வாழ்க்கையில் விரக்தி
ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்தால் தாய் வீட்டில் பச்சை உடம்பு என்று சொல்லி குறைந்தது மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து சத்தான உணவுகளை ஊட்டி உடல் நலம் நன்கு தேறிய பின்னர் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். திருமணத்திற்குப் பின்னர் நீண்ட நாட்கள் தங்கக் கூடிய பாக்கியம் அந்த நேரத்தில் தான் திருமணமான பெண்ணுக்குக் கிடைக்கும்.
அதுவே தலைப் பிரசவமாக இருந்தாலோ அல்லது குறைப் பிரசவமாக இருந்தாலோ வசதி இல்லாதவர்கள் கூட குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் முதல் ஐந்து மாதங்கள் வரையிலாவது தாய் வீட்டில் வைத்திருந்து அனுப்பி வைப்பார்கள்.
சாஸ்திர சம்பிரதாயங்கள் என்னும் பெயரில் குழந்தை பிறந்த நாளிலிருந்து ஐந்து மாதங்கள் வரையில் தாயையும் சேயையும் தாய் வீட்டில் வைத்திருந்து சீர் வரிசைகளுடன் புகுந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டு வருவார்கள்.
பிரசவச் செலவுகள் ஏற்பட்ட பின்னர் சீர் வரிசைகளுக்காக பணம் சேர்ப்பதற்கு நடுத்தர மற்றும் வருமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இந்த இடைவெளிக் காலம் உதவும். இது தவிர இரண்டு குழந்தைகளுக்கு இடையே உள்ள கால அவகாசம் அதிகரிக்கும். அதுவும் தவிர அடுத்த குழந்தை பெற்றெடுக்கும் அளவிற்கு பெண்ணின் உடலுறுப்புக்கள் பலம் பெற்று விடும்.
குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் கழுத்துப் பகுதி மிகவும் மென்மையாக இருக்கும் காரணத்தால் பிறந்த குழந்தையை கையிலெடுக்கும் சமயம் மிகவும் பத்திரமாக பாது காப்பாக குழந்தையை கையிலெடுக்க வேண்டும்.
ஒரு பெண்ணிற்கு பிரசவம் நடந்த பின்னர் ஐந்து மாதங்களில் தமது வேலைகளைத் தாமே செய்யும் அளவிற்கும் பிறந்துள்ள குழந்தையை பாது காப்பாக கையிலெடுத்து பராமரிப்பதற்கும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கின்றது. இந்த நிலைகள் எல்லாம் கடந்த பின்னர் தான் குழந்தை பெற்றபின் தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு தாயையும் சேயையும் சீர் வரிசைகளுடன் அனுப்பி வைக்கும் பழக்கம் ஹிந்து மத கலாச்சாரத்தின் படி ஏற்படுத்தப் பட்டுள்ளது.
அதுவும் தவிர புதிதாகப் பிறந்துள்ள பேரனோ அல்லது பேத்தியோ அல்லது இரட்டைக் குழந்தைகளோ அந்த குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்னும் காரணம் காட்டி பெண்ணின் பெற்றோர் வீட்டிற்கு அடிக்கடி சம்மந்தி வீட்டார் வந்து செல்வார்கள்.
ஒவ்வொரு முறை வரும் பொழுதும் மருமகளுக்கு என்ன பிடிக்கும் என்பதனை அறிந்து சத்து மிக்க உணவுப் பண்டங்களையும் கருவில் குழந்தை உருவான நாள் முதல் குழந்தை பெற்றெடுக்கும் நாள் வரையில் உள்ள இடைப்பட்ட காலத்தில் தமது மருமகள் தவிர்த்திருந்த ஆனால் விரும்பி உண்ணக்கூடிய தின்பண்டங்களையும் வாங்கி வருவார்கள்.
மருமகளை இப்படி கவனிப்பவர்கள் பிறந்துள்ள குழந்தை விரும்பிக் கேட்கும்படி ஒலி எழுப்பும் கிலுகிலுப்பை மற்றும் பல வண்ண மொம்மைகள் மற்றும் விளையாட்டு சாமான்களையும் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.. நெருங்கிய உறவினர்கள் பிறந்துள்ள குழந்தைக்கு புத்தாடைகளைப் பரிசளிப்பார்கள்.
அதே போல மருமகள் தமது பேரக் குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்பதற்காக வீட்டு வேலைகளை தாமே முன் வந்து சம்மந்தி வீடாக இருந்தாலும் சுய கௌரவம் பார்க்காமல் செய்து மருமகளுடைய தாயாருக்கும் அங்குள்ள உறவினர்களுக்கும் ஒத்தாசையாக இருந்து ஓய்வு கொடுப்பார்கள்.
அதே போல் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்து விட்டு சம்மந்தி வீட்டிற்கு வருபவர்கள் சம்மந்தி வீடு என்று சுய கௌரவம் பார்க்காமல் மருமகன் வீட்டில் எவ்வளவு வசதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்கள்.
இவை எல்லாமே குழந்தை பெற்ற பெண் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் எனக்கு அவ்வாறான பாக்கியம் இந்த ஜென்மத்தில் கிடைக்கவில்லை.
தாய் வீட்டுக்கு பிரசவத்திற்கு புறப்பட்டுச் செல்லும் சமயம் தாய் வீட்டை அடைவதற்கு முன்னரே நடு வழியிலேயே எனக்கு அவசர அவசரமாக பிரசவம் முடிந்து விட்டது. அதன் பின்னராவது சொந்த ஊருக்கு போக முடியும் என்று நினைத்தது நடக்காமல் பிரசவத்திற்கு புறப்பட்டுச் சென்ற ஐந்தாவது நாள் மிண்டும் புறப்பட்ட இடத்திற்கே நான் குழந்தையுடன் திரும்பி வர வேண்டியதாயிற்று.
நான் நினைத்தபடி பிரசவத்திற்கு முன்னரும் பிரசவத்திற்குப் பின்னரும் சொந்த ஊரில் யார் யார் வீட்டிற்கெல்லாம் செல்ல நினைத்தேனோ யார் யாரிடத்திலெல்லாம் என் குழந்தையை காட்டி ஆசி பெற வேண்டும் என்று நினைத்தேனோ அவைகள் எதுவும் நடக்கவில்லை.
எனக்கு வேண்டியவர்கள் எனது உறவினர்கள் எனது நண்பர்கள் என அனைவரையும் அழைக்காமல் மிக முக்கிய உறவுகளை மாத்திரம் வைத்துக் கொண்டு கோயிலில் அவசர அவசரமாக திருமணம் நடைபெற்ற படியால் என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலருக்கு எனக்கு திருமணம் நடந்த விவரம் தெரியாது. யாரிடத்திலும் திருமணத்திற்குப் பின்னர் நான் நேரில் பார்த்து பேச முடியவில்லை. எனக்குப் பிறந்துள்ள குழந்தையைக் கூட காட்ட முடியவில்லை.
அனைத்திற்கும் காரணம் என்னுடைய தாயாரின் வசதியின்மை என்று சொல்வதை விட என்னுடைய தாயாரின் வீண் பிடிவாத குணம் மற்றும் பேராசை என்று தான் சொல்ல வேண்டும்.
நானும் என்னை உயிருக்கு உயிராக காதலித்தவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கின்றோம். நம் இருவருக்கும் இடையே பிரிக்க முடியாத படி காதல் மலர்ந்திருக்கின்றது என்பது ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தும் அவரே வேலை கிடைத்த பின்னர் நேரடியாக முறைப்படி பெண் கேட்டு வந்திருந்தும் அவமானப் படுத்தி நடு ரோட்டில் தள்ளி விட்டு அவருக்கு ஏற்பட்ட ரத்த காயங்கள் ஆறுவதற்கு முன்னமேயே சொத்து சுகங்களுக்கு ஆசைப்பட்டு என்னை பாழுங்கிணற்றில் தள்ளி விட்டார்கள் பணத்தாசை பிடித்த என்னுடைய தாயார்.
என்னுடைய விருப்பம் என்ன. நான் யாரை திருமணம் செய்து சொள்ள துடிக்கின்றேன் என்னும் என்னுடைய இதயத் துடிப்பை யாரும் கண்டு கொள்ளவில்லை.
நான் தாலி கட்டி வந்திருக்கும் இடத்தில் இல்லாத வசதிகள் எதுவும் இல்லை காசு பணம் வீடு வாசல் சொத்து நிலம் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குதல் மற்றும் வியாபாரத்தில் முதலீடு என்று எல்லாம் நிறைய இருக்கின்றது. எல்லாவற்றையும் விட எல்லாவற்றிற்கும் கணக்குப் பார்க்கும் கஞ்சத் தனம் மிக மிக அதிகமாக இருக்கின்றது.
ஆனால் நான் எதிர் பார்த்த அன்பு மற்றும் அரவணைப்பு இல்லை. நான் எதிர்பார்த்த நல்ல குணங்கள் இல்லவே இல்லை. எனக்குக் கிடைக்க வேண்டிய மன அமைதி இல்லவே இல்லை.
காசு பணம் இன்று வரும் நாளை போகும். அதற்காக எடுத்ததற்கு எல்லாம் பணம் செலவாகி விடும் என்று கணக்குப் போட்டுப் பார்ப்பவர்கள் எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றத் தவறுவதால் எந்த பயனும் இல்லை.
இவ்வளவு வசதி இருந்தும் தாய் வீட்டார் தான் பிரசவத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று காத்திராமல் என்னை பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு கொண்டு சென்று விட்டு வருவதில் என்ன தவறு இருக்கின்றது என்னும் பெருந்தன்மையான எண்ணம் வரவில்லை..
அதே போல என்னைப் பெற்ற தாய் எனக்கு வளை காப்பு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. வளை காப்பு நடைபெற வேண்டிய காலமான ஏழு மாதம் முடிந்தவுடன் அல்லது அதற்கு முன்னர் என்னை பிரசவத்திற்காக சொந்த ஊர் அழைத்துச் சென்றிருக்கலாம். வளை காப்பு நடத்தக் கூடிய வசதி இல்லை என்பதற்காக எட்டு மாதங்கள் கர்ப்பிணி ஆன நிலையில் அதற்குப் பின்னர் நல்ல நாள் பார்த்து சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல முயன்றதும் ஒரு வகையில் தவறு தான்.
தாய் வீட்டார் தான் பிரவசத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்னும் வீண் சம்பிரதாயங்களுக்கு காத்திருந்த ஒரே காரணத்தால் புகுந்த வீட்டிலும் இல்லாமல் பிறந்த வீட்டிலும் இல்லாமல் இடைவெளியில் எங்கோ ஓர் முன் பின் தெரியாத இடத்தில் குழந்தை பெற்றெடுக்கும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.
இப்படிப் பட்ட இடத்தில் வாழ்க்கைப் படுவதற்குப் பதில் ஒரு ஏழைக்கு வாழ்க்கைப் பட்டிருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கலாமே என்னும் எண்ணங்கள் தோன்றுவது சரியானது தான்.
கூழோ கஞ்சியோ குடிசையில் வாழ்ந்தாலும் பஞ்சு மெத்தைகள் இல்லாமல் தரையில் உறங்கினாலும் எனக்குப் பிடித்தவரோடு வாழ நான் இந்த ஜென்மத்தில் கொடுத்து வைக்கவில்லை. எனக்குப் பிடித்தவரை நான் கரம் பற்றியிருந்தால் அவரது அரவணைப்பு ஒன்று மட்டும் போதும் என்னும் சந்தோஷம் கிடைத்து மன நிம்மதியுடன் வாழ்ந்திருப்பேன். வேறு எந்த உறவுகளையும் நான் எதிர் பார்த்து ஏங்கிக் கொண்டு இருக்க மாட்டேன். ஆனால் எனக்குப் பிடிக்காத வாழ்க்கை வாழ்வதில் என்ன பயன் என்று தோன்றுகின்றது.
இந்த காரணங்களால் எனக்கு என்னுடைய வாழ்க்கை மீது விரக்தி தான் ஏற்படுகின்றதே தவிர வாழ்க்கை வாழ வேண்டும் என்னும் ஆசை வர வர குறைந்து கொண்டே வருகின்றது.
என்னுடைய இந்த நிலை அவரது வருகைக்குப் பின்னர் தான் மாறும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. விரைவில் அவர் வர வேண்டும். நான் இழந்த சந்தோஷத்தை மீண்டும் பெற வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கின்றேன்.