பிரசவத்திற்குப் பின் முதல் சந்திப்பு
அப்போதே நான் அவர் எப்போது வருகின்றார் என்பதனை என்னுடைய உறவினர் மூலமாக கேட்ட சமயம் என்னுடைய தாயார் இருக்கும் பொழுது வந்து என்னை சங்கடத்தில் ஆழ்த்த விருப்பம் இல்லை என்று தகவல் தெரிவித்திருந்தார். அதன் படி என்னுடைய தாயார் மூன்று மாதங்கள் தங்கி இருந்து விட்டு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஊருக்கு திரும்பி விட்டார்கள். எனவே என்னை அவர் சந்திக்க வருவதில் சங்கடங்கள் எதுவும் இருக்காது. எனவே அவரை நான் சந்திப்பதற்கு வரவழைக்க வெண்டும். எப்படி அவரை வரவழைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
என்னுடைய தாயார் என் வீட்டில் மூன்று மாதங்கள் தங்கி விட்டு ஊருக்குத் திரும்பியவுடன் அடுத்து வந்த ஞாயிற்றுக் கிழமையன்று அவர் என் வீடு தேடி தாமாகவே வந்து விட்டார். என்னைத் தொட்டுத் தாலி கட்டியவர் வீட்டில் இல்லை. எனக்கு எல்லையிலலாத ஆனந்தம். சந்தோஷத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
முதல் முதலாக அவரிடம் எனக்குக் குழந்தை பிறந்து விட்டது என்பதால் என் மீதான அன்பு குறைந்தமையால் இவ்வளவு தாமதமாக வருகின்றீர்களா எனக் கேட்டேன். அதற்கு அவர் சென்ற முறை இங்கு வந்திருந்த சமயம் என்னுடைய தாயார் பேசியது ஒரு மாதிரியாக இருந்தது எனவும் அவர் அதனை பெரிதாக எடுத்துச் கொள்ளவில்லை என்றாலும் எனக்கு புகுந்த வீட்டில் எந்த விதமான பிரச்சினைகளும் வந்து விடக் கூடாது என்பதற்காக என் தாயார் இருக்கும் சமயம் இங்கு வந்து என்னைச் சந்திப்பது நல்லதல்ல என்பதால் வரவில்லை என்றும் சொன்னார்.
அவர் வரும் சமயம் கைகளில் மருந்து விற்பனை செய்யும் பிரதிநிதிகள் கொண்டு வருவது போன்ற மிகப் பெரிய பையுடன் வந்திருந்தார். என்னையும் அறியாமல் அவரிடம் நான் என்ன பார்ட் டைம் வேலை ஏதேனும் பார்க்க ஆரம்பித்து விட்டீர்களா என்று கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே சொல்கின்றேன் தெரிந்து கொள்ளலாம் என்றார்.
நான் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அரைத் தூக்கத்தில் எழுப்பினால் அழுது கொண்டே தான் இருக்கும் என்று சொல்லிக் கொண்டே நான் விழித்திருக்கும் போது உங்கள் நினைவாகவும் உறங்கியிருக்கும் போது உங்கள் கனவாகவும் என்னுடைய இதயத்தில் எந்த நேரத்திலும் உங்களை நினைத்துக் கொண்டு என் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த என்னுடைய முதலாவது பெண் குழந்தை என்று சொல்லிக் கொண்டே அவரிடம் கொடுக்க முயன்றேன்.
அப்போது தான் அந்தப் பையின் இரகசியம் தெரிந்தது. குழந்தையை பெற்றுக் கொள்வதற்கு முன்னர் அந்தப் பையிலிருந்து ஒரு அட்டைப் பெட்டியினை என்னிடம் கொடுத்தார்.
அதில் இரண்டு புத்தாடைகள் இருந்தது. ஏஞ்சல் டிரஸ் போட்ட பின்னர் தான் என்னுடைய தேவதைக்குப் பிறந்த தேவதையை நான் பெற்றுக் கொள்வேன் என்று சொல்லி விட்டு புத்தாடை அணிவித்து குழந்தையை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். நானும் அவ்வாறே அவர் கொண்டு வந்திருந்த ஏஞ்சல் டிரஸ் போட்டு குழந்தையை அவரிடம் கொடுத்தேன்.
குழந்தையை பெற்றுக் கொண்டவுடன் முதலில் குழந்தைக்கு ஒரு முத்தம் கொடுத்தார். அதன் பின்னர் குழந்தையை தன் நெஞ்சில் வைத்து அரவணைத்தார். நான் எனக்குக் கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டிருந்த அவரது முத்தம் மற்றும் அவரது அரவணைப்பு என் குழந்தைக்குக் கிடைக்கின்றது என்று சொன்னேன்.
நான் உங்களுக்கு கொடுக்க முடியாத முத்தம் மற்றும் அரவணைப்பு மற்றும் சந்தோஷத்தை என் குழந்தை தற்போது உங்களுக்குக் கொடுக்கின்றது என்று ஒரு பக்கம் சந்தோஷப் பட்டாலும் அவை அனைத்தையும் என்னால் உங்களுக்கு இந்த ஜென்மத்தில் கொடுக்க முடியாது என்பதனை நினைக்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கின்றது என்று அவரிடமே சொல்லி விட்டேன்.
என்னுடைய குழந்தை முதன் முதலாக அவரைப் பார்த்து சிரித்தது. இது வரையில் தூக்கத்தில் மாத்திரம் தாமாகவே சிரித்துக் கொண்டிருந்த என் குழந்தை அவர் கைகளில் சென்றவுடன் முதன் முதலாக அவரது முகத்தைப் பார்த்துச் சிரித்தது. தூக்கம் கலைந்தவுடன் அழ ஆரம்பிக்கவில்லை. எனக்கு ஒரே ஆச்சர்யம். நான் அவரிடம் நீங்கள் வந்தால் தான் நான் சந்தோஷப் படுகின்றேன். என்னைப் போலவே என் குழந்தையும் நீங்கள் வந்த பின்னர் தான் முதன் முதலாக முகத்தைப் பார்த்துச் சிரிக்கின்றது என்று சொன்னேன்.
அதன் பின்னர் அவர் தனது பையிலிருந்து கொண்டு வந்திருந்த இனிப்பு சாக்லெட் மற்றும் இன்னும் ஒரு செட் புத்தாடைகள் அனைத்தையும் கொடுத்தார். நான் பையில் இன்னும் ஏதேனும் இருக்கின்றதா எனக் கேட்டதற்கு ஆமாம் என்று சொன்னார் ஆனால் என்னவென்று சொல்லவில்லை. அவர் வரும் சமயம் என் தாயாரோ அல்லது என் கணவரோ இருந்தால் பையிலிருக்கும் பரிசுப் பொருட்கள் அவர்களுக்கு தெரியாது. அவர்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் மீண்டும் எடுத்துச் சென்று இன்னுமொரு நாள் கொண்டு வந்து இருப்பேன் என்றும் அதற்காகவே இந்த ஏற்பாடு என்று அவர் சொன்னவுடன் நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
குழந்தை பிறந்த பின்னர் நடைபெற வேண்டிய சடங்குகள் எல்லாம் முடிந்து விட்டனவா என்று கேட்டார்.
குழந்தை பிறந்தவுடன் பெரியவர்கள் குழந்தையின் நாவில் இனிப்பு கலந்த நீரைத் தொட்டு வைக்கும் சேனை தொடுதல் என்னும் சடங்கினை பெரியவர்கள் யாரும் இல்லாமல் என்னுடைய தாயார் மாத்திரம் செய்து வைத்தார்கள். காரணம் என்னுடைய குழந்தை புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்கு பிரசவத்திற்கு அழைத்துச் செல்லப்படும் சமயம் இடையில் வருகின்ற ஊரில் உள்ள மருத்துவ மனையில் பிறந்த காரணத்தால் உறவினர்கள் பெரியவர்கள் யாரும் என்னையோ எனக்குப் பிறந்த குழந்தையையோ பார்க்க வரவில்லை.
மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பும் சமயம் மருத்துவமனை வாசலில் சிதறு தேங்காய் உடைத்துச் சூடம் காட்டி விட்டு வீட்டிற்கு அழைத்து வருவார்கள். நான் சொந்த ஊருக்கு வந்திருந்தால் என்னை மஞ்சள் கரைத்த தண்ணீரில் ஆரத்தி காட்டி தாயார் வீட்டில் வரவேற்று இருப்பார்கள். எனக்கு எந்த பாக்கியமும் கிடைக்கவில்லை.
என்னுடைய குழந்தையை மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தவுடன் எனக்கு அருகில் தான் படுக்க வைத்துக் கொண்டேன்.
தொட்டில் கம்பு மற்றும் தொட்டில் துணி மற்றும் தொட்டில் கயிறு ஆகியவற்றை தாய் மாமன் தான் வாங்கி வர வேண்டும் என்று சம்பிரதாயம் இருப்பதால் என்னைத் தொட்டு தாலி கட்டியவர் அதனைச் செய்யவில்லை. தாய் மாமன் எங்கு இருக்கின்றார் என்பது என் குடும்பத்தில் உள்ள யாருக்கும் தெரியாது. என்னுடைய அண்ணன் ஓடிப் போய் விட்டான் என்பதற்கான காரணத்தை என்னுடைய தாயார் உங்களிடம் முதன் முதலில் சொல்லித் தான் நம் இருவருடைய திருமணத்தையும் நடைபெறாமல் இருக்க முட்டுக் கட்டை போட்டார்கள். அதனையும் தடுத்து முறியடிப்பதற்கு தான் நான் உங்களுடன் சேர்ந்து கோயில் கோயிலாக அலைந்து திரிந்து வழி பட்டோம். அதே பிரச்சினை தான் இப்பொழுதும் உருவாகியிருக்கின்றது.
நான் கேட்டுப் பார்த்தேன். அதன் பின்னர் தாய் மாமனிடமிருந்து வர வேண்டிய பொருட்களுக்கு பதிலாக நானே என்னுடைய சேலையை அதாவது நீங்கள் எனக்கு திருமணமான பின்னர் உங்களுடைய பிறந்த நாளுக்கு எனக்கு வாங்கிக் கொடுத்த சேலையில் தான் என் குழந்தை உறங்க வேண்டும் என்று முடிவெடுத்து அந்த சேலையை தொட்டிலாக கட்டி விட்டேன்.
குழந்தையை தொட்டிலிலிருந்து எடுக்கும் சமயமும் உறங்க வைக்கும் சமயமும் நீங்கள் என்னையும் என் குழந்தையையும் அணைப்பது போன்ற உணர்வு எனக்கு கட்டாயம் வரும். நான் தொட்டிலை ஆட்டும் பொழுது நீங்களும் நானும் சேர்ந்து குழந்தையை உறங்க வைப்பது போன்ற எண்ணங்கள் எழும். அதே சமயம் நீங்கள் வாங்கிக் கொடுத்த சேலையில் என் குழந்தை படுத்து இருக்கின்றது என்பதால் அது பத்திரமாக இருக்கின்றது போன்ற உணர்வு என்னுள் ஏற்படும். அது மட்டுமல்லாது எனது குழந்தைக்கு தொட்டிலாக மாறியுள்ள அந்த சேலையின் மகிமை மற்றும் மகத்துவம் எனக்கு மட்டுமே தெரியும்.
அதே போல குழந்தை பிறந்த 11 நாட்களில் தீட்டுக் கழித்து பொட்டு வைப்பார்கள். அந்த சடங்கில் என்னுடைய தாயார் மட்டும் கலந்து கொண்டார்கள். ஊரிலிருந்து உறவினர்கள் யாரும் வரவில்லை.
குழந்தை பிறந்ததிலிருந்து 30-வது நாளன்னு குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டும். ஆனால் இது வரையில் உறவினர்கள் யாரும் அதைப் பற்றி யோசிக்கவில்லை என்று சொல்லும் சமயம் நான் அழுது விட்டேன்.
நான் தேம்பித் தேம்பி அழுது கொண்டே மீண்டும் தொடர்ந்தேன். நான் உங்களை எனது வீட்டாருக்குத் தெரியாமலோ அதே போல நீங்கள் என்னை உங்கள் வீட்டாருக்குத் தெரியாமலோ ஓடிப் போய் கல்யாணம் செய்து கொண்டிருந்தால் இருவரது வீட்டிலிருந்து உறவினர்கள் மட்டும் வராமல் இருந்திருப்பார்கள். உறவினர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை உங்களுக்கு நெருக்கமான நண்பர்களை மட்டுமாவது வைத்துக் கொண்டு கூட சீமந்தம் வளைகாப்பு மற்றும் குழந்தைக்குப் பெயர் சூட்டல் போன்ற அனைத்து விசேஷங்களை செய்து கொண்டு இருக்கலாம்.
ஆனால் என்னை என்னுடைய தாயார் இவருக்கு நெருங்கிய உறவினர்களை வைத்து திருமணம் செய்து கொடுத்தும் யாரும் வரவில்லை. அவரும் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகி கூட குழந்தைக்குப் பெயர் வைப்பது பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை என்று சொன்னேன்.
என்னை எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்து மனக் கோட்டை கட்டியவர் நான் கண்ணீர் சிந்துவதை பார்த்து கண்கலங்கினார். அதனை மாற்ற அவரே முயற்சி மேற்கொண்டார்.
அவரது பையிலிருந்து ஒரு சாக்லெட் எடுத்து முதலில் ஒரு சிறு துண்டினை கடித்து என் குழந்தையின் வாயில் நன்றாக இரண்டு விரல்களால் நசுக்கி வைத்தவுடன் குழந்தை சப்புக் கொட்ட ஆரம்பித்தது. குழந்தை மீண்டும் அவரைப் பார்த்து சிரித்தது.
அதன் பின்னர் அவர் பாதி கடித்து விட்டு மீதியை என்னிடம் கொடுத்து என்னை சாப்பிடச் சொன்னார். நாம் இருவரும் சாப்பிட்டு முடித்த பின்னரும் கூட குழந்தை சப்புக் கொட்டிக் கொண்டே இருந்தது. ஏனெனில் சாக்லெட் அவர் வாங்கி வந்தது அவர் வாங்கி வருவது எல்லாம் எனக்குப் பிடிக்கும் என்பதால் என் குழந்தைக்கும் பிடித்து இருக்கின்றது.
இது தான் நல்ல நேரம் என்று நாம் ஏற்கனவே முடிவு செய்த படி குழந்தைக்கு பெயர் வைக்கலாம் என்று கூறி நாம் இருவரும் சேர்ந்து ஒரே நேரத்தில் குழந்தையின் இரண்டு செவிகளிலும் ஏற்கனவே தீர்மானித்த பெயரினை மூன்று முறை உச்சரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
நானும் அவரும் சேர்ந்து ஒரே நேரத்தில் குழந்தையில் செவிகளுக்கு அருகில் சென்று மூன்று முறை விஜி என்று சொல்லி பெயர் வைத்தோம். இருவரும் ஒரே நேரத்தில் குழந்தையின் கன்னங்களில் முத்தமிட்டோம்.
என்னிடத்தில் இருந்த வாழ்க்கையில் விரக்தி நீங்கி விட்டது. மனதில் கவலைகள் குறைந்து சந்தோஷம் வளர ஆரம்பித்து விட்டது.
அதன் பின்னர் நான் அவரிடத்தில் நான் எனக்குக் குழந்தை பிறந்த பின்னர் இன்று தான் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றேன் எனவே உங்களுக்குப் பிடித்தமான உணவு தயாரித்து நான் இன்று உங்களுக்குப் பரிமாற வேண்டும் என்று சொன்னதற்கு பிரசவம் முடிந்து இன்னும் ஆறு மாதங்கள் ஆகவில்லை எனவே நான் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று காரணம் காட்டி ஏதேனும் பானம் மாத்திரம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
நான் பழச்சாறு இருக்கின்றது கொடுக்கட்டுமா என்று கேட்டேன். அதற்கு அவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கின்றாயா அல்லது புட்டிப் பால் கொடுக்கின்றாயா என்று கேட்டார். உடனே நான் குழந்தைக்கு தாய்ப்பால் தான் கொடுக்கின்றேன் என்று சொன்னவுடன் எனக்கு சூடான காபி வேண்டும் என்று சொன்னார்.
நான் காரணம் கேட்டேன் அதற்கு நான் எந்த பானம் கொடுத்தாலும் பாதி சாப்பிட்ட மீதியை என்னிடம் கொடுத்து அதனை நான் குடிப்பதால் அது குளிர் பானமாக இருந்தால் எனக்குச் சளி பிடித்து பின்னர் குழந்தைக்கு சளி பிடிக்கும் எனவே சூடான காபி என்று சொன்னார். அப்போது நான் சிரித்துக் கொண்டே என் மீதுள்ள அன்பு தற்போது குழந்தைக்கு மாறுவதால் என் மீதான அன்பு குறைகின்றது தானே என்றேன். இது வரையில் என்னை பாது காப்பாக வைத்திருந்தது போல் இனி மேல் அவர் நினைவாகப் பிறந்துள்ள குழந்தையையும் பாதுகாப்பாக வைத்திருப்பது தானே நல்லது என்றார்.
நான் அவருடன் மிகச் சந்தோஷமாக கவலைகளை மறந்து உரையாடிக் கொண்டிருந்த சமயம் குழந்தையின் ஏஞ்சல் புத்தாடை ஈரமாகி விட்டது. நான் உடனே வேறு உடை மாற்றி வருகின்றேன் எனக் கூறிய சமயம் இன்னுமொரு அட்டைப் பெட்டியில் உள்ள செட்டில் இளமஞ்சள் நிற ஆடையினை அணிவித்து மகிழ்ந்தோம்.
எனக்கும் மஞ்சள் என் குழந்தைக்கும் மஞ்சளா என்று கேட்ட சமயம் அவர் மஞ்சள் கயிறு என் கழுத்தில் கட்ட முடியாததால் அணிவித்து மகிழ்வதாக தெரிவித்தார். அதற்குப் பின்னர் அவர் கொடுத்த ஒரு நகைப் பெட்டியில் வெள்ளியிலானான கால் கொலுசு இருந்தது.
அதனைப் பார்த்த நான் எனக்கு வாங்கிக் கொடுக்க முடியாததை எல்லாம் என் மகள் பெறப் போகின்றாள் என்று சொன்னவுடன் இதோ உனக்கும் ஒரு குழந்தை பெற்றமைக்கான பரிசு என்று விலை அதிகம் கொண்ட ஒரு அழகான சேலை என்னிடம் கொடுத்தார். உங்களது முதலாவது சேலை தொட்டில் துணியாக மாறி விட்டதால் இந்த சேலையை நான் இன்றே உடுத்திக் கொள்வேன் என்று சொல்லி உடனே உடுத்திக் கொண்டு வந்து விட்டேன். .இருவரும் சந்தோஷப் பட்டோம்.
அதன் பின்னர் நான் அவரிடம் நான் மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் அத்தை என்னிடம் கேட்டுக் கொண்ட படி உங்கள் வீட்டிற்கு சென்று வந்தீர்கள் என்பதனை அப்போதே அறிந்து சந்தோஷப் பட்டேன்.
அதே போல நீங்கள் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும் அத்தை ஆசைப் பட்டது போல ஊருக்குச் சென்ற சமயம் பெண் பார்த்து வந்தீர்களா எனக் கேட்டேன். அதற்கு அவர் போன மாதம் வீட்டிற்கு சென்று வந்த சமயம் அவரது பெற்றோர் பெண் பார்க்க இருப்பதாக சொன்னதற்கு பதில் ஏதும் சொல்லாமல் வந்து விட்டதாகவும் என்னுடைய வற்புறுத்தலுக்காக அடுத்த முறை செல்லும் சமயம் பெண் பார்க்க மறுபடியும் கேட்டால் சம்மதம் சொல்லி வருவதாகவும் ஒப்புக் கொண்டார்.
அதே நேரத்தில் நான் அவரிடத்தில் உங்களுக்குத் திருமணம் நடந்தாலும் கூட நான் உங்கள் மீது செலுத்தும் அன்பு மாறாது அதே போல நான் என்னுடைய இறுதி மூச்சு நிற்கும் வரையில் உங்கள் வருகைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் காதலி என்பதனை நீங்கள் மறந்து விடக் கூடாது. என்னை விட அழகான வசதிமிக்க உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்ளக் கூடிய பெண் உங்களுக்கு கிடைத்தாலும் கூட நம் இருவருக்கும் இடையே உள்ள அன்பு கொஞ்சம் கூட குறையக் கூடாது என்று கேட்டுக் கொண்டேன்.
நாம் இருவரும் மனம் விட்டுப் பேசி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி இருந்த காரணத்தினால் நிறையப் பேச வேண்டியிருந்தது என்பதால் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். நடு நடுவே சமையலறைக்குள் சென்று சமையல் வேலையையும் முடித்து விட்டேன்.
அவரிடம் உணவு பரிமாறுகின்றேன் சாப்பிட்டு விட்டுச் செல்லுங்கள் என்று எவ்வளவோ கேட்டுக் கொண்டும் அடுத்த முறை கட்டாயம் சாப்பிடுவதாக சொல்லி மீண்டும் ஒரு முறை குளுக்கோஸ் கலந்த பால் மட்டும் பாதி அருந்தி மீதியை நான் பருகியதைப் பார்த்து விட்டு சந்தோஷப்பட்ட பினனர் வழக்கம் போல் பிரிவதற்கு மனமில்லாமல் அவர் புறப்பட்டுச் செல்லும் சமயம் என் குழந்தை ஒருபக்கம் அழுகின்ற அதே சமயத்தில் நான் ஒரு பக்கம் அவரை மீண்டும் சந்திக்க ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமே என்று கவலைப் படுகின்றேன். இது தான் உண்மைக் காதலின் அடையாளம்.