எதிர்பாராத உரையாடல்
என் செல்லப் பெண் என்னிடத்தில் பாபா எப்போது வருவார் எனக் கேட்டுக் கொண்டிருந்தாள். நான் இன்று வருவார் என்று சொன்னேன். எப்போது பார்த்தாலும் பாபா இன்று வருவார் என்று தான் சொல்கிறாய். ஆனால் பாபா வரக் காணோம் என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவரைக் காண நான் ஏங்குவது மட்டுமல்லாமல் இப்போது என் மகளிடத்திலும் அந்த ஏக்கம் வளர ஆரம்பித்து விட்டது. தினமும் மதிய உணவு முடிந்தவுடன் ஒரு முறை பாபா இன்று வருவாரா எனக் கேட்பாள். நானும் பாபா இன்று வருவார் என்று ஒரே பதிலை திரும்பத் திரும்ப சொல்வேன். இன்று இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை. அவர் வர வேண்டிய நாள். அவரது வருகைக்காக இரண்டு இதயங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.
இரண்டு பேரும் மிக்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் எனது இல்லத்ததிற்கு வருகை தந்தார். அவருடன் அவருடைய அலுவலகத் தோழியும் வந்திருந்தாள். எனக்கு எல்லை இல்லாத ஆனந்தம். இருவரும் ஒரே சோபாவில் அமர்ந்து கொண்டார்கள்.
அந்த நேரத்தில் என் செல்ல மகள் அவரிடத்தில் டீவியில் வரும் பெண் தானே என்று கேட்டாள். அவரும் ஆமாம் என்று சொல்லி விட்டு என் மகளை மடியில் அமர்த்திக் கொள்ள முயற்சிக்கும் சமயம் அவளாகவே இருவருக்கும் நடுவிலே அமர்ந்து கொண்டு இருவர் மடியிலும் கைகளை போட்டுக் கொண்டாள். அதன் பின்னர் நம் இருவரையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
அவருடன் வந்திருந்த அந்தப் பெண் முதலில் பேச ஆரம்பித்தாள். நான் யாரென்று அநேகமாக அவர் சொல்லியிருப்பார். என்னை நீங்கள் நேரில் பார்க்கவில்லை தொலைக் காட்சியில் பார்த்து இருக்கின்றீர்கள். நானும் உங்களுக்கு தொலைக் காட்சியில் நான் தொகுத்து வழங்கியுள்ள சமையல் குறிப்பின் காசட்டினை கொடுத்துள்ளேன் என தெரிவித்த சமயம் என் மகள் அவர்களிடம் டீவியில் நீங்கள் எதுவும் சமைப்பதில்லை. உங்களுக்கு எதுவும் சமைக்கத் தெரியாதா வேடிக்கை தான் பார்ப்பீர்களா என்று கேட்டு அசத்தி விட்டாள்.
என் செல்லப் பெண் கேட்ட கேள்விக்கு செயல் முறையில் செய்து காட்ட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே உங்களுடைய சமையலறை எங்கிருக்கின்றது என்று எனக்குக் காட்டு நானும் நீயும் ஏதாவது சமைக்கலரம் என்று சொன்னார்கள். உடனே என் மகள் பாபாவும் கூட வரவேண்டும் என்று சொல்லி விட்டு அவர்கள் இருவருடைய விரல்களையும் பிடித்துக் கொண்டு சமையலறைக்கு அழைத்துச் சென்றாள். என்னையும் அழைத்தார்கள். அவர்கள் பின்னால் நானும் சென்றேன்.
அவருடைய சிநேகிதி என்னிடத்தில் வீட்டில் பால் தேன் எலுமிச்சம் பழம் மற்றும் கிராம்பு இருக்கின்றதா என்று கேட்டவுடன் அனைத்தும் இருக்கின்றது என்று சொன்னேன். உடனே அவருடைய சிநேகிதி என் செல்லப் பெண்ணை தன்னிடம் வருமாறு அழைக்க அவளது இடுப்பில் அமர்ந்து கொண்டாள். இவ்வளவு சீக்கிரம் நெருக்கமாக யாருடனும் பழக மாட்டாள். அவளுக்கு மிகவும் பிரியமான பாபாவுடன் வந்திருப்பதாலும் அடிக்கடி தொலைக் காட்சியில் பார்ப்பதாலும் அவளுக்கு அந்தப் பெண்ணைப் பார்த்ததும் ஒரு ஈர்ப்பு வந்து உடனே பழகி விட்டாள்.
மொத்தம் 6 பேருக்கு அரை லிட்டர் பால் முதலில் கொதிக்க வைக்க வேண்டும் என்று சொல்லி விட்டு அரை லிட்டர் பாலினை அடுப்பின் மீது வைத்தார்கள். பின்னர் கிராம்பினை பொடிப் பொடியாக தூள் செய்து பாலில் போட்டு கொதிக்க வைத்தார்கள். அதன் பின்னர் இரண்டு ஸ்பூன் சர்க்கரை கலந்து இறக்கி விட்டார்கள். ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி விதைகளை நீக்கி விட்டு சாறு பிழிந்தார்கள். அதன் பின்னர் அதனுள் இரண்டு ஸ்பூன் தேன் கலந்தார்கள். குழந்தை சாப்பிடப் போகின்றது என்பதால் சல்லடை கொண்டு வடி கட்டி ஆற வைத்து கொடுத்தார்கள். இது தான் இன்றைய நிகழ்ச்சியில் வருகின்றது என்று சொன்னார்கள்.
இதற்குப் பெயர் கிராம்பு டீ. கிராம்பு டீ குடித்தால் வறட்டு இருமல் போய் விடும் எலுமிச்சிம் பழ சாறு ஒத்துக் கொள்ளாதவர்கள் கூட இதனைப் பருகலாம் என்று சொல்லிக் கொண்டே ஹாலில் வந்து சோபாவில் அமர்ந்து கொண்டார்கள். கிராம்பு டீ என்று தான் பெயர். ஆனால் இதில் டீ தூள் சேர்ப்பதில்லை என்று சொன்னார்கள.
ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சமயம் பொதிகை தொலைக் காட்சியில் அந்தப் பெண் தொகுத்து வழங்கிய கிராம்பு டீ தயாரிப்பு முறை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அப்போது என் கணவர் வீட்டிற்குள் வந்தார். என் செல்ல மகள் அவரிடத்தில் டீவியில் வருகின்ற நிகழ்ச்சியையும் அவரது சிநேகிதியையும் காண்பித்து இந்த பெண் தான் டீவியில் என்று சொன்னது கேட்டு சந்தோஷப் பட்டார். என் செல்லப் பெண் அவர்களிடத்தில் அடுத்ததாக நீங்கள் இங்கே உட்கார்ந்து கொண்டே எப்படி டீவியில் வருகின்றீர்கள் உங்களுக்கு மேஜிக் கூட தெரியுமா எனக் கேட்டாள். அனைவருக்கும் ஒரே சிரிப்பு.
வந்தவர்களுக்கு ஏதேனும் பருகுவதற்கு கொடுத்தாயா என கேட்ட சமயம் இன்று இவர்களே நமது வீட்டில் தொலைக் காட்சியில் செய்யும் பானத்தினை தயாரித்து உள்ளாளார்கள் என்று அவருக்கும் கொடுத்தேன். அவர் மிகவும் நன்றாக இருக்கின்றது என்று பாராட்டினார். அதற்கு நான் செய்யவில்லை. செல்ல மகள் வேண்டுகோளின் படி நமது சமையலறையில் அவர்களே தயாரித்து இருக்கின்றார்கள் என்று சொன்னேன். அதற்கு வந்தவர்களை வேலை வாங்குவது சரியல்ல என்று சொன்னவுடன் அவர்களே விளக்கம் அளித்தார்கள்.
அதன் பின்னர் அவருடைய சிநேகிதி என்னுடன் தனியாகப் பேச வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள். நானும் சரியென்று அவர்களுடன் தனி அறைக்குச் சென்றேன். அப்போது அவருடைய சிநேகிதி என்னிடத்தில் பேச ஆரம்பித்தார்
என்னுடைய உறவுக் காரப் பெண் டாக்டராக இருப்பதால் நானும் அவரும் சேர்ந்து போய் அவருக்கு உடல் பரிசோதனை செய்ததில் தொண்டையில் சதை வளர்ந்து இருப்பது தெரிந்தது. அதன் பின்னர் அவர் சொந்த ஊர் சென்று பெற்றோர் வீட்டில் தங்கி ஆபரேஷன் செய்து கொண்டு திரும்பி உள்ளார். ஆபரேஷன் செய்த பின்னர் ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும் என்பதற்காக இன்று அந்த டாக்டரிடம் அழைத்துச் சென்று விட்டு நேராக இங்கே வந்துள்ளேன்.
சென்ற மாதம் இந்த வீட்டிலேயே இவருக்கு ஒரு மணப் பெண்ணை காண்பித்ததாக என்னிடம் சொன்னார். எனக்கும் இவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. அதனால் இன்று என் வீட்டிற்கு அழைத்துச் சென்று என் தாயாரிடம் பேசினேன்.
என்னுடைய தாயார் காதல் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் இரண்டு வீட்டாரும் எனது தாய் தந்தையை ஒதுக்கி வைத்து விட்டனர். அச்சு அதாவது டை நேர்த்தியாக இருந்தால் அதன் மூலம் வார்த்து எடுக்கும் சிற்பம் அல்லது பொருள் அழகாக இருக்கும். நான் அழகாக இருக்கின்றேன் என்றால் என்னை பெற்றெடுத்த அச்சு அதாவது என் தாயார் மற்றும் தந்தை எப்படி இருப்பார்கள் என்று யூகித்துக் கொள்ளுங்கள். நானும் என் தாயாரும் சென்றால் இருவரையும் தாய் மகள் என்று பார்க்க முடியாது அவ்வளவு இளமையாக இன்றும் இருக்கின்றார்கள்.
என்னுடைய தாயின் அழகினை ஆராதிக்க முடிந்த என்னுடைய தந்தைக்கு அவரது பெற்றோரின் அன்பினை துறக்க முடியவில்லை. இந்த காரணத்தால் என்னுடைய சிறு வயதிலேயே என்னுடைய தந்தையை நான் இழக்க நேரிட்டது. இருந்த போதிலும் என்னுடைய தாயார் என்னை நன்றாக படிக்க வைத்து என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி இருக்கின்றார்கள்.
நான் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் என் உள் மனதில் சோகம் குவிந்து கிடக்கின்றது. நான் அனைவருடனும் சிரித்துப் பேசி பழகுவதைப் பார்த்து நான் மிகவும் சந்தோஷமாக இருப்பேன் என்று எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் அது உண்மையல்ல.
இவர் அருகில் நான் பணியாற்ற வேலையில் சேர்ந்து கொண்ட முதல் நாள் இவரை சரியாக புரிந்து கொள்ளாமல் தூரத்தில் அமர்ந்து கொண்டேன். சில நாட்களுக்குப் பின்னர் எனக்கு முன்னர் வேலை பார்த்த பெண் இவரைப் பற்றி சொன்ன பின்னா நன்கு புரிந்து கொண்டு என்னுடைய இருக்கையை இவருக்கு வலது பக்கமாக மாற்றிக் கொண்டேன். காரணம் நீங்கள் சிறு வயதில் சொன்னது தான். வாழ்க்கை முழுவதும் இவருக்கு வலது பக்கத்தில் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
நான் எப்போதும் இவரிடத்தில் பேசிக் கொண்டே இருப்பேன். என் பேச்சினைக் கேட்டுக் கேட்டு இவரது வலது காது செவிடாகி இருக்கும். அந்த அளவிற்கு இவரிடத்தில் நான் காதருகே சென்று பேசுவேன். அவருக்கு இடது பக்கம் ஒரு முஸ்லீம் பெண். அவளும் என்னை மாதிரி தான். அவர் இருவரிடத்திலும் ஒரே மாதிரியாக பேசிப் பழகுவார். எந்த வித வித்தியாசமும் இருக்காது.
நான் பல விரத நாட்களில் நோன்புக் கயிறு கட்டி விட்டு மூன்று நாட்கள் அசைவம் தொடக் கூடாது என்று சொல்வேன். ஆனால் உடல் நலத்தினைக் காரணம் காட்டி அவர் அசைவம் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று சொல்லி நான் கட்டிய நோன்புக் கயிற்ளை நீக்கி விட்டு அசைவம் கொடுப்பாள். அதனால் நம் இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும். ஆனால் அவர் இரண்டு பக்கமும் மன வருத்தம் அடையாத அளவிற்கு நடந்து கொள்வார்.
அந்த முஸ்லீம் பெண்ணின் தந்தை நேரடியாக ஒரு நாள் அவரிடம் வந்து தனது மகள் அவரை விரும்புவதாகவும் மதமாற்றம் செய்து கொண்டு இஸ்லாமிய வழக்கப்படி நிக்கா செய்து கொள்ளுமாறும் கேட்டதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.
எனவே அவளது தந்தை இவரிடத்தில் திருமணத்தின் சமயம் தடையேதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டு அதன் பின்னர் வெளி நாட்டில் வேலை பார்க்கும் ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.
திருமண (நிக்கா) நாளன்று இவர் வந்த பின்னர் இவரைப் பார்த்து விட்டுத் தான் பதிவேட்டில் கையெழுத்து போட்டார்கள். அது வரையில் யார் பேச்சையும் கேட்காமல் அழுது கொண்டு இருந்தார்கள். திருமணத்திற்குப் பின்னர் அந்த மாப்பிள்ளை மீண்டும் வெளி நாடு திரும்பி விட்டார். திருமணத்திற்குப் பின்னர் மனைவியை வெளி நாட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை. அவள் செல்லவும் விரும்பவில்லை. அடுத்து வருவதற்கு ஆறு மாதமோ அல்லது ஒரு வருடமோ ஆகலாம்.
அந்தப் பெண் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்பது போல தனியே தவிப்பதுடன் இவரிடத்தில் நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்ளாததால் நான் ஏக்கத்துடன் இரட்டை வாழ்க்கை வாழ வேண்டி இருக்கின்றது என்று சொல்லி வருத்தப் படுகின்றாள். எனவே அவளை சமாதானப் படுத்த நீண்ட நேரம் பேசிப் பார்க்கின்றார். மாலை அலுவலகம் முடிந்த பின்னர் நீண்ட தூரம் இருவரும் பேசிக் கொண்டே நடந்து சென்று வீட்டினை அடைவார்கள். எவ்வளவு தான் ஆறுதல் சொன்னாலும் அவள் சமாதானம் அடைவதாக தெரியவில்லை. அவள் கவலைகளை வெளிக் காட்டாமல் அமைதியாக இருக்கின்றாள்.
நான் தொலைக் காட்சியில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதால் நிறைய பேர் என்னைப் பற்றி அறிந்து வைத்துள்ளார்கள். அவர்கள் யார் என்பது எனக்குத் தெரியாது. நான் ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்றால் தெரிந்த ஆட்டோவில் தான் செல்வேன். தொலைக் காட்சியில் பிரபலமாக இருப்பதால் நான் நடந்து செல்லும் சமயம் எனக்குத் தெரியாதவர்கள் கூட என்னிடம் நலம் விசாரிப்பார்கள். நான் பதில் சொல்ல வேண்டி இருக்கும். எனவே அலுவலகம் முடிந்தவுடன் நேரடியாக எனது வீட்டிற்கு சென்று விடுவேன். சொல்லப் போனால் நான் சுதந்திரமாக உலா வரும் ஆனால் மாலையில் கூட்டினை அடையும் ஒரு பறவை.
நான் இவரைத் திருமணம் செய்து கொள்ள என்னுடைய தாயாரின் அனுமதி பெற இன்று நேரில் அழைத்துச் சென்று முயற்சித்தேன். என்னுடைய திருமணம் இரண்டு வீட்டாரின் முழு சம்மதத்துடன் தான் நடைபெற வேண்டும் என்று என்னுடைய தாயார் பிடிவாதமாக இருக்கின்றார்கள்.
எனக்கு அவர் மேல் அன்பு வரக் காரணம் அவர் உங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் மற்றும் உங்களோடு அவர் பழகிய நாட்களைப் பற்றி கொஞ்சம் கூட மறைக்காமல் அப்படியே அவர் எங்களிடத்தில் பகிர்ந்து கொண்டது மற்றும் கட்டாயத் திருமணம் நடந்த விவரம் அறியாமால் நீங்கள் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டு வாழ்வதற்கு வீடு பார்த்தது மற்றும் உங்கள் மனம் புண்பட்டு தவறான முடிவுக்கு நீங்கள் வந்து விடக் கூடாது என்பதற்காக மாதா மாதம் உங்களை சந்தித்து வருவது ஆகியவை. அதனால் தான் நாங்கள் அனைவரும் உங்களைப் பார்க்காத போதும் கூட உங்கள் சார்பில் வளைகாப்பு வளையல்கள் அணிந்து கொண்டோம். எனவே நீங்கள் எனக்கு இவர் என்னை மணமுடிக்க பெற்றோர் சம்மதத்துடன் முன் வருவாரா என்று அறிவுறை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
அதன் பின்னர் நான் அவர்களிடத்தில் பதில் சொன்னேன். என்னை அவர் விரும்பும் சமயம் அவருடைய தாயார் நம் இருவருக்கும் முழு ஆதரவாக இருந்ததோடு மட்டுமல்லாமல் நம் இருவருக்கும் திருமணம் நடைபெற்று அவரது வீட்டில் விளக்கேற்ற வேண்டும் என்பதற்காக பல கோயில் குளங்களுக்கு அழைத்துச் சென்று பல பூஜைகளில் என்னுடன் கலந்து கொண்டார்கள்.
ஒரு முறை புனித யாத்திரை சென்ற சமயம் சத்யவான் சாவித்திரி நோன்பு பூஜை ஆந்திராவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த பூஜையில் நானும் அவரும் அவருடைய தாயாரும் கலந்து கொண்ட சமயம் ஒருவருக்கு அருள் வந்து எமன் கூட ஒருவரது அனுமதி இல்லாமல் மற்றவர் உயிரை பறித்துச் செல்ல மாட்டான் என்று அருள் வாக்கு சொன்னார். அதே போல அவரது உறவினர் ஒருவர் என் தோளில் சாய்ந்து உயிர் விட்ட சமயம் நானும் அவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்வீர்கள் என்று ஆசி வழங்கி உயிர் விட்டார்கள். எந்த அருள்வாக்கும் பலிக்கவில்லை. ஆசீர்வாதமும் பலிக்கவில்லை. அந்தஸ்து நம்மை பிரித்து விட்டது.
அவருடைய தந்தை அவரை படிக்க வைக்க மறுத்து விட்டார். நிறையப் படித்தால் என்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதற்காக படிப்பை கூட பாதியிலேயே நிறுத்தி விட்டு வேலையில் சேர்ந்து கொண்டார். அவருடைய வீட்டில் வருமானம் நிறைய இருந்த போதிலும் என்னைத் திருமணம் செய்து கொள்வதற்காக மட்டுமே அரசு வேலையில் சேர்ந்தார். ஆனால் என்னுடைய தாயாரும் அவருடைய தந்தையும் சதி செய்து நம்மை பிரித்து விட்டார்கள்.
எனவே அவர் பெற்றோர் மீது கோபம் கொண்டு வீட்டிற்குச் செல்லாமல் முக்கியமான விசேங்களில் கூட கலந்து கொள்ளாமல் இருந்த சமயம் அவரது தாயார் என்னிடம் வந்து என் மகனை என் வீட்டிற்கு வரச் சொல் என்றும் நான் சொன்னால் தான் கேட்பார் என்றும் சொன்ன காரணத்தால் அவர்கள் முன்னிலையில் நானும் அவருக்கு அறிவுறை வழங்கி அதற்குப் பின்னர் தான் பெற்றோரைப் பார்க்க சென்று வந்து கொண்டிருக்கின்றார். அப்போது தான் திருமணம் செய்து கொள்ளவும் ஒப்புக் கொண்டார்.
பெண் பார்க்கும் படலத்தில் என்னைப் போன்றே பெண் வேண்டும் என்று அவரது தாயார் நினைக்கின்றார்கள். அது முடியாது என்பது அவருக்கு தெரிந்த காரணத்தால் அவரே ஒரு பெண்ணை பிடித்திருக்கின்றது என்று சொன்ன பின்னர் கூட அந்தஸ்தினை காரணம் காட்டி அவரது தந்தை நிராகரித்து விட்டதால் பெண் தேடி அலைந்து கொண்டு இருக்கின்றார்கள்.
அவருடைய தாயாருக்கு உங்களை நிச்சயம் பிடிக்கும். ஆனால் நமது மொழி பேசும் இனம் இல்லாத காரணத்தால் தயங்குவார்கள். அவர் நல்லவர். ஆனால் அவரது தந்தை எதிர்பார்ப்பது போல அவருக்குப் பெண் கிடைத்தாலும் அவருக்கு மன நிம்மதி கிடைக்குமா என்பது சந்தேகம். காரணம் என் நினைவலைகள்.
உங்கள் தாயார் சொல்வது போல அவரது பெற்றோர் நிச்சயமாக முழு சம்மதம் கொடுக்க மாட்டார்கள். எனவே உங்கள் தாயார் சொல்வது போல திருமணத்திற்குப் பின்னர் நீங்கள் இருவரும் உங்கள் பெற்றோர் போல் தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டு தனி வாழ்க்கை தான் வாழ வேண்டியிருக்கும். பிறக்கப் போகும் பிள்ளைகளுக்கு மணமுடிக்கும் சமயம் பலப்பல பிரச்சினைகள் வரும் எனவே உங்கள் தாயாரின் விருப்பம் நிறைவேறாது.
நேரடியாக நான் அவரை மறப்பது தான் நல்லது என்று சொன்னால் எனக்குக் கிடைக்காதது உங்களுக்குக் கிடைக்கக் கூடாது என்ற எண்ணம் என்று நினைப்பீர்கள். அது தவறு. அவருடன் வாழ நான் கொடுத்து வைக்கவில்லை. அது என் தலை விதி என்பது தான் என் நிலை என்று சொல்லி சமாதானப் படுத்தினேன்.
அந்த நேரத்தில் அந்தப் பெண்ணின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது. துக்கம் தாங்க முடியவில்லை. நான் இங்கு வரும் சமயம் அவரிடத்தில் உங்களுக்காக காத்திருப்பவரை ஏமாற்றக் கூடாது என்று மட்டும் சொல்லி அழைத்து வந்துள்ளேன். நான் அவரைத் திருமணம் செய்து கொள்வது பற்றி ஆலோசிக்க வந்துள்ளேன் என்பது அவருக்குத் தெரியாது எனவே தயவு செய்து இதனை நீங்கள் மறந்து விடுங்கள் அவரிடமிருந்து மறைத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். நானும் அந்தப் பெண்ணும் பேசியதை அவரிடமிருந்து முழுவதும் மறைத்து விட்டேன்.
அப்போது என் குழந்தையும் அவரும் கதவினைத் தட்டி நேரமாகி விட்டது புறப்படலாமா எனக் கேட்டனர். அப்போது அவருடைய சிநேகிதி சுக்கு மல்லி காபி போடுவது எப்படி என்று பேசிக் கொண்டிருந்தோம் என்று சொன்னாள்.
சிரித்துக் கொண்டே. நானும் டீ தூள் போடாமல் கிராம்பு டீ. காப்பித் தூள் போடாமல் சுக்கு மல்லி காபி. இது போல நிறைய பேசினோம் என்று சொல்லி வெளியில் வந்தவுடன் விடை பெற்று புறப்பட்டனர்.
இது வரையில் அவர் புறப்படும் சமயம் இருவர் மனம் சஞ்சலப்படும். இன்று எண்ணிக்கை அதிகம்.