மகளின் பெயர் ரகசியம் மற்றும் வரன் பார்த்தல்
அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் அவருடனும் அவருடைய தாயாருடனும் நிறைய கோயில் குளங்களுக்கு எல்லாம் சென்று கடவுள் வழிபாடு செய்தும் கூட ஜாதகப் பொருத்தம் மற்றும் அந்தஸ்தின் காரணமாக நாம் இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர முடியவில்லை என்பதற்காக சாமி கும்பிடுவதையே நிறுத்தி விட்டேன்.
ஆனால் அவருக்கு அறுவை சிகிச்சை என்று கேள்விப்பட்ட சமயம் என்னால் தெய்வத்தை வழி படாமல் இருக்க முடியவில்லை. அவர் பூரணமாக குணமடைய வேண்டும் என்பதற்காக வீட்டில் தொடர்ந்து அவர் உடல் நலம் பெற வேண்டி அவருக்காக வழிபாடு மேற்கொண்டேன். அந்த நேரத்தில் என் செல்லப் பெண் என்னுடன் பூஜையில் கலந்து கொண்டாள்.
என்னுடைய செல்லப் பெண் ஒரு நாள் என்னிடம் இன்று பூஜை போட வேண்டும் என்று சொன்னவுடன் நான் எதற்கு என்று கேட்டேன். அதற்கு பாபாவை பார்க்க வேண்டும் எனவே இன்று பூஜை போடலாம் என்று சொன்னது கேட்டு அவரைக் காண்பதில் என்னை விட என் மகள் ஆர்வமாக இருக்கின்றாள் என்பதனை அறிந்து கொண்டேன். இன்று லேட்டாகி விட்டது எனவே நாளை பூஜை போடலாம் என்று சொல்லி சமாதானப் படுத்தினேன்.
அடுத்த நாள் காலையிலேயே அவள் பூஜை எப்போது எனக் கேட்க ஆரம்பித்து விட்டாள். கோயிலுக்கு போய் பூஜை செய்து விட்டு வரலாம் என்று சொல்லி கோயிலுக்கு அழைத்துச் சென்று திரும்ப வரும் சமயம் கடையில் சாக்லெட் வாங்கி என் செல்லப் பெண்ணிடம் கொடுத்தேன். அவளுக்கு மிகுந்த சந்தோஷம். சாக்லெட்டுக்காகத் தான் பாபாவை எதிர் பார்க்கின்றாள் என்பது என் தப்பான எண்ணம்.
நான் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அன்றைய தினமே பிற்பகலில் அவர் என் இல்லத்திற்கு வந்தார். என் செல்லப் பெண் இன்று பூஜை செய்ததால் பாபா வந்துட்டார் என்றவாறே அவரிடம் ஒட்டிக் கொண்டாள். அவர் என்னவென்று கேட்டார். அதற்கு நான் அவர் ஆபரேஷனுக்கு சொந்த ஊர் சென்ற சமயம் உடல் நலம் பெற வேண்டி பூஜை செய்ததை பார்த்து பூஜை செய்தால் பாபா வருவார் என்று காலையில் சொன்னாள். அதற்காக கோயிலுக்குச் சென்று வந்தோம் என்று சொன்னேன்.
அப்போது அவர் அவருக்கு ஆபரேஷன் நடந்த நாளன்று அலுவலகத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றும் தோழியர் அனைவரும் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கிருத்துவ தேவாலயத்தில் காலையிலும்; அலுவலக வளாகத்திற்கு வெளியே உள்ள அம்மன் கோயிலில் மாலையிலும்; பிரார்த்தனை மேற்கொள்ளப் போவதாக எழுதியிருந்த கடிதத்தை அவரது தந்தை அறிந்து கொண்டு அவரது பெற்றோர் இருக்கும் சமயம் அவர்கள் ஏன் பிரார்த்தனை மேற்கொள்கின்றார்கள் என்று அவரது தாயாரிடம் கடிந்து கொண்டதாக தெரிவித்தார்.
நான் நினைக்கும் போதெல்லாம் வர முடியாத நீ;ங்கள் எப்படி செல்லப் பெண் நினைத்த மாத்திரத்தில் வர முடிகின்றது என்று கேட்டேன். என்னுடைய 14 வயதில் தான் அவர் என்னை சந்தித்ததாகவும் என்னுடைய மகளை நான் கருவில் சுமக்கும் பொழுதே நான் அவரையே நினைத்துக் கொண்டிருந்த காரணத்தால் என் மகள் நினைத்தவுடன் அவரால் வர முடிகின்றது என்றும் தெரிவித்தார். அவரை சோபாவில் அமர வைத்து என் மகள் அவர் மடியில் அமர்ந்து கொண்டாள்.
எந்த ஒரு இதிகாசத்திலும் எந்த ஒரு புராணத்திலும் எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு மதத்திலும் எந்த ஒரு ஜாதியிலும் எந்த ஒரு மொழியினைப் பேசும் இனத்திலும் ஒருவர் மடியில் மற்றொருவர் அமரும் உரிமை யாருக்கு இருக்கின்றதோ அல்லது கிடைக்கின்றதோ அவருக்கு அதிகாரம் செலுத்தும் உரிமை தானாக வந்து விடுகின்றது. எனக்கு அவரது மடியில் அமரும் உரிமை கிடைக்கவில்லை. அந்த உரிமை என் மகளுக்குக் கிடைத்திருக்கின்றது. எனவே என் மகள் எனக்கு கட்டளையிடுகின்றாள்.
பாபா வந்திருக்கின்றார். பாபாவுக்கு டிபன் கொண்டு வா. பாபாவுக்கு காபி கொடு. எல்லாம் என் தலை விதி என் நேரம். இருந்தாலும் ஒரு சந்தோஷம் எனக்குக் கிடைக்காதது அவளுக்குக் கிடைக்கின்றது.
நம் இருவரைத் தவிர வேறு யாருக்கு திருமணம் தடைப் பட்டு பிரிந்திருந்தாலும் ஒருவர் மீது ஒருவர் இப்படி அன்பு செலுத்தியிருக்க மாட்டார்கள். எதிர் காலத்தில் இவ்வாறு உண்மையான அன்புடனும் பாசத்துடனும் சந்திக்கவும் மாட்டார்கள். உடல் மட்டும் என்னை அவரிடமிருந்து பிரித்துள்ளது. இதயங்கள் ஒன்னாறகத் தான் இருக்கின்றன.
அவருக்கு திடீரென ஒரு சந்தேகம் ஏற்பட்டு விட்டது. என்னுடைய செல்லப் பெண்ணுக்கு நம் இருவர் பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஏன் சொன்னேன் என்று. அவரே என்னிடம் கேட்டார். அதற்கு நான் பதில் சொன்னேன்.
வழக்கமாக காதலில் தோல்வி ஏற்பட்டால் காதலியின் பெயரினை காதலனுக்குப் பிறக்கும் பெண் குழந்தைக்கோ அல்லது காதலனின் பெயரினை காதலிக்குப் பிறக்கும் ஆண் குழந்தைக்கோ வைப்பார்கள். அதே சமயம் காதலிக்கு வெறும் பெண் குழந்தைகள் பிறந்தாலோ அல்லது காதலனுக்கு வெறும் ஆண் குழந்தைகள் பிறந்தாலோ ஒருவர் நினைவாக மற்றொருவர் பெயர் வைக்க முடியாமலே போய் விடும்.
அது தவிர காதலன் காதலி இருவருடைய பெயர்களையும் பிறக்கும் குழந்தைகளுக்கு அப்படியே வைப்பது எதிர் காலத்தில் பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கும்.
பிள்ளைகள் பெரியவர்களாக வளர்ந்து விட்ட பின்னர் காதலர்கள் இருவரும் பிற்காலத்தில் சந்திக்க நேர்ந்தால் குழந்தைகள் தங்களின் பெயர் யாருடையது என்பதனை நேரடியாக தெரிந்து கொண்டு அந்த பெயரைத் தான் தனக்கு வைத்துள்ளார்கள் என்பதனை சுலபமாக அறிந்து கொள்வதுடன் கடந்த கால வாழ்க்கையின் ரகசியம் குழந்தைகளுக்குத் தெரிந்து விட்ட காரணத்தால் அவர்கள் தவறு செய்தால் கண்டிக்கும் சமயம் குழந்தைகளின் பேச்சு மரியாதைக் குறைவாக அமைந்து விடும்..
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அப்போதைக்கு நடைமுறையில் உள்ள புதுப்புது பெயர்களை வைக்க அப்போதைய சந்ததியினர் ஆசைப் படுவார்கள்.
அத்தோடு குழந்தைகள் சிறு வயதில் ஏதேனும் தவறு செய்தால் பெயர் சொல்லி அழைத்து திட்டவோ அல்லது கண்டிக்கவோ முடியாது. எனவே தான் இருவர் பெயரின் முதல் எழுத்துக்களைச் சேர்த்து பெயர் தேர்வு செய்யக் கேட்டுக் கொண்டேன். இதன் மூலம் பெயர் வைத்துள்ளதின் ரகசியம் யாருக்கும் தெரியாது என்று சொன்னேன்.
இதற்கு இடையில் என் செல்லப் பெண் எனக்கு கட்டளை இடுகின்றாள். எதற்கு வெட்டிப் பேச்சு. சீக்கிரம் போய் டிபன் கொண்டு வா. நான் அவருக்கு டிபன் கொண்டு வந்து கொடுத்தேன். அவள் அவருக்கு ஊட்டி விட்டாள். எனக்கு ஊட்டி விட சொன்னதற்கு உனக்கு நாளை ஊட்டி விடுகின்றேன். இன்று பாபாவுக்கு மட்டும் என்று சொன்னாள்.
அவரிடமிருந்து சாக்லெட் பெற்றுக் கொண்டு அதனை சாப்பிட்டுக் கொண்டே பாபாவுக்கு காபி கொண்டு வா சீக்கிரம் என்று சொன்னாள். வழக்கம் போல் காபியினை இருவரும் பகிர்ந்து பருகினோம்.
அந்த சமயத்தில் வெளியில் போயிருந்த என் கணவர் அவருடைய உறவினர்களுடன் வீட்டிற்குள் நுழைந்தார். உறவினர்கள் வந்ததும் அவர் புறப்படுவதற்கு விடை பெற்றார். அச்சமயம் என் கணவர் அவரை இன்னும் அரை மணி நேரம் இருந்து விட்டுத் தான் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எனக்கு விவரம் என்னவென்று புரியவில்லை.
வந்துள்ள உறவினர்கள் அவரை யாரென அறிமுகப் படுத்துமாறு கேட்டுக் கொண்ட சமயம் அவர்களிடத்தில் நீங்கள் யாருடைய ஜாதகத்தை என்னிடம் கொடுத்து இருக்கின்றீர்களோ அந்த மணமகன் இவர் தான் என்று சொல்லிக் கொண்டே வந்திருந்த உறவினரது மகளிடம் காபி கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அவருடைய ஜாதகம் இந்தப் பெண்ணின் ஜாதகத்துடன் பொருந்தி இருப்பதாகவும் ஏதேனும் விவரங்கள் தெரியுமா என்று கேட்டார்கள் என்றும் அவரைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் என்பதால் விவரம் தெரிந்து கொள்ள உறவினர்களை வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும் தெரிவித்து விட்டு அவரிடத்தில் நேரடியாக பேசினார்.
அவர் காபி சாப்பிட்டு விட்டார் என்று நான் சொன்னவுடன் குளிர்பானம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். எனது வீட்டில் இருந்த குளிர் பானத்தை அவரது உறவினரது பெண் கையால் கொடுத்து குளிர் பானம் அருந்திய பின்னர் உறவினர்கள் அனைவரும் அவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவர் என்னுடைய வீட்டில் இருக்கும் போதே உறவினர்கள் விடை பெற்றுத் திரும்பினர். அதன் பின்னர் அவரிடத்தில் அந்தப் பெண்ணை பிடித்து இருக்கின்றதா எனக் கேட்டார். அதற்கு அவர் நேரடியாக பதில் சொல்லாமல் பெற்றோர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவருக்கு இரண்டு பெண்கள் பிடித்த பின்னர் நகைகள் அதிகம் போட வேண்டும் என்று இரண்டு வரன்கள் தவறி விட்டதாகவும் தெரிவித்தார்.
எனது கணவர் அவரிடத்தில் ஒரு முக்கியமான விஷயம். நான் எனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த சமயம் ஜாதகத்தை என்னிடம் கொடுத்த சமயம் என் மனைவியிடம் விசாரித்து பதில் சொல்லுமாறு கேட்டுக்; கொண்டதுடன் அவர்களே விவரம் தெரிந்து கொள்ள நேரில் எனது வீட்டிற்கு வந்து விட்டார்கள. நானும் நீங்கள் இங்கு இருப்பது தெரியாமல் அவர்களை அழைத்து வந்து விட்ட காரணத்தால் திடீதெரன இந்த சம்பவம் நடந்து விட்டது. இருந்தாலும் பரவாயில்லை.
அதன் பின்னர் என் கணவர் அவரிடத்தில் இந்த சம்மந்தம் வந்தால் நீங்கள் வேண்டாம் என்று சொல்லி விடுங்கள் என்று சொல்லி விட்டு அந்த வீட்டில் நிறைய சொத்துக்கள் பண வசதி இருந்தாலும் ஒற்றுமை என்பதே கிடையாது எப்போதும் சண்டை சச்சரவுகள் நடந்து கொண்டே இருக்கும் அது தவிர உங்களிடத்தில் உள்ள பறந்த மனப் பான்மையை அவர்களிடத்தில் எதிர் பார்க்க முடியாது. எப்போதும் குறுகிய சிந்தனையுடன் குறுக்கு வழியில் யோசித்து குறுகிய வட்டத்திற்குள் தான் இருப்பார்கள். எனவே இந்த சம்மந்தம் வேண்டாம் என்று அவருக்கு அறிவுறை வழங்கினார்.
அவர் என் கணவரிடத்தில் பேசும் சமயம் நாசூக்காக இரண்டு வரன்கள் தவறி விட்டது என்று சொன்னதில் முதலாவதாக குறிப்பிட்டது என்னைப் பற்றி. இரண்டாவதாக குறிப்பிட்டது அவர் முதன் முதலாக பெண்பார்த்து வந்த அந்த மழழை வயதில் பழகிய பெண் பற்றி. என்னுடைய பிரிவு அவரது மனதினை எந்த அளவிற்கு புண்படுத்தியுள்ளது அதனால் அவர் பெற்றோர் மீது எவ்வளவு கோபத்தில் இருக்கின்றார் என்பதனை அறிந்து கொண்டேன்.
உயிருக்கு உயிராக நான் காதலித்தவருக்கு என் இல்லத்திலேயே இன்னொரு பெண்ணை வரனாக காண்பிப்பது மற்றும் நான் கொடுக்க வேண்டிய குளிர் பானத்தை என்னுடைய இல்லத்திலிருந்து என் கைகளால் இன்னொரு பெண்ணிடம் கொடுத்து அந்தப் பெண் அவருக்கு குளிர்பானம் கொடுத்து பெண் பார்க்கும் படலம் என்பது இரண்டு மனங்களையும் புண்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
அவர் என்னிடம் விடைபெற்றுத் திரும்பி விட்டார். ஆனால் அன்றிலிருந்து இரண்டு வாரங்கள் என் மனம் தாங்க முடியாக வேதனையில் இருந்தது. இரவு நேரங்களில் கண்ணீர் என்னைத் தூங்க விடாமல் வாட்டியது.