புனித யாத்திரை நான்காம் நாள்.
திருமலையில் உள்ள அறையில் தங்கியிருந்த அனைவரையும் அதிகாலையிலேயே துயிலெழச் செய்து புறப்படும்படி கேட்டுக் கொண்டனர்.
நான் அவசர அவரசமாக குளித்து முடித்து விட்டு கிளம்ப வேண்டும் என்று யோசித்தேன். அப்போது யாரும் குளிக்க வேண்டாம். ஒரு செட் துணி மணிகளை எடுத்துக் கொள்ளுங்கள். புஷ்கரணி குளத்தில் குளித்துக் கொள்ளலாம் என்று கொன்னார்கள். உடனே அனைவரும் தமக்கு ஒரு செட் துணி மணிகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டோம்.
அதிகாலை நேரத்திலும் சுறு சுறுப்பாக இயங்கி வந்த டீக்கடையில் முதலில் காபி மற்றும் டீ அருந்தினோம். அதன் பின்னர் மெதுவாக நடந்து வந்த சமயம் ஒரு இடத்தில் கல்யாண கட்டா என்று எழுதி இருந்தது.
நான் என்னை அறியாமல் இங்கு தான் கல்யாணங்கள் நடைபெறும் என்று நினைத்துக் கொண்டு அனைவர் பின்னாலும் தொடர்ந்து சென்றேன். அப்போது அங்கு அனைவருக்கும் டோக்கன் கொடுத்தார்கள். டோக்கனைப் பெற்றுக் கொண்டு உள்ளே சென்றவுடன் தான் தெரிந்தது அது திருமண மண்டபமல்ல முடிகாணிக்கை செலுத்துமிடம் என்று.
பிரியப்பட்ட ஆண்கள் மொட்டை அடித்துக் கொண்டார்கள். நம்முடன் வந்தவர்களில் பெண்கள் யாரும் மொட்டை அடித்துக் கொள்ளாமல் நுனி முடி காணிக்கை மட்டும் கொடுத்தார்கள். அவரும் மொட்டை அடித்துக் கொண்டார். நானும் அவரது தாயாரும் நுனி முடி காணிக்கை மட்டும் கொடுத்தோம்.
அதன் பின்னர் அனைவரும் புஷ்கரணியில் நீராடிய பின்னர் புத்தாடைகள் உடுத்தியதும் அவரது தாயார் அவருக்கு தலையில் சந்தனம் பூசி விட்டார். அப்போது அவரது தாயார் என்னிடம் கோயில் என்றாலே திரும்பிப் பார்க்காத என் மகனை மொட்டை அடித்துக் கொள்ளும் அளவிற்கு பக்தியுள்ளவனாக ஒரே நாளில் மாற்றியமைக்கு மிக்க நன்றி என்று சொல்லி என்னை பாராட்டினார்கள்.
அதே சமயம் திருமலையில் பூக்கும் மலர்கள் யாவும் ஏழுமலையானுக்கே சொந்தம் என்ற காரணத்தால் என் மகன் தலையில் சந்தனம் பூசிவிட்ட என் கரங்களால் உன் கூந்தலில் பூச்சூட்ட முடியாமல் இருப்பது எனக்கு பாதி சந்தோஷத்தை மாத்திரம் கொடுக்கின்றது என்று கண் கலங்கினார்கள்..
காலை சிற்றுண்டியை முடித்த பின்னர் சாமி தரிசனத்திற்காக கியூ வரிசையில் காத்திருக்க நீண்ட நேரம் கியூவிற்கான அறைகளில் தங்க வேண்டி இருந்தது. அப்போது அங்கு என்ன கிடைக்கின்றதோ அவற்றைத் தான் உண்ண வேண்டும் பருக வேண்டும். நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு எதுவும் கிடைக்காது. இருந்தாலும் ருசியாக இருந்தது.
கியூவில் நீண்ட நேரம் காத்திருந்ததால் பொழுது போகவில்லை. எனவே முதல் நாள் இரவு வாங்கியிருந்த கருப்பு மற்றும் சிகப்பு கயிறுகளை நான் அவரது தாயாரிடம் கொடுத்து கட்டி விடுமாறு கேட்டுக் கொண்டேன்.
நான் கொடுத்த கருப்பு கயிற்றினை எனக்கும் அவருக்கும் மற்றவர்களுக்கும் கட்டி விட்டார்கள். அவருடைய தாயாருக்கு நான் கட்டி விட்டேன். அப்போது சிலருக்கு வலது கையிலும் சிலருக்கு இடது கையிலும் கட்டியது எனக்கு புரியவில்லை. எனவே அவரிடம் விளக்கம் கேட்டேன்.
உடனே அவர் பல வண்ண கயிறுகளுக்கான விளக்கத்தினை தெரிவித்த சமயம் நமது குடும்பத்தாருடன் பிற குடும்பத்தாரும் சேர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். நன்றாக பொழுது போய் விட்டது. அவர் சொன்ன விளக்கத்தினை கீழ்க்கண்டவாறு சுருக்கமாக கொடுத்துள்ளேன்.
கருப்பு கயிறு : தீய சக்திகளிலிலுந்து பாது காக்கும். கண்ணேறு எனப்படும் கண் திருஷ்டி இல்லாமல் பாது காக்கும். செய்வினைகளை தடுத்து பாது காப்பு கொடுக்கும். கருப்பு கயிற்றினை குழந்தை பிறந்தவுடன் இடுப்பில் அருணாக் கொடி என்று கட்டுவது வழக்கம். பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை தாயத்தாக மாற்றி கழுத்தில் கட்டி விடுவார்கள். எந்த வித நோய்களிலிலுந்தும் பாது காப்பு கிடைக்கும். மணிக் கட்டிலும் தோள்களிலும் கட்டிக் கொள்வார்கள். மாய மந்திர வித்தைகள் புரிபவர்கள் கருப்பு கயிற்றினை வலது காலில் கட்டி இருப்பார்கள்.
சிகப்பு கயிறு: மன நிம்மதி கிடைக்கும. சந்தோஷம் கிடைக்கும். செல்வம் பெருகும். தேக ஆரோக்யம் கிடைக்கும். எதிரிகளிடமிருந்து தக்க பாது காப்பு கிடைக்கும் கவசமாக இருக்கும். கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கும். கடவுளுக்கு அணிவிக்கப்பட்ட சிகப்பு நிற ஆடைகள் சிகப்பு நிற கயிறுகளாக கோயில்களில் கொடுக்கப் படுகின்றது. பொதுவாக ஆண்கள் மற்றும் திருமணமாகாக பெண்கள் சிகப்பு கயிற்றினை வலது மணிக்கட்டிலும் திருமணமான பெண்கள் இடது மணிக்கட்டிலும் வளர்பிறையில் வரும் சதுர்த்தி நாளன்று பூஜை செய்து கட்டிக் கொள்ள வேண்டும்.
மஞ்சள் கயிறு: முற்போக்கான சிந்தனைகள் பெருகும். தேக ஆரோக்கியம் கிடைக்கும். உறவுகள் பலப்படும். சந்தோஷம் பெருகும். திருமண சடங்குகளில் மணப் பெண்ணுக்கு மணமகன் மஞ்சள் நிற கயிற்றினை மணமகள் கழுத்தில் தாலியாக கட்டுவதன் மூலம் புதிய வாழ்க்கையின் துவக்கமாக அமைகின்றது. கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் காப்பு கட்டுதல் என்னும் பெயரில் மஞ்சள் நிற கயிறு அல்லது துணி கட்டப்பட்டு விரதம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
வெள்ளை கயிறு: புனித காரியங்கள் அனைத்தையும் நடத்தி வைக்க முடியும். பிரம்மோபதேசம் என்றழைக்கப் படும் பிரணவ மந்திரத்தின் பொருளினை உபநயனம் என்னும் சடங்குகளில் வெள்ளை நிறத்தில் உள்ள பூணூல் சில குறிப்பிட்ட வகுப்பினருக்கு 12 வயதிற்குள் ஆண்களுக்கு மட்டும் அணிவிக்கப் படுகின்றது. இதனை அணிந்து கொண்டால் ஆச்சார அனுஷ்டானங்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். புலால் தவிர்த்தல் வேண்டும்.
இளஞ்சிகப்பு ஆரஞ்சு மற்றும் காவி கயிறு: செல்வாக்கு மற்றும் புகழ் மற்றும் தீய சக்திகளிடமிருந்து பாது காப்பு கிடைக்கும். பலப் பல காரணங்களுக்காக பல் வேறு தருணங்களில் இந்த நிறமுள்ள கயிறு மணிக்கட்டில் கட்டப் படுகின்றது. சாய்பாபா போன்ற குருமார்களை வழிபடுபவர்கள் இந்த நிற கயிறுகளை அணிந்து கொள்வர்.
பச்சை கயிறு: செல்வம் பெருகும். விவசாயம் செழிக்கும் பச்சை நிற கயிற்றினை அணிந்து கொண்டால் குபேரன் அருள் கிடைத்து செல்வம் பெருகும். விவசாயிகள் அணிந்து கொண்டால் விவசாயம் செழிக்கும்.
கருப்பு நிறம் என்பது நமது ஆரம்பம் முதல் முடிவு வரை எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
பிறந்த குழந்தைக்கு நெற்றியில் பொட்டு வைத்தல். திருஷ்டி படாமல் இருக்க கன்னத்தில் கருப்பு பொட்டு வைத்தல்.
பெண்கள் கண் இமைகளுக்கும் கண் புருவங்களுக்கும் கண் மை தீட்டிக் கொள்ளுதல்.
எந்த ஒரு ஹோமமாக இருந்தாலும் அல்லது யாகமாக இருந்தாலும் கடைசியில் அந்த ஹோம குண்டத்திலிருந்து சாம்பல் எடுத்து பசு நெய்யுடன் சேர்த்து நெற்றியில் அனைவருக்கும் கருப்பு நிறத்தில் பொட்டு வைத்தால் தான் ஹோமத்தில் கலந்து கொண்டதற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதே போல கருப்புக் கொடி மற்றும் கருப்புச் சட்டை என்பதும் சில சமயங்களில் துக்கத்தினை வெளிப்படுத்த பயன்படுத்தப் படுகின்றது.
இவ்வாறு கயிறுகளின் நிறத்தைப் பற்றியும் அதன் குண நலன்கள் பற்றியும் சுவாரஸ்யமாக கேட்டுக் கொண்டிருந்த சமயம் அறையினை திறந்த காரணத்தால் அனைவரும் கியூவில் வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள்.
அனைவரும் சாமி கும்பிடும் பொருட்டு கோயிலுக்குள் நுழைந்த சமயம் இவ்வளவு கூட்டமா என்று ஆச்சர்யப் பட்டேன். நான் அவரது தாயாரை கெட்டியாக இறுக்கமாக பிடித்துக் கொண்டேன். அவர் அனைவருக்கும் பின்னால் அனைவரையும் பாதுகாத்து வந்தார்.
நீண்ட நேரம் காத்திருந்து வந்ததால் அபிஷேகம் முடிந்து திரை விலக்கியிருப்பார்கள். சாவகாசமாக சாமி கும்பிடலாம் என்று நினைத்த போது “ஜருகண்டி ஜருகண்டி” என்று சொல்லிக் கொண்டே தள்ளி விட்டுக் கொண்டு இருந்தார்கள். நல்ல வேளையாக அப்போது தீபாராதனை காட்டப் பட்டுக் கொண்டிருந்தது. ஒரு சில விநாடிகள் தான் நான் அதனைக் காணும் பாக்கியம் கிடைத்தது. நானும் அவரது தாயாரும் சாமி தரிசனம் முடித்து விட்டு ஏழுமலையான் சன்னதியிலிருந்து வெளியே வந்து விட்டோம்.
உள்ளே கோவிந்தா கோவிந்தா என்னும் கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்ததைக் கேட்ட நான் வெளியில் வந்தவுடன் அவரது தாயாருக்கு குடிநீர் கொடுத்து சற்று அமர்ந்து இளைப்பாறுங்கள் எனக் கேட்டுக் கொண்டேன்.
அதன் பின்னர் அனைவரும் வந்து சேர்ந்தவுடன் பெருமாளின் வளர்ப்புத் தாயாரான பகுளா தேவி அம்மனையும் கோபுர ஸ்ரீநிவாசப் பெருமாளையும் தரிசனம் செய்து விட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தினோம்.
எதிரில் உள்ள யோக நரசிம்மர் சன்னதிக்கு இடது புறம் அமைந்துள்ள சந்தனக் கட்டை அரைக்கும் கல்லில் திருமணப் பத்திரிக்கையில் நாம் நமது பெயர்களை எழுதுவது போன்ற சந்தோஷத்துடன் நம் இருவர் பெயரினையும் ஒருவரை ஒருவர் பார்த்தவண்ணம் சிரித்துக் கொண்டே எழுதிவிட்டு நாம் இருவரும் வாழ்க்கையில் ஒன்றாக இணைவதற்கான இறைவனருள் கிடைத்து விட்டது என்னும் மகிழ்ச்சியில் கோயிலை விட்டு வெளியே வந்த சமயம் அங்கு பிரசாதம் கொடுத்ததை பெற்றுக் கொண்டோம்.
எனக்கு சர்க்கரைப் பொங்கல் கிடைத்தது அவருக்கும் அவரது தாயாருக்கும் வெண் பொங்கலும் புளியோதரையும் கிடைத்தது. அனைவரும் மாறி மாறி பகிர்ந்து பிரசாதத்தை உட்கொண்டோம்.
கோயிலைவிட்டு வெளியே வந்தவுடன் மீண்டும் ஒருமுறை கோயிலைப் பார்த்தேன். கண் கொள்ளாக் காட்சி.
அதன் பின்னர் அருகில் உள்ள மற்ற சிறிய கோயில்களைப் பார்வையிட்டுவிட்டு பிற்பகலில் அலமேலு மங்காபுரம் சென்று தாயாரை தரிசித்து விட்டு அனைவரும் நமது வாகனத்தில் ஏறி அமர்ந்தோம்.
நடுவில் எங்கோ ஓர் இடத்தில் வாகனத்தை நிறுத்தி டிபன் சாப்பிட்டு முடித்த பின்னர் மீண்டும் வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டோம்.
மூன்று நாட்கள் இருந்த உற்சாகம் மற்றும் சுறு சுறுப்பு திரும்பும் சமயம் இல்லை. அனைவரும் வாகனத்தில் உறங்கி விட்டனர். வாகனம் புறப்பட்டதிலிருந்து நான் அவரது தாயாருக்கு அருகிலேயே அமர்ந்து இருந்த காரணத்தால் நான் மட்டும் விழித்திருந்து அவருடன் பேசிக் கொண்டே வருவது அவரது தாயாரின் தூக்கத்தைக் கெடுத்து விடும் என்பதால் நானும் உறங்கி விட்டேன்.
இரவு நேரத்தில் நாம் பயணித்த வாகனம் நின்றவுடன் அனைவரும் ஒருவர் பின்னால் ஒருவர் இறங்கும் போது தான் தெரிந்தது பயணம் முடிந்து விட்டது என்று. அனைவருக்கும் அவ்வளவு அசதி. நம் இருவருக்கும் பயணம் முடிந்து விட்டதே என்னும் கவலை தொற்றிக் கொண்டது.