை நானும் அவரும் ஒன்றாக சேர்ந்து மூன்று மாதங்கள் தொடர்ந்து வழிபட்டு வந்த பின்னர் அவருக்கு அரசாங்க வேலை கிடைத்து வேலையில் சேர்ந்து கொண்டது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது.
வேலை கிடைத்த காரணத்தால் அவர் வெளியூர் சென்று விட்ட நிலையில் என் தாயாரால் யாருக்கும் தெரியாமல் வெளியூரில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப் பட்டு உறவினர் விட்டில் வீட்டுக் காவலில் சிறைக் கைதி போல அடைத்து வைக்கப் பட்டேன்.
பண்டிகை நாளும் அதுவுமாக நான் வீட்டில் இல்லாமல் இருந்தால் யாராவது கேட்டால் சமாளிக்க முடியாது என்னும் ஒரே காரணத்தால் என்னை விநாயக சதுர்த்திக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் அழைத்து வந்தார்கள்.
நான் திரும்பி வந்த நாளன்று அவரது தந்தை எனது வீட்டிற்கு வந்து என் தாயாருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரை விநாயக சதுர்த்திக்கு வரச் சொல்லி இருப்பதாகவும் அநேகமாக வரலாம் என்றும் தெரிவித்தார்.
அந்த சமயம் நான் மேற்கொண்டு எதுவும் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக என்னிடம் வேறு வேலைகள் சொல்லி அனுப்பி விட்டார்கள். அன்று மாலையில் நான் உள்ளுரிலேயே உள்ள இதுவரை அவருக்குத் தெரிந்திராத வேறு ஒரு உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டேன்.
நான் இல்லாத நேரத்தில் எங்களது உறவினரும் அவரது மிக நெருங்கிய நண்பருமான ஒருவர் என் வீட்டிற்கு வந்து நான் வீட்டில் இல்லாத விவரத்தை அவருக்கு தொலை பேசி மூலம் தெரிவித்த காரணத்தால் அவர் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வரவேயில்லை என்பதனை பின்னர் தெரிந்து கொண்டேன்.
ஒரு வார காலம் கழித்து நான் மீண்டும் ஒரு முறை அவரது வீட்டிற்குச் சென்ற சமயம் அவரது தந்தை வீட்டில் இல்லை.
அவரது தாயார் மட்டும் என்னை வரவேற்று உபசரித்தார்கள். அப்போது அவரது தாயார் என்னிடம் தன்னுடைய மகன் விநாயக சதுர்த்திக்கு பல முறை அழைத்தும் கூட வீட்டிற்கு வரவில்லை என்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டார்கள். அப்போது அனைத்திற்கும் காரணம் நான் தான் என்று சொன்னதற்கு என்ன நடந்தது என்பதனை கேட்டறிந்து மிகவும் கண் கலங்கினார்கள்.
இப்படி பேசிக் கொண்டிருக்கையில் சம்பளம் வாங்கியவுடன் முன் பின் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் திடீரென ஒரு நாள் இங்கு வந்து உன்னைத் திருமணம் செய்து கொள்ள அவரது தந்தையிடம் சம்மதம் கேட்டு அவர் மறுத்து விட்ட காரணத்தால் மிகவும் வெறுப்படைந்து ஒரு நாள் கூட தங்காமல் என்னிடம் வருத்தப் பட்டுப் பேசி விட்டு உடனே ஊருக்கு திரும்பி விட்டான் என்று சொன்னார்கள்.
என் மடியில் படுத்து வளர்ந்த என் மகன் மீது நான் எவ்வளவு பாசம் வைத்துள்ளேனோ அதே போல உன் மடியில் படுத்து என் கழுத்து வலியினைப் போக்கிக் கொண்ட நான் உன் மீது பாசம் வைத்துள்ளேன்.
அன்றைய தினம் உன் மடியில் படுத்த போது தான் அவனுக்கு கடவுள் நம்பிக்கை வந்தது. அதன் காரணமாக கடவுள் பக்தி அவனுக்கு ஏற்பட்டது.
உன்னுடைய தாயார் ஏற்கனவே உங்கள் இருவரிடமும் பேசிய வார்த்தைகளை மனதில் வைத்துத் தான் நீங்கள் இருவரும் சேர்ந்து பேசி ஏதாவது தொழில் தொடங்கியோ அல்லது வேலைக்குச் சென்றோ தான் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று முடிவெடுத்துள்ளீர்கள் என்பதனை நான் அறிந்து கொண்டேன். அது மிக மிக நல்ல முடிவு.
அப்போதே திருமணம் செய்து கொள்ளும் வேறு ஒரு நல்ல முடிவு எடுக்க முடியாததற்கு ஒரே காரணம் உன் வயது 18க்கு கீழும் அவனுடைய வயது 21 வயதுக்குக் கீழும் என்பதனையும் அறிந்து கொண்டேன்.
அந்த பிரச்சினைக்குப் பின்னர் தான் கோயிலுக்குப் போய் பிரார்த்தனை செய்து வேலை கிடைத்துள்ளது என்பதனையும் அறிந்து கொண்டேன். அந்த வேலை உள்ளுரில் கிடைத்திருந்தால் இவ்வளவு கஷ்டங்கள் இருவருக்கும் வந்திருக்காது என்பது எனக்கு இப்போது தான் தெரிகின்றது என்று சொன்னார்கள். ஆமாம் அவர்கள் சொல்வது முழுவதும் மறுக்க முடியாத உண்மை என்பது தற்போது தான் எனக்கும் புரிகின்றது.
வேலை கிடைக்காமல் எத்தனையோ பேர் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் அவரது தந்தை அவனை வேலையிலிருந்து நீக்கம் செய்யுமாறு அந்த அலுவலக அதிகாரியிடம் சண்டை போட்டு விட்டு வந்து இருக்கின்றார். காரணம் அவன் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தால் தான் அவரது விருப்பப்படி ஆட்டி வைக்க முடியும் என்னும் எண்ணம்.
ஆனால் அவன் எதிலும் பின் வாங்காமல் கிடைத்த வேலையில் தொடர்ந்து நீடித்து உன்னைக் கரம் பிடிப்பதில் தீவிரமாக இருக்கின்றான்.
உங்கள் இருவரின் திருமணத்திற்கு ஜாதகம் பொருந்தவில்லை. உங்கள் குடும்பத்தின் அந்தஸ்து குறைவாக இருக்கின்றது என்று சொல்லி சம்மதிக்கவில்லை.
அவன் எவ்வளவோ அவனுடைய தந்தையிடம் ஜாதகப் பொருத்தம் அந்தஸ்து என்று காரணம் காட்டி இருவரையும் பிரித்து விடாதீர்கள் என்று கெஞ்சியும் அவர் கேட்க மறுத்து விட்டார். எனவே உங்கள் திருமணத்திற்கு அவரது தந்தையின் சம்மதம் கிடைக்கவில்லை.
உன் மடியில் படுத்த எனக்கு அவன் மடியில் நீ படுக்க வேண்டும் உங்கள் இருவரது குழந்தையினை என் மடியில் படுக்க வைத்து கொஞ்சி மகிழ வேண்டும் என்னும் எண்ணம் இருப்பதால் நீ அவனை மணந்து கொள்வதில் எனக்கு பரிபூரண சம்மதம்.
எனவே அவனைத் திருமணம் செய்து கொள்வதற்கு நீ எந்த வகையிலும் தயாராக இருந்தால் தான் இருவரும் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்க முடியும் என்பதனை மட்டும் நான் சொல்லிக் கொள்கின்றேன் என்று சொன்னார்கள்.
அதற்கு நான் சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் என்று கேட்டதற்கு அவரது தந்தை உங்கள் இருவரது திருமணத்திற்கு பலப்பல காரணங்கள் சொல்லி சம்மதிக்கவில்லை. உன்னுடைய தாயார் அவருடன் சேர்ந்து கொண்டு அவனை உன்னிடமிருந்து பிரிப்பதற்கு பல சதி வேலைகளில் ஈடு படுவதாகத் தெரிகின்றது.
இந்த நிலையில் இருவீட்டார் சம்மதம் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் இணைவதைத் தவிர வேறு வழியில்லை என்று சொன்னார்கள்.
நான் உடனே அவர் மீண்டும் எப்போது வருவார் எனக் கேட்டதற்கு அவன் திரும்ப இங்கு வீட்டிற்கு வருவான் என்னும் நம்பிக்கையினை நான் முழுவதும் இழந்து விட்டேன். அந்த அளவிற்கு மன விரக்தியுடன் சென்ற முறை ஊருக்குத் திரும்பி உள்ளான் என்று தெரிவித்தார்கள்.
தீபாவளிக்கு வருமாறு கடிதம் எழுதலாம் என்று தெரிவித்தார்கள். உடனே நான் எழுதுவது போல ஒரு கடிதத்தினை நீ எழுதி என்னிடம் கையெழுத்து வாங்கி அனுப்பி வைக்க முடியுமா என்று கேட்ட சமயம் அவரது தந்தை வீட்டிற்குத் திரும்பி விட்டார். எனவே அவரது தாயாரின் சொல்படி என்னால் கடிதம் எழுத முடியவில்லை.
நான் மிகுந்த மனக் கலக்கத்துடன் வீட்டிற்குத் திரும்பி விட்டேன். என் வீட்டில் உள்ள அனைவரும் தீபாவளியைக் கொண்டாட புத்தாடைகள் வாங்குவது நிச்சயதார்த்தம் செய்துள்ள மணமகன்களை வீட்டிற்கு வரவழைப்பது என மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள்.
என்னை தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்குவதற்கு அழைத்துச் செல்வதாக என் தாயார் அழைத்த போது நீங்களே சென்று எதை வேண்டுமானாலும் வாங்கி வாருங்கள் என்று சொல்லி விட்டேன். எங்கும் செல்ல விரும்பவில்லை.
எனக்கு இதுவரையில் வாங்கிக் கொடுக்காத அளவிற்கு அதிகமான விலையில் பட்டுப் புடவை வாங்கியிருந்தார்கள். காரணம் கேட்டதற்கு புது மணப் பெண்களுக்கு விலையுயர்நத புடவை வாங்கும் சமயம் அதே போல உனக்கும் சேர்த்து வாங்கியுள்ளோம் என்று சொன்னார்கள். அதே போல வழக்கம் போல் பாவாடை தாவணியும் வாங்கியிருந்தார்கள். எனக்கு ஒரே சந்தேகமாக இருந்தது என்னவென்று புரியவில்லை.
ஆமாம். நான் தனி மரம் போல எதிலும் ஈடு பாடு இல்லாமல் மன விரக்தியுடன் தூக்கமின்றித் தவித்தேன் பல நாட்கள்.