திருமணப் பரிசு
அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னர் சூரிய காந்தி கிழக்குப் பக்கம் சாய்ந்து சூரிய உதயத்தினை எதிர் நோக்கி இருக்கும். சூரியன் உதிக்கும் சமயம் மொட்டாக இருக்கும் சூரியகாந்தி மலர்ந்து சூரியனை வரவேற்கும்.அதே போல அவரது வருகையினை எதிர்பார்த்து நான் சோபாவிற்கு புது விரிப்பு மாற்றி அவர் வந்தவுடன் கொடுப்பதற்குத் தேவையான அனைத்தையும் தயார் செய்து வைத்து விட்டேன். என் கணவரிடத்திலும் அவர் தம்முடைய மனைவியுடன் வரப் போவதை முன் கூட்டியே தெரிவித்து விட்டபடியால் அவரும் சுறு சுறுப்பாக தயாராக இருக்கின்றார். என்னுடைய செல்லப் பெண்ணுக்கும் இந்த விவரம் தெரியுமாதலால் அவளும் அடிக்கடி மாடிப் படியினைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றாள்.
அவர் தம்முடைய மனைவியுடன் எனது இல்லத்திற்கு வருகை தந்தார். அவர் வரும் சமயம் திருமணத்தன்று அணிந்த உடைகளுடன் வந்து இருந்தார். அதே போல அவரது மனைவியும் திருமணத்தின் போது அணிந்திருந்த புத்தாடைகளுடன் வந்திருந்தார். அவர்களை வரவேற்று சோபாவில் அமரச் செய்தேன்.
அவரைக் கண்டவுடன் என்னுடைய செல்லப் பெண் அவரைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டு அவரது மடியில் அமர்ந்து கொண்டாள். அது சமயம் அவர் தாம் கொண்டு வந்திருந்த சாக்லெட்டுகளை என் செல்லப் பெண்ணிடம் கொடுக்க என்னுடைய செல்லப் பெண் அனைவருக்கும் ஒவ்வொன்றாக பிரித்துக் கொடுத்தாள். நல்ல வேளை எனக்கும் அவருக்கும் பாதி பாதி என பங்கு போட்டு கொடுக்கவில்லை. அதுவரையில் நான் தப்பித்துக் கொண்டேன்.
அதன் பின்னர் என் கணவர் என்னிடத்தில் வந்திருப்பவர்களுக்கு டிபன் கொடுக்கச் சொன்னார். நானும் சுவீட் காரம் இரண்டினையும் அனைவருக்கும் பரிமாறினேன். என் செல்லப் பெண்ணுக்கு தனியாக ஒரு தட்டில் வைத்து கொடுத்து இருந்தேன். அதனை அவள் எடுத்து அவருடைய தட்டில் வைத்து விட்டு வெறும் தட்டினை என்னிடம் கொடுத்து அவரிடத்தில் தனக்கு ஊட்டி விடுமாறு சொன்னாள்.
அவரும் அவ்வாறே என் செல்லப் பெண்ணுக்கு ஊட்டி விட என் செல்லப் பெண்ணும் அவருக்கு ஊட்டி விட அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் சமயம் நானும் ஒரு தட்டில் சுவீட் வைத்து உண்ண ஆரம்பித்தேன். இல்லாவிடில் வேறு பிரச்சனைகள் எழலாம்.
அதன் பின்னர் அனைவருக்கும் காபி கொடுத்து முடித்தவுடன் என் கணவர் பீரோவிலிருந்து பரிசுப் பொருளை எடுக்குமாறு சொன்னார். எனக்கே தெரியாமல் அவர் பரிசுப் பொருள் வாங்கி வைத்துள்ளார் என்பதனை அப்போது தான் அறிந்து கொண்டேன்.
எனக்கே தெரியாமல் என்னிடத்திலும் சொல்லாமல் அவர் தனியாக வாங்கி வைத்திருக்கும் பரிசுப் பொருள் என்னவென்று அறிந்து கொள்ள என் மனம் துடித்தது. சனிக்கிழமை வரப் போவதாக வியாழக் கிழமையன்று தான் சொன்னேன். எப்போது வாங்கி வந்து பீரோவில் வைத்தார் என்பதே தெரியவில்லை.
அவர் கொடுக்கப் போகும் பரிசுப் பொருள் அவர் தகுதிக்கு ஏற்றது தானா என அறிய என மனம் துடித்தது. நானும் அவர் சொன்ன அந்தப் பரிசுப் பொருளை அவரிடத்தில் கொடுத்து அவர் இருவருக்கும் பரிசளித்தார். ஆனால் திறந்த நிலையிலேயே இருந்ததால் என்னால் பார்க்க முடிந்தது.
ஒரு அழகான வெள்ளிக் கிண்ணம். அதே போல தங்க முலாம் பூசப்பட்ட ஒரு வெள்ளி ஸ்பூன். இரண்டையும் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
நாங்கள் திருமணத்திற்கு வர முடியவில்லை எனவே இங்கேயே உங்களுக்கு திருமண பரிசு வழங்குகின்றோம் எனச் சொன்னார். அப்போது அவரது மனைவி வரவேற்புக்கு வந்து இருக்கலாமே எனக் கேட்டார். என்றைக்கு எனக் கேட்ட சமயம் திருமண வரவேற்பிற்கு அலுவலக நண்பர்களை மட்டுமே அழைத்து இருந்தேன் என அவர் சமாளித்தார்.
அதன் பின்னர் என் கணவர் அவரது மனைவியிடத்தில் உற்றார் உறவினர் பற்றி விசாரித்த சமயம் அவர்கள் அனைவரும் எனது கணவருக்கு மிக மிக நெருக்கமானவர்கள் எனவும் மாதம் ஒரு முறை இங்கு வந்து செல்லக் கூடிய அழவிற்கு பழக்கம் உடையவர்கள் எனவும் தெரிவித்தார். எனக்கு யாரென்றே தெரியவில்லை. இருந்தாலும் அவர்கள் அனைவரும் அவருக்கு மிக மிக நெருங்கிய அதிகம் பழக்கமானவர்கள் என்பதனை மட்டும் என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.
இவ்வளவு நேரம் இருந்தும் கூட அவரது மனைவி என் செல்லப் பெண்ணை கண்டு கொள்ளவே இல்லை. அழைக்கவும் இல்லை. எங்கேயோ வந்து முன்பின் தெரியாதவர்களிடத்தில் எப்படி இருப்போமோ அது போலத் தான் இருந்தாள். அவர் சொல்வது முழுக்க முழுக்க சரி என்பதனை நான் அறிந்து கொண்டேன்.
மதிய உணவினை நான் தயார் செய்கின்றேன் இங்கேயே பகல் உணவு முடித்து விட்டு பின்னர் சொல்லலாம் எனச் சொன்னேன். அதற்கு இன்னொரு முறை பார்த்துக் கொள்ளலாம் என விடை பெற்ற சமயம் வழக்கம் போல் என் செல்லப்பெண் அவரிடத்தில் இங்கேயே இரு எனச் சொல்லி அழ ஆரம்பித்து விட்டாள்.
அவரது மனைவி இருவருக்கிடையே உள்ள அன்பினையும் பாசத்தினையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள். எதுவுமே பேசவில்லை. ஒரு முறை கூட அவரது மனைவி என் மகளை தம்மிடம் அழைக்கவில்லை என்பதனை எண்ணிப் பார்த்த சமயம் அவரிடத்தில் முன்பின் தெரியாக குழந்தைகள் அனைத்தும் பழகும் விதம் இன்னமும் அவரது மனைவி அறியவில்லை என்பதனை மட்டும் உணர்ந்து கொண்டேன்.
இவ்வாறு இருந்தால் நிச்சயமாக அவருக்கு தமது மனைவி மேல் அன்பு ஏற்படாது என்பதனை மட்டும் என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. கடைசியில் அவர் நான் மீண்டும் மாலையில் வருகின்றேன் என என் செல்லப் பெண்ணிடத்தில் சொன்னார்.
நானும் என் செல்லப் பெண்ணை சமாதானப் படுத்தி அவரிடமிருந்து பெற்றுக் கொண்டு அவர்களை வழி அனுப்பி வைத்தேன். என்னுடைய இதயம் என் பெண்ணின் வடிவில் அவரிடத்தில் மன்றாடிக் கொண்டிருக்கின்றது என்பதனை யாரறிவார்.
அவரும் அவருடைய மனைவியுடன் தமது இல்லத்திற்குள் நுழையும் வரையில் கண் இமை மூடாமல் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் பார்க்கின்றேன் என்பதனை அவரது மனைவி திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்.
வழக்கமாக இரவு நேரங்களில் தான் கண்ணீரைத் துடைக்கும் என் தலையணை அன்றைய தினம் பிற்பகலிலேயே தமது பணியைச் செய்ய ஆரம்பித்து விட்டது.
பகல் இரவு முழுக்க தூக்கமின்மையால் நான் மிகவும் தவித்து விட்டேன். எனக்கு தனிமையில் இந்த நிலை. அவரது நிலை எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.
என்னுடைய நிலை அவருக்கு கட்டாயம் புரிந்திருந்த காரணத்தால் மறு நாள் ஞாயிற்றுக் கிழமை காலையில் பால் வாங்கும் இடத்தில் அவர் என்னைச் சந்தித்து கவலைப் பட வேண்டாம் என ஆறுதல் கூறினார். எனக்கு சற்று நிம்மதி.
அவர் மிகவும் சோகமாகக் காணப் பட்டார். அதிலிருந்து அவரது வீட்டில் ஏதோ ஒன்று நடந்து இருக்கின்றது என்பதனை மட்டும் என்னால் உணர முடிந்தது. விரைவில் அது என்னவென்று அவர் தெரிவிப்பார் என்னும் நம்பிக்கை எனக்குண்டு. ஏனெனில் நம் இருவருக்குள்ளும் எந்த விதமான ஒளிவு மறைவும் கிடையாது.