புனித யாத்திரை இரண்டாம் நாள்
நம் இரண்டு குடும்பத்தாரும் சேர்ந்து மேற்கொண்ட புனித யாத்திரையின் முதல் நாளன்று கீழ்க்காணும் இடங்களில் உள்ள புண்ணிய ஸ்தலங்களில் வழிபாடு செய்தோம்.
திண்டுக்கல்
கோட்டை மாரியம்மன்
தாடிக்கொம்பிலுள்ள பெருமாள் கோயில்
திருச்சி
ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்க நாத சுவாமி கோயில்
வெக்காளியம்மன் கோயில்
திருவானைக்காவல் சிவன் கோயில்
சமயபுரம் மாரியம்மன் கோயில்
தஞ்சாவூர்
பிரகதீஸ்வரர் ஆலயம்.
புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில்
சிவகங்கை பூங்கா (பொழுது போக்கு இடம்)
முதல் நாளன்று அனைவரும் மனமுவந்து பிரார்த்தனை மேற்கொண்ட சமயம் அவர் மாத்திரம் கோயில்களில் உள்ள சிற்பங்களையும் கலை நயங்களையும் தான் ரசித்துக் கொண்டே வந்தாரே தவிர எந்த கோயிலிலும் சரியாக கரம் கூப்பி வழிபாடு செய்யவில்லை. இதனை நான் கவனித்தேனே தவிர எதையும் அவரது தாயார் அருகில் இருந்த காரணத்தால் கேட்க முடியவில்லை.
மறு நாள் காலையில் அனைவரும் எழுவதற்கு முன்னர் அவர் எழுந்து நாம் பயணித்த வாகன ஓட்டுனரிடம் தாம் சொன்ன வேலையினை சரியாக செய்து முடித்தமைக்கு நன்றி என்று தெரிவித்துக் கொண்டு இருந்தார். எனக்கு என்னவென்று புரியவில்லை.
இரண்டாம் நாள் பயணத்திற்காக அனைவரும் வாகனத்தில் ஏறியவுடன் நாம் பயணித்த வாகனத்தின் முதல் வரிசை இருக்கை மாத்திரம் மாற்றியமைக்கப் பட்டு இருந்தது. ஒரு வரிசையில் உள்ளவர்கள் மாத்திரம் பின்பக்கம் பார்த்து அமரும் படி இருக்கையினை மாற்றியிருந்தார்கள்.
அவர் அவரது தாயாரிடம் பின்பக்கம் பார்த்துள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டால் தலைக்கு பிடிமானம் கிடைக்கும் ஒரு சிறு தலையணை வைத்துக் கொண்டால் நேற்று இரவு கழுத்து வலியால் கஷ்டப்பட்டது போல இன்று கஷ்டப்பட வேண்டியதில்லை என்று தெரிவித்தார். இது அவர் தன் தாய் மீது வைத்துள்ள அக்கரையினை வெளிப்படுத்தியது. அவரது தாயாரும் அதனை நம்பி அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு என்னை தன்னருகில் அமர வைத்துக் கொண்டார்.
இருக்கை மாற்றியமைத்த காரணத்தால் நான் அவரைக் காண முடிந்தது அவரும் என்னைக் காண முடிந்தது. இவ்வாறு இருக்கை மாற்றம் செய்யவில்லையெனில் கோயில்களில் கொடுக்கப்படும் மலர்களை அவரது தாயார் என் தலையில் சூட்டி அழகு பார்த்ததால் என்னுடைய மலர்கள் சூடிய இரட்டை சடை பின்னலைத் தான் பார்க்க முடியும். என் முகத்தை அவர் பார்க்க முடியாது. நாம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தன் தாயாரிடம் சொன்னது மெய்யல்ல என்பதனை அவர் என்னிடம் பின்னால் பேசியதிலிருந்து தெரிந்து கொண்டேன்.
இரண்டாம் நாளன்று காலையில் முதலாவாதாக சுவாமிமலை சென்று தரிசனம் செய்தோம். அப்போது தான் அவர் முதன் முதலாக இரண்டு கரங்கள் கூப்பி வழிபாடு செய்தார்.
இதனை கூர்ந்து கவனித்த அவரது தாயார் அவரிடம் என்ன என்றைக்கும் இல்லாமல் இன்று மட்டும் வாழ்க்கையில் முதல் முறையாக வழிபாடு பலமாக இருக்கின்றது என்று கேட்க நேற்று இரவு சூடம் ஏற்றி எங்கேயோ உள்ள கடவுளை நினைத்து வழிபாடு செய்தவுடன் கழுத்து வலி எந்த வித தைலமோ அல்லது மாத்திரையோ அல்லது மருந்தோ இல்லாமல் குறைந்தது கண்டு எனக்கும் கடவுள் நம்பிக்கை வந்து விட்டது. எனவே இன்று முதல் நானும் சாமி கும்பிட ஆரம்பித்து விட்டேன் என்று சொன்னார்.
உடனே அவரது தாயார் என்னிடம் இவனுக்கு கடவுள் பக்தி வர வைத்தமைக்கு உன்னைத்தான் பாராட்ட வேண்டும் என்று சொல்லி இருவருக்கும் பொட்டு வைத்து ஆசீர்வதித்தார்கள்.
நவக்கிரஹ கோயில்களுக்கு பரிகார பூஜைகள் செய்வதற்கு செல்ல வேண்டி இருப்பதால் கும்பகோணத்தில் உள்ள சில குறிப்பிட்ட கோயில்களுக்கு மாத்திரம் சென்று விரைவாக வழிபாடு செய்து விட்டு நவக்கிரஹ கோயில்களுக்கு பயணம் மேற் கொண்டோம். ஆரம்பத்தில் பட்டீஸ்வரம் துர்க்கையினை வழிபட்டோம்.
நவக்கிரஹ கோயில்களும் அவை அமைந்துள்ள இடங்களும்
சூரியன்-----சூரியனார் கோவில்
சந்திரன்-----திங்களுர்
செவ்வாய்-----வைத்தீஸ்வரன் கோவில்
புதன்-----திருவெண்காடு
குரு-----ஆலங்குடி
சுக்கிரன்-----கஞ்சனூர்
சனி-----திருநள்ளாறு
ராகு-----திருநாகேஸ்வரம்
கேது-----கீழப்பெரும்பள்ளம்
நவக்கிரஹங்கள் குடிகொண்டுள்ள கோயில்களில் வழிபாடு செய்யும் சமயம் அவர் மிகவும் பய பக்தியுடன் வழிபட்டார்.
திருநாகேஸ்வரத்தில் ராகுபகவானுக்கு பால் அபிஷேகம் செய்யும் சமயம் வெண்மையாக இருக்கும் பால் ராகுபகவான் மீது பட்டு கீழே விழும் சமயம் நீல நிறமாக மாறியதை பார்த்த அனைவருக்கும் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அந்த காட்சியைக் கண்டு அவர் மிகுந்த ஈடு பாட்டுடன் வழிபாடு மேற்கொண்டார்.
அதே சமயம் ஊதாரித் தனமாக செலவு செய்யாமல் கஞ்சனாக இருந்தால் மட்டுமே நம்மிடத்தில் பணம் சேரும் என்பதனை நாசூக்காக தெரிவிக்கவே சுக்கிரனுடைய ஸ்தலம் கஞ்சனூரில் அமைந்துள்ளது என்று வேடிக்கையாக சொல்வதை கேட்டது என்னை சிந்திக்க வைத்தது.
திருமணமாகாத என்னுடைய தங்கையின் மகள்கள் இருவரையும் திருமணஞ்சேரியிலும் திருநாகேஸ்வரத்திலும் நடைபெற்ற பூஜைகளில் பங்கு கொள்ள வைத்தமையால் பெரியவர்கள் அனைவரும் அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். நானும் அவரும் வெளியில் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தோம்.
அதன் பின்னர் அருகில் இருக்கும் வேறு கோயில்களான திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயிலுக்கும் திருமங்கலக்குடியிலுள்ள கோயிலுக்கும் மற்றும் இன்னும் சில கோயில்களுக்கும் சென்று விட்டு இரவு திருவண்ணாமலை சென்றடைந்தோம்.
நமது வாகனம் திருவண்ணாமலையில் நுழையும் சமயம் கூட்டம் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். என்னவென்று கேட்டதற்கு கிரிவலம் செல்கின்றார்கள் என்று தெரியவந்தது.
தங்கும் விடுதியை அடைந்ததும் அனைவரும் ஓய்வு எடுக்க முற்பட்டனர். ஆனால் அவர் கிரிவலம் சென்று வர ஆசைப் பட்டார். அவருக்கு துணையாக சிலரையும் சேர்த்துக் கொண்டார்.
அவர் கிரிவலம் செல்வதே என்னுடன் தனிமையில் உறவாடத் தான். நான் மட்டும் இல்லாமல் இருப்பேனா என்று நானும் உடன் புறப்பட்டேன். ஏறக்குறைய 13 கிலோ மீட்டர் தூரத்தை அவருடன் பேசிக் கொண்டே வந்து கிரிவலத்தை முடித்ததில் எனக்கு எந்த விதமான அசதியோ அல்லது களைப்போ அப்போதைக்கு தெரியவில்லை. ஆனால் என்னுடைய வாழ்நாளில் முதல் முறையாக இவ்வளவு நேரம் இவ்வளவு தூரம் தனியாக நடந்து கொண்டே அவருடன் பேசி;க் கொண்டே சென்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
நள்ளிரவுக்குப் பின்னர் கிரிவலம் சென்ற அனைவரும் திரும்ப வந்து தங்கும் விடுதியிலுள்ள அறையில் நுழையும் சமயம் அவரது தாயார் என்னை அவர் அருகில் அழைத்து படுக்க வைத்துக் கொண்டார்கள். அடிக்கடி கால்கள் அசதியாக இருக்கின்றதா எனக்கேட்டு என்னை திக்குமுக்காடச் செய்து விட்டார்கள்.
ஆனால் நான் தூக்கத்தில் என்னுடைய கால்களை அவரது தாயார் மீதும் என்னுடைய தாயார் மீதும் அடிக்கடி போட்டதால் அவர்களின் களைப்பும் நீங்கி விட்டதாக காலையில் சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.