மல்லிகை பூவும் ஹல்வாவும்
நானும் அவரும் மிக மிக நெருக்கமாகப் பழகி வந்த சமயம் நாங்கள் இருவரும் அடிக்கடி கோயில்களுக்குச் செல்ல ஆரம்பித்தோம். அப்படி கோயில்களுக்குச் செல்லும் சமயம் எல்லாம் ஒவ்வொரு முறையும் கோயில் வாசலில் விற்கப்படும் மலர்களை குறிப்பாக மல்லிகை பூ வாங்கிக் கொடுப்பார். நானும் மிக்க சந்தோஷத்துடன் என் கூந்தலில் சூடிக் கொள்வேன்.
அதே போல கோயிலில் உள்ள சாமி சந்நிதியில் கொடுக்கப்படும் மலர் கொத்தினை என்னிடம் கொடுத்து நான் என் கூந்தலில் சூடிக் கொண்ட பின்னர் அவர் கைகளில் இருக்கும் விபூதி குங்கும பிரசாதத்தை என் கைகளில் கொடுத்து அதன் பின்னர் என் கைகளிலிருந்து அந்த பிரசாதத்தினை எடுத்து தனது நெற்றியில் பூசிக் கொள்வார். காரணம் கேட்டால் கடவுள் நம்பிக்கை என்னால் தான் வந்தது என்று சாக்குச் சொல்வார். ஒரு சில நேரங்களில் என் விரல்கள் பட வேண்டும் என்பதற்காகவே திலகம் சரியாக இருக்கின்றதா என்று கேள்வி கேட்க நான் அதனை சரி செய்வேன். அதில் அவருக்கு ஒரு மிகப் பெரிய சந்தோஷம்.
வழிபாடு முடிந்த பின்னர் குளக்கரையில் அமர்ந்து அவரும் நானும் நமது எதிர்காலத்தைப் பற்றி பேசிக் கொண்டிருப்போம். யாருமே பார்க்கவில்லை என்றாலும் யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயம் எங்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும்.
கோயிலை விட்டு வெளியே வந்த பின்னர் என்னை ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வார். கட்டாயம் ஒரு இனிப்புடன் எனக்கு பிடித்த தோசை மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிடுவோம்.
அந்த நேரத்தில் ஹல்வா மட்டும் வேண்டாம் என்று சொல்லி விடுவார். எனக்கு ஹல்வா ரொம்ப பிடிக்கும். அவருக்கும் ரொம்ப பிடிக்கும். ஆனால் மல்லிகை பூவினை கூந்தலில் சூட்டி ஹல்வா சாப்பிட இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்று சொல்லி என்னை பேச்சிலேயே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவார். நாங்கள் இருவரும் கற்பனையில் கூட சந்தோஷமான வாழ்க்கையை எதிர்பார்த்தோம். ஆனால் அது நிறைவேறவில்லை.
அவர் அலுவலக தோழியுடன் என்னுடைய வீட்டிற்கு வந்த சமயம் அவரது தோழி தனது கூந்தலில் மல்லிகை மொட்டுக்களால் தொடுக்கப்பட்ட மலர்களை என்னைப் போன்றே சூட்டியிருந்தாள். எனக்கும் வாங்கி வந்து இருந்தார்கள். நானும் சூடிக் கொண்டேன்.
வழக்கம் போல் அவர் என்னிடத்தில் சாக்லெட் கொடுத்தார். நானும் மிக்க மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டேன். உடனே அவரது தோழி எனக்கு முன்னால் ஒன்றும் தெரியாதவாகள் போல நடிக்க வேண்டாம். வழக்கம் போல் நீங்கள் பாதி கடித்து விட்டு மீதியை அவரிடத்தில் கொடுங்கள் நான் ஒன்றும் நினைக்க மாட்டேன் என்று சொன்னாள். எனக்கு சற்று வெட்கமாக இருந்தாலும் பழக்கத்தை என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. நானும் அவரது தோழி கேட்டுக் கொண்ட படி பாதி சாக்லெட் கொடுத்தேன்.
அதன் பின்னர் அவரது தோழி என்னிடத்தில் ஒரு இனிப்பு பெட்டி கொடுத்தாள். அதனை திறந்து பார்த்தவுடன் நான் ஆச்சர்யப் பட்டேன். அவரது தோழி என்னிடத்தில் கொடுத்த இனிப்பு பெட்டியில் ஹல்வா இருந்தது.
நான் அவரிடத்தில் ஜாடையாக இது எப்படி வாங்கினீர்கள் என்று சைகையில் கேட்டதை உற்று கவனித்த அவரது தோழி என்னிடத்தில் அது அவர் வாங்கவில்லை என்றும் தான் வாங்கி வந்துள்ளதாகவும் தெரிவித்து விட்டு திருமணத்திற்கு முன்னர் பல முறை நீங்கள் இவருடன் கோயில்களுக்குச் சென்று திரும்பும் சமயம் உங்களுக்கு பிடித்த ஹல்வாவினை வாங்கி கொடுக்க மறுத்து விட்ட காரணத்தால் தான் உங்களை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்று பல முறை சொல்லி இருப்பதால் தான் ஹல்வாவை வாங்கி வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அது மட்டுமல்ல நான் இட்லிக்கு மாவு அரைக்கும் சமயம் எனக்கு உதவி செய்வதாகக் கூறி என் கைகளை தொட முயற்சித்தது முதல் தாயக் கட்டம் ஆடும் சமயம் சோளிகளை எடுக்கும் சாக்கில் என் கைகளை பிடிக்க முயற்சித்தது வரையில் எல்லாவற்றையும் அவர் அவரது தோழிகள் அனைவரிடத்திலும் வெளிப்படையாக சொல்லி இருக்கின்றார். அதே போல கொடைக்கானல் சென்றிருந்த சமயம் நான் குளிர்ச்சியால் உடல் நடுங்கும் சமயம் உங்களை அணைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று சொன்னதைக் கூட மறைக்காமல் சொல்லி இருக்கின்றார்.
என்னுடன் பழகி வந்த விவரத்தை ஒன்று விடாமல் அப்படியே அவர் அவரது சிநேகிதிகளிடத்தில் சொல்லியும் கூட அவரை திருமணம் செய்து கொள்ள சிலர் துடிக்கின்றனர் என்றால் அதற்கு ஒரே காரணம் என்னைப் போலவே அவர்கள் மீதும் அன்பு செலுத்துவார் மற்றும் கண் கலங்காமல் கவனித்துக் கொள்வார் என்னும் எண்ணம் தான் என்பதனை என்னால் உணர முடிந்ததே தவிர அவர் மீது எனக்கு எந்த விதமான சந்தேகமும் வரவில்லை.
இன்று அவர் எனது வீட்டிக்கு வர வேண்டிய நாள். நிச்சயம் மாலையில் அவர் என்னைக் காண வருவார் என்று காலையிலிருந்தே அவர் வருகையை எதிர் பார்த்து என் இதயம் ஏங்க ஆரம்பித்து விட்டது. வழக்கம் போல் நான் எதிர் பார்த்த நாளன்று எதிர் பார்த்த நேரத்தில் என்னைச் சந்திக்க என் இல்லத்திற்குள் நுழைந்தார். என் குழந்தை மிகவும் சந்தோஷத்துடன் பாபா வந்து விட்டார் என்று உரக்கச் சொல்லி அவரது மடியில் அமர்ந்து கொண்டது. என்னால் முடியவில்லை.
என் குழந்தைக்கு முழு சாக்லெட். வழக்கம் போல் என்னிடத்தில் ஒரு சாக்லெட் கொடுத்து நான் கடித்து பாதி கொடுத்ததை அவர் பெற்றுக் கொண்டார். மிக்க சந்தோஷம். பின்னர் அவருக்காக நான் செய்திருந்த பாயாசம் கொடுத்தேன். அதுவும் வழக்கம் போல பருகினோம்.
அதன் பின்னர் அடுத்த வாரத்தில் பெற்றோர் சொந்த ஊருக்க வரச் சொல்லியிருப்பதாகவும் அதற்காக சொந்த ஊர் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார். காரணம் கேட்டதற்கு சொல்வதற்கு மனமில்லாமல் பெண் பார்க்கத் தான் என்று சொன்னார். அதற்கு நான் சீக்கிரம் பெண் பார்த்து திருமணம் செய்து கொண்டு இங்கு வந்தால் கீழே காலியாக இருக்கும் வீட்டில் தங்கிக் கொள்ளலாம் என்று மிகவும் சந்தோஷமாக தெரிவித்தேன். அவர் பதில் எதுவும் பேசவில்லை.
நீண்ட நேரம் பேசிக் கொண்டே இருந்தோம். அப்போது அவர் என்னைப் பிரிந்து கஷ்டப் படுவது போல அவருக்குத் திருமணம் ஆகி விட்டால் அலுவலகத் தோழிகளில் சிலர் வருத்தமடையப் போகிறார்கள் என்பதனை நினைக்கும் போது கவலையாக இருக்கின்றது என்று சோகமாகக் கூறினார்.
அதனை கேட்டதும் எனக்கும் கூட மன வருத்தம் இருந்தது. அதே நேரத்தில் அவர் பெற்றோர் விருப்பப் படி நம் மொழி பேசும் பெண்ணை மணமுடித்து வந்தால் தான் நான் கீழே உள்ள பகுதியினை அவருக்கு வாடகைக்கு தர முடியும் என்பது சுயநலம் கலந்த ஆசையாக இருந்தது. எது எப்படியோ என்னைப் பிரிந்து அவரும் அவரைப் பிரிந்து நானும் கஷ்டப்படுவது அவருடைய திருமணத்தினால் சற்று குறையும் என்பது என் எதிர்பார்ப்பாக இருந்தது.
அவர் என்னிடத்தில் சொந்த ஊருக்குச் சென்று வந்த பின்னர் அது பற்றிய தகவலை அடுத்த முறை வரும் சமயம் தெரிவிப்பதாகக் கூறி விடை பெற்றார். என்னால் என் இதயத்தில் உள்ள மனக் கவலையை அடக்க முடியாமல் கண்களில் கண்ணீருடன் பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தேன். அதன் பின்னர் என் குழந்தை பாபா மிண்டும் எப்போது வருவார் என்று கேட்ட சமயம் நான் அழ ஆரம்பித்து விட்டேன். என்னைப் பார்த்து என் குழந்தையும் அழ ஆரம்பித்து விட்டது.