தாங்க முடியாத சோகம்.
நானும் அவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்த சமயத்தில் அவருடைய உறவினர் ஒருவர் நம் இருவரிடத்திலும் நமது உள்ளங்கைகளை காண்பிக்கச் சொன்னார். நான் எனது வலக் கரத்தினைக் காண்பித்தேன். அப்போது இரண்டு கைகளையும் காண்பிக்கச் சொன்னார்.
அதே போல அவரிடத்திலும் சொன்னார். நானும் அவரும் நம் இருவருடைய கைகளையும் அவரை ஆசீர்வதிப்பது போல காண்பித்தோம். அவரது உறவினர் என்னிடத்தில் ஹேர் பின் ஒன்றினைக் கொடுக்குமாறு கேட்டார். நானும் என் தலையிலிருந்து ஹேர் பின் ஒன்றினை எடுத்துக் கொடுத்தேன்.
அதே சமயத்தில் அவருடைய கைகளில் விரல்களுக்கு இடையே இடை வெளி அதிகம் இருப்பதால் பணம் நிற்காது எனவும் அவருடைய கை ஓட்டை கை எனவும் சொன்னார். அந்த சமயத்தில் அவர் சற்று கூட யோசிக்காமல் வேலையில் சேர்ந்தவுடன் இந்த ஓட்டைக் கைகளால் உழைத்து சம்பாதித்து வருகின்ற சம்பளத்தை அப்படியே இந்த ராசியான கைகளில் கொடுத்து விட்டால் பணம் நிறைய சேரும் எனவும் அதிகமான பணம் என் ராசியான கைகளில் தங்கி இருக்கும் எனவும் தெரிவித்தார்.
அவர் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதிக்கின்ற பணம் எவ்வளவாக இருந்தாலும் என் கைகளில் கொடுத்து விட்டால் நாம் இருவரும் இல்லறம் நடத்தும் சமயத்தில் பணக் கஷ்டமே இருக்காது என அவர் அவரது உறவினரிடத்தில் சொன்ன. அந்த சமயத்தில் நான் எல்லையில்லாத ஆனந்தம் அடைந்தேன்.
என்னைப் பொறுத்த வரையில் அவரது உறவினரின் கணிப்பு சரியாகப் பொருந்தி விட்டது. விருப்பம் இல்லாமல் எனக்கு கட்டாயத் திருமணம் நடந்து நான் வாழ்க்கைப் பட்டு வந்த இடம் மிக மிக வசதியானது. சொந்தமாக வீடு சொந்தமாக வியாபாரம். நிறைய வாடகை வருமளவிற்கு சொந்தமாக ஒரு காம்பவுண்ட் வீடு என நல்ல வசதியான இடமாக நான் வாழ்க்கைப் பட்ட இடம் இருந்தது. நான் வாழ்க்கைப் பட்டு வந்த இடத்தில் இல்லை என்று சொல்வதற்கு எதுவும் இல்லை மன நிம்மதி சந்தோஷம் மற்றும் ஆசைப்பட்ட இல்லற வாழ்க்கை என்பவைகளைத் தவிர.
ஆற்று நிறைய நீர் சென்றாலும் நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும் என்பது போல என்னைப் பொறுத்த வரையில் அந்தப் பணம் அந்த வசதிகள் அந்த ஆடம்பரம் எதுவும் எனக்கு எந்த விதமான சந்தோஷத்தையும் கொடுக்கவில்லை. காரணம் நான் வாழ்க்கைப் பட்டு வந்த புகுந்த வீட்டாரின் (கணவரின்) எங்கும் எதிலும் எப்போதும் கணக்குப் பார்க்கும் குணம்.
அவர் சொல்வது போல மனதுக்குப் பிடித்தமானவர்களுடன் இல்லற வாழ்க்கை வாழ கட்டில் மெத்தை எதுவும் வேண்டாம். தலையணைகளுடன் கோரைப் பாய் மட்டுமே போதும். பொன்னகை வேண்டாம். புன்னகை ஒன்றே போதும். நல்ல உழைப்பும் உடல் ஆரோக்யமும் மாறாத அன்பும் இருந்தால் இல்லறம் மிகவும் இனிமையானதாக இருக்கும்.
அவர் குடும்பத்தை விட்டு விலகி வேலையில் சேர்ந்த போது அவரது கூட்டுக் குடும்ப வருமானத்தை கணக்கிட்டுப் பார்த்தால் அவருக்கு வருகின்ற மாதச் சம்பளம் என்பது மிக மிகக் குறைவு. அரைக் காசு ஆனாலும் அரசாங்கக் காசு எனச் சொல்லி வேலையில் சேர்ந்து கொண்டார்.
சம்பளம் குறைவாக இருந்தாலும் கடைசி மூச்சு இருக்கும் வரையில் அரசாங்கத்திலிருந்து சம்பளம் கிடைக்கும். இடையில் கஷ்டப்பட வேண்டியது இல்லை. ஓய்வு பெறும் வரையில் சம்பளம் கிடைக்கும். ஓய்வு பெற்ற பின்னர் கடைசி காலம் வரையில் பென்ஷன் கிடைக்கும் என்றும் அவரது மறைவுக்குப் பின்னால் அவரது குடும்பத்திற்கு அதாவது எனக்கு பென்ஷன் கிடைக்கும் எனவும் என்னிடத்தில் தெரிவித்து விட்டு அவர் வேலையில் சேர்ந்து கொண்டார்.
திருமணத்திற்கு முன்னர் அவர் எனக்காக மட்டுமே செலவு செய்வார். வேறு யாருடனும் சென்று அநாவசியமாக செலவு செய்ய மாட்டார். என்னுடைய விரலினைத் தொட்ட ஒரே காரணத்தால் அவரிடத்தில் வெற்றிலை பாக்கு பீடி சிகரட் பீடா மது போன்று நடைமுறைக்கு ஒத்துவராத எந்த பழக்கங்களும் இல்லாமல் இருந்த காரணத்தால் வீண் செலவு என்பதே கிடையாது. நண்பர்களுடன் ஓட்டலுக்குச் சென்று சாப்பிடுவதை கூட தவிர்த்து விட்டார். அவருடைய நண்பர்களும் நான் அவருடன் நெருக்கமாக பழகி வருவதன் காரணமாக எதனையும் கண்டு கொள்ளவில்லை.
நான் அவருடன் திடைப்படம் காண வேண்டும் என்பதற்காக எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் அவரே டிக்கட் எடுத்தும் இடைவேளையில் நொருக்குத் தீனிக்கும் தாராளமாக செலவு செய்வார். அதே போல என்னுடைய குடும்பத்தார் சினிமாவுக்கு செல்லும் சமயம் அவருக்கும் சேர்த்து டிக்கட் எடுப்பார்கள். அவர் என்னுடன் திரைப்படம் காண வேண்டும் என்பதற்காக எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு திரைப்படம் காண வருவார்.
எனக்கு பரிசுப் பொருட்கள் வாங்குவதில் என்னுடைய ஒப்புதல் பெற்று செலவு செய்வார். நானும் அவரும் கோயிலுக்குச் செல்லும் சமயம் அர்ச்சனைத் தட்டு மற்றும் எனக்கு மல்லிகை பூ மற்றும் நாம் இருவரும் ஹோட்டலில் டிபன் சாப்பிட நன்றாகச் செலவு செய்வார். நீண்ட நேரம் பேச வேண்டும் என்பதற்காக இருவரும் நடந்தே செல்வோம். நடந்தே வருவோம். எனவே பயணச் செலவுகள் இருக்காது.
வேலையில் சேர்ந்து சம்பளம் பெறுவதற்கு முன்னரே எனக்காக அதிகமான செலவுகள் செய்தவர் எனக்கு இன்னொருவருடன் திருணம் முடிந்த பின்னர் கொஞ்சம் கூட மாறவில்லை. வழக்கம் போல் எனக்கு என்னென்ன பிடிக்குமோ அதனை எல்லாம் தவறாமல் வாங்கி வருவார். அவ்வாறாகத் தான் தீபாவளிக்கும் வாங்கி வந்திருந்தார்.
நான் அவர் மீது எவ்வளவு அன்புடனும் அக்கரையுடனும் இருக்கின்றேனோ அதனை விட பல மடங்கு அன்பினை என் செல்லப் பெண் அவரிடத்தில் செலுத்துகின்றாள். நான் அவர் வரவில்லை என்றால் வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பேன். ஆனால் என் செல்லப்பெண் பாபா ஏன் வரவில்லை என்று கேட்பாள்.
காதலில் தோல்வியடைந்த காரணத்தால் எந்த உணர்ச்சிகளையும் வெளிக் காட்ட முடியாமல் இருக்கும் எனக்கும் உண்மையான அன்பினையும் பாசத்தையும் அவர் மீது செலுத்தும் என் செல்லப் பெண்ணிற்கும் உள்ள வித்தியாசம் இது மட்டுமே.
தீபாவளிக்கு முதல் நாள் அவர் எனக்கு புத்தாடைகளுடன் வந்திருந்த சமயம் இனிமேல் எனக்கு மாத்திரம் புத்தாடை வாங்கி வாருங்கள் எனவும் என் குழந்தைகளுக்கு வேண்டாம் எனவும் சொன்னேன். அதுவும் தவிர தீபாவளிக்கு புத்தாடை வாங்குவதற்குப் பதிலாக அவரது பிறந்த நாள் அல்லது பதவி உயர்வு போன்ற நாட்களில் புத்தாடை வாங்கி வருமாறு கேட்டுக் கொண்டேன். அவர் என்ன நினைத்தார் என்பது எனக்குத் தெரியவில்லை.
கோடை விடுமுறையில் அவர் என்னைச் சந்திக்க வரவில்லை. அடுத்து வந்த காலாண்டு விடுமுறையில் கூட அவர் என்னைச் சந்திக்க வரவில்லை. என் மீது அவர் கோபம் கொண்டாரா என்பது தெரியவில்லை. அவரது வருகைக்காக நான் ஏங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் என் கணவர் அவர் ஏன் வரவில்லை என்று என்னிடத்தில் கேட்கும் சமயம் நான் என்ன சொல்வது என்பதறியாமல் தவிப்பேன்.
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்தார். நான் அவரை வரவேற்று சோபாவில் அமர வைத்தேன். என் கணவர் அவரிடத்தில் நீண்ட நாட்களாக வரவில்லையே ஏன் என வினவினார்.
அதற்கு அவர் இங்கு வர நினைத்த சமயம் உடல் நலம் பாதித்த தாயாரைக் காண்பதற்கு சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவரது தாயார் மூன்று மாதங்களுக்கு முன்னர் காலமாகி விட்டதாவும் தெரிவித்து விட்டு அதற்குத் தான் மொட்டை போட்டுள்ளதாகத் தெரிவித்தார். அவரது தாயாரின் இறப்பு செய்தியினைக் கேட்டவுடன் நான் அழுது விட்டேன்.
உடனே என் கணவர் அவரிடத்தில் அவரது தாயார் தான் எனக்குப் பிறந்த மகனுக்கு செய்ய வேண்டிய முதலாவாது கடமைகளைச் செய்தார்கள் எனவும் அவர்கள் செய்த அந்த செயலை மறக்கவே முடியாது எனவும் சொன்னார்.
என் கணவர் அவரிடத்தில் நான் வருகின்ற வரையில் காத்திருக்கவும். நிறைய பேச வேண்டியிருக்கின்றது என சொல்லி விட்டு வெளியில் புறப்பட்டுச் சென்றார்.
அவர் செல்லும் சமயம் அசைவ உணவு வாங்கி வருவதாகவும் வீட்டில் சமைக்க வேண்டாம் எனவும் சொல்லி விட்டு வரும் வரையில் பேசிக் கொண்டு இருக்குமாறு சொல்லி வெளியே சென்று விட்டார். எனவே நான் சமைக்காமல் அவருக்கு ஒரு டம்ளர் காபி மாத்திரம் கொடுத்து விட்டு அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.
என் கணவர் வெளியில் சென்றவுடன் அவர் என்னிடத்தில் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். தீபாவளிக்கு வந்து சென்ற பின்னர் மாற்றலாகி இந்த ஊருக்கு அருகில் உள்ள ஊருக்கு வந்து விட்டதாகத் தெரிவித்தார். உடனே நான் இவ்வளவு அருகில் இருந்தும் கூட என்னை ஏன் பார்க்க வரவில்லை. தீபாவளிக்கு முதல் நாள் நான் ஏதேனும் தவறாகப் பேசி இருந்தால் தயவு செய்து மனதில் வைத்துக் கொள்ளாமல் மறந்து விடுங்கள் எனவும் மன்னிக்குமாறும் கேட்டுக் கொண்டேன்.
அதற்கு அவர் நீர் அடித்து நீர் விலகாது என்பது போல என்னிடத்தில் அவர் கோபமே படமாட்டார் என்பதனை தெரிவித்தார். மீண்டும் நான் அப்படியெனில் ஏன் என்னைப் பார்க்க வரவில்லை எனக் கேட்டேன்.
சென்ற ஆண்டு இங்கு வர நினைத்திருந்த சமயத்தில் ஒரு நாள் இரவு கனவில் நாம் இருவரும் சேர்ந்து ஒன்றாக புனித யாத்திரையின் போது வழிபட்ட மாரியம்மன் தோன்றி அவரது தாயாருக்கு உடல் நிலை சரியில்லை என சொல்லி உடனே சென்று பார்த்து விட்டு வருமாறு சொன்ன காரணத்தால் சொந்த ஊருக்கு அவசர அவசரமாகச் சென்றதாகவும் அச்சமயத்தில் அவரது தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் இருந்ததாகவும் தெரிவித்தார்.
அந்த சமயத்தில் அவரது தாயார் என்னை அவருக்கு மணமுடித்து வைத்திருந்தால் அவரது தாயார் அருகில் இருந்து நான் நன்றாக பணிவிடை செய்திருப்பேன் எனச் சொல்லி வருத்தப் பட்டதாகத் தெரிவித்தார். அதன் பின்னர் அடிக்கடி சொந்த ஊருக்குச் சென்று தாயாரைப் பார்த்து விட்டு வந்ததாகத் தெரிவித்தார்.
நான் உடனடியாக என்னிடத்தில் ஒரு வார்த்தை முன் கூட்டியே வந்து சொல்லியிருந்தால் நான் அவரது தாயாரை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிடைத்திருக்கும் எனச் சொன்ன சமயத்தில் உறவினர்களின் வருகை அதிகமாக இருந்த காரணத்தால் சொல்லவில்லை எனத் தெரிவித்தார்.
அதன் பின்னர் ஓராண்டு கழித்து மீண்டும் அவரது தாயார் உடல் நிலை பாதிக்கப்பட்டு அவசர அவசரமாக சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த சமயம் பயணத்தின் போது உறக்கத்தில் மீண்டும் ஒரு முறை அவரது கனவில் நாம் இருவரும் சேர்ந்து வழிபட்ட அந்த மாரியம்மன் அவர் சொந்த ஊருக்கு சென்று சேரும் சமயத்தில் அவரது தாயாரின் உயிர் பிரிந்து விடும் எனவும் அவர் தாயாரை உயிருடன் காண முடியாது என சொன்னதாகவும் அவரது தாயாரின் மறைவுக்குப் பின்னால் அந்த மாரியம்மன் தான் அவருக்கு தாயாக இருக்கப் போவதாகச் சொல்லி தாயாரின் மறைவுக்கு கண்ணீர் விட்டு அழக்கூடாது என சொன்னதாக தெரிவித்தார்.
பகல் கனவு பலிக்காது என்று சொல்வார்கள். அவர் பகல் நேரத்தில் பயணித்த போது கனவில் வந்து மாரியம்மன் சொன்னது அப்படியே நடந்தது எனவும் அவரும் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் பெற்றோர் வீட்டிற்குச் சென்று இறங்கிய மறு கணம் அவரது உறவினர் மருத்துவ மனையிலிருந்து அவசர அவசரமாக ஓடி வந்து அவரது தாயார் இறந்து விட்ட சேதியையும் அவரது தாயார் இறப்பதற்கு முன்னர் மகன் வந்து விட்டான் நான் செல்கின்றேன் எனச் சொல்லிக் கொண்டே உயிர் பிரிந்ததாகவும் தெரிவித்ததாகச் சொன்னார்.
மாரியம்மன் கட்டளைப்படி அவரது தாயார் காலமான தினத்தில் அவரால் அழ முடியாத காரணத்தைச் சொல்லி என் முன்னிலையில் மிகவும் வருத்தப்பட ஆரம்பித்து விட்டார். அவருடன் சேர்ந்து நானும் அழ ஆரம்பித்து விட்டேன். என்னுடைய அழுகைக்குக் காரணம் என்னை திருமண பந்தத்தில் அவரோடு சேர்த்து வைத்து கண்குளிர காண வேண்டும் என்று நினைத்தது முதன் முதலில் அவரது தாயார் தான் என்பது மற்றும் என் மீது அவர்கள் செலுத்திய அளவு கடந்த அன்பு.
இந்த நேரத்தில் என் கணவர் அசைவ உணவுடன் வந்து சேர்ந்தார். அவர் வந்தவுடன் அவரிடத்தில் அவரது தாயாரின் மறைவு பற்றிக் கேட்டால் நான் மிகவும் கஷ்டப்படுவேன் எனவும் அந்த சோகங்களைப் பகிர்ந்து கொண்டு அவருக்கு ஆறுதல் சொல்ல தனிமை தேவைப்படும் என்பதால் தான் உணவு வாங்கச் சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.
அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்பதற்காக என்னை அவரிடத்தில் தனியாக உரையாட விட்டு விட்டு என் கணவர் சென்றது அவரது பரந்த மனப்பான்மை எவ்வளவு தூரம் இருக்கின்றது என்பதனை வெளிப்படுத்தியது.
அனைவரும் சாப்பிட அமர்ந்தோம். இது வரையில் நான் அவருக்கு உணவு பரிமாறும் பொழுது ஒரு பக்கம் உரிமையுடன் பரிமாற முடியவில்லையே என்னும் ஏக்கம் இருந்தாலும் என் கைகளால் பரிமாற முடிகின்றது என்னும் மன நிம்மதி இருக்கும்.
ஆனால் அவரது தாயாரின் மறைவு பற்றி கேட்ட காரணத்தால் நான் சந்தோஷமாக உணவு பரிமாற முடியவில்லை. இதனை என் கணவர் நன்கு உணர்ந்து கொண்டு அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறும் அதே சமயத்தில் எனக்கும் ஆறுதல் சொன்னார். ஆனால் அவர் சொன்ன விதம் என்னை நெகிழ வைத்து விட்டது.
அதாவது என்னுடைய தாயார் மறைவின் போது கூட இந்த அளவிற்கு கவலைப் படாமல் இப்போது அதிகம் கவலைப் படுவதனை சுட்டிக் காட்டி நான் என் தாயார் மீது அன்பு செலுத்தியதை விட அவரது தாயார் மீது அதிகமாக அன்பு மற்றும் பாசம் வைத்துள்ளதாகத் தெரிவித்தார். அது முற்றிலும் உண்மை என்பதை நாம் இருவரும் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது.
அவர் நம்மிடத்தில் விடைபெற்றுச் சென்ற சமயத்தில் அருகில் உள்ள ஊருக்கு பணியாற்ற வந்து விட்ட காரணத்தால் அடிக்கடி வந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டேன். வழக்கமாக அவரது வருகைக்குப் பின்னர் சில நாட்கள் தூக்கமின்றி தவிப்பேன். அவரது தாயாரின் மறைவு பற்றிக் கேட்ட காரணத்தால் அந்தக் கவலை என்னை நீண்ட நாட்கள் வாட்டியது.