புனித யாத்திரை முதல் நாள்.
மலைக் கோயில் மற்றும் கொடைக்கானல் மற்றும் வைகை அணைக் கட்டு ஆகிய இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலா சென்று திரும்பிய சமயம் நாம் பயணித்த வாகனம் நமது வீட்டை நெருங்கும் சமயம் இந்த சுற்றுலா முடிவுக்கு வருகின்றதே இன்னும் தொடரக் கூடாதா என்னும் நினைப்பு நம் இருவருக்கும் வந்தது.
அது சமயம் நமது எண்ணத்தை ஆழ்மனதில் உணர்ந்த அவரது தாயார் மீண்டும் ஒரு சுற்றுலா விரைவில் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் பயணிக்கும் வகையில் என்று கூறிய போது அளவிட முடியாத சந்தோஷம் நம் இருவருக்கும்.
அவரது தாயார் திடீரென இப்படிக் கூறியதற்கு காரணம் எனக்குப் புரியவில்லை. அவருக்கும் கூட தெரியாது.
நானும் அவரும் மற்றவர்களுடன் வைகை அணைக் கட்டினை சுற்றிப் பார்க்கச் சென்ற சமயம் என்னுடைய தாயார் அவரது பெற்றோரிடம் எனது தங்கையின் மகள் திருமணம் தடைப்படுவதாகவும் அதற்காக ஜோதிடர் சொன்னபடி சில கோயில்களுக்குச் சென்று வரவேண்டி இருப்பதாகவும் கூறியுள்ளார். உடனே அனைவரும் சேர்ந்து விரைவில் அது தொடர்பான பயணம் மேற்கொள்ள முடிவு செய்து உள்ளனர். அது நம் இருவருக்கும் தெரியாது.
என்னுடைய தாயாருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர். முதலாவது மகளுக்கு மிக மிக ஆடம்பரமாக திருமணம் செய்து நிறைய செலவு செய்து விட்ட படியால் வணிகத்தில் நஷ்டம் ஏற்பட்டு எனது இரண்டாவது தங்கை அதாவது என்னுடைய அக்காவை ஒருவருக்கு இரண்டாம் தாரமாக மணமுடித்து வைத்தனர்.
அதில் மூத்த தாரத்தில் திருமண வயதில் இரண்டு மகள்கள். உள்ளனர். அந்த பெண்களுக்கு பெற்ற தாய் இல்லை என்ற காரணத்தால் திருமணம் தடைபட்டு தள்ளிக் கொண்டே சென்றது. எனவே சில பரிகாரங்கள் மேற்கொள்ள வேண்டி இருந்தது. ஜோதிடர் சொன்ன அந்த பரிகாரங்களை செய்து முடிக்க நவக்கிரஹ கோயில்கள் மற்றும் இடையில் வருகின்ற முக்கியமான பிற கோயில்கள் அனைத்தையும் இரண்டு குடும்பத்தாரும் சேர்ந்து சென்று வழிபட்டு வருவதென தீர்மானித்தனர்.
அடுத்த இலைக்குப் பாயாசம் வரவில்லை என்று சொன்னால் கட்டாயம் நமக்கும் கிடைக்கும் என்பது போல நானும் அவரது குடும்பத்தாரும் மீண்டும் ஒரு புனித யாத்திரை மேற்கொள்ளும் பாக்கியம் இந்த காரணத்தால் நம் இருவருக்கும் கிடைத்தது.
அதன்படி நான் என்னுடைய தாயார் மற்றும் என் குடும்பத்தார் ஆகியோருடன் அவர் உள்பட அவரது குடும்பத்தார் அனைவரும் மீண்டும் ஒரு முறை புனித யாத்த்pரை மேற்கொள்ள வாகனத்தில் ஏறி அமர்ந்தோம்.
அப்போது வாகன ஓட்டுநர் நான்கு சக்கரங்களுக்கு அடியில் நான்கு எலுமிச்சம் பழங்களை வைத்து ஒரு தேங்காயில் சூடம் வைத்து ஏற்றி மூன்று முறை சுற்றி வந்து சிதறுகாய் அடித்த பின்னர் நமது வாகனம் புறப்பட்டது.
புனிதயாத்திரையின் துவக்கமாக முதலில் அரச மரத்துக்கு அடியில் உள்ள விநாயகரை வழிபட அனைவரும் இறங்கினோம். அப்போது அவரது தாயார் அவரிடம் விநாயகருக்கு உண்டான அர்ச்சனை தட்டுடன் அருகம்புல் மாலை வாங்கி வருமாறு கூறினார். புனித யாத்திரையின் முதல் படியாக அரச மரத்தடி விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி அர்ச்சனை செய்து முடித்த பின்னர் யாத்திரை துவங்கியது.
வழக்கம்போல் அவரது தாயார் என்னை தனக்குப் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டார்கள் அவர் எனக்குப் பின்னர் அமர்ந்து கொண்டு என்னை கவனித்துக் கொண்டே வந்தார். நான் தான் அவரை பார்க்க முடியவில்லை.
பயணத்தில் யாராவது பேசிக் கொண்டே வந்தால் தான் பயணம் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் நானாகவே அவரது தாயாரிடம் என்னுடைய கேள்விக் கணைகளை தொடுக்க ஆரம்பித்தேன்.
விநாயகருக்கு மாத்திரம் ஏன் விலை மலிவான அருகம்புல் மாலை சாத்துபடி செய்கின்றோம். ஒரு மல்லிகைப் பூ மாலை அல்லது வேறு பூ மாலைகளை ஏன் சாத்துவதில்லை என்று கேட்டதற்கு அவரது தாயார் விளக்கம் அளிக்க ஆரம்பித்தார்கள்.
முன்னொரு காலத்தில் அனலாசூரன் என்னும் அரக்கன் தேவர்களை அடக்கியாள முயற்சித்தான். அந்த அரக்கனது கர்ச்சனை மிக ஆக்ரோஷமானதாக இருக்கும். அரக்கனது இரண்டு கண்களிலிருந்து அக்கினி சுவாலைகள் அனலாக பறக்கும். எனவே அந்த அரக்கனிடமிருந்து தங்களைக் காக்குமாறு தேவர்கள் அனைவரும் விநாயகப் பெருமானிடம் தஞ்சமடைந்தனர்.
அப்போது நடைபெற்ற போரில் விநாயகப் பெருமான் வெற்றி அடைந்த போது அந்த அரக்கன் கண்களிலிருந்து வந்த அக்கினிச் சுவாலை விநாயகப் பெருமானை வெப்பமயமாக்கி விட்டது. அந்த வெப்பத்தை விநாயகப் பெருமானால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. விநாயகரது உடல் வெப்பம் அதிகரித்த காரணத்தால் அவர் அந்த வெப்பத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் அவதியுற்றார்.
அச்சமயம் தேவர்கள் தங்களால் முடிந்த வரை சந்தனத்தை அரைத்துப் பூசி குளிர்ச்சியினைக் கொடுத்தனர்.
சந்திர தேவன் விநாயகர் தலையில் அமர்ந்து குளிர்ச்சியினைக் கொடுத்தார்.
அதேசமயம் மகாவிஷ்ணு தம்மிடமிருந்த தாமரையில் விநாயகப் பெருமானை அமர வைத்து குளிர்ச்சியூட்டினார்.
சிவன் தன் தலையில் இருந்த நாகத்தை விநாயகர் வயிற்றில் கட்டி குளிர்ச்சியூட்டினார்.
வருண பகவான் மழையினை விநாயகர் மேல் பொழியச் செய்து குளிர்ச்சியூட்டினர்.
ஆனால் விநாயாகருக்கு ஏற்பட்ட வெப்பம் குறைந்த பாடில்லை. அப்போது முனிவர்கள் அனைவரும் சேர்ந்து அருகம் புல்லை கொண்டு மாலை கட்டி விநாயகருக்கு சாத்துபடி செய்தனர். அருகம்புல் மீது அமர வைத்தனர். முப்பத்து முக்கோடி தேவர்களாலும் செய்ய முடியாத அரிய செயலிலை அதாவது விநாயகரின் வெப்பத்தை தணிக்கும் செயலினை அருகம்புல் கொண்டு முனிவர்கள் செய்து முடித்தனர். எனவே விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்துபடி செய்கின்றோம் என்று நீண்ட நெடிய விளக்கத்தினை அவரது தாயார் என்னிடம் கூறி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
தன்னிடமும் தெரிவிக்காத ஒரு தகவலை நான் கேட்டவுடன் என்னிடம் மட்டும் தெரிவித்ததைக் கண்டு அவர் மிகவும் மகிழ்ந்தார்.
உடனே தம் பங்கிற்கு ஏதேனும் கேட்க வேண்டும் என்பதற்காக விநாயகர் ஏன் அரச மரத்தடியில் அமர்ந்து கொண்டிருக்கின்றார். வேறு மரம் எதுவும் கிடைக்கவில்லையா எனக் கேட்டார்.
அவரது தாயார் அந்தக் கேள்விக்கும் பதில் சொன்னார்.
அனைத்து மரங்களும் பூ கொடுக்கும் காய் கொடுக்கும் பழம் கொடுக்கும். ஆனால் அரசமரம் பூ காய் கனி எதுவும் கொடுக்காது. அரச மரத்தில் வெறும் இலைகள் மட்டுமே இருக்கும். இன்னும் சொல்லப் போனால் அனைத்து மரங்களின் பலகைகளையும் நாம் ஏதாவது ஒரு வகையில் பயன் படுத்த முடியும். ஆனால் அரச மரத்தின் பலகை அந்த அளவிற்கு பயன் படுத்த முடியாத அளவிற்கு இலேசாக இருக்கும். எனவே கட்டில் மேஜை நாற்காலி கதவு ஜன்னல் போன்றவற்றிக்கு பயன் படுத்த மாட்டார்கள். எனவே எவரும் அரசமரத்தினை பயிர் செய்து வளர்க்க மாட்டார்கள்.
ஆனால் அரச மரம் மட்டும் பிராண வாயுவை அதிகம் உற்பத்தி செய்யும். வேறு எந்த மரமும் இந்த அளவிற்கு பிராண வாயுவை உற்பத்தி செய்யாது. எனவே நமது முன்னோர்கள் நல்ல காரியங்கள் எதுவாயினும் அரச மரத்தை சுற்றி வந்து தேகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு அவ்வாறே செய்து வருகின்றார்கள். யாருமே பயிர் செய்யாமல் தாமாகவே வளரும் அரசமரம் அதிகமான அளவில் பிராண வாயுவை கொடுப்பதால் நாம் அனைவரும் நமக்குத் தெரியாமல் அந்த மரத்தினருகில் விநாயகர் விக்ரஹம் வைத்து வழிபட்டு வருவதைக் கடைப்பிடிக்கின்றோம் என்று சொன்னார்கள்.
உடல் நலம் பெறவேண்டி பலர் விநாயகர் வழிபாடு மேற்கொள்ளும் சமயம் அரசமரத்திலிருந்து உற்பத்தியாகும் பிராண வாயு கை கொடுக்கும். மருத்துவ மனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் பிராண வாயுவை செலுத்தித் தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பார்கள். அந்த முறை தெரிந்தோ தெரியாமலோ நாம் அரச மரத்தை சுற்றி வந்து கடைப்பிடித்து வருகின்றோம்.
அதே போல குழந்தை பாக்கியம் பெற வேண்டியவர்கள் அரச மரத்தை சுற்றி வரும் சமயம் பிராண வாயு இயற்கையாக அதிக அளவில் கிடைக்கப் பெற்று குறைகள் ஏதேனும் இருந்தால் நிவர்த்தியாகும்.
இரண்டு பேரும் இரண்டு கேள்விகளைக் கேட்டு என்னிடமிருந்து பதில் பெற்றுக் கொண்டு விட்டீர்கள். இருந்தாலும் நானாகவே ஒன்றினைச் சொல்ல ஆசைப் படுகின்றேன்.
எந்தக் கோயிலுக்குப் போனாலும் தேங்காய் மற்றும் வாழைப்பழம் வைத்து அர்ச்சனை செய்கின்றோம். அதற்கான காரணம் பலருக்குத் தெரியாது.
தேங்காயைச் சுற்றி நார் இருக்கும் நார் நீக்கி விட்டால் ஓடு இருக்கும் இரண்டாக உடைக்கும் சமயம் உள்ளே சுவையான நீர் இருக்கும். ஓட்டில் மூன்று கண்கள் இருக்கும். நாம் தேங்காயினை தான் சாப்பிடுவோம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் தேங்காயில் விதை அதாவது கொட்டை இருக்காது.
அதே போல வாழைப்பழத்தில் விதை அல்லது கொட்டை இருக்காது. வாழைப்பழ தோலை உரித்து பழத்தை சாப்பிட்டு விட்டால் கொட்டை இருக்காது.
தேங்காய் மற்றும் வாழைப்பழம் இரண்டிலும் விதைகள் கிடையாது. எனவே தான் விதைகள் இல்லாமல் வளரும் தேங்காய் மற்றும் வாழைப்பழங்களை நாம் கடவுளுக்குப் படைக்கின்றோம்.
இதே போல வெற்றிலை பாக்கு வைத்து பூஜை செய்கின்றோம். அவற்றை நாம் கட்டாயம் உண்டு இரும்புச் சத்து மற்றும் துவர்ப்புச் சத்தினை பெறவேண்டும். வெற்றிலை போடும் பழக்கம் இல்லை என்று அதனை வாட விட்டோ அல்லது உலர்ந்த பிறகோ குப்பையில் போடக் கூடாது என்று சொல்லி அசத்தி விட்டார்கள்.
சில கோயில்களில் அனைவரும் சேர்ந்து நன்றாக வழிபாடு செய்து விட்டு இரவு ஒரு தங்கும் விடுதியில் இரண்டு குடும்பத்தாரும் தங்கக்கூடிய அளவிலான பெரிய அறையில் தங்கினோம்.
அச்சமயம் அவரது தாயாருக்கு பகல் முழுவதும் வாகனத்தில் பயணம் செய்ததன் காரணமாக பின்னங்கழுத்தில் வலி ஏற்பட்டு கஷ்டப்படுவதை அறிந்து கொண்டேன். நானாகவே முன்வந்து ஏதேனும் வலிக்கின்றதா எனக் கேட்டதற்கு ஆம் என்று சொல்லி ஏதேனும் தைலம் இருக்கின்றதா என்று கேட்டார்கள். நான் எங்கு வலிக்கின்றது என்று கேட்டதற்கு வலி மாறி மாறி வருகின்றது ஒரு இடத்தில் நிலையாக இல்லை என்று சொன்னார்கள்.
உடனே என் தாயார் இது மூச்சுப்பிடிப்பு என்று கூறினார்கள்.
அதற்கு நான் மூச்சுப்பிடிப்பினால் ஏற்படும் வலியினை எந்த வித மருந்து மாத்திரையும் இல்லாமல் நீக்கி விடலாம் என்று சொன்னேன்.
அவரது தாயாரை என் மடியில் படுக்க வைத்துக் கொண்டு அவரிடம் சூடம் மாத்திரம் எடுங்கள் என்று சொல்ல அவரும் சூடம் எடுத்துக் கொடுத்தார்.
உடனே நான் அவரது தாயாரிடம் நான் சொல்வதை திரும்பச் சொல்லுங்கள் என்று சொல்ல அவரும் ஒப்புக் கொண்டார்.
நான் மதுரை வடக்கு மாசி வீதியில் அமைந்துள்ள இராமாயணச் சாவடியில் உள்ள நாச்சி முத்துக் கருப்பனை நினைத்துக் கொண்டு சூடம் ஏற்றி விட்டு “நாச்சி முத்துக் கருப்பா. மூச்சுக் குத்தை வாங்குப்பா” என்று மூன்று முறை சொல்லுமாறு கேட்டுக் கொள்ள அவ்வாறே செய்து அதன் பின்னர் அவருக்கு வலி குறையும் வரையில் என் மடியில் படுக்க வைத்துக் கொண்டேன். ஆனால் அவர் நன்றாக உறங்கி விட்டார். அதன் பின்னர் ஒரு தலையணையினை வைத்து படுக்க வைத்தேன். நானும் அருகில் படுத்துக் கொண்டேன். எனக்குப் பக்கத்தில் என் தாயார் படுத்துக் கொண்டார்கள். இவ்வாறு செய்வதால் உடனடியாக மூச்சுப் பிடிப்பிலிருந்து விடுபடலாம். அதன் பின்னர் நேரம் கிடைக்கும் சமயம் நேரில் சென்று வழிபாடு செய்து வந்தால் போதும்.
மறு நாள் காலையில் எழும் சமயம் வலிகள் ஏதும் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் எழுந்தது கண்டு அனைவருக்கும் சந்தோஷம். தூரத்தில் இருக்கும் கடவுளை நினைத்தாலே வலிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கின்றது என்பதனை அவர் முதன் முறையாக உணர்ந்து கொண்டார். அவருக்கு லேசாக உள் மனதில் கடவுள் நம்பிக்கை துளிர்விட்டது.