மாலை வகுப்புகள்
விடுமுறை நாட்களில் நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றேனோ அந்த அளவிற்கு மற்ற நாட்களில் அதாவது பள்ளி கல்லூரி திறந்திருக்கும் நாட்களில் சந்தோஷமாக இருக்க முடியவில்லை.
காரணம் காம்பவுண்டில் உள்ள எனக்குச் சமமான வயதுடைய அனைவரும் படிப்பில் கவனம் செலுத்தி ஒருவருக்கொருவர் படிப்பில் ஏற்படும் சந்தேகங்களை அவர்களுக்குள் கேட்டுக் கொண்டு படித்துக் கொண்டும் வீட்டுப் பாடங்களை எழுதிக் கொண்டும் இருப்பார்கள். வேறு விஷயங்கள் எதுவும் பேசி நேரத்தை வீணடிக்க மாட்டார்கள்.
அனைவரும் படித்து முடித்த பின்னர் தத்தமது நோட்டு புத்தகங்களை ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு பேச ஆரம்பிப்பார்கள். எனக்கு அதுவரையில் அவர்களை வேடிக்கை பார்ப்பதே வேலையாக இருக்கும்.
அனைவரும் மும்முரமாக படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் மாத்திரம் இருக்க மாட்டார். தன்னுடைய தந்தையின் தொழிலில் ஒத்தாசையாக இருந்து வந்ததால் தந்தை என்ன என்ன வேலை சொல்கின்றாரோ அந்த வேலைகளை முடிக்கும் பொருட்டு வெளியே சென்று விட்டு வருவார்.
அவரைக் காணவில்லை என்று கேட்டமைக்கு அவர் டைப்ரைட்டிங் கிளாசுக்கு போவதாக அனைவரும் சொன்னார்கள். மேற்கொண்டு கேட்டதற்கு அடுத்த சில நாட்களில் டைப்ரைட்டிங் பரிட்சை வருகின்றது. எனவே வெகு மும்முரமாக டைப்ரைட்டிங் கிளாசுக்கு சென்று வருகின்றார் என்றும் அதனை இங்கு படிக்க முடியாது. டைப்ரைட்டிங் பயிற்சிப் பள்ளியில் தான் வேகமாக டைப் அடித்து பழக முடியும் என்று சொன்னார்கள்.
அடுத்த இரண்டு நாட்களில் பரிட்சை முடிந்து விடுவதாக சொன்னார்கள். பரிட்சை முடிந்தவுடன் அவருக்கு சற்று ஓய்வு கிடைத்து அனைவருடனும் சந்தோஷமாக பொழுதை கழிக்க வருவார் என்று நினைத்தேன். அதனால் எனக்குள் ஒரு சந்தோஷம்.
அனைவருடனும் சேர்ந்து நான் அவருடன் நீண்ட நேரம் உரையாட முடியாதது எனக்கு ஏதோ ஒன்றை இழக்கின்றோமோ என்னும் சோகத்தைத் தந்தது. இருந்தாலும் அனைவரும் அவரவர் வீடுகளுக்குத் திரும்பும் முன்னர் அவர் வந்து சேர்ந்து விடுவார். ஆனால் பேசும் நேரம் குறைவாகத் தான் இருக்கும். அவருடன் பேச எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டிருப்பதால் என்னால் அவருடன் நீண்ட நேரம் பேச முடியாது.
இரண்டு நாட்களில் டைப்ரைட்டிங் பரிட்சை முடிந்து விட்டது என்று மிக்க சந்தோஷமாக அனைவரிடமும் தெரிவித்து மகிழ்ச்சியுடன் பேசினார்.
ஆனால் மீண்டும் டைப்ரைட்டிங் கிளாசுக்கு போக ஆரம்பித்து விட்டார். எனக்கு சந்தேகம் வந்து விட்டது. பரிட்சை முடிந்து விட்டது என்று சொன்னார்கள். ஆனால் மீண்டும் கிளாசுக்கு போக ஆரம்பித்து விட்டாரே. பரிட்சையில் பெயில் ஆகி விட்டாரோ என்று எனது உள்மனம் கவலைப்பட ஆரம்பித்தது.
அனைவரிடமும் இது பற்றி கேட்ட போது தற்போது ஆங்கிலம் லோயர் பரிட்சை முடித்துள்ளார். அடுத்தது ஹையர் பரிட்சைக்கு தயாராகிறார். அடுத்து ஹைஸ்பீடு என்று ஒரு பரிட்சை இருக்கின்றது. அவர் தற்போது இங்கிலீஷ் டைப்ரைட்டிங் பழகுகின்றார்.. அதன் பின்னர் தமிழ் டைப்ரைட்டிங் பழகுவார். அதிலும் லோயர் மற்றும் ஹையர் உண்டு. இதுவும் தவிர சுருக்கெழுத்து வகுப்பிற்கும் சென்று வருவதால் அவர் மிகவும் பிசியாக இருக்கின்றார் என்று சொன்ன போது எனக்கு என்னமோ போல இருந்தது.
இவை எல்லாம் தேறி விட்டால் மிக மிக விரைவில் அரசாங்க வேலை அல்லது வங்கி போன்ற பொதுத் துறை நிறுவனங்களில் வேலை கிடைத்து விடும் என்று சொன்னார்கள். அவருடன் சந்தோஷமாகப் பேச முடியவில்லை என்னும் சோகம் அவர் வேலையில் சேருவதன் பொருட்டு மும்முரமாக இருக்கின்றார் என்பதனை நினைத்து எனக்குள் ஒருபுறம் சந்தோஷம்.
காலையில் எழுந்ததும் பெற்றோருக்கு உதவி. பின்னர் பள்ளிக்குச் சென்று வருதல். பள்ளி சென்று திரும்பியவுடன் தந்தை சொன்ன வேலைகளை கவனித்தல். இத்துடன் டைப்ரைட்டிங் மற்றும் சுருக்கெழுத்து பயிற்சிகள் என எப்போது பார்த்தாலும் சுருசுருப்பாக இருப்பதால் நான் அவரைப் பார்ப்பதே அரிதாக இருந்தது.
எவ்வளவு பேர் எவ்வளவு சந்தோஷமாக இருந்தாலும் என்னுடன் அனைவரும் சந்தோஷமாக பழகிப் பேசி வந்தாலும் அவர் இருக்கும் சமயம் நான் அடையும் சந்தோஷம் அவர் இல்லாத போது எனக்குக் கிடைப்பதில்லை. காரணம் எனக்குப் புரியவில்லை என்னால் சொல்லவும் முடியவில்லை.
நானும் அவரும் பார்த்துக் கொண்டேயிருந்தால் பேசவே தேவையில்லை. நானும் அவரும் பேசிக் கொண்டேயிருந்தால் எனக்கு உணவே தேவையில்லை. உறக்கமும் வராது என்னும் நிலைக்கு என்மனம் அவரை நாட ஆரம்பித்தது. ஆனால் அவரோ எப்போது பார்த்தாலும் வேலை அல்லது பயிற்சி அல்லது படிப்பு என்று இருப்பதால் அவரது உண்மை நிலை எனக்குத் தெரியவில்லை.
ஆனால் ஒன்று. அவர் என்னுடன் சிறிது நேரம் உரையாடினாலும் என் மனம் மிகவும் சந்தோஷப்படுகின்றது. அவரும் என்னுடன் மிக சந்தோஷமாக உரையாடுகின்றார்.
அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் சமயம் நான் முன்னால் எனது வீட்டிற்குத் திரும்பி விட்டால் அவரும் திரும்பி விடுவார். அதே போல அவர் அந்த இடத்தை விட்டு சென்று விட்டால் எனக்கு இருப்புக் கொள்ளாமல் நானும் திரும்பி விடுவேன். அதே சமயம் இருவரும் கண்களால் விடை பெறும் காட்சியை அனைவரும் ரசனையுடன் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார்கள்.
இதனை கவனித்து வந்த மற்றவர்கள் ராஜா போனால் ராணி சொல்லிக் கொள்ளாமல் போய் விடுவார். ராணி போனால் ராஜா தேடுவார் என்று கேலி செய்ய ஆரம்பித்தார்கள். எனக்கு உள் மனது மிக மிக சந்தோஷப்படும்.
ஆனால் அவர் சந்திரனுக்கு சூரியன் தான் ஒளி கொடுக்க முடியும் எனவே சூரியன் இல்லாமல் சந்திரன் பிரகாசிக்காது என்று சொல்லி அசத்துவார்.
ஆமாம் சூரியனைப் பார்த்து தாமரை மலர்வது போல சந்திரனைப் பார்த்து அல்லி மலர்வது போல அவர் இருந்தால் தான் நான் சந்தோஷமாக இருக்கின்றேன். அவர் அருகில் இல்லாத போதும் அவரை நீண்ட நேரம் நான் காணாத போதும் எனக்கு சந்தோஷம் குறைவு தான்.