தனிமை போன்ற உணர்வுகள்.
அவருக்கு மனைவியாக வர வேண்டும் என நான் நினைத்தது போல நான் அவரது தாயாருக்கு மருமகளாக வர வேண்டும் என்பதில் அவரது தாயார் மும்முரமாக இருந்தார்கள். நாங்கள் இருவரும் வாழ்க்கையில் கணவன் மனைவியாக திருமணத்தில் ஒன்று சேர்வதற்கு அவர்களே கோவில்களுக்குச் சென்று வழிபட வேண்டும் என்று சொல்லி என்னை கோவில்களுக்கு அழைத்துச் சென்று அதற்கான பூஜைகளை ஆரம்பித்து வைத்தார்கள். அதே போல இரண்டு குடும்பத்தாரும் புனித யாத்திரை சென்ற சமயம் என்னை தன் பக்கத்திலேயே நெருக்கமாக வைத்துக் கொண்டார்கள்.
அதன் பின்னர் ஒரு சமயம் நாங்கள் இருவரும் அருகில் உள்ள மிகச் சிறிய கோயிலுக்குச் சென்றிருந்த சமயம் கருவுற்ற பெண்கள் தேங்காய் சிதறுகாய் அடித்தால் கரு கலைந்து போகும் என்று இன்னொருவருக்கு அருள் வாக்கு சொல்பவர் சொல்லித் தெரிந்து கொண்டோம்.
அன்றைய தினம் நானும் அவரும் வீடு திரும்பும் சமயம் என்னையும் அறியாமல் நான் அவரிடம் சொன்ன இரண்டு வரிகள் மனக் கண் முன் தோன்றியது.
உன்னோடு நான் சேர்ந்து அழுதாலே சொர்க்கம்
நீ இல்லாத சொர்க்கத்தை நினைத்தாலே நரகம்
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் என்னுடைய தற்போதைய நிலை அது தான்.
எனக்குத் திருமணம் ஆன பின்னர் அவரது வருகைக்காக இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை எப்போது வரும் என காத்திருப்பேன். அவரது திருமணத்திற்குப் பின்னர் அவர் அலுவலகம் செல்லும் நேரத்தில் அவரை காண வேண்டும் என தினந்தோறும் காலை வேளையில் காத்திருப்பேன். அதே போல அவர் எப்போது என்னுடைய இல்லத்திற்கு வருவார் என ஏங்கிக் காத்திருப்பேன்.
ஆனால் இப்போது அவர் உடனடியாக வரக் கூடாது. மிகவும் கால தாமதமாக வர வேண்டும் என எண்ணுகின்றேன். காரணம் அவர் என்னைக் காண தற்போது வருவது என்னிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியூர் செல்வதற்காக. அவர் இங்கேயே தொடர்ந்து இருக்க வேண்டும். அவரை நான் அடிக்கடி காண்பது தடைப்படக் கூடாது என்னும் எண்ணங்கள் என்னுள் இருந்து கொண்டே இருந்தது.
ஆனால் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று என்பது என் வாழ்க்கையில் சரியாக அமைந்து விட்டது. அவர் என்னுடைய இல்லத்திற்கு வந்த சமயம் என் கணவர் வீட்டில் இருந்தார். அவரிடத்தில் தனக்கு வெளியூருக்கு மாற்றல் வந்து இருப்பதாகவும் வீட்டினை காலி செய்து விட்டதாகவும் அடுத்த வாரத்தில் இங்கிருந்து புறப்பட்டுச் சென்று புதிய இடத்தில் பணியில் சேர இருப்பதாகவும் தெரிவித்தார். என் கணவர் அவரிடத்தில் ஏன் இந்த திடீர் முடிவு எனக் கேட்ட சமயம் தமக்கு அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்படுகின்ற காரணத்தால் இந்த ஊரின் சீதோஷ்ண நிலை ஒத்துக் கொள்ளவில்லை என சமாளித்து பதிலளித்தார்.
என் மனக் கஷ்டங்களை அடக்கிக் கொண்டு அவரை பிரிய மனமில்லாமல் இந்த ஊருக்கு வரும்போதெல்லாம் எங்களது இல்லத்திற்கு கட்டாயம் வர வேண்டும் என என் கணவர் முன்னிலையில் கேட்டுக் கொண்டேன். அவரும் சரியென ஒப்புக் கொண்டார்.
மிகவும் குறைந்த நேரம் பேசி விட்டு எங்களிடமிருந்து விடை பெற்றவுடன் நான் வாயில் கதவு வரைக்கும் சென்று அவரை வழியனுப்பி வைத்த சமயம் என்னையும் அறியாமல் அழுது விட்டேன். அச்சமயம் ரோட்டில் நடந்து செல்வோரும் வீட்டில் குடியிருப்போரும் அக்கம் பக்கத்தாரும் பார்த்துக் கொண்டிருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். நான் என் முந்தானையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வாசலில் நின்று அவர் என்னை விட்டுப் பிரிவதை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவர் தாம் குடியிருந்த வீட்டிலிருந்து வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் காலி செய்து ஒரு மினி டெம்போவில் ஏற்றிக் கொண்டு வந்திருந்தார். அவர் டெம்போவின் முன் புறம் அமர்ந்து கொண்டார். அச்சமயம் ஊருக்குப் போய் சேர்ந்தவுடன் என் வீட்டு தொலை பேசி எண்ணுக்கு நலமுடன் போய் சேர்ந்தது பற்றி தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் சரியென ஒப்புக் கொண்டார்.
அவர் பணியாற்றும் ஊருக்குச் சென்றவுடன் எனக்கு தொலை பேசியில் நலமுடன் போய்ச் சேர்ந்ததாகவும் இன்னும் ஆறு மாத்தில் மீண்டும் வந்து என்னைப் பார்ப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார். நான் அவரிடத்தில் அவரைத் தொடர்பு கொள்ள ஏதேனும் தொலைபேசி எண் சொல்லுமாறு கேட்டேன்.
அதற்கு அவர் கொடுக்கும் தொலை பேசி எண்ணுக்குப் பேசினால் எங்கள் வீட்டிற்கான தொலைபேசி பில்லில் எந்த ஊருக்கு எத்தனை நிமிடங்கள் பேசப்பட்டது என்னும் விவரங்கள் தெரிய வரும் எனவும் தொலைபேசி கட்டணங்கள் மிகவும் அதிகமாக வரும் என்றும் அதனால் என் குடும்பத்தில் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளாதாகவும் தெரிவித்தார். அவர் சொல்வது முழுக்க முழுக்க உண்மை.
அவருடைய இல்லத்தில் தொலை பேசி வசதி ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவர் தொலை பேசி வசதி ஏற்படுத்திக் கொண்டாலும் அவருடன் தொலை பேசியில் நான் பேச விரும்பினால் முதலில் அவரது மனைவி தொலை பேசியினை எடுத்துப் பேசி அவரிடம் கொடுக்க வேண்டியிருக்கும். அந்த காரணங்களால் மீண்டும் அவருடைய வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும்.
அதுவும் தவிர அந்த ஊருக்கு பேச வேண்டும் என்றால் முதலில் டிரங்க் கால் புக் செய்ய வேண்டும். உடனே தொடர்பு கிடைக்காது. மணிக் கணக்கில் காத்து இருக்க வேண்டும். தொடர்பு கிடைத்தாலும் அவர் அந்த நேரத்தில் தொலை பேசிக்கு அருகில் இருக்க வேண்டும். அத்தனைக்கும் மேலாக எனக்கு டிரங்க் கால் புக் செய்வது எப்படி என்பதே தெரியாது. எனவே அவரது வருகைக்காக என் இதயம் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது.
அவர் இந்த ஊரில் இருந்த வரையில் நான் இலைகள் பூக்கள் காய் கனிகள் நிறைந்த மரமாக இருந்தேன். சந்தோஷம் என்னும் பறவைகள் அவ்வப் போது என்னை நாடி வந்து சென்று கொண்டிருந்தன. அவர் சென்றவுடன் இலையுதிர் காலத்தின் போது காணப்படும் இலைகள் இல்லாத மரமாக மாறி விட்டேன். உடல் மட்டும் இங்கே இருக்கின்றது. உயிர் எங்கே இருக்கின்றது என்பது தெரியவில்லை.
கோடிக் கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள நிலா என் கண்களுக்கு தெரிகின்றது. ஆனால் சில நூறு மைல்கள் தொலைவில் உள்ள அவரை நான் பார்க்க முடியவில்லை. சுறுக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் நாம் இருவரும் ஒன்று சேர வழியில்லை. பிரியவும் மனமில்லை. இது தான் நம் தலை விதி.
அவர் என்னை விட்டுப் பிரிந்து சென்ற சில வாரங்களில் கர்ப்பம் தரித்தேன். முதலாவது குழந்தையை என் வயிற்றில் சுமக்கும் சமயம் வயிற்றில் கரு வளர்கின்றது என்பதனை முதன் முதலில் அவரிடத்தில் தான் தெரிவித்தேன். அவர் உடனே சத்து மிக்க உணவுப் பொருட்களைக் கொண்டு வந்து கொடுத்தார்.
அதன் பின்னர் அவருடைய தாயார் என்னுடைய இல்லத்திற்கு வந்து எங்கள் வீட்டில் பிறக்க வேண்டிய வாரிசு எங்கோ பிறக்கின்றது என வருத்தப் பட்டார்கள். அது வரையில் திருமணம் செய்து கொள்ள மறுத்த அவர் என் முன்னிலையில் திருமணத்திற்கு சம்மதித்தார்.
அதன் பின்னர் அவர் மாதா மாதம் என்னைப் பார்க்க வரும் சமயம் வளை காப்பு மற்றும் பிரசவத்திற்கு சொந்த ஊருக்குச் செல்வது பற்றி இருவரும் மிகச் சந்தோஷமாக உரையாடினோம். எனக்கு வளை காப்பு என் உறவினர்களால் நடத்தப் படவில்லை என்ற போதிலும் அவர் வாங்கிக் கொடுத்த கண்ணாடி வளையல்களை நானே போட்டுக் கொண்டேன். அந்த நேரத்தில் அவருடைய அலுவலகத் தோழிகள் அனைவரும் கண்ணாடி வளையல்களை போட்டுக் கொண்டார்கள் என்று அவர் என்னிடம் தெரிவித்த சமயம் நான் மிகவும் மகிழ்ந்தேன்.
எனக்குப் பிறக்கப் போகும் முதலாவது குழந்தைக்கு நம் இருவரது பெயர்களின் முதல் எழுத்துக்களையும் சேர்த்து பெயர் வைப்பது எனத் தீர்மானித்தோம்.
தலைப் பிரசவமாக இருப்பதால் என்னை என்னுடைய சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும் சமயம் தானும் கூட வர வேண்டும் எனத் துடித்தார். இதனை, தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பார்கள். அதற்காக பல முறை ரயில் டிக்கட் ரிசர்வேஷன் செய்து கொடுக்கின்றேன் என என்னிடம் கேட்டார். ஆனால் சொந்த ஊருக்குச் சென்று குழந்தை பெறும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. போகின்ற வழியிலேயே குழந்தை பிறந்து விட்டது. நான் எனது முதலாவது குழந்தையை வயிற்றில் சுமக்கும் சமயம் எனக்கு அவர் எவ்வளவு உறுதுணையாக இருந்தார் என்பதனை இப்போது நினைத்துப் பார்க்கின்றேன்.
அவர் என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும் கூட அவரது கவனிப்பு என்னை மிக்க சந்தோஷத்தில் வைத்திருந்தது. ஆனால் தற்போது அவருக்குத் திருமணம் ஆன நிலையில் நாம் இருவரும் சந்தித்துப் பேசுவதற்குக் கூட முடியாத அளவிற்கு எனது நிலைமை மாறி விட்டது.
அவரது வருகைக்காக என் இதயம் ஏங்கித் தவிக்கின்றது. என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான சத்தான உணவுகளை அவரைத் தவிர வேறு யாராலும் வழங்க முடியாது என்பதனை நினைத்து அவரைக் காண என் மனம் துடிக்கின்றது.
நான் அவருடன் ஆரம்ப காலத்தில் பழகும் சமயம் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஐந்து வருடங்களில் ஆறு குழந்தைகள் பெற வேண்டும் எனச் சொல்வார். அப்போது தோழிகள் தூக்கமே கிடையாதா எனக் கேட்பார்கள். அதற்கு அவர் ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் எனச் சொல்லி என்னை சந்தோஷக் கடலில் ஆழ்த்துவார். ஆனால் தற்போது எனக்குத் தூக்கமே வருவதில்லை. காரணம் நான் அவரை மணக்க முடியவில்லை எனும் சோகம். வழக்கம் போல் என் தலையணைகள் என் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்கின்றன.
அவர் ஊருக்குச் சென்றவுடன் என்னுடைய நிலை பற்றி விசாரிக்க அவரைப் போல யாரும் இல்லை என்பது எனக்கு நன்றாகத் தெரிகின்றது. நானாக விருப்பப்பட்டு சந்தோஷமாக உரையாட அவர் என்னுடைய இல்லத்திற்கு முன்பு போல அடிக்கடி வர முடியவில்லை என்னும் காரணத்தால் நான் தனிமையை உணர்கின்றேன்.