எதிர் பார்த்துக் காத்திருத்தல்
ஒரு குறிப்பிட்ட விநாயகர் விக்ரஹத்தை வழிபட்டு அரசாங்க வேலை கிடைத்து வெளியூர் சென்ற அவர் விநாயக சதுர்த்தி நாளன்று கூட அந்த விநாயகர் விக்ரஹத்தை வழிபட வரவில்லை என்றால் கட்டாயம் மற்ற நாட்களில் வருவதற்கு சந்தர்ப்பமே இல்லை என்பதனை நான் நன்றாக தெரிந்து கொண்டேன்.
அடுத்த பண்டிகை தீபாவளி தான். அவரை நான் தீபாவளிக்குத் தான் எதிர்பார்க்க முடியும். எனவே அது வரையில் பொறுமையாக எதனையும் வெளிக்காட்டாமல் காத்திருப்பது தான் நல்லது என்று முடிவெடுத்து விட்டேன்.
எது நடந்தாலும் எதனையும் கண்டு கொள்ளாமல் நான் உண்டு என் வேலை உண்டு என்று இருந்து வந்தேன். என்னுடைய தாயாரோ அல்லது தங்கையோ அல்லது குடும்பத்தாரோ என்ன சொல்கின்றார்களோ அவற்றை மறுபேச்சு பேசாமல் அப்படியே செய்ததோடு அவர்களின் கண்ணெதிரிலேயே இருந்து வந்தேன்.
பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டு விட்டது என்று நினைப்பது போல இப்படி எல்லாம் இருந்து விட்டால் நான் அவரை மறந்து விட்டது போல அனைவரும் எண்ணிக் கொள்வார்கள் என்னும் எண்ணம் என் மனதில்.
அது சரியோ தவறோ சில நாட்களுக்கு நான் சுதந்திரப் பறவையாக என் வீட்டிலோ அல்லது யாரேனும் உறவினர்கள் வீட்டிலோ சிறைப் பட்டுக் கிடக்காமல் சுதந்திரமாக இருக்க முடிந்தது.
நான் பழைய வீட்டிற்குச் சென்ற சமயம் அவரது குடும்பத்தார் காம்பவுண்ட் வீட்டினைக் காலி செய்து விட்டு வேறு வீட்டிற்கு பால் காய்ச்சி குடியேறி அனைத்து சாமான்களையும் இடமாற்றம் செய்து கொண்டிருந்தார்கள்.
அவரது தாயாரிடம் விவரம் கேட்டதற்கு புதிதாக குடியேறும் வீட்டு விலாசத்தினை தெரிவித்து அடிக்கடி வந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்.
ஏன் வீடு மாற்றுகின்றீர்கள் என்று கேட்டதற்கு உன்னையும் அவனையும் இந்த காம்பவுண்ட் திண்ணையில் சந்தோஷமாக அடிக்கடி பார்த்து விட்டு இப்போது நீங்கள் இருவரும் கஷ்டப்படும் போது இந்த காம்பவுண்ட் திண்ணையைப் பார்த்தாலே எனக்கு சோகம் வந்து விடுகின்றது என்பது எனது உண்மையான காரணம் என்று சொன்னார்கள்..
என் கணவர் சொல்லும் காரணம் தொழிலையும் வாணிபத்தையும் பெருக்க வேறு குடித்தனங்கள் இல்லாத தனி வீட்டிற்குச் சென்றால் தான் நல்லது என்பது. ஆனால் அவனுடைய உதவி அல்லது அவனுடைய ஈடுபாடு இல்லாமல் அவர் நினைப்பது ஈடேறாது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.
காரணம் அவன் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டு குரங்கு பெடல் போடும் நாளிலிருந்து அவனது தந்தைக்கு தொழிலிலும் வாணிபத்திலும் முழுவதுமாக ஒத்தாசையாக இருந்து வந்துள்ளான்.
எனது குடும்பம் பண வசதியில் நல்ல முன்னேற்றம் அடைந்ததற்கு அவன் அவனது தந்தைக்கு தொழிலிலும் வாணிபத்திலும் செய்து வந்த உதவி முக்கிய பங்கு வகிக்கும். அவன் இல்லாவிட்டால் நாங்கள் இவ்வளவு தூரம் வசதியில் முன்னேறி இருக்க முடியாது என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அவனது அருமை இப்போது தான் எனது வீட்டுக் காரருக்குத் தெரிகின்றது என்று சொன்னார்கள்.
என்றைக்காவது ஒருநாள் திண்ணையில் எங்களைப் பார்த்த அவரது தாயாருக்கே இந்த அளவிற்கு அந்த திண்ணை வருத்தப்பட வைத்ததென்றால் என் நிலை எப்படியிருக்கும்?
புதிதாக நான் குடியேறியவுடன் நான் முதன் முதலாக அவரைப் பற்றி அறிந்து கொண்டது, முதன் முதலாக அவரது விருப்பத்தை அவர் சொல்லக் கேட்டது, நான் அவருடன் முதன் முதலாக பேசியது, அவருடன் சேர்ந்து பல விளையாட்டுக்கள் விளையாடியது, அவர் இல்லாத போது தனிமையில் தவித்தது, முதன் முறையாக அவருடைய தாயாருடன் கோயிலுக்குச் சென்று வந்தது, முதன் முறையாக அவருடைய தாயார் என்னை மருமகளாக அடைய வேண்டும் என்னும் ஆசையினை வெளிப்படுத்தியது மற்றும் முதன் முதலாக அவருடைய வீட்டில் நான் சமைத்து பரிமாறியது என என் நினைவுகள் என்னையே வாட்டுகின்றன.
அதே சமயம் நான் என் குடும்பத்தாருடன் சேர்ந்து உல்லாசப் பயணம் மற்றும் புனித யாத்திரை மேற்கொண்ட சமயம் என்னை அவரது தாயார் கவனித்துக் கொண்ட விதம் இவற்றை எல்லாம் நான் நினைத்துப் பார்த்தால் நான் தொடர்ந்து பல நாட்கள் அழுது கொண்டு தான் இருப்பேன் இது தான் எனது உண்மையான நிலை.
நான் மீண்டும் வீட்டிற்குத் திரும்பி விட்டேன். இதுவரையில் அவரை மாத்திரம் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது அவரது தாயார் நம்மை நினைத்து வருத்தப் படுவதை அறிந்த பின்னர் இருவரையும் நினைத்து நான் வருத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றேன்.
தீபாவளிப் பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்தது. எனது வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி கடைத் தெருவுக்கு சென்று வந்து கொண்டிருந்தார்கள். கட்டாயத்தின் பேரில் நானும் அவ்வப் போது அவர்களுடன் சென்று வந்த சமயம் நான் அவருடன் செல்லும் சமயம் இருந்த சந்தோஷம் இல்லை.
அப்போதும் அவரது நினைப்பு தான். அவருடன் வந்திருந்தால் இந்த நேரத்தில் குளிர்பானம் வாங்கிக் கொடுத்து இருப்பார். எனக்குப் பிடித்த இந்த நொருக்குத் தீனி வாங்கிக் கொடுத்திருப்பார். இந்த நேரத்தில் டிபன் சாப்பிட்டு முடித்திருப்போம். இந்த இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்திருப்போம் என்று தான் என் யோசனை சென்றதே ஒழிய நடப்பு சம்பவங்ளை எண்ணி ச்நதோஷப்பட என்னால் முடியவில்லை.
அனைவரும் தீபாவளிக்கு இத்தனை நாட்கள் உள்ளது என்று கணக்குப் போட்டு நாட்கள் குறைவதை எண்ணி சந்தோஷப் பட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் நான் தீபாவளிக்கு அவர் ஒன்றிரண்டு நாட்கள் முன்னதாக வந்து விடுவார் என்று நான் அவரைக் காணப் போகும் நாட்களை கணக்குப் போட்டு சந்தோஷப் பட்டுக் கொண்டிருந்தேன். அனைவரும் தீபாவளி நாளை வைத்து கணக்கு போடுவதை விட நான் அவரைக் காணப் போகும் நாட்களை வைத்துக் கணக்குப் போடுவதால் என் கணக்குப் படி ஒன்றிரண்டு நாடகள் குறைவாகவே வரும்.
ஓவ்வொரு பகலும் ஓவ்வொரு இரவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு விநாடியும் அவரை எதிர்பார்த்து நான் ஏங்கி தவித்துக் கொண்டு இருந்தேன்.