முதல் நாள் விளையாட்டு
தொடாந்து இரண்டு மூன்று நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வந்தது. அப்போது திண்ணையில் உள்ள சபை களை கட்டியது. அனைவரும் காலையிலேயே கூடி விட்டார்கள்.
இன்று என்ன செய்யலாம் என்று ஒருவருக் கொருவர் கேட்ட சமயம் இரண்டு நாட்கள் அனைவரும் சேர்ந்து நன்றாக விளையாட வேண்டும். நோட்டு புத்தகம் பேனா பென்சில் எதனையும் தொடக் கூடாது என்று முடிவெடுத்தார்கள்.
அப்படி என்ன தான் விளையாடுவார்கள் என்று நான் யோசித்துப் பார்த்தேன். அப்போது தோழி ஒருத்தி தம் வீட்டிலிருந்து கயிறு கொண்டு வந்தாள். உடனே அனைவரும் ஸ்கிப்பிங் விளையாட்டு ஆரம்பத்தோம்.
யார் அதிக நேரம் ஸ்கிப்பிங் கயிற்றை தாண்டுகின்றார்களோ அவர்கள் தான் இன்று ஜெயித்தவர் என்று அனைவரும் விளையாட ஆரம்பித்தனர். அனைவரைப் போல அவரும் ஸ்கிப்பிங் விளையாடினார். என்னையும் விளையாடுமாறு அழைத்தார்கள். நான் எடுத்த எடுப்பிலேயே அவுட்டாகி விட்டேன். காரணம் எனக்கு இது மாதிரியான விளையாட்டுகள் விளையாடி பழக்கமில்லை. தனித் தனியாக விளையாடி வெற்றி பெற்றவர் யார் என்று தெரிந்தவுடன் அடுத்து அதே விளையாட்டை ஜோடியாக விளையாட ஆரம்பித்தார்கள்.
அப்போது அவர் அனைவருடனும் ஜோடியாக ஆடினார். கடைசியில் என்னையும் அவரையும் எதிர் எதிரே ஜோடியாக ஆடச் சொன்னார்கள். முதலாவதாக நான் ஸ்கிப்பிங் கயிற்றை சுழற்றி இருவரும் ஆட வேண்டும. அவர் என்னைவிட அதிக உயரம். சொல்லப் போனால் அவருடைய தோள்பட்டை உயரம் தான் நான் இருப்பேன். எனவே முதல் சுற்றிலேயே ஸ்கிப்பிங் கயிறு அவர் நெற்றியில் பட்டு அவுட்டாகி விட்டார். அடுத்தபடியாக அவர் கையில் ஸ்கிப்பிங் கயிறு வாங்கி கயிற்றை சுழற்றினார். இருவரும் இருபது முறை கூட குதிக்கவில்லை. அதற்குள் நான் அவுட்டாகி விட்டேன். என்னால் அவரும் தோல்வியடைந்தார்.
அதன் பின்னர் இரண்டு பேர் இரண்டு பக்கம் நின்று கயிற்றை சுழற்றுவார்கள். அனைவரும் ஒருவர் பின் ஒருவராக தனியாக குதிக்க வேண்டும். அதிலும் அவர் நீண்ட நேரம் விளையாடினார். என்னால் முடியவில்லை.
அதன்பின்னர் இரண்டு பேர் சேர்ந்து குதிக்க வேண்டும். அப்போது என்னை அவருடன் ஜோடி சேர்த்து குதிக்கச் சொன்னார்கள். நானும் அவரும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தோம். என்னால் முடியவில்லை. இருவரும் அவுட்டாகி விட்டோம்.
நான் அவரிடம் கேட்டேன். நான் குள்ளம் என்பதால் உங்களுடன் சேர்ந்து விளையாட முடியவில்லை என்று சொன்னதற்கு குள்ளம் என்று சொல்லாமல் உயரம் குறைவு என்று சொல் என்று என்னைத் திருத்தினார்.
அதற்குள் மதிய சாப்பாட்டு நேரம் வந்து விட்டது. அனைவருக்கும் சற்று நேரம் இடைவெளி என்று அனைவரும் சாப்பிடச் சென்று விட்டு ஒரு மணி நேரத்தில் மீண்டும் திரண்டு விட்டார்கள்.
அப்போது அடுத்து என்ன விளையாட்டு என்று கேட்க ஒருத்தி பாண்டி விளையாட்டு என்றாள். உடனே மற்றொருத்தி வெயில் இறங்கியவுடன் பாண்டி விளையாடலாம். இப்போது தாயக் கட்டம் விளையாடுவோம் என்று சொல்லி தாயக் கட்டம் விளையாட முடிவு செய்தார்கள்.
நான்கு நான்கு பேர் எதிர் எதிர் அணியாக மொத்தம் எட்டு பேர் விளையாட அமர்ந்தார்கள். அப்போது யார் யார் ஓர் அணி என்று கேட்டார்கள் உடனே நான் அவர் எந்த அணியில் உள்ளாரோ அந்த அணியில் நான் என்றேன். காரணம் கேட்டார்கள். அதற்கு அவர் பதில் சொன்னார். வெற்றி தோல்வி இரண்டிலும் என்னுடன் பங்கு பெற விரும்புகிறாள். வேறு அணியில் இருந்து அவள் வெற்றி பெற்றாலோ அல்லது தோல்வி அடைந்தாலோ அவள் என் தோல்வியைத் தாங்கிக் கொள்ள தயாராக இல்லை. இருவருக்கும் வெற்றி தோல்வி சமமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறாள் என்று சொல்லி சமாளித்தார். அதில் நான் நன்றாக விளையாடுவதாக எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள்.
சற்று நேரம் விளையாடிய பின்னர் விளையாட்டை மாற்ற முடிவு செய்தார்கள்.
அடுத்ததாக துவங்கியது சதுரங்கம் அதாவது செஸ். இந்த விளையாட்டு எனக்கு அறவே தெரியாது. இருந்தாலும் எப்படி விளையாடுகின்றார்கள் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன்.
அப்போது ஒரு கட்டத்தில் அவரிடம் உடன் விளையாடுபவர் உன்னுடைய ராணிக்கு செக் என்றார்கள். எனக்கு என்னவென்று புரியவில்லை. என்னவென்று கேட்டதற்கு அடுத்த நகர்வுக்குள் ராணியை காப்பாற்றாவிடில் ராணி அவுட்டாகி விடுவாள். எனவே ராணியைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்ய வேண்டும் என்று புரியச் செய்தார். என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். அவர் உடனே ஒரு காயை நகர்த்தி ராணியைக் காப்பாற்ற முடியும் என்று ஒரு காயை நகர்த்தினார். தற்போது ராணிக்கு ஆபத்து இல்லை என்று சொன்னார்கள்.
ராணியைக் காப்பாற்ற முடியவில்லை என்றால் ராஜாவுக்கு ஆபத்து அப்படி ஏற்பட்டால் ராஜாவை யார் வீழ்த்தினார்களோ அவர்களே வெற்றி பெற்றவராவார் என்று புரிய வைத்தார்.
எனக்கு இந்த ஆட்டம் பிடிக்கவில்லை. முன் யோசனை செய்து விளையாட வேண்டும் என்பது காரணமல்ல. ராஜாவுக்கோ அல்லது ராணிக்கோ ஆபத்து வரக்கூடாது என்பது தான். அதாவது எனக்கும் அவருக்கும் இடையே உண்டாகியுள்ள அன்பு போய் விடக் கூடாது என்பது.
அடுத்தபடியாக மீண்டும் அவர் அந்த ஆட்டத்தைத் தொடர முயற்சித்த சமயம் எனக்கு இந்த ஆட்டம் பிடிக்கவில்லை. வேறு ஒரு விளையாட்டு விளையாடலாம் என்று சொன்னேன். உடனே மற்றவர்கள் அனைவரும் ராஜாவுக்கு ஆபத்து என்றால் ராணி எப்படி பதறுகிறாள் பார்த்தீர்களா என்று என்னைக் கேலி செய்தார்கள். உண்மை தான். நான் மறுக்கவில்லை.
அடுத்தபடியாக அனைவரும் சேர்ந்து ஆரம்பித்தது ஆடுபுலி ஆட்டம். இந்த ஆட்டத்தில் அவர் சேர்ந்து கொள்ளவில்லை. காரணம் நான் சதுரங்க ஆட்டத்திற்கு சொன்னது தான். நம்மால் யாருக்கும் ஆபத்து வரக்கூடாது. யாருக்கும் எந்த தீங்கும் நேரக் கூடாது. எனக்கு அவர் ஆடாமல் வேடிக்கை பார்ப்பது என்னமோ போல் இருந்தது.
உடனே நான் வெறும் கற்களை மட்டும் வைத்துக் கொண்டு விளையாடும் விளையாட்டினை ஆரம்பித்தேன். அதாவது ஐந்து கற்களை வைத்து விளையாடுவது. தரையிலிருந்து ஒரு கல்லைத் தூக்கிப் போட்டு அந்த கல் கீழே விழுவதற்குள் தரையில் உள்ள மற்றொரு கல்லை கையில் எடுத்து அந்த கல்லுடன் மேலேயிருந்து விழும் கல்லைப் பிடித்து அதன் பின்னர் அதில் ஒரு கல்லை மீண்டும் மேலே போட்டு கீழேயிருந்து வேறொரு கல்லை எடுத்து விளையாட வேண்டும். இந்த ஆட்டம் எனக்கு நன்றாகத் தெரியும். அவரும் பழகிக் கொண்டார்.
நாங்கள் சந்தோஷமாக இருக்கும் நாளன்று மட்டும் பொழுது சீக்கிரம் போய் விடுகின்றது. மற்ற நாட்களில் தனிமையில் இருக்கும் சமயம் பொழுது போகாமல் போர் அடிக்கின்றது.
அனைவரது வீட்டிலிருந்தும் அழைப்பு வரத் தொடங்கியதால் மீதமுள்ள ஆட்டத்தை மறு நாள் ஆடுவதென்று அனைவரும் அவரவர் இல்லங்களுக்குத் திரும்பினர்.