அறுவை சிசிச்சைக்குப் பின் பணியிடம் திரும்புதல்.
சாதாரணமாக அவர் என்னுடைய இல்லத்திற்கு வந்து என்னைச் சந்தித்துச் சென்றாலே நான் தொடர்ந்து மூன்று முதல் ஐந்து நாட்கள் வரையில் அவரது பிரிவினைத் தாங்க முடியாமல் கஷ்டப் படுவேன். அதற்குப் பின்னர் நான் சாதாரண நிலைக்கு வருவதற்கு மேலும் ஒரு வார காலம் பிடிக்கும்.
தற்போது வந்திருந்த சமயம் ஆபரேஷன் செய்து கொள்வதற்காக சொந்த ஊருக்குச் செல்ல வேண்டியிருக்கின்றது என்று சொல்லி விட்டுச் சென்றுள்ளார். ஊருக்குப் புறப்படுவதற்கு முன்னர் என்னை ஒரு முறை மீண்டும் சந்தித்து தகவல் சொல்லி விட்டு புறப்படும் படி கேட்டுக் கொண்டுள்ள போதிலும் என் நினைவுகள் அவரை சுற்றியே இருக்கின்றன.
அவர் உடல் நலமின்றி கஷ்டப்படும் சமயத்தில் யார் யாரோ அவரை கவனித்துக் கொள்ள முடிகின்றது. அவர்கள் அனைவரும் அவரை சொந்த ஊருக்கு அனுப்பாமல் இங்கேயே தங்கியிருந்து ஆபரேஷன் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள முடிகின்றது. ஆனால் என்னால் அவ்வாறு கேட்டுக் கொள்ள இயலாத அளவிற்கு எனது திருமணம் தடையாகி விட்டது.
இந்த ஊரில் எனது கட்டாயத் திருமணத்திற்குப் பின்னர் என்னை முதன் முதலாக சந்தித்த சமயம் நான் அவரிடம் கேட்டுக் கொண்டது மாதா மாதம் ஒரு முறையாவது வந்து என்னைச் சந்திக்க வேண்டும் என்பது தான். என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அவர் அடுத்த மாதம் வரும் சமயம் எனக்காக புத்தாடையும் கேக்கும் சாக்லெட்டும் கொண்டு வந்து இருவரும் சேர்ந்து தீபாவளிப் பண்டிகை போல கொண்டாடினோம். ஒவ்வொரு முறை என் இல்லத்திற்கு வரும் பொழுதும் எனக்காக சாக்லெட்டுகளும் இனிப்புகளும் கொண்டு வந்து மகிழ்விக்கின்றார்.
நான் முதன் முறையாக அவரிடத்தில் தான் கருவை சுமப்பது பற்றி தெரிவித்தவுடன் உடனடியாக கடைக்குச் சென்று எனக்காக இரண்டு பைகள் நிறைய சத்தான உணவு பண்டங்களையும் பழங்களையும் ஹார்லிக்ஸ் போன்றவற்றையும் சொண்டு வந்து கொடுத்தார். அதே போல நான் கருவுற்ற சமயத்தில் மாங்காய் சீசன் இல்லாத போதிலும் அவருடைய பெண் சிநேகிதியிடமிருந்து வெயிலில் காய வைத்த வடு மாங்காய் கொண்டு வந்து கொடுத்தார்.
நான் என் வயிற்றில் கருவினை சுமக்கும் சமயம் வந்த அவரது பிறந்த நாளுக்கு அவரும் புத்தாடை அணிந்து எனக்கும் புத்தாடைகள் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
என்னுடன் திருமணம் செய்து வைக்காக காரணத்தால் அவரது தந்தையின் சஷ்டியப்த பூர்த்தி விழாவிலும் கலந்து கொள்ளாமல் புதிதாக வாங்கியுள்ள வீட்டின் கிரஹப் பிரவேசத்திற்கும் செல்லாமல் இருந்ததால் அவரது தாயார் மனவேதனையினைப் போக்க அவரது தாயார் என்னைப் பார்க்க விருப்பப்பட்ட சமயத்தில் அவரது தாயாரை என் இல்லத்திற்கு அழைத்து வந்து என் வேண்டுகோளின்படி மீண்டும் பெற்றோர் வீட்டிற்கு சென்று வருவதற்கும் சம்மதம் தெரிவித்தார்.
நான் கர்ப்பிணியாக இருக்கும் சமயம் பிறந்த வீட்டினர் தான் பிரசவத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று சம்பிரதாயம் என்று சாக்குச் சொல்லி நாட்களைக் கடத்திய சமயம் அவர் ஊருக்கு அழைத்துச் செல்ல முயற்சி மேற் கொண்டார்.
எனது பெயரின் முதல் எழுத்தையும் அவரது பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து ஒரு பெயரினை எனக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு தேர்ந்தெடுத்து எனக்குக் குழந்தை பிறந்த பின்னர் அந்தக் குழந்தைக்கு அதே பெயரினை நாம் இருவரும் சேர்ந்து காதில் மூன்று முறை சொல்லி பெயர் சூட்டினோம்.
நான் முதன் முதலாக அவரை சந்தித்த சமயம் என் மீது வைத்திருந்த அன்பினை கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே எனக்கு வேறொருவருடன் திருமணம் நடந்த பின்னரும் கூட அதே போல அன்பு செலுத்தி வருகின்றார். திருமண பந்தம் என்னை அவரிடமிருந்து பிரித்து விட்டாலும் என் இதயத்தில் அவரும் அவருடைய இதயத்தில் நானும் இருந்து வருவதில் எந்த வித மாற்றமும் இல்லை.
ஆன்மீக வாதிகள் சொல்வது போல உடலுக்கு அழிவுண்டு. ஆன்மாவுக்கு அழிவு என்பதே கிடையாது. அது போல உடல் மட்டும் தான் என்னை அவரிடமிருந்து பிரித்துள்ளது. இதயங்களில் உள்ள அன்பு அப்படியே தான் இருக்கின்றது. நம் இருவருக்கிடையே உள்ள காதல் கொஞ்சம் கூட குறையவில்லை. ஆனால் கலாச்சாரம் நம்மை பிரித்து விட்டது.
இது வரையில் நான் மட்டும் அவரது வருகைக்காக ஏங்கிக் கொண்டிருந்தேன். இப்போது என் செல்லப் பெண் கூட அவருக்காக ஏங்க ஆரம்பித்து விட்டாள்.
ஒரு நாள் மாலைப் பொழுதில் திடீரென அவர் என் இல்லத்திற்கு வந்தார். ஆபரேஷன் செய்து கொள்ள சொந்த ஊருக்கு வெள்ளிக் கிழமை இரவு செல்ல இருப்பதாகவும் ஆபரேஷன் தேதி குறிப்பிட்ட பின்னர் ஆபரேஷன் செய்து கொண்டு திரும்பி வர குறைந்தது 15 நாட்கள் ஆகலாம் என்றும் எனது இல்லத்திற்கு அதன் பின்னர் ஓரிரு வாரங்களில் வருவதாகவும் சொல்லிவிட்டு விருந்தோம்பல் முடிந்த கையோடு உடனே புறப்பட்டுச் சென்றார்.
ஆபரேஷன் எப்போதென்று தெரியாத காரணத்தால் அவர் புறப்படுவதாகச் சொன்ன அந்த வெள்ளிக் கிழமைக்கு அடுத்த நாள் முதல் நான் தினமும் அவருக்கு ஆபரேஷன் நல்ல படியாக நடந்து மிக விரைவில் நன்றாக குணமடைந்து நல்ல ஆரோக்யத்துடன் என்னை கட்டாயம் சந்திக்க வர வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டேன்.
தினமும் காலையில் நான் பூஜை செய்வதை பார்த்த என்னுடைய செல்லப் பெண்ணும் பூஜையில் கலந்து கொண்டாள். என்ன சொல்லி கும்பிட வேண்டும் என்று கேட்டாள். நான் ஒன்றும் சொல்லாமல் உனக்கு என்ன வேண்டுமோ அதனைச் சொல்லி கும்பிடு என்று சொன்னேன். அதனைக் கேட்ட என் செல்லப் பெண் பாபா இன்று வர வேண்டும். எனக்கு நிறைய சாக்லெட் கொண்டு வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். பூஜை ஒன்று ஆனால் வேண்டுதல் வேறு வேறு.
அவருடைய நண்பர் அதாவது என்னுடைய உறவினர் அவருக்கு ஆபரேஷன் நடந்து முடிந்த விவரத்தை எனக்குத் தெரிவித்தார். மிக்க மகிழ்ச்சி. எப்போது வருவார் எனக் கேட்டதற்கு ஒரு மாதம் லீவு போட்டுள்ளார் என்று மட்டும் சொன்னார். அவரது வீட்டில் தொலை பேசி வசதி இல்லாத காரணத்தால் நான் தொடர்பு கொண்டு பேச முடியவில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர் என்னுடைய இல்லத்திற்கு மீண்டும் வரும் சமயம் என்னை விட என் செல்லப் பெண் வரவேற்ற விதம் மிகவும் சந்தோஷமாக இருந்தது. உள்ளே நுழைந்ததும் பாபா ஏன் இத்தனை நாள் வரவில்லை என்று சொல்லிக் கொண்டே அவரது மடியில் அமர்ந்து கொண்டு பாபா வந்துட்டார். டிபன் கொண்டு வா என்று எனக்கு கட்டளையிட்டாள். என் நிலைமை என் மகளால் தலை கீழாக மாறி விட்டது.
அவரிடமிருந்து சாக்லெட் பெற்றுக் கொண்டவுடன் அவளுக்கு மிக்க சந்தோஷம். எனக்கும் வழக்கம் போல் பாதி கிடைத்தது. இரட்டிப்பு சந்தோஷம். அதன் பின்னர் ஆபரேஷன் பற்றி கேட்டேன். அதற்கு அவர் சொன்னது கேட்டு சற்று பதட்டம் அடைந்தேன்.
மயக்க ஊசி போட்டு ஒரு மணி நேரமாகியும் மயக்கம் வரவில்லை என்பதால் மீண்டும் ஒரு முறை மயக்க ஊசி போட்டு ஆபரேஷன் செய்தார்கள். ஆபரேஷன் முடிந்து 6 மணி நேரம் கழித்து தான் மயக்கம் தெளிய வேண்டும் ஆனால் 3 மணி நேரத்தில் மயக்கம் தெளிந்து விட்டது. டாக்டர் மயக்கம் தெளிந்தவுடன் தாகமாக இருக்கின்றது என்று சொன்னால் ஃபாண்டா மட்டும் கொடுங்கள் என்று சொல்லியிருந்தார். அதன் படி என் தந்தை ஃபாண்டா கொடுத்தவுடன் புரையேறி விட்டது.
உடனடியாக டாக்டர் வந்து பார்த்து விட்டு இவ்வளவு சீக்கிரம் ஏன் குளிர் பானம் கொடுத்தீர்கள் என்று கேட்டார். ஒன்றும் சொல்ல முடியவில்லை. அதனால் ஆபரேஷனில் சிறு தவறு நடந்ததாக கருத வேண்டும் எனவும் மூன்று மாதங்களுக்குப் பின்னர் தான் அது தெரியவரும் என்றும் டாக்டர் சொன்னார். தற்போது 30 நாட்கள் தான் முடிந்துள்ளது. போகப் போகத் தான் தெரியும் என்று சொன்னார். அவர் பேசும் சமயம் குரலில் எந்த விதமான மாற்றமும் தெரியவில்லை. ஆரம்பத்தில் குரல் எப்படி இருந்ததோ அப்படித்தான் இருந்தது.
நான் அவரிடத்தில் கேட்டேன். டாக்டர் நன்றாக பேசலாம் என்று சொல்லி இருக்கின்றாரா அல்லது சில நாட்கள் கட்டுப் பாடாக இருக்க வேண்டும் என்று ஏதேனும் சொல்லி உள்ளாரா எனக் கேட்டேன்.
அவர் அப்படி ஒன்றும் இல்லை என்றும் அவருடைய அலுவலகத் தோழிகள் அனைவருடனும் சகஜமாக பேசி வருவதாகவும். காரமான நொருக்குத் தீனிகளை தவிர்க்குமாறும் மிகவும் குளிர்ந்த பானங்களையும் மிகவும் சூடான பானங்களையும் சில நாட்கள் தவிர்க்குமாறும் சொல்லியுள்ள படியால் அதனை மட்டும் பின்பற்றி வருவதாக கூறியவுடன் அவருக்கு காபியினை நன்றாக ஆற வைத்து கொடுத்தேன். அதிலும் பாதியினை அவர் கொடுக்க நான் பெற்றுக் கொண்டு குடித்ததில் மிண்டும் ஒரு வசந்தம் வந்து விட்டதாக கருதினேன்.
அவரிடத்தில் திருமணம் பற்றிக் கேட்டதற்கு குறைந்தது மூன்று மாதங்களுக்கு திருமணப் பேச்சினை எடுக்க வேண்டாம் என்று வீட்டில் சொல்லி விட்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார். இருந்தாலும் அவரது வெளியூர் பயணங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பது பற்றி அவர் சொல்ல தெரிந்து கொண்டேன்.
ஒரே கூட்டில் வாழ முடியாவிட்டாலும் கூட்டிற்கு அருகிலேயே இருப்பதால் ஒரு விதத்தில் சந்தோஷம். மீண்டும் விடை பெறும் சமயம் ஒரு விதமான சோகம். எனக்கு மட்டுமல்ல. நம் மூவருக்கும்.