முதல் சம்மதம் மற்றும் முதல் ஸ்பரிசம்
நவக்கிரஹ திருத்தலங்களுக்கும் காளஹஸ்திக்கும் சென்று பரிகார பூஜைகள் செய்ததோடு திருவண்ணாமலை மற்றும் திருமலைக்குச் சென்று வழிபாடு செய்து வந்த காரணத்தால் என்னுடைய தங்கையின் மகள்களுக்கு திருமணத்திற்கான வரன்கள் வர ஆரம்பித்தன.
பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டாரில் சிலர் என்னை மணப்பெண் என்று கருதி வந்து ஏமாற்றமடைந்தது என்னுடைய அக்காவின் கணவருக்கு தெரியவந்தது.
ஒரு சிலர் என்னுடைய தங்கையின் மகளுக்குப் பதிலாக என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தது அவர்களுக்கு ஒரு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
எனவே என்னுடைய தங்கையின் மகள்களுக்கு திருமணத்திற்காக பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வரும் சமயம் என்னை என்னுடைய உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதன் காரணமாக எனது தங்கையின் மகள்களுக்கு வரன்கள் வரும் சமயம் திட்டமிட்டு என்னை முன்கூட்டியே ஏதாவது ஒரு உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைப்பது வாடிக்கையாகி விட்டது.
ஒரு சில சமயம் ஒன்றிரண்டு நாட்கள். ஒரு சில சமயம் ஒன்றிரண்டு வாரங்கள் என நான் உறவினர் வீடுகளுக்குச் சென்று தங்க வேண்டி இருந்தது.
அந்த கால கட்டங்களில் நான் அவரை முன்பு போல அடிக்கடி தினமும் பார்க்கவோ நீண்ட நேரம் மனம் விட்டுப் பேசவோ முடியவில்லை.
சில நேரங்களில் முன் கூட்டியே தகவல் தெரிந்தால் அவரிடம் சொல்லி விட்டு வேடிக்கையாக அத்தை மகனே போய் வரவா என்று பாட்டுப் பாடி அனுமதி பெற்று சென்று வருவேன். சில நேரம் அவர் கல்லூரிக்குச் சென்றிருக்கும் சமயம் அனுப்பி வைப்பார்கள. நான் எங்கு சென்றிருக்கிறேன் என்பது கூட அவருக்குத் தெரியாது
கல்லூரியிலிருந்து திரும்ப வந்தவுடன் வழக்கம் போல் என்னைப் பார்க்க முயலுவார். நான் இல்லாதது கண்டு வேதனைப் படுவார். நான் இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்து என்னைப் பார்க்க வந்தாலும் என்னால் அவருடன் நீண்ட நேரம் நெருக்கமாக மனம் விட்டுப் பேச முடியாது. இவ்வாறு ஒரு வருடம் இருவரும் கஷ்டப் பட்டோம்.
இதற்கிடையில் கல்லூரியில் புகுமுகத் தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டார். அடுத்து பொறியியல் படிப்பதற்காக பொறியியல் கல்லூரியில் சேர வேண்டும். அதற்கு விண்ணப்பித்தார்.
பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது. கல்விக்கான கட்டணம் செலுத்துமாறு கூறி கடிதம் கூட வந்து விட்டது. ஆனால் அவரது தந்தை அவரை பொறியியல் படிப்பு படிக்க அனுமதிக்கவில்லை.
அதற்கு உண்மையான காரணம் மறைக்கப் பட்டு பணப் பிரச்சனை என்று ஒரு பொய்யான காரணம் சொல்லப்பட்டது. ஆனால் பள்ளியிலேயே அவர் ஸ்காலர்ஷிப் கிடைத்து அதில் தான் படித்துள்ளார். எனவே கல்லூரியில் படித்தாலும் ஸ்காலர்ஷிப் கிடைக்கும் என்று அவர் தந்தையிடம் எவ்வளவோ கெஞ்சியும் வாதாடியும் அவர் பேச்சை அவரது தந்தை கேட்கவில்லை.
பொறியியல் அல்லாத வேறு ஏதேனும் கல்லூரிகளில் கூட அவரைப் படிக்க வைக்க அவரது தந்தை ஒப்புக்கொள்ளவில்லை.
காரணம் என்னவெனில் மேற்கொண்டு படிக்க வைத்தால் தமது தொழிலிலும் வாணிபத்திலும் ஒத்தாசையாக இருக்கும் தனது மகன் வேலைக்குச் சென்று விடுவான் தனக்கு வருமானம் குறைந்து விடும் என்பதை மட்டும் தான் அவருடைய தந்தை யோசித்தாரே தவிர தனது மகனின் அபிலாஷைகளை நிறைவேற்ற முற்படவில்லை.. அவருடைய தந்தை அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற விரும்பவில்லை.
அவருடைய தாயாருக்கு அவர் நன்கு மதிப்பெண்கள் எடுத்த காரணத்தால் பொறியியல் பட்டதாரியாக காண வேண்டும் என்னும் ஆசை வளர்ந்தது. அவருடைய நீண்ட கால பொறியியல் பட்டதாரியாகும் கனவு மற்றும் அவருடைய தாயின் விருப்பம் ஆகியவை ஈடேறவில்லை என்ற காரணத்தால் அவர் மன விரக்தியின் உச்சிக்கே போய் விட்டார்.
இவ்வாறு அவரது தந்தை என்னுடைய தாயாரிடம் சொன்னதற்கு அவர் ஒரு விளக்கம் அளித்தார். அது என்னவெனில் இவ்வாறு அவருடைய தந்தை என்னுடைய தாயாரிடம் சொல்லி வைத்தால் அவருடைய தந்தையிடம் என்னுடைய வீட்டிலிருந்து யாரும் வந்து மேலும் படிக்க வைக்குமாறு சிபாரிசு செய்து கட்டாயப்படுத்த மாட்டார்கள் என்பது தான்.
அதே சமயம் எனக்கும் உள்ளுர ஒரு பயம் இருந்தது. அவர் மேலும் மேலும் படித்துக் கொண்டே சென்றால் அதற்குத் தகுந்தவாறு அவரது குடும்பத்தார் வரன் தேடுவார்கள். எனக்கு அவருக்கு நிகரான படிப்பு இல்லை. என்குடும்பத்தாருக்கு போதுமான வசதிகள் இல்லை. அதனால் நான் நிராகரிக்கப்படலாம் என்பது.
இந்த நிலையில் தான் அவர் நேரடியாக என்னிடம் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்டார். நானும் என்னுடைய பூரண சம்மதத்ததை தெரிவித்து விட்டேன்.
நீண்ட நாட்கள் நெருக்கமாக மனம் விட்டு பேசிப் பழகி நாம் இருவரும் அன்றில் பறவை போல ஒருவரை விட்டால் மற்றொருவர் இல்லை என்னும் நிலைக்கு வந்த பின்னர் தான் அவர் என்னிடம் சம்மதம் கேட்டார். அன்றில் பறவை தன் துணையுடன் சேர்ந்தே வாழும். துணையில் ஒன்று பிரிந்தாலும் குரல் எழுப்பும். இந்தக்குரல் அகவல் எனப்படும். அதே போல ஆண் பறவையும் பெண் பறவையும் சேர்ந்து இருக்கும் போது எழுப்பும் குரலை உளறல் என்று சொல்வார்கள். அதே போல் பெண் பறவை கருவுற்றிருக்கும் சமயம் எழுப்பும் குரலை நரலல் என்று சொல்வார்கள்.
இது போன்ற நிலை நம் இருவருக்கும் வந்து விட்டது. இந்த நிலையில் தான் அவர் என்னிடம் சம்மதம் கேட்டவுடன் தாமதிக்காது என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தேன். அதுவரையில் இலைமறைவு காய் மறைவாகத் தான் எங்களின் காதல் இருந்தது.
எனக்கு ஒரு பக்கம் பயம். என்னவெனில் அவருக்கு மிகப்பெரிய இடத்தில் அவருக்கு அவரது தந்தை மணப்பெண்ணைப் பார்ப்பாரேயானால் நான் அவரை இழக்க நேரிடும். அவர் என்னை இழக்க ஒருபோதும் தயாராக இல்லை. இதுவும் தவிர நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு வயதும் இல்லை வருமானமும் இல்லை. காத்திருந்து தான் ஆக வேண்டும்.
இந்த சமயத்தில் அவர் என்னைத் தொட்டுப் பேச அனுமதி கேட்டார். நான் மறுத்தால் விரக்தியாகி விடுவார் என்பதற்காக ஒரு சிறு உரையாடலுக்குப் பின்னர் என்னுடைய ஆள் காட்டி விரலை தொட என்னுடைய முழு சம்மதத்தை தெரிவித்தேன். ஆனால் அந்த சம்மதம் எதிர் காலத்தில் அவர் வெற்றிலை பாக்கு பீடி சிகரட் மது போன்ற எந்த வகையான தீய பழக்கங்களுக்கும் அடிமையாகி விடாத ஒரு எதிர்கால சங்கல்பத்தை எடுக்க வைத்து விட்டது.
என்னுடைய முதல் ஸ்பரிசம் அவருக்கு மன அமைதியைக் கொடுத்த அதே சமயம் அது எனக்கு மிகுந்த ஆனந்தத்தைக் கொடுத்தது.