கோயில் பிரசாதங்கள் விநியோகம்
மூன்று நாட்கள் என திட்டமிட்டு நான்கு நாட்கள் சென்று வந்த புனித யாத்திரையின் போது கோயில்களிலிருந்து பெறப்பட்ட அல்லது வாங்கப்பட்ட பிரசாதங்கள் கடவுள் படங்கள் மற்றும் பரிசுப் பொருட்களை உறவினருக்கும் சுற்றத்தினருக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து முடித்தோம்.
மாலையில் காம்பவுண்டில் உள்ள தோழர்கள் மற்றும் தோழியர் அனைவரும் ஒன்று கூடியவுடன் நானும் அவரும் சேர்ந்து பிரசாதங்கள் அனைவருக்கும் கொடுத்து விட்டு திருப்பதியிலிருந்து வாங்கி வந்த கருப்பு கயிறு மற்றும் சிகப்பு கயிறுகளை கொடுத்து முடித்தோம். எனது தோழியருக்கு நான் என் கைகளால் சிகப்பு கயிற்றினை மணிக்கட்டுகளில் கட்டி விட்டேன்.
என்னிடத்தில் உள்ள பழக்கம் என்னவெனில் யாராக இருந்தாலும் சரி. சிரித்துக் கொண்டே கேட்டால் எல்லாவற்றையும் சொல்லி விடுவேன். எதனை சொல்ல வேண்டும் எதனை மறைக்க வேண்டும் என்பதனை சிந்திக்க மாட்டேன்.
காம்பவுண்டில் இருக்கும் தோழியர் அனைவரும் புனித யாத்திரையில் என்ன நடந்தது என்று கேட்டு என்னை துளைத்து எடுத்தனர்.
அதற்கு நான் முதல் நாளன்று வாகனத்தில் ஏறியதிலிருந்து கடைசி நாளன்று வாகனத்திலிருந்து இறங்கும் வரை அவரது தாயார் என்னை அவர் அருகிலேயே அமர வைத்துக் கொண்டார்கள் பத்திரமாக பார்த்துக் கொண்டார்கள் என்று சொல்லி புனித யாத்திரையின் போது நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் எதனையும் மறைக்காமல் சொல்லி விட்டேன்.
அதனைக் கேட்ட தோழியர் உன்னுடைய தூண்டுதலின் பேரில் தான் அவன் கடவுள் பக்திமானாக மாறி மொட்டை போடுமளவிற்கு வந்து விட்டானா என்று கிண்டல் செய்தனர்.
அதற்கு நான் அவரது தாயார் கூட கோயில் என்றாலே விலகி ஓடும் அவரை ஒரே நாளில் இவ்வளவு பக்திமானாக மாற்றியதற்கு எனக்கு நன்றி சொல்லி என்னை பாராட்டினார்கள் என்று சொன்னேன்.
அனைத்தையும் கேட்ட தோழியர் அனைவரும் மாமியார் ரெடி. மாப்பிள்ளை ரெடியா என்று கேட்டனர். அதற்கு அவர் மாப்பிள்ளை எப்போதும் ரெடி தான் மணப்பெண் ரெடியா என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
ஒரு தோழி அவரிடம் தில்லிருக்கா என்று கேட்டார். எனக்கு அவர் என்ன கேட்கிறார் என்று தெரியவில்லை.
அதற்கு அவர் தில் இருக்கின்றது என்றார். நான் உடனே தில் என்றால் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர் தில் என்றால் இந்தி மொழியில் இதயம் என்று பொருள் என்று சொல்லி வி;ட்டு இவளுடைய இதயம் என்னிடத்தில் பத்திரமாக இருக்கின்றது அதே போல என்னுடைய இதயமும் அவளிடத்தில் பத்திரமாக இருக்கின்றது என்று சொன்னார்.
உடனே அந்த தோழி நான் அந்த இந்தி தில்லை கேட்கவில்லை. தில் என்றால் சென்னை பாஷையில் தெம்பு அல்லது வீரம் என்று பொருள். அது இருக்கா என்று கேட்டேன் என்று விளக்கினார். அதற்கு அவர் இந்த விஷயத்தில் என்னிடத்தில் நிறைய தில் இருக்கின்றது அதே போல அவளுடைய தில்லும் என்னிடத்தில் இருக்கின்றது என்று சொல்லி அசத்தி விட்டார்.
உடனே அந்த தோழி உன்னுடைய அம்மாவிற்கு தில்லாக்கிக் கொள்ளும் திறன் இருக்கின்றதா எனக் கேட்டது அவருக்கும் புரியவில்லை எனக்கும் புரியவில்லை. மீண்டும அவர் விளக்கம் கேட்க இப்போது நான் கேட்ட "DIL" means Daughter in law. இவளை மருமகளாக ஆக்கிக் கொள்ளும் திறன் அவருடைய அம்மாவிற்கு இருக்கின்றதா என்று கேட்டார். அதற்கு அவர் மனதார என்னை வருங்கால மருமகளாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள் அதே போலத்தான் நடத்தினார்கள் என்று சந்தோஷத்துடன் தெரிவித்தார்.
அந்த சமயம் தோழியர் அனைவரும் இனிமேல் உன்னுடன் கல்லூரியில் படிக்கும் பெண்களைப் பொருத்த வரை நீ சைட் அடிக்க முடியாத வேஸ்ட். ஏறக்குறைய எங்களையும் கூட சைட் அடிக்க முடியாத நீ வேஸ்ட் தான் என்று அவரிடம் கலாட்டா செய்தார்கள்.
அப்போது அவர் என்னிடம் எனன இவர்களை சைட் அடிக்கவா எனக் கேட்டார். அதற்கு நான் நீங்கள் யாரை வேண்டுமானாலும் சைட் அடித்துக் கொள்ளுங்கள் ஆனால் நீங்கள் யாரையும் சைட் அடிப்பதற்கு முன்னால் என் முன்னிலையில் உங்கள் தாயாரிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினேன்.
எனது குடும்பத்தாரும் அவரது குடும்பத்தாரும் முதலில் சென்று வந்த உல்லாசப் பயணத்தின் போதும் இரண்டாவதாக சென்று வந்த நான்கு நாட்கள் புனித யாத்திரையின் போதும் நள்றாகப் பழகிவிட்ட காரணத்தால் அவரது தந்தை எங்கள் வீட்டிற்குள்ளும் எனது தாயார் மற்றும் தங்கை குடும்பத்தார் அவரது வீட்டிற்குள்ளும் வந்து செல்லும் பழக்கம் ஏற்பட்டு விட்டது.
பல நேரங்களில் அவரது தந்தை என் வீட்டிற்கு வந்து என் தாயாருடனும் என் தங்கை குடும்பத்தாருடனும் பேசிக் கொண்டிருப்பது வாடிக்கையாகி விட்டது.
ஆனால் அவரது தாயார் எங்கள் வீட்டிற்குள் வந்து பேசுவதை விட என்னை தன் வீட்டிற்குள் அழைத்துச் சென்று பேசி வருவதில் தான் சந்தோஷமடைந்தார்கள். பல முறை யாரிடமாவது சொல்லி அனுப்பி என்னை வரவழைத்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள. பல சமயங்களில் நான் அவருக்கு சமையலில் உதவியாக இருப்பேன்.
அவர் கல்லூரிக்குச் சென்றுள்ள சமயத்திலும் அவரது தந்தை சொன்ன வேலைகளுக்காக வெளியில் சென்றிருக்கும் சமயத்திலும் அரவரது தாயார் என்னிடம் தனியே பேசிக் கொண்டிருப்பார்கள். அதே போல் அவரது தந்தை வீட்டில் இருக்கும் சமயங்களில் என்னுடன் பேச விரும்பினால் அனைவரும் கூடும் இடமான திண்ணைக்கு வந்து அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். அவரது தாயார் அவரது தந்தை இருக்கும் சமயம் அவ்வளவாக பேசியதில்லை. அதற்கான காரணம் தெரியவில்லை.