அடிக்கடி வருகைகளைக் குறைத்தல்
எனது மருமகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவ மனையில் சேர்த்து மருத்துவ மனைக்கும் வீட்டுக்குமாக தொடர்ந்து ஒரு பத்து பதினைந்து நாட்கள் அலைந்து கொண்டிருந்த நேரத்தில் மருத்துவர்கள் ஒரு வாரத்தில் குழந்தை பிறந்து விடும் எனச் சொல்லிக் கொண்டே வந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர் எனது இல்லத்திற்கு வருகை தந்தார்.
அவர் எனது இல்லத்திற்கு வந்தது தெரிந்தவுடன் என் மருமகள் கட்டாயம் அவரை மருத்துவ மனைக்கு அழைத்து வரவேண்டும் எனவும் அவர் வந்து என் மருமகளைப் பார்த்தால் மருமகள் வயிற்றில் உள்ள குழந்தை அவரைப் பார்க்க அவளது கருப்பையிலிருந்து இந்த பூவுலகிற்கு வந்து விடும் எனவும் சொல்லி வரவழைத்தாள். நான் அவருடன் மருத்துவ மனைக்குச் சென்று என் மருமகளிடத்தில் பேசிக் கொண்டிருக்கும் சமயம் அவர் சொன்ன சில விஷயங்களை உன்னிப்பாக கேட்டுக் கொண்டு அதனை என் மருமகள் உடனே பின்பற்றினாள்.
என் மருகளின் நம்பிக்கை வீண் போகவில்லை. அவள் சொன்னவாறே அவர் மருத்துவ மனைக்கு வந்து என் மருமகளைப் பார்த்தவுடன் அன்றைய தினமே சுகப் பிரசவம் நடந்து முடிந்தது. இதன் மூலம் என்னை விட என் மருமகள் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பது தெளிவாகி விட்டது. இருந்தாலும் பிரசவம் முடிந்தவுடன் மயக்க நிலையில் இருந்த என் மருமகளுடன் பேச முடியாமல் அவர் திரும்பி விட்டார் என்பதனை அறிந்து கொண்ட என் மருமகள் அவரை கட்டாயம் காண வேண்டும் என துடித்துக் கொண்டிருந்தாள்.
அவர் எப்போது வருவாரோ என நான் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். ஆனால் என் மருமகள் அவர் வந்து அவளைச் சந்திக்க வேண்டும் என நினைத்தாலே குறைந்த கால இடைவெளியில் எனது இல்லத்திற்கு வருகின்றார். என் மருமகள் எதிர்பார்த்தபடி பிரசவத்திற்கு மறு நாள் காலையில் அவர் மீண்டும் மருத்துவ மனைக்கு வருகை தந்தார்.
என் மருமகள் என்னை விட அதிகம் சந்தோஷப் பட்டாள். ஆரம்பத்தில் முதல் பத்து பதினைந்து நிமிடங்கள் வரையில் ஒருவரை ஒருவர் குசலம் விசாரித்துக் கொண்டனர். அதன் பின்னர் அவரிடத்தில் என் மருமகளின் வளர்ப்புத் தாயார் இளமை திரும்பி புள்ளிமான் போல துள்ளிக் குதித்துக் கொண்டிருப்பதாகவும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தாள். அவர் என்னிடம் மருமகளின் தாயார் எங்கே எனக் கேட்ட சமயம் வீட்டிற்குச் சென்றுள்ளதாகத் தெரிவித்தேன்.
மருத்துவ மனையில் சேர்ந்ததிலிருந்து மனச் சோர்வுடனும் எதிர்பார்ப்புடனும் பயத்துடனும் இருந்த வளர்ப்புத் தாயார் நானும் அவரும் என் மருமகளும் சேர்ந்து ஒரு டம்ளர் காபியினை பருகியதைப் பார்த்தவுடன் இந்த டபுள் ஸ்பெஷல் காபி எங்கும் கிடைக்காது எனச் சொல்லி இந்த டபுள் ஸ்பெஷல் காபி குடித்ததனால் தான் சுகப் பிரசவம் நடந்ததாக சொல்லி மிகவும் சந்தோஷப் பட்டார்கள் எனத் தெரிவித்தாள்.
அந்தக் காபியில் அன்பு ஆசை பாசம் நேசம் கருணை காதல் நம்பிக்கை என அனைத்தும் ஒன்றாக கலந்து இருந்த காரணத்தால் தான் என் மருமகள் சொன்ன ஆணித்தரமான வார்த்தைகள் உண்மையாகின என அவரது வளர்ப்புத் தாயார் சொன்னதாகத் தெரிவித்தாள்.
என் மருமகள் அவரிடத்தில் பத்து நாட்களாக இதே கட்டிலில் படுத்துக் கொண்டு எப்போது பார்த்தாலும் மருந்து மாத்திரை ஊசி என இருந்தமையாலும் சாப்பிடவே பிடிக்காமல் கட்டாயத்தின் பேரில் சாப்பிட்டுக் கொண்டு இருந்ததாலும் சலித்து விட்டது எனச் சொல்லி விட்டு இந்த துன்பங்களிலிருந்து அவள் விடு படுவதற்கு நானும் அவரும் காதலித்த சமயம் நடந்த நமது மலரும் நினைவுகளை சொல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொண்டாள்.
அவ்வாறு அவள் கேட்ட சமயம் மருத்துவ மனையில் அவரும் நானும் என் மருமகளும் பிறந்த குழந்தையும் மட்டுமே இருந்தோம். வேறு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் இருவரும் நாம் காதலிக்க ஆரம்பித்தது முதல் காதலில் தோல்வி ஏற்பட்டு பிரிந்தது வரையில் சந்தோஷமான நினைவுகளை பரிமாறிக் கொண்டோம். எனது திருமணத்திற்குப் பின்னர் இருவரும் அன்பு குறையாமல் அதே நேரத்தில் எல்லை தாண்டாமல் நடந்து கொண்டது அனைத்தையும் சொல்லச் சொல்ல அவள் மிக்க உற்சாகத்துடன் கேட்டு மிகவும் சந்தோஷப் பட்டாள்.
நான் என் மருமகளிடத்தில் அவருக்கு வெற்றிலை பாக்கு பீடா பீடி சிகரட் மது போன்ற எந்த பழக்கங்களும் இல்லை என்பதற்கான காரணத்தைத் தெரிவித்தேன். எனது விரலை அவர் தொட்டவுடன் என்னைத் தொட்ட அந்த விரலால் பிறர் தவறு எனச் சொல்லும் எந்தப் பொருளையும் தொட மாட்டேன் எனச் சத்தியம் செய்து கொடுத்து அதனை தொடர்ந்து கடைப் பிடித்து வருகின்றார். நல்ல வேளையாக என்னைத் தொட்ட விரல்களால் வேறு எந்தப் பெண்ணையும் தொட மாட்டேன் என்று சத்தியம் செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால் இவரை காவிக் கோலத்தில் ஜடா முடியுடன் பிரம்மச்சாரியாகத் தான் வாழ்நாள் முழுக்க நான் பார்த்திருக்க முடியும் எனத் தெரிவித்தேன்.
எனக்கு அவர் சத்தியம் செய்து கொடுக்காமல் இருந்திருந்தால் என்னைப் பிரிந்த சோகத்தில் அவர் தாடி வளர்த்துக் கொண்டு மதுவினைக் குடித்து தவறான பாதைக்குப் போயிருப்பார். அவர் எனக்குச் செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக அவர் எந்த விதமான கெட்ட பழக்கங்களும் இல்லாமல் நல்லவராக இருக்கின்றார். அவர் உயிரோடு இருக்கின்றார் என்னும் காரணத்தால் நானும் உயிரோடு இருக்கின்றேன் இல்லையெனில் நான் எப்போதோ போட்டோவுக்கு மாலை போடும் இடத்திற்கு போட்டோவுக்குள் வந்திருப்பேன் எனத் தெரிவித்தேன்.
எனக்குத் திருமணம் ஆன விவரம் தெரியாமல் என்னைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டு அழைத்து வந்து புது வாழ்க்கையினை ஆரம்பிக்க வீடு பார்த்துக் கொண்டு வந்த சமயம் அவரை நான் பார்த்து கண்ணீர் சிந்தி அழுது கொண்டு வரவழைத்தேன். அவர் என்னை திரும்பிக் கூட பார்க்க முடியாமல் கண் கலங்கியவாறு இருந்த சமயம் இந்த ஆலிலைக் கிருஷ்ணன் டாலரை மட்டும் பார்க்குமாறு சொன்ன பின்னர் தான் என்னை திரும்பிப் பார்த்தார் எனத் தெரிவித்தேன். அவர் என்னைச் சந்தித்த சமயம் வந்த எனது முதலாவது பிறந்த நாளுக்கு பரிசளித்தது தங்கத்தால் ஆன இந்த ஆலிலைக் கிருஷ்ணன் டாலர் என்பதனையும் தெரிவித்தேன்.
அதன் பின்னர் எனக்காக தீபாவளிக்கு வாங்கிய புத்தாடைகளை அடுத்த முறை வரும் சமயம் கொண்டு வந்து கொடுத்ததாகவும் திருமணத்திற்குப் பின்னர் கூட பாவாடை தாவணி உடுத்தி சந்தோஷப் பட்டதாகவும் தெரிவித்தேன்.
நான் இவரைத் திருமணம் செய்து கொள்ள இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்திருந்தால் என்னைப் பெண் பார்க்க வரும் சமயம் நான் அனைவருக்கும் காபி கொடுத்திருப்பேன். ஆனால் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.
ஆனால் இவருக்கு என் கணவரின் உறவுக் காரப் பெண்ணைக் காட்ட நான் என் கையால் காபி போட்டுக் கொடுக்கும் அவலம் எனக்கு ஏற்பட்டதாவும் அச்சமயம் உதட்டில் புன்னகையும் உள்ளத்தில் அழுகையும் இருந்ததாகவும் தெரிவித்தேன்.
எனக்குத் திருமணமான புதிதில் அவர் வந்த சமயம் திரும்பிப் பார்க்காத எனது கணவர் தனது உறவுக் காரப் பெண்ணை அவளுக்கே தெரியாமல் நமது வீட்டிற்கு வரவழைத்து நான் காபி தயாரித்து அந்தப் பெண்ணிடம் கொடுத்து அவரை குடிக்க வைத்து முடித்த பின்னர் இந்தப் பெண்ணின் ஜாதகம் அவரது ஜாதகத்துடன் பொருந்தி இருப்பதன் காரணமாக திருமணத்திற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் அந்தப் பெண்ணை பெற்றோர் காண்பிக்கும் சமயம் வேண்டாமெனச் சொல்லி விடுங்கள் எனவும் அறிவுரை வழங்கினார் எனவும் அந்த அளவிற்கு அவர் மேல் பாசம் வளர்ந்து விட்டது எனவும் அந்த சம்பவத்திற்குப் பின்னர் இருவரும் ஒன்று கூடிப் பேச ஆரம்பித்து விட்ட காரணத்தால் நான் அவருடன் பேசும் நேரம் குறைந்து விட்டது எனவும் சொன்னேன்.
அவரது திருமணத்திற்கு கட்டாயம் செல்ல வேண்டும் எனச் சொன்னார். நான் அமர வேண்டிய இடத்தில் வேறு ஒரு பெண் அமர்வதைக் காண என்னால் முடியாது என்பதற்காக மறுத்து விட்டேன். அதன் பின்னர் இந்த ஊரில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்தார். ஆனால் அவருடைய பெண் தோழிகள் அனைவரிடத்திலும் நம் இருவருக்குமிடையே இருந்த காதல் பற்றி அவர் சொல்லக் கேட்டு அவர்களில் இரண்டு பெண்கள் இவரைக் காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு பெண் எனது வீட்டிற்கே வந்து என்னிடம் சிபாரிசு செய்யச் சொன்னாள். என்னை விட அதிகம் படித்த என்னை விட அழகான அவரைப் போலவே ஆயிரக் கணக்கில் சம்பளம் வாங்குகின்ற பெண்கள் இவரைத் திருமணம் செய்து கொள்ள முன் வந்தனர். இந்த காரணங்களால் வரவேற்பு நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ளவில்லை எனச் சொன்னேன்.
அலுவலகத்தில் இவருடன் பழகியவர்களில் ஒரு பெண் இவருக்கு உடல் நிலை சரியில்லாத போது இவருக்கு டாக்டர் கொடுக்கும் மாத்திரையினால் இவருக்கு எதுவும் ஆகி விடக் கூடாது அவ்வாறு ஆகி விட்டால் அதனை அவளால் தாங்க முடியாது என்பதற்காக நோயே இல்லாமல் இவருக்கு கொடுத்த மாத்திரைகளைச் சாப்பிடுவாள். வாரா வாரம் ஞாயிற்றுக் கிழமையன்று சமையல் குறிப்பினை பொதிதை தொலைக் காட்சியில் தொகுத்து வழங்கும் அளவிற்கு அழகாகவும் படித்தவளாகவும் இருப்பாள். அந்தப் பெண் தான் என் இல்லத்திற்கு மல்லிகைப் பூவும் அல்வாவும் வாங்கி வந்து என்னிடத்தில் இவரைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொல்ல வைக்குமாறு கேட்டுக் கொண்டாள் எனச் சொன்னேன்.
என்னை மணக்க முடியவில்லை என்றால் யாரையும் மணக்க மாட்டேன் என்று சொல்லி வந்தமையால் இவரது தாயார் என்னுடைய இல்லத்திற்கு வந்து கேட்டுக் கொண்ட பின்னர் என்னுடைய வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். திருமணத்திற்குப் பின்னர் அவரது மனைவிக்கு நமது காதல் விஷயம் தெரிந்தவுடன் என்னைப் பார்த்தே தீர வேண்டும் எனச் சொல்லி எனது வீட்டிற்கு அழைத்து வந்து என்னுடன் பேசி விட்டுச் சென்ற பின்னர் குடும்பத்தை வெளியூருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு பிடிவாதமாக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. எனவே தான் நான் அவருடைய இல்லத்திற்கு எந்த காலத்திலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டது கிடையாது எனச் சொன்னேன்.
அவருடைய இல்லத்தில் எனக்கு மதிப்பு மரியாதை இருக்கின்றதோ இல்லையோ உனது மாமனார் அவருக்கு நல்ல மரியாதை கொடுத்துக் கொண்டு இருந்தார். முதலாவது மகளின் திருமணத்தின் போது இவரது ஆலோசனைகளின் படி வரன் தேடி அது படியே நடந்தது. முதல் மகன் காதல் வயப்பட்ட சமயம் அவனது மாமனார் இவருடைய நண்பர் என்பதால் முதல் மகனுக்கே தெரியாமல் நான் விதவை ஆன நிலையில் தந்தை செய்ய வேண்டிய நற்செயல்கள் அனைத்தையும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக செய்து திருமணத்தைப் பேசி முடித்தார். அது அவனுக்கே தெரியாது. இரண்டாவது மகனின் திருமணம் நடைபெற இவரது ஆன்மீக ஆலோசனைகள் தான் உதவின. உனக்கு குழந்தை பிறந்த ரகசியம் நேற்று நீ அறிந்து கொண்டாய் எனச் சொன்னேன்.
இவ்வாறு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கையில் என் மருமகளின் வளர்ப்புத் தாயார் கையில் சாப்பாட்டுக் கேரியருடன் மருத்துவ மனை வந்தடைந்தார்கள். அப்போது என் மருமகள் அவரிடத்தில் புது வீடு கட்டி முடிந்தவுடன் நடைபெற இருக்கின்ற கிரஹப் பிரவேசத்தின் போது கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாள்.
என் மருமகளின் வளர்ப்புத் தாயார் அவரிடம் நீங்கள் வரும் சமயம் நாம் அனைவரும் நேரம் போவது தெரியாமல் ஜாலியாக மனம் விட்டு பேசிக் கொண்டே இருக்கலாம் எனவும் எங்கள் வீட்டில் தனியாக அறை ஒதுக்கிக் கொடுக்கப் போவதாகவும தெரிவித்தார்கள். மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் அவர் நம்மிடம் விடை பெற்றார். நான் அவரிடத்தில் மீண்டும் எப்போது வருவீர்கள் எனக் கேட்டதற்கு அவரது வருகை குறையும் எனச் சொன்னார். அதனைக் கேட்ட எனக்கு அவரை இழக்கப் போகின்றோம் என்பது போல இருந்தது.
எனவே அவர் புறப்பட்டவுடன் அவர் கூடவே வெளியில் சென்றேன். அவரும் நானும் ஒரு ஹோட்டலுக்குச் சென்று சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே நீண்ட நேரம் உரையாடினோம். அப்போது நான் அவரிடத்தில் இனிமேல் அவரது வருகை முன்பு போலவே இருக்க வேண்டும் எனக் கேட்டதற்கு வீட்டில் காபி குடித்ததைப் பார்த்தார்கள். ரொம்ப ஸ்பெஷல் எனச் சொன்னதைக் கேட்டவர்கள் மருத்துவ மனையில் அவரும் நானும் என் மருமகளும் ஒரே டம்ளர் காபியினைப் பருகியதைப் பார்த்தவுடன் இது டபுள் ஸ்பெஷல் எனச் சொன்னதை சுட்டிக் காட்டி இனிமேல் அடிக்கடி வீட்டுக்கு வந்தால் பிரச்சினை வேறு மாதிரியாக இருக்கும். எனவே தான் வருகை குறையும் எனச் சொன்னதாகத் தெரிவித்தார்.
என்னைப் பிரிய மனமில்லாமல் அவரும் அவரை வழியனுப்ப மனம் இல்லாமல் நானும் விடை பெற்றோம். வீடு கட்டி முடித்து கிரஹப் பிரவேசம் நெருங்கி விட்டது. அவரை அழைப்பார்கள் என எதிர் பார்த்தேன். என் வாரிசுகள் மறந்து விட்டார்கள். அருமை மருமகள் கூட ஞாபகப் படுத்தவில்லை. அந்த வீட்டின் விலாசமும் அவருக்குத் தெரியாது.
எனவே இரண்டு வருடங்களுக்குப் பின்னர் என்னை முதலாவது மகன் வீட்டிற்கு வந்து சந்தித்தார். நாம் இருவரும் தனிமையில் மனம் விட்டுப் பேச முடியவில்லை. அவரைக் காண முடியாமல் நான் தவிக்கின்றேன். தவித்துக் கொண்டிருக்கின்றேன். முன்பு போல நான் கண்ணீர் சிந்தி அழ முடியவில்லை. எப்போதும் என்னைச் சுற்றி குடும்ப உறுப்பினர்கள்.
இதயம் எங்கிக் கொண்டிருக்கின்றது அவரைக் காண்பதற்கு. இரவுகள் முடிந்து கொண்டிருக்கின்றது அவரைக் காண முடியாமல்.