நீண்ட காலத்திற்குப் பின்னர் அதிக மகிழ்ச்சி
அவர் புதிய பணியிடத்தில் சேர்ந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. ஆறு மாதங்களில் என்னைக் காண வருகின்றேன் என்று என்னிடம் சொல்லி விட்டுச் சென்றவர் என்னைக் காண இன்னும் என்னைத் தேடி வரவில்லை. எனக்கு மிகவும் மனக் கவலையாக இருந்தது.
அவர் இங்கிருந்து ஊருக்குச் செல்வதற்கு முன்னர் வந்திருந்த காய்ச்சல் மற்றும் தலைவலி மீண்டும் வந்திருக்குமோ என எண்ணி என் இதயம் துடிக்கின்றது. அவர் வரக் காணோம். அவரைப் பற்றி விவரம் அறியலாம் என்றால் அவரது நண்பரான என்னுடைய உறவினர் கூட வரவில்லை.
எனக்கு அவரைக் காண வேண்டும் என்னும் ஏக்கம் கூடிக் கொண்டே செல்கின்றது. காலாண்டு விடுமுறையிலும் கோடை விடுமுறையிலும் வருமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் ஆறு மாதங்களுக்கு பின்னர் தான் வருவேன் என்று ஏற்கனவே சொல்லி விட்ட காரணத்தால் காலாண்டு விடுமுறையில் வரவில்லை என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகம் போல கழிந்தது.
முதலாவது சிசுவை வயிற்றில் சுமக்கும் சமயம் அவர் இதே ஊரில் பணியாற்றி வந்தார். அச்சமயம் அவர் என்னைக் கவனித்துக் கொண்ட விதத்தை நினைத்து நினைத்து நான் ஏங்கித் தவிக்கின்றேன். அவரது வருகை தள்ளிப் போய்க் கொண்டே இருக்கின்றது.
ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமையன்று பிற்பகல் நான் வீட்டினைத் திறந்து வைத்துக் கொண்டு சோபாவில் சாய்ந்து கொண்டிருந்தேன். என் செல்லப் பெண் என்னிடத்தில் பாபா வந்திருக்கார். எழுந்திரு எனச் சொன்னவுடன் நான் மிகவும் கஷ்டப் பட்டு எழுந்தேன். அதனைக் கண்ட அவர் மெதுவாக எழுந்திரு. நான் இங்கு தான் வந்திருக்கின்றேன். எங்கும் போக மாட்டேன் என்று சொன்னார்.
நான் எழுந்தவுடன் அவர் நான் அமர்ந்து இருக்கும் சோபாவில் மறுபுறம் அமர்ந்து கொண்டார். என் செல்லப் பெண் அவர் மடியில் அமர்ந்து கொண்டாள். மூவருக்கும் இடையே சாக்லெட் பரிவர்த்தனை மிகவும் சந்தோஷமாக நடந்தேறியது. அவரிடத்தில் நான் முதலாவதாக ஆறு மாதத்திற்குள் வருகின்றேன் என சொல்லிச் சென்றீர்கள். ஏன் வரவில்லை. ஊர் மாறி சென்றவுடன் என்னை மறந்து விட்டீர்களா என்று கேட்டேன்.
அதற்கு அவர் காலையில் பல் துலக்க மறக்கின்றேன். டிபன் சாப்பிட மறக்கின்றேன். மதிய உணவு சாப்பிட மறக்கின்றேன். இன்னும் சொல்லப் போனால் இரவு தூங்கக் கூட மறந்து விடுகின்றேன். அத்தனைக்கும் ஒரே காரணம் என்னுடைய நினைவு தான் என்று சொன்னார். நான் உடனே அப்படியெனில் என்னைப் பார்க்க ஏன் இவ்வளவு தாமதம் எனக் கேட்டேன்.
இங்குள்ள அலுவலகத்தில் காலையில் 10.00 மணிக்கு போனால் போதும். முன்னால் போனால் கூட அலுவலகத்திற்குள் செல்ல முடியாது. அதே போல மாலையில் 5.30 மணிக்கு அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்து விடுவார்கள். வெளியில் ஏதேனும் வேலை இருந்தால் தான் தாமதமாகும். இரண்டாவது சனிக் கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் யாருமே அலுவலகத்திற்கு வர மாட்டார்கள். அலுவலகம் பூட்டப் பட்டிருக்கும். ஆனால் தற்போது அவர் பணியாற்றும் அலுவலகத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். யாராவது ஒருவர் எந்த நேரத்திலும் இரவு பகல் என்று பாராமல் பணியாற்றிக் கொண்டே இருப்பார்கள். பெண்கள் மட்டும் மாலை 7.00 மணி வரையில் வேலை செய்வார்கள். இங்குள்ள அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது லீவு போட்டது போல அங்கு லீவு போட முடியாது எனச் சொன்னார்.
இப்போது மட்டும் எப்படி வர முடிந்தது எனக் கேட்டதற்கு தலை தீபாவளி பண்டிகை இந்த ஊரில் கொண்டாட வந்துள்ளேன் என்றவாறே எனக்கும் என் செல்லப் பெண்ணுக்கும் வாங்கி வந்திருந்த புத்தாடைகளை என்னிடத்தில் கொடுத்தார். எனக்கு மிகுந்த சந்தோஷம். அதனை பிரித்துப் பார்த்தேன். அந்த ஆடையினை குழந்தை பிறந்த பின்னர் தான் கட்ட வேண்டும் என தீர்மானித்து அவரிடம் தெரிவித்தேன்.
அவரது திருமணத்திற்குப் பின்னரும் கூட அவருக்கு வருகின்ற சம்பளத்திலிருந்து எனக்காகச் செலவு செய்யும் அவரையும் எதிலும் கணக்குப் பார்க்கும் என் கணவரையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். அப்போது என்னுடைய தாயார் தப்புக் கணக்கு போட்டு விட்டார் என்பதனை உணர்ந்தேன். ஆமாம் பல சொந்த வீடுகள். நிறைய சேமிப்பு மற்றும் நிறைய வருமானம். ஆனால் குறைவான அன்பு மற்றும் எதிலும் கணக்குப் பார்க்கும் குணம்.
வீட்டில் ஏதேனும் விசேஷம் உண்டா எனக் கேட்டதற்கு காலாண்டு விடுமுறையில் வளை காப்பு நடந்ததன் காரணமாக சொந்த ஊருக்கு சென்று விட்ட படியால் என்னிடம் ஒப்புக் கொண்ட படி இங்கு வர முடியவில்லை என வருத்தம் தெரிவித்து என்னிடம் எத்தனை மாதம் எனக் கேட்டார். அதற்கு நான் ஒரே நேரத்தில் நீங்கள் இரண்டு குழந்தைகளைப் பார்க்கப் போகின்றீர்கள். அதாவது எனக்கும் எட்டு மாதம் எனச் சொன்னேன். அதற்கு அவர் ஒரே மாதிரியான இரண்டு உருவங்களை என்னால் மட்டுமே காண முடியும் என சிரித்துக் கொண்டே சொன்னார்.
வளைகாப்பு எப்படி நடந்தது எனக் கேட்டதற்கு நம்மைப் பற்றி மட்டும் பேசலாம் என்று சொன்னார். நானும் அது பற்றி பேசவில்லை. அவரது நண்பரான என்னுடைய உறவினரை வளைகாப்புக்கு அழைத்ததாகவும் அச்சமயத்தில் தீபாவளியின் போது என்னை சந்திப்பதாக சொல்லி அனுப்பியதாகவும் தெரிவித்தார். ஆனால் அவர் வரவில்லை என்பது அவருக்குத் தெரியவில்லை.
எப்போது இங்கு வந்தீர்கள் எனக் கேட்டேன். வியாழக் கிழமையன்று காலையில் இங்கு வந்துள்ளதாகவும் அன்றைய தினம் கர்நாடகத்துப் பெண்ணிடத்திலும் முஸ்லீம் பெண்ணிடத்திலும் அலுவலகத்தில் பணியாற்றுகின்ற மற்ற தோழியர்களுடன் பேசி வந்ததாகவும் வெள்ளிக் கிழமையன்று இங்குள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டுக்குச் சென்று வந்ததாகவும் சனிக் கிழமையன்று மனைவியுடன் மருத்துவ மனை சென்று வந்ததாகவும் ஞாயிற்றுக் கிழமை என்னுடைய இல்லத்திற்கு வந்திருப்பதாகவும் திங்கட் கிழமையன்று தீபாவளிப் பண்டிகை முடிந்தவுடன் செவ்வாய் கிழமை ஊர் திரும்ப இருப்பதாகவும் தெரிவித்தார்.
எல்லோரையும் பார்த்து முடித்த பின்னர் கடைசியாக என்னைக் காண வந்த அவர் மீது எனக்கு கோபமே வரவில்லை. காரணம் அலுவலக நாட்களில் தான் அலுவலகத் தோழிகளை ஒரு சேர சந்திக்க முடியும். இல்லையெனில் ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்து சந்திப்பது என்பது கால விரயம் மற்றும் அலைச்சல் மற்றும் வீண் செலவு என்பதனை தெரிந்து கொண்டேன்.
எனது உடல் நிலையின் காரணமாக ஏற்கனவே பிளாஸ்க்கில் சூடாக வைத்திருந்த பாலில் காபி கலந்து கொடுத்தேன். கொஞ்சம் கூட மாறாமல் எனக்கு அதில் பாதி கொடுத்தது என்னுடைய கஷ்டங்கள் கவலைகள் வலிகள் அனைத்தையும் மறக்கச் செய்து விட்டார்.
அதன் பின்னர் அடுத்த குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது எனக் கேட்டதற்கு ஆண் குழந்தையாக இருந்தால் கடவுள் பெயரினை வைக்கலாம் எனச் சொன்னார். ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் எனது வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை தான் என டாக்டர்கள் உறுதிப்படுத்தி விட்டார்கள் எனச் சொன்னேன்.
அதே போல அவரும் ஸ்கேன் எடுத்துப் பார்த்ததாகவும் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை எனவும் தெரிவித்துள்ளதாகவும் சொன்னார். உடனே நான் உங்களுக்குப் பிறக்கப் போகும் பெண் குழந்தைக்கு நமது செல்லப் பெண்ணின் பெயரில் பாதியினை வைக்க வேண்டும். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என நினைவூட்டினேன். அவர் கட்டாயம் கடைப் பிடிப்பேன் என்று சொன்னார்.
அவர் என்னிடத்தில் தற்போது துணைக்கு யாரையும் வைத்துக் கொள்ளவில்லையா என்றும் என்னுடைய தாயார் எப்போது வருகின்றார்கள் அல்லது பிரசவத்திற்கு அழைத்துச் செல்கின்றார்கள் எனக் கேட்டார். அதற்கு நான் தலைப் பிரசவமே ரயிலில் போகும் போது நடந்தது. இது இரண்டாவது எனவே எங்கும் போகாமல் இங்கேயே இருக்க வேண்டும் எனச் சொல்லி விட்டார்கள்.
நம் இருவரது பிரிவுக்கும் காரணமாக இருந்த தாயார் இந்த உலகத்தை விட்டு பிரிந்து விட்டார்கள் எனச் சொன்னதற்கு அனுதாபம் தெரிவித்தார். அதற்கு நான் நம்மைப் பிரிக்க காரணமாக இருந்த என் தாயார் மறைவு பற்றி நான் இது வரையில் கவலைப் படவில்லை. நீங்களும் ஆறுதல் சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டேன்.
நீண்ட நேரம் பேசிய பின்னர் அவர் என்னிடத்தில் முதல் பிரசவத்தின் போது என்னுடைய தாயார் இந்த வீட்டில் இருந்த காரணத்தால் ஐந்து மாதங்கள் கழித்து வந்து சந்தித்ததாகவும் இப்போது என்னுடைய தாயார் இல்லாத காரணத்தால் இன்னும் இரண்டு மாதங்களில் குழந்தை பிறப்பதற்கு முன்போ அல்லது குழந்தை பிறந்தவுடனோ நேரில் கட்டாயம் வந்து பார்ப்பேன் எனக் கூறி என்னிடத்தில் விடை பெற்றார்.
வழக்கம் போல் எனது இதயம் அவரைப் பிரிந்து வருந்தினாலும் அவர் குழந்தையைப் பார்க்க உடனே வரப் போவதாகத் தெரிவித்தது எனக்கு உள் மனதில் மகிழ்ச்சியைப் பெருக்கியது.