வாழ்க்கை துணையை தேர்வு செய்வது எப்படி?
உயிரோடு இருக்கும் வரையில் கற்பனையில் அவரோடு வாழ்ந்து கொண்டு தான் இருப்பேன். நான் இறந்த பின்னர் சொர்க்கத்திற்கும் போக மாட்டேன். நரகத்திற்கும் போக மாட்டேன். அவரது வருகைக்காக நான் காத்திருப்பேன். எனக்கு முன்னதாக அவரது உயிர் பிரிந்தாலும் அவ்வாறே காத்திருக்க வேண்டும் என்று அவரிடத்திலும் கேட்டுக் கொண்டுள்ளேன். சொர்க்கத்திற்குப் போனாலும் சரி நரகத்திற்குப் போனாலும் சரி நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து போய் விட்டால் அந்த இடம் நிச்சயம் நரகமாக இருந்தாலும் சொர்க்க லோகம் ஆகி விடும்.
நாம் அடுத்து எடுக்கப் போகும் மறு பிறவியிலாவது இருவரும் விருப்பப்பட்ட படி திருமணம் செய்து கொண்டு நாம் வாழ நினைத்த அந்த சந்தோஷமான இல்லற வாழ்க்கையை வாழ முடியும் என்னும் திடமான அசைக்க முடியாத நம்பிக்கை நம் இருவருக்கும் உண்டு.
ஆறுதல் சொல்லி என் கண்ணீரைத் துடைப்பதற்கு அவர் என் அருகில் இருக்க முடியும் என்றால் நான் அழுவது கூட என்னைப் பொருத்த வரையில் சுகம் தான். என் வாழ் நாள் முழுவதும் அவர் அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக அழுது கொண்டே தான் இருப்பேன் அவர் என் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்பதற்காக.
என் கண்ணீரைத் துடைப்பதற்கு அவர் அருகில் இருக்க வேண்டும் என்று நான் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் நான் அவரது கண்ணீரைத் துடைக்க வேண்டிய ஒரு துக்க கரமான செய்தியினை அவர் என்னிடம் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் நேரில் வந்து தெரிவித்த சமயம் என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை.
என் மகனும் மருமகளும் அருகில் இருந்தமையால் நான் அழுவதைப் பார்த்து பதறிப் போய் என்னிடத்தில் என்னவென்று கேட்ட சமயம் நான் விவரத்தை எடுத்துக் கூறினேன். அதனைக் கேட்டுத் தெரிந்து கொண்ட சிறிது நேரத்தில் எனது மகன் மற்றும் மருமகள் இருவரும் சேர்ந்து திரைப் படத்திற்குச் செல்வதாகச் சொல்லி விட்டு புறப்பட்டனர்.
அவர்கள் இருவரும் புறப்பட்டுச் சென்ற பின்னர் நான் அவருக்கு மதிய உணவு பரிமாறப் போவதாகச் சொன்ன சமயம் அரை மனதுடன் ஒப்புக் கொண்டார். உணவு உண்ணும் நேரத்தில் நான் எதுவும் பேசவில்லை. வழக்கமாகச் சாப்பிடும் உணவில் பாதியினைக் கூட அவரால் உண்ண முடியவில்லை.
அவர் மனதில் ஏற்பட்டுள்ள இரட்டை தாக்கங்கள் தான் அதற்குக் காரணம். அவர் எனக்கு ஊட்டி விடக்கூடிய அளவுக்கு அவர் மனதில் சந்தோஷம் இல்லாமையால் அவருடைய இலையிலிருந்து உணவினை எடுத்து நானே உட்கொண்டேன். ஒரே இலையில் நாம் இருவரும் உணவு உண்ண வேண்டும் என்னும் என்னுடைய ஆசை அவர் துக்கத்தில் இருக்கும் போது நிறைவேறும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.
மதிய உணவுக்குப் பின்னர் அவரது குடும்பத்தில் உள்ள சூழ்நிலையினை விவரமாக விளக்கிக் கூறினார். உடல் நிலையின் காரணமாக ஏதேனும் வணிகம் ஆரம்பித்து அது நன்றாக நடக்கும் பட்சத்தில் ஓய்வு எடுக்க முடியும் என்று நினைத்தது கானல் நீராகி விட்டது எனச் சொன்னார். இதன் காரணமாக மீண்டும் ஒரு முறை ஆரம்பத்திலிருந்து புதியதாக திருமணம் ஆனவுடன் வாழ்க்கை தொடங்குவது போல தொடங்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். அது என்னவென்று அவர் விவரிக்கவில்லை.
வீட்டில் ஒரு துக்ககரமான சம்பவம் நடந்து விட்ட காரணத்தால் வருடம் முடிவதற்குள் சுப காரியம் நடத்த ஏற்பாடு செய்ய அவரது மனைவியிடம் கேட்டதாகவும் அதற்கு அவரது மனைவி என்னை சம்மந்தி ஆக்கிக் கொள்ளத் தான் அவர் துடிப்பதாகவும் கருதி சுப நிகழ்ச்சி பற்றிய பேச்சு எடுத்தவுடனேயே முட்டுக் கட்டை போட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல திருமணம் என்னும் பேச்சினை துவக்கியவுடனேயே அவரது மனதினைப் புண்படுத்தி விட்டதாகத் தெரிவித்தார். எனது மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது என அவர் சொன்ன சமயம் அது எப்படித் தெரியும் எனவும் இன்னும் தொடர்பு இருக்கின்றதா எனவும் கேட்டு சண்டையிட ஆரம்பித்து விட்டதாகத் தெரிவித்தார்.
மகனுக்குத் திருமணம் செய்வதில் ஜாதகப் பொருத்தம் நன்றாக இருக்க வேண்டும். பெண் அழகாக இருக்க வேண்டும். படித்து இருக்க வேண்டும் பெண்ணுக்கு சகோதர சகோதிரிகள் இருக்க வேண்டும். பெண்ணின் பெற்றோர் நன்கு மதிக்கத் தக்க வகையில் சொந்த வீடு காசு பணம் அந்தஸ்து மிக்கவர்களாக இருக்க வேண்டும். நகைகள் மற்றும் சீர் வரிசைகள் நிறையக் கொண்டு வர வேண்டும் எனச் சொல்வதாகத் தெரிவித்தார்.
பலப்பல தரகர்கள் ஜாதகங்களைக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள் எனவும் பல ஜாதகங்கள் பொருந்தி வருவதாகவும் ஜாதகம் பொருத்தம் நன்றாக இருக்கும் வரன்களின் வீட்டார் பெண்ணுக்கு நகைகள் எவ்வளவு போடுவார்கள் சொந்த வீடு உள்ளதா எனக் கேட்டு வருவதன் காரணமாக திருமண வேலைகளைத் துவக்கியும் கூட முடிவெடுக்க முடியவில்லை எனச் சொன்னார்.
இந்நிலையில் அவரது மகன் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்ப்பதை விட்டு விட்டு சொந்தமாக அந்த வேலையினைச் செய்யப் போவதாகத் தெரிவித்ததற்கு ஏதேனும் வேலையில் இருக்கும் போதே திருமணத்தை முடித்து விடலாம். திருமணம் முடிந்த பின்னர் சொந்தமாக தொழில் தொடங்குவதைப் பற்றி யோசிக்கலாம் என்னும் அவரது அறிவுறையினைக் ஏற்க மறுத்த காரணத்தால் சொந்தமாகத் தொழில் தொடங்க மீண்டும் ஒரு முறை லட்சக் கணக்கில் முதலீடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
சொந்த ஊரிலேயே சொந்தமாக தொழில் செய்கின்றார் என்னும் சமயம் பெண் வீட்டார் பெண் தர தயங்குவதாகவும் வெளியூரில் வெளி மாநிலத்தில் வேலை பார்க்கும் சமயம் வந்த வரன்கள் கூட உள்ளுரில் சொந்த தொழில் ஆரம்பித்த பின்னர் வரவில்லை எனவும் சொன்னார்.
அதற்குக் காரணம் மணப்பெண் வீட்டார் கூட்டுக் குடும்பத்தில் தன் மகளை திருமணம் செய்து வைக்க விரும்பவில்லை என்பதும் பெண்கள் கணவனுடன் மட்டும் தனிக் குடித்தனம் வாழ்வதற்கு ஆசைப் படுவதாகவும் தெரிவித்தார்.
இவ்வளவும் மீறி பெண் பார்க்கச் சென்றால் பெண்ணைப் பிடித்திருக்கின்றது அல்லது பிடிக்கவில்லை என்று சொல்ல கால தாமதம் செய்வதன் காரணமாக அந்த வரன் வேறு இடத்தில் நிச்சயமாகி விடுகின்றது எனச் சொன்னார். வரன் முடிவு செய்வதில் தயக்கம் காட்டுவதன் காரணமாக எந்த முடிவுக்கும் வர முடியவில்லை என்பதும் மாப்பிள்ளைக்குப் பெண் பிடித்திருந்தால் பெண் வீட்டாரிடமிருந்து சம்மதம் வரவில்லை என்பதும் பெண்ணுக்கு மாப்பிள்ளையை பிடித்து இருந்தால் மாப்பிள்ளை வேறு பெண்ணைப் பார்க்கலாம் என்பதும் வாடிக்கையாகி விட்டது என்றும் சொன்னார்.
நானும் அவரும் காதலித்து வந்த சமயம் அவருடைய தந்தையிடத்தில் என்னைத் திருமணம் செய்து வைக்குமாறு மன்றாடிய சமயம் காசு பணம் அந்தஸ்து இல்லாத காரணத்தால் என்னை ஒதுக்கி விட வேண்டாம் என்று சொல்லி சண்டையிட்ட சமயம் என்ன என்ன சொன்னாரோ அவற்றை எல்லாம் அவரது அறிவுறைகளாக குடும்பத்தாரிடம் சொல்லி இருக்கின்றார். அதனை அவரது குடும்பத்தார் கேட்க மறுத்து விட்டார்கள்.
ஜாதகப் பொருத்தம் பார்த்தால் பெண் அழகாக இருக்க வேண்டும் என்பதனை மறந்து விட வேண்டும். பெண் அழகாக இருக்க வேண்டும் என்றால் ஜாதகப் பொருத்தம் பார்க்கக் கூடாது. ஜாதகப் பொருத்தம் நன்றாக அமைந்து பெண்ணைப் பிடித்திருந்தால் பெண்ணின் படிப்பு பற்றி யோசிக்கக் கூடாது. ஒரு பெண்ணைப் பிடித்து விட்டது என்றால் அந்த குடும்பத்தாரிடமிருந்து சீர் வரிசைகள் நகைகள் மற்றும் பெற்றோர் அந்தஸ்து ஆகியவற்றை ஒதுக்கி விட வேண்டும். ஜாதகப் பொருத்தம் அழகு அந்தஸ்து நகைகள் மற்றும் சீர் வரிசை என அனைத்தையும் ஒரே இடத்தில் எதிர்பார்ப்பது கூடாது என எவ்வளவோ சொல்லியும் ஏற்க மறுப்பதன் காரணமாக திருமணம் தள்ளிக் கொண்டே செல்கின்றது எனத் தெரிவித்தார்.
நான் அவரிடத்தில் பையனுடைய ஜாதகத்தில் ஏதேனும் தோஷங்கள் இருந்தால் அதற்கான பரிகார ஹோமங்கள் அல்லது யாகங்கள் செய்யலாம் எனவும் ஏதேனும் கோயில்களுக்குச் சென்று வழிபட வேண்டியிருந்தால் வழிபட்டு வந்தால் திருமணம் சீக்கிரம் நடந்தேறும் எனத் தெரிவித்த சமயம் ஜாதகத்தில் தோஷம் இருந்த காரணத்தால் அதற்கான பரிகார ஹோமம் செய்து விட்டதாகத் தெரிவித்தார்.
திருமணத் தரகர்களிடத்தில் மணமகன்களின் ஜாதகங்களை விட மணமகள்களின் ஜாதகங்கள் மிக மிக குறைவாக இருப்பதாகவும் நிறைய பொருத்தங்கள் மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவை இருந்தால் திருமணம் தள்ளிப் போக வாய்ப்புகள் அதிகம் என்பதனையும் உணர முடிகின்றது எனவும் தெரிவித்தார்.
இது போலவே பெண் வீட்டாரும் வரப்போகின்ற மாப்பிள்ளை ஐந்து இலக்கங்களில் சம்பளம் வாங்க வேண்டும். மாப்பிள்ளை பெயரில் சொந்தமாக பணியாற்றும் ஊரில் அல்லது வெளி நாட்டில் வீடு மற்றும் சொந்தமாக கார் மற்றும் இதர வசதிகள் இருக்க வேண்டும் எனவும் மாப்பிள்ளையுடன் மனைவி மட்டுமே தனிக் குடித்தனம் இருக்க வேண்டும் எனவும் மாப்பிள்ளையின் பெற்றோர் வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை தான் மகன் வீட்டுக்கு வந்து செல்ல வேண்டும் என்றும் மருமகளை மாமனார் மாமியாருடன் தங்கச் சொல்லுமாறு கட்டாயப் படுத்தக் கூடாது எனவும் பல நிபந்தனைகளை விதிப்பதாகவும் தெரிவித்தார்.
இவ்வளவுக்கும் மேலாக பெண்களைப் பெற்றெடுத்த பெற்றோர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும் சமயம் வரப் போகும் மாப்பிள்ளையின் மாதாந்திர வருமானம் மற்றும் சொத்துக்கள் ஆகியவற்றைத் தான் கருத்தில் கொள்கின்றார்களே ஒழிய மாப்பிள்ளையின் குண நலன்கள் மற்றும் செலுத்த வேண்டிய கடன் தொகைகள் போன்ற எதனையும் கவனிப்பதில்லை.
சொந்த வீடு சொந்த கார் போன்ற வசதிகள் இருக்கின்றது என கணக்கிட்டு ஆசை ஆசையாக வளர்த்த தமது செல்ல மகளை திருமணம் செய்து கொடுத்த பின்னர் மாப்பிள்ளை கடன் செலுத்தியது போக மீதி வீட்டுக்குக் கொண்டு வரும் சம்பளத்தைக் கணக்கிட்டால் உள்ளுரில் ஒரு சிறிய கடையில் வேலை பார்க்கும் வரன் எந்த விதமான கடன் தொல்லைகளும் இல்லாமல் எப்படி சுகமாக வாழ்கின்றானோ அதனை விட மிகக் கேவலமான இடத்தில் தமது மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டோமே என்னும் ஏக்கத்தில் வெளியில் சொல்ல முடியாமல் ஏங்கித் தவிக்கும் பெற்றோர்கள் அதிகம்.
பல பெண்களின் பெற்றோர் தமது பெண்ணை கூட்டுக் குடும்பத்தில் திருமணம் செய்து தர மறுத்து வருகின்றனர் எனத் தெரிவித்தார். இதன் காரணமாக மணமகனுக்கு திருமணத்திற்கு முன்னரே வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது அல்லது பெற்றோருக்குத் தெரியாமல் ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் வாழ்க்கை நடத்துவது தெரியாமல் போய் விடுகின்றது என்பதனையும் தெரிவித்தார்.
ஒரு பக்கம் உடல் நலம் பாதிப்பு. ஒரு பக்கம் குடும்பத்தில் ஏற்பட்ட துயர சம்பவத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள அதிகப் படியான செலவீனங்கள். மறு பக்கம் பதவியிலிருந்து ஓய்வு என அனைத்தும் ஒன்று சேர்ந்து கொண்டு அவரது மன உழைச்சலை அதிகப் படுத்துவதாகத் தெரிவித்தார். என்னால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அதன் பின்னர் என்னிடத்தில் எனக்குத் தெரிந்த வரன்கள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். அச்சமயத்தில் என் வீட்டில் தரைத் தளத்தில் வாடகைக்கு குடியிருந்து வரும் குடும்பத்தில் இருக்கும் ஒரு அழகான பெண்ணை வரவழைத்து அந்தப் பெண்ணை அந்தப் பெண்ணுக்குத் தெரியாமலே காண்பித்து விட்டு அப்பெண்ணை அனுப்பி வைத்தேன்.
அந்தப் பெண்ணுக்கு வரன் பார்த்துக் கொண்டு இருப்பதாகத் தெரிவித்தேன். அந்தப் பெண்ணை அவருக்கு நன்றாகப் பிடித்து இருந்தது. ஆனால் அந்தப் பெண்ணின் குடும்பத்தாரும் அவரது குடும்பத்தாரும் ஒரே கோத்திரம் என்பதால் அந்தப் பெண் அவரது மகனுக்கு தங்கை போன்ற உறவு வரும் எனத் தெரிவித்தார். என்னுடைய முயற்சி கூட பலன் அளிக்கவில்லை.
அவரது குடும்பத்தார் பெண் வீட்டாருக்கு காசு பணம் அந்தஸ்து மற்றும் சொந்த வீடு இருப்பதோடு மட்டுமல்லாமல் வரப்போகும் மணப்பெண் வீட்டாரிடமிருந்து நகைகள் மற்றும் சீர்வரிசைகள் அதிகம் எதிர்பார்ப்பதன் காரணமாகவும் ஜாதகப் பொருத்தம் கட்டாயம் இருக்க வேண்டும் என எதிர் பார்ப்பதாலும் நான் காட்டிய அந்தப் பெண்ணை விட மிக அழகான ஆனால் வசதி குறைவான குடும்பத்தில் பிறந்த பல பெண்களை ஜாதகப் பொருத்தத்துடன் தனக்கு மருமகளாக ஆக்கிக் கொள்ளும் பாக்கியம் தமக்கில்லை எனச் சொன்னார்.
நான் என் கணவர் மறைந்த பின்னர் கட்டாயம் ஒரு நாள் எனக்கு அறிவுரைகள் வழங்க வருகை தருமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு அது சரியான தருணமல்ல என்பதனை உணர்ந்து எதனையும் கேட்கவில்லை.
அவர் என்னிடத்தில் சென்று வருகின்றேன் என விடை பெற்ற சமயம் மீண்டும் ஒரு முறை அடுத்த மாதம் வாருங்கள். நிறையப் பேச வேண்டும் எனச் சொன்னேன். அவரும் சரியென ஒப்புக் கொண்டு விடைபெற்றார்.
அவருக்கு அவரது குடும்பத்தாரால் சோகம். எனக்கு அவரது பிரிவினால் சோகம். அவரால் எதனையும் வெளிக் காட்ட முடியாது. ஆனால் என்னால் என் தலையணையிடத்தில் என் சோகத்தினை வெளிக்காட்ட முடியும்.