முதல் சுற்றுலா
நான் கோயிலுக்குச் சென்று வந்த சமயம் அவரது தாயாருக்கு கோயில் பிரசாதம் கொடுத்தற்குப் பின்னர் அவரது தாயாருடன் நானும் சேர்ந்து கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து வந்ததில் எனக்கு ஒரு சந்தோஷம்.
அவரது தாயாருக்கு உடல் நிலை சரியில்லாத போது அவருடைய இல்லத்திற்குச் சென்று என் கையால் சமைத்துப் பரிமாறிய சமயம் அவரது தாயார் உடல் நலமில்லாத போதும் கூட ருசித்துச் சாப்பிடும் அளவிற்கு எனது சமையல் கைபக்குவம் நன்றாக இருப்பதாக சொல்லி பாராட்டிய போது எனக்கு ஒரு சந்தோஷம்.
அடிக்கடி நான் மஞ்சள் நிற தாவணி அல்லது இரவிக்கை அல்லது பாவாடையுடன் இருப்பதைக் கண்டு முழுவதுமாக மஞ்சள் நிறத்தில் கூரைப்புடவையுடன் என்னை தனது மருமகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணியதைக் கேட்ட போது எனக்கு ஒரு சந்தோஷம்.
உடல் நலமில்லாத சமயம் அவரது தாயார் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக நான் அதிகாலையில் அவருடைய தாயாருக்குப் பதிலாக வாசல் கூட்டிப் பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போட்டதைக் கண்ட போது என்னைக் கட்டிப்பிடித்து அணைத்து பாராட்டி முத்தமிட்ட போது எனக்கு ஒரு சந்தோஷம்.
அதே போல பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்தது அறிந்து எனக்கு ஒரு சந்தோஷம்.
எல்லாவற்றிற்கும் மேலாக என்னை அவருடன் சேர்த்து தோழியர் அனைவரும் கலாட்டா செய்வது மற்றும் நாம் இருவரும் பொருத்தமான சரி பாதி என்றும் ஒருவருக்கொருவர் வாழ்க்கைத் துணை எனவும் கூறி நம் இருவருக்கும் சேர்த்து ஒரே ஒரு ஐஸ்கிரிம் அல்லது ஒரே ஒரு சாக்லெட் அல்லது ஒரே ஒரு இனிப்பு பண்டம் மாத்திரம் கொடுத்து அனைவர் முன்னிலையிலும் நான் அல்லது அவர் கடித்த பாதியினை நாம் இருவரும் உட் கொண்ட போது மிகப் பெரிய சந்தோஷம்.
என்னுடைய குடும்பத்தார் அவருடைய குடும்பத்தாருடன் சேர்ந்து அருகிலுள்ள மலைக் கோயிலுக்குச் சென்று வழிபட்ட பின்னர் கொடைக்கானல் மற்றும் வைகை அணை சென்று வருவது என்று தீர்மானித்தனர்.
அதற்காக நம் இருவர் குடும்பமும் சேர்ந்து பயணிக்கும் வகையில் ஒரு வாகனம் ஏற்பாடு செய்தனர். நாங்கள் அனைவரும் வாகனத்தில் ஏறி அமரும் சமயம் அவருடன் பேசிக் கொண்டே வர முடியும் என்று நினைத்தேன்.
ஆனால் அவருடைய தாயார் என்னை தன்னருகில் அமர வைத்துக் கொண்டார். அவருடன் நான் என்னவெல்லாம் பேச வேண்டும் என்று நினைத்திருந்தேனோ அவற்றை எல்லாம் அவரது தாயார் என்னுடன் பேசிக் கொண்டே வந்தது எனக்கு இரட்டிப்பு சந்தோஷத்தைத் தந்தது.
கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்த போது மஞ்சள் மற்றும் விபூதி குங்குமத்தை அவரது தாயார் எனது நெற்றியில் வைத்து அழகு பார்த்தார். அதனை அவர் ரசித்துக் கொண்டேயிருந்தார். அவர் கையால் விபூதி குங்குமம் எனக்கு கிடைக்கவில்லை.
அந்த சமயம் என்னுடைய தாயார் அவருடைய தாயாரிடம் அன்னமிட்ட கைகளுக்கு உரியவளை பொட்டு வைத்து அழகு பார்க்கின்றீர்களா எனக் கேட்க நான் என் மருமகளுக்கு பொட்டு வைத்து அழகு பார்க்கின்றேன் என்று கடவுள் சன்னதியில் சொன்னது கேட்டு எனக்கு ஒரே ஆச்சர்யம். என்னை அவரது மருமகளாகவே முடிவு செய்து விட்டார்கள் என்பதறிந்து அவருக்கும் சந்தோஷம்.
அதன் பின்னர் அனைவரும் கொடைக்கானல் நோக்கி பயணித்த போது அவரது தாயார் நான் ஜன்னலோரத்தில் அமர்ந்து இருந்ததை மாற்றி நடுவில் அமர்ந்து கொள் பனிக்காற்று உடம்புக்கு ஆகாது என்று சொல்லி என்னை நடுவிலே அமர வைத்துக் கொண்ட போது அவரது தாயார் என் ஆரோக்கியத்தில் செலுத்தும் அக்கரை தெரிந்தது. அப்போது கூட என் மருமகளுக்கு உடம்பு சரியில்லாது போனால் யார் பார்த்துக் கொள்வார்கள் என்று கேட்டு என்னை பரவசத்தில் ஆழ்த்தி விட்டார்கள்.
கொடைக்கானலில் படகு சவாரி செய்யும் சமயம் என்னை அவரது தாயார் தாம் பயணிக்கும் படகில் அமரச் செய்தார்கள். அவரும் அதே படகில் தான். அவரது குடும்பத்துடன் நான் முழுவதுமாக ஐக்கியமாகி விட்டேன்.
அதன் பின்னர் அனைவரும் வைகை அணைக் கட்டிற்குச் சென்றோம். அப்போது அவரது பெற்றோரும் என்னுடைய தாயாரும் நடக்க முடியாது என்னும் காரணத்தால் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டனர். என்னையும் என்னுடைய தங்கை குடும்பத்தாரையும் வைகை அணையினை கண்டு களிக்க அனுப்பி வைத்தனர்.
அப்போது தான் அவருக்கும் எனக்கும் தனிமை கிடைத்தது. நாம் இருவரும் பேசிக் கொண்டே வைகை அணையினைப் பார்வையிட்டு வர நீண்ட நேரம் ஆயிற்று.
அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் என்னவெல்லாம் பிடிக்குமோ அவற்றை நானும் என் குடும்பத்தாரும் சேர்ந்து வீட்டிலேயே தயாரித்து கொண்டு சென்றோம். அதே போல எனக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அவற்றை அவரும் அவருடைய தாயாரும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிக் கொடுத்தனர்.
ஆனாலும் ஒரு கவலை. என்னவெனில் நானோ அல்லது அவரோ நமது குடும்பத்தார் முன்னிலையில் எந்த பொருளையும் பங்கிட்டுக் கொள்ளாமல் முழுவதுமாக சாப்பிட வேண்டியிருந்தது.
நள்ளிரவுக்கு முன்னர் நாம் பயணித்த வாகனம் நமது வீட்டை நெருங்கும் சமயம் இந்த சுற்றுலா முடிவுக்கு வருகின்றதே இன்னும் தொடரக் கூடாதா என்னும் நினைப்பு நம் இருவருக்கும் வந்து விட்டது.
நமது எண்ணத்தை ஆழ்மனதில் உணர்ந்த அவரது தாயார் மீண்டும் ஒரு சுற்றுலா விரைவில் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் பயணிக்கும் வகையில் என்று கூறிய போது அளவிட முடியாத ஆச்சர்யம் நம் இருவருக்கும்.
சுற்றுலா முடிந்த பின்னர் நம் தோழியர் அனைவரும் சுற்றுலாவில் என்ன நடந்தது என்று கேட்டு நம் இருவரையும் கலாட்டா செய்து கொண்டே இருந்தனர். நாம் இருவரும் நெருக்கமாக பழக முடியவில்லை. அவரது தாயார் என்னை தன் அருகிலேயே வைத்துக் கொண்டார் என்று சொன்னதை யாரும் நம்பவில்லை. நடந்தவற்றை நம்ப வைக்க ஓரு சில வாரங்கள்; ஆனது.