மகளுக்கு திருமண ஏற்பாடுகள்
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும். ஆனால் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வருகின்ற மகாளய அமாவாசை ஆகியவற்றிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வரும். ஆனால் சித்ரா பௌர்ணமிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
மாதா மாதம் மகம் நட்சத்திரம் வந்தாலும் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வருகின்ற மகாமகத்திற்கு மட்டும் மக்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அதே போல கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீட்டர் உயரத்தில் உள்ள மலைப் பிரதேசங்களில் மட்டுமே வளரும் குறிஞ்சிப் பூக்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பூக்கும்.
வேலைப்பளு மற்றும் அடிக்கடி இடமாறுதல் காரணமாக அவரது வருகை வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாக இருந்தாலும் தீபாவளிக்கு எனக்கு புத்தாடைகள் வாங்கி வந்து நாம் இருவரும் தீபாவளியன்று தான் பிரிய நேரிட்டது என்பதனை நினைத்து வருத்தப்பட வேண்டாம் என்பதனை கருத்தில் கொண்டு அவரது பதவி உயர்வு அல்லது அவரது பிறந்த நாள் (எனது பிறந்த நாள் என்றால் எனது குழந்தைகளுக்குத் தெரிந்து விடும்) போன்ற வேறு ஏதேனும் விசேஷ நாட்களில் எனக்கு மட்டும் புத்தாடைகள் வாங்கி வருமாறு அன்புடன் கேட்டுக் கொண்டேன். ஆனால் காலன் செய்த சதியினால் ஏற்பட்ட அவரது தாயின் மறைவினால் என்னுடைய வேண்டுகோளை அவரால் கடைப்பிடிக்க முடியாமல் போய் விட்டது.
இதற்கிடையில் அவருக்கு அரசாங்க வேலை கிடைத்தவுடன் நானும் அவரும் சேர்ந்து அவரது ஜாதகத்தை ஜோதிடரிடத்தில் காண்பித்த போது ஜோதிடர் சொன்ன படி அவருக்கு சொந்த ஊரிலேயே வேலை பார்க்கும் பாக்கியம் கிடைத்து விட்டது என்பதனை என்னிடத்தில் அவர் தெரிவித்த போது இனி வருங்காலங்களில் நேரடியாக சொந்த ஊருக்கு சென்று வரும் சமயம் அவரைக் காண முடியும் என்னும் சந்தோஷம் கரை புரண்டது.
அதன் படி அவரைக் காண நான் முடிவு செய்து சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்ற அதே நாளில் அதே நேரத்தில் அவர் என்னைக் காண அதே நாளில் அதே நேரத்தில் நான் வசிக்கும் ஊருக்கு புறப்பட்டு வந்து மறு நாள் என்னுடைய இல்லத்திற்கு என்னை சந்திக்க வந்து நான் இல்லாமல் என்னைப் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி விட்டார். அதே போல நான் அவரைக் காண முடியாத ஏக்கத்துடனும் ஏமாற்றத்துடனும் எனது சொந்த ஊரிலிருந்து என் கணவரது ஊருக்கு புறப்பட்ட அதே நாள் அதே நேரத்தில் அவர் அங்கிருந்து புறப்பட்டு சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார் என்பதனை அறிந்த நான் எப்படி வருந்தினேனோ அதே நிலை தான் அவருக்கும். இதன் மூலம் மனமொத்த ஒன்று பட்ட இதயங்கள் இரண்டும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி தான் சிந்திக்கும் என்பதனை நாம் இருவரும் உணர்ந்து கொண்டோம். ஆனால் இருவரும் சந்திக்க முடியவில்லை என்னும் வருத்தம் நம் இருவருக்கும் இருந்தது.
அவர் என்னைச் சந்தித்துச் சென்றால் நான் சில நாட்கள் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு இல்லறம் நடத்த முடியவில்லையே என்னும் சோகத்திலிருந்து மீண்டு வர எனக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் பிடிக்கும். அவர் என்னை சந்தித்து விட்டுச் சென்றால் நாம் இருவரும் வாழ்க்கையில் பிரிந்த சோகம் என்னை வாட்டும். அவரது வருகையின் போது உறவினர்கள் யாரேனும் இருந்து அதன் காரணமாக நீண்ட நேரம் பேச முடியாமல் சீக்கிரம் அவர் திரும்பி விட்டால் அதற்கும் வருத்தப் படுவேன். அவரது வருகை தள்ளிப் போய் விட்டால் அவரது உடல் நிலை பாதிக்கப் பட்டிருக்குமோ எனவும் அதனால் தான் என்னைப் பார்க்க வரவில்லையோ எனவும் கவலைப் படுவேன். மொத்தத்தில் வந்தாலும் சோகம். வராவிட்டாலும் சோகம்.
எங்கே போனாலும் என்னுடன் நிலவு வருகின்றது. நிலவு வெளிச்சத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக கண்ணாடி போல பிம்பத்தை பிரதிபலிப்பதாக இருந்தால் நான் இருந்த இடத்திலிருந்தே இந்தியாவில் எந்த மூலையில் அவர் இருந்தாலும் நான் அவரை காண முயற்சிப்பேன். அவ்வாறான ஒரு நிலை வருமேயானால் சூரியனைப் போல் எல்லா நாட்களிலும் வட்ட வடிவில் நிலா இருக்க வேண்டும் என பேராசைப் படுவேன்.
நானும் என் கணவரும் ஒரு வளர்பிறை சுப முகூர்த்த நாளன்று வீட்டில் திருமண தரகர் ஒருவரை வரவழைத்து அவரிடத்தில் செல்லப் பெண்ணின் ஜாதகத்தை கொடுத்து வரன் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் அவரது வருகை சற்றும் எதிர்பாராமல் அமைந்தது. அவர் வந்தவுடன் என் கணவர் அவரை வரவேற்று தரையில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் அமருமாறு கேட்டுக் கொண்டார்.
அவரும் வேறு எதுவும் கேட்காமல் எங்களுடன் அமர்ந்து கொண்டார். அவர் எங்களுடன் அமர்ந்தவுடன் என் கணவர் அவரிடத்தில் மகளுக்கு திருமணத்திற்காக வரன் பார்ப்பதற்காக ஜாதகத்தை தரகரிடத்தில் கொடுக்க இருப்பதாகவும் நல்ல நேரம் பார்த்து அவர் வந்து இருப்பதாகவும் சொல்லி மிகவும் சந்தோஷப் பட்டார்.
எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். காரணம் விழித்திருக்கும் போது அவரது நினைவாகவும் தூக்கத்திலிருக்கும் போது அவரது கனவாகவும் இருந்த சமயத்தில் பிறந்த செல்லமகள் திருமண ஏற்பாடுகளின் போது அவர் பங்கேற்பது. அதுவும் தவிர காதலில் தோற்றாலும் பரவாயில்லை. காதலி தோற்கக் கூடாது என்று நினைப்பவர் சரியான நேரத்தில் வருகை தந்துள்ளார்.
அவரிடத்தில் என் கணவர் நமது செல்லப் பெண்ணுக்கு வரன் பார்ப்பதற்கு ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது அவர் என்னைப் பார்த்த பார்வையினை நான் உணர்ந்து கொண்டு அறிவுறைகள் வழங்குமாறு கண் ஜாடையின் மூலம் தெரிவித்தேன். என் கணவர் அவரிடத்தில் செல்லப் பெண்ணிற்கு எவ்வாறான வரன் பார்க்க வேண்டும் என்று நீண்ட நேரம் கலந்து ஆலோசித்து திருமண தரகரிடத்தில் தெரிவித்தார்.
திருமண தரகரிடத்தில் செல்லப் பெண்ணின் ஜாதகத்தை கொடுக்க ஏற்பாடு செய்த போது முதன் முதலில் ஜாதகம் தரகரிடத்தில் கொடுக்கும் சமயம் வீட்டில் ஜாதகத்தை வைத்து பூஜை செய்து அதன் பின்னர் தான் தட்சணையுடன் கொடுக்க வேண்டும் எனச் சொல்லி அவர் வாங்கி வந்திருந்த இனிப்பு மற்றும் காரம் ஆகியவற்றையும் வீட்டில் இருந்த கல்கண்டையும் சேர்த்து சாமி மாடத்தில் வைத்து பூஜை செய்த பின்னர் தரகரிடத்தில் ஜாதகத்தை கொடுக்க தயாரானோம்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் நாம் இருவரும் சேர்ந்து தான் செல்லப் பெண்ணிற்கு காதில் மூன்று முறை சொல்லி பெயர் வைத்தோம். தற்போது செல்லப் பெண்ணின் ஜாதகத்தின் நான்கு மூலைகளிலும் நடுவிலும் மஞ்சள் தடவி தரகரிடத்தில் ஒப்படைக்க உதவி செய்தது மட்டுமல்லாமல் அவர் முன்னிலையில் தான் செல்லப் பெண்ணின் திருமணத்திற்கான முதலாவது வழிபாடு அமைந்தது. திருமண ஏற்பாடுகள் செய்யும் சமயத்தில் கூட முதன் முதலாக அவர் கொண்டு வந்திருந்த இனிப்பு காரம் ஆகியவற்றை வைத்து பூஜை செய்து அனைவருக்கும் பரிமாறினேன்.
தரகரிடம் ஜாதகத்தை கொடுத்த சமயத்தில் என் செல்லப்பெண் வீட்டிற்குத் திரும்பினாள். அவளுக்கு ஒரே ஆச்சர்யம். அவரைப் பார்த்தவுடன் பாபா எப்போது வந்தீர்கள் நீங்கள் வருவது முன் கூட்டியே தெரிந்திருந்தால் நான் வெளியில் போகாமல் வீட்டிலேயே இருந்திருப்பேன் என சிரித்துக் கொண்டே சொன்ன சமயம் தரகர் பெண் மிகவும் அழகாகவம் படித்தவளாகவும் இருப்பதால் விரைவில் திருமணம் முடிவாகி விடும் எனச் சொன்னார்.
செல்லப் பெண்ணின் ஜாதகத்தை பெற்றுக் கொண்ட தரகர் பெண்ணின் அழகு உயரம் நட்சத்திரம் படிப்பு மற்றும் அந்தஸ்து ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு சில ஜாதகங்களை கொடுத்தார். அவற்றைப் பெற்றுக் கொண்ட என் கணவர் தரகர் கொடுத்துள்ள ஜாதகங்களை ஜோதிடரிடத்தில் காண்பித்த பின்னர் தகவல் சொல்வதாகச் சொன்ன சமயம் தரகர் விடை பெற்றார்.
அப்போது என் கணவர் ஏற்கனவே வாங்கி வைத்திருந்து ஒரு புதிய நோட்டினை அவரிடத்தில் கொடுத்து செல்லப் பெண்ணின் திருமணத்திற்கு அழைக்க வேண்டிய பட்டியலாக அவரது பெயரினை முதலாவதாக ஏழுதச் சொன்னார். அவரும் நோட்டினைப் பெற்றுக் கொண்டு அவரது வீட்டு விலாசம் மற்றும் அலுவலக முகவரி இரண்டினையும் எழுதிக் கொடுத்தார். அந்த நோட்டினை என் கணவர் பெற்றுக் கொண்டு பார்த்தவுடன் நீங்கள் ஆபீசர் ஆகி விட்டீர்களா எனக் கேட்ட சமயம் அவர் அவருக்கு பதவி உயர்வு கிடைத்த விவரம் தெரிவித்தார். என்னிடத்தில் ஏற்கனவே சொல்லி விட்டார் என்பது என் கணவருக்குத் தெரியாது.
அதன் பின்னர் என் கணவர் என்னிடத்தில் அவரது வீடு தெரியுமா எனக் கேட்டார். அவர் வாடகை வீட்டில் வசித்து வருவதாகத் தெரிவித்த காரணத்தால் நான் தெரியாது எனக்கூறி தப்பித்துக் கொண்டேன்.
அதன் பின்னர் என் கணவர் என் மகளின் ஜாதகத்தில் ஒன்றினை அவரிடத்தில் கொடுத்து எனக்கு முதலாவதாக மகன் பிறந்து இருந்தால் உங்களுக்குப் பிறந்துள்ள மகளை மணமுடித்து வைத்திருப்பேன். (என் கணவர் அவரிடத்தில் பேசியது என்னுடைய எண்ணங்களை பிரதிபலிப்பதாகவே இருந்தது.) ஆனால் இறைவன் அந்த பாக்கியத்தை நம் இருவருக்கும் கொடுக்கவில்லை. இருந்தாலும் நீங்கள் என் மகளின் ஜாதகத்திற்கு ஏற்ற வரன் உங்கள் உறவுகளில் இருந்தால் தெரிவியுங்கள். ஜாதகம் பொருந்தியிருந்தால் முடிவு செய்யலாம் எனச் சொன்ன சமயத்தில் ஜாதகப் பொருத்தம் பார்ப்பது தொடர்பாக சில ஆலோசனைகளை வழங்கினார். அவர் சொன்ன அறிவுறைகள் முற்றிலும் நம் இருவருக்கிடையே நடந்தவை என்பதனை நான் மட்டும் அறிந்து கொண்டேன்.
அதன் பின்னர் என் கணவர் தரகரை வழியனுப்ப வெளியில் சென்ற சமயம் நான் அவரிடத்தில் பார்த்தீர்களா நாம் இருவரும் சேர்ந்து பெயர் வைத்த நம் மகளுக்கு நாம் இருவரும் சேர்ந்து திருமண ஏற்பாடுகளுக்காக ஜாதகம் கொடுக்கும் நிலையினை ஆண்டவன் உருவாக்கி இருக்கின்றான் எனச் சொன்ன சமயம் அவர் மிகவும் சந்தோஷப் பட்டார். அதன் பின்னர் அவரிடத்தில் அவருக்கு வேலை கிடைத்தவுடன் ஜோதிடம் பார்த்தவரிடத்தில் மகளின் ஜாதகத்தை காண்பித்து எவ்வாறான வரன் அமையும் என அறிந்து கொண்டு எனக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
செல்லப் பெண்ணை அழைத்து பார்த்தாயா உன்னுடைய பாபா சரியான நேரத்திற்கு வந்து திருமணம் தொடர்பான ஆலோசனைகள் வழங்கி இருக்கின்றார் எனச் சொன்னவுடன் என்னுடைய பாபா வராமல் எனக்கு நல்லவைகள் எதுவும் நடக்காது என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என்பதனை வீட்டில் நுழையும் போதே உணர்ந்து கொண்டேன் எனச் சொல்லி விட்டு உடை மாற்றுவதற்குச் சென்று விட்டாள்.
அந்த நேரத்தில் அவர் இங்கு எதற்காக வந்துள்ளார் என்னும் விவரத்தையும் எப்போது திரும்புவார் என்னும் விவரங்களையும் முழுமையாக அறிந்து கொண்டேன். அவர் சொன்ன விவரங்கள் சற்று சோகமானவை என்பதனை அறிந்து கொண்ட நான் எனக்குத் தெரிந்த சில வழி முறைகளைச் சொன்னேன். அவரும் சரியென ஒப்புக் கொண்டார். அவரது வருகையினால் ஒரு நன்மை. அவர் வந்துள்ள காரணம் என் மகளுக்கு நான் எப்படி வரன் பார்க்க வேண்டும் என்பதனை தெளிவாக அவர் நமக்கு உணர்த்த ஒரு படிப்பினையாக இருந்தது என்பது உண்மை.
தரகரை வழியனுப்பச் சென்ற என் கணவர் வீடு திரும்பியவுடன் அவரிடத்தில் தெரிவித்து விட்டு அவர் புறப்படத் தயாரான நேரத்தில் என் செல்லப் பெண் அவரிடத்தில் இன்று அவள் முதன் முறையாக சமைக்கப் போவதாகவும் கட்டாயம் சாப்பிட்டு விட்டுத் தான் செல்ல வேண்டும் எனவும் அன்புக் கட்டளை பிறப்பித்தாள். அதன்படி என் செல்லப் பெண் சமைக்க நானும் என் செல்லப் பெண்ணும் சேர்ந்து அவருக்கும் என் கணவருக்கும் பரிமாறினோம். என் செல்லப் பெண் சமைத்த உணவினை சாப்பிட்டு முடித்தவுடன் அவர் நம்மிடத்தில் இருந்து விடை பெற்று புறப்பட்ட சமயம் நானும் என் செல்லப் பெண்ணும் சந்தோஷமாக வழியனுப்பி வைத்தோம்.
செல்லப் பெண்ணின் ஜாதகத்தை சொந்த ஊரில் ஏற்கனவே நம் இருவருக்கும் அறிமுகமான ஜோதிடரிடத்தில் காண்பித்து அந்த தகவலை தெரிவிக்குமாறு என் கணவர் தரகருடன் சென்ற சமயம் கேட்டுக் கொண்டேன். என்னுடைய வேண்டுகோளின்படி ஜோதிடர் சொன்ன தகவல்களை சொல்வதற்கு கட்டாயம் விரைவில் எனது இல்லம் தேடி வருவார் என எதிர்பார்த்து வழி மீது விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்தேன்.
அவர் அலுவலக வேலைப் பளுவின் காரணமாக வர முடியாத சூழ்நிலையில் என் மகளுக்கு கடற்கரையினை ஒட்டியுள்ள நகரங்களில் பணியாற்றும் வரன் தான் அமையும் என ஜோதிடர் திட்ட வட்டமாகத் தெரிவித்ததாக என்னிடத்தில் தொலை பேசியில் தெரிவித்தார். இந்த முறையும் ஜோதிடர் சொன்னபடி என் மகளுக்கு கடற்கரையினை ஒட்டி அமைந்துள்ள நகரத்தில் தான் வரன் அமைந்தது. ஆனால் வரன் அருகில் இல்லை. மகளைப் பார்க்க வேண்டுமெனில் இரவு முழுக்க இரயில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதனை நினைக்கும் போது சற்று கவலையாக இருந்தது.