முதல் சமையல்
வழக்கம் போல் அன்றைய தினம் வெள்ளிக் கிழமையன்று நான் என் தங்கையுடன் கோயிலுக்குச் சென்று விட்டு அவர் பள்ளிக்குச் சென்று விட்டார் என்பது தெரிந்தும் அவருடைய வீட்டிற்கு கோயில் பிரசாதம் கொடுப்பதற்காக முற்பகலில் சென்றேன்.
அப்போது அவரது தாயார் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவில்லை. அவரது தந்தையிடம் கேட்டதற்கு முதல் நாள் இரவு முதல் உடல் நிலை சரியில்லை என்று தெரிவித்தார்.
எனக்கு அவர் மீது மன வருத்தம். காரணம் தனது தாயார் உடல் நிலை சரியில்லாது இருப்பதை என்னிடம் சொல்லாமல் பள்ளிக்குச் சென்று விட்டார். சொல்லியிருந்தால் காலையிலேயே கோயிலுக்குச் செல்லுமுன்னர் அவருடைய தாயாரைப் பார்த்திருப்பேன்.
நான் அவரது தாயாருக்கு கோயில் பிரசாதம் கொடுத்தேன். அதற்கு அவரது தாயார் தாம் குளிக்காமல் இருப்பதாகவும் அவரது தந்தைக்குக் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டபடியால் அவரது தந்தைக்குப் பிரசாதம் கொடுத்தேன். பெற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் நான் அவரது தாயாரிடம் தாங்கள் குளிக்காவிட்டாலும் பரவாயில்லை சீக்கிரம் குணமாக வேண்டி நான் பூசி விடுகிறேன் என்று சொல்லி விபூதி குங்குமத்தை அவரது நெற்றியில் வைத்த சமயம் நான் தான் உனக்கு இவ்வாறு செய்ய வேண்டும். இன்று என்னால் முடியவில்லை என்று சொல்லி வருத்தப்பட்டார்.
மதிய உணவிற்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு அவரது தந்தை ஹோட்டலிலிருந்து கொண்டு வரலாம் என்று இருக்கின்றேன் என்று சொன்னார். அதற்கு நான் இன்று என் தாயாரிடம் சொல்லி உங்களுக்கும் சேர்த்து சமைக்க ஏற்பாடு செய்கின்றேன் என்று சொன்னேன். அதற்கு அவரது தாயார் உடன்படவில்லை.
எனவே நான் அவர் வீட்டில் சமைக்க அனுமதி கேட்டேன். அதற்கு அவரது தாயார் உனக்கு சமைக்கத் தெரியுமா என்று கேட்டார். நானும் தெரியும் என்று சொன்னேன்.
இதற்கிடையில் நான் என்னுடைய வீட்டிற்குச் சென்று என்னுடைய தாயாரிடம் விவரம் தெரிவித்தேன்.
உடனே என்னுடைய தாயார் அவரது வீட்டிற்குச் சென்று அவருடைய தாயாரிடம் நான் சமைப்பதற்கு அனுமதி பெற்று தந்தார்கள்.
மிக மிக சந்தோஷமாக அவரது வீட்டில் முதல் முறையாக நான் என் கையால் சமைத்து அவரது தாயாருக்கும் தந்தைக்கும் பரிமாறினேன். அவரது தந்தை என்னுடைய சமையல் பற்றி எதுவும் சொல்லவில்லை.
அவரது தாயார் என்னுடைய கை பக்குவம் நன்றாக இருப்பதாகவும் வாய்க்கு ருசியாக தனக்குப் பிடித்தவாறு சமைத்துள்ளதாகவும் உடல் நிலை சரியில்லாத போதும் கூட விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருந்ததாகவும் சொல்லி பாராட்டினார்கள். பின்னர் நான் வீட்டிற்கு வந்து விட்டேன்.
அவர் தன்னுடைய தாயாரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிக்கு அருகிலேயே பகல் உணவு சாப்பிட்டு விட்டு மாலையில் வீடு திரும்பினார்.
சமையல் செய்து சாப்பாடு இருந்ததைக் கண்டு அவருடைய தாயாரிடம் உடல் நிலை சரியாகி விட்டதா எப்படி சமைக்க முடிந்தது என்று விவரம் கேட்டமைக்கு நான் வீட்டிற்கு வந்து சமைத்த விவரத்தையும் ருசித்து சாப்பிட்ட விதத்தையும் மிக்க சந்தோஷமாக கூறியுள்ளார்கள். அத்தனைக்கும் மேலாக நான் அவரது தாயாருக்கு விபூதி குங்குமம் பூசிவிட்ட பின்னர் அவரது கண்களில் விழுந்து விடக் கூடாது என்பதற்காக அவரது கண்களை என் கரங்களால் மூடிக்கொண்டு ஊதி விட்டதை சொல்லி நான் மிகவும் அக்கரையுடன் இருப்பதாக கூறியிருக்கின்றார். அது கேட்ட அவருக்கு மிக்க மகிழ்ச்சி.
மாலையில் நமது தோழியர் மற்றும் தோழர்கள் அனைவரும் உள்ள சமயத்தில் என்னிடம் முதன் முறையாக என்னுடைய வீட்டில் சமைத்ததற்கு நன்றியினையும் தன்னுடைய தாயார் என்னுடைய சமையலைப் பாராட்டிய விதத்தையும் அவர் மீது காட்டிய அக்கரையினையும் சந்தோஷமாக அனைவருடன் பகிர்ந்து கொண்டார்.
எது எப்படியோ அவரது தாயார் எனக்கு நெற்றியில் தமது கரங்களால் திலகமிட விரும்புகின்றார் என்பதனை அறிந்து கொண்ட எனக்கு மிக்க சந்தோஷம். அதனை விட அதிக சந்தோஷம் அவரது தாயார் என்னுடைய சமையலைப் பாராட்டியது.