திருமணத்திற்குப் பின்னர் முதல் சந்திப்பு
கோவிலில் சித்தர் சொன்ன வார்த்தைகள் என் நினைவுக்கு வந்து என்னை மிகவும் வாட்டிக் கொண்டிருந்தன.
விட முடியாது.
தொட முடியாது.
புடிச்சது கிடைக்காது.
கிடைச்சது புடிக்காது.
மொத்தமே எட்டு வார்த்தைகள் தான். அந்த எட்டு வார்த்தைகளும் எனக்கும் அவருக்கும் இடையே இருந்த கடந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம் என நான் இறக்கும் வரையில் என்னுடைய மற்றும் அவருடைய நிலைமையினை பிரதிபலிப்பதாகவே இருக்கின்றன.
திருமணம் முடிந்து ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு மேல் ஆகி விட்டது. இந்த நேரம் அவர் அநேகமாக ஊருக்கு திரும்பி இருப்பார். பெற்றோர் ஒரு மாத காலம் லீவு போடும் படி வற்புறுத்தியும் கூட 15 நாட்கள் தான் லீவு போட்டிருக்கின்றார். எனவே கட்டாயம் ஊருக்குத் திரும்பி வேலையில் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருப்பார் என நான் எண்ணிக் கொண்டு இருந்தேன்.
திருமணமாகி பத்து நாட்கள் ஆகிவிட்டன. இப்பொழுது அவர் சற்று ஓய்வாக இருப்பார். வழக்கம் போல் இனிமேல் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமைகளில் அவரை எதிர் பார்க்க முடியாது ஆனால் எப்போது வருவார் என்பதனை கட்டாயமாக எதிர்பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. எப்படியும் என்னைக் காண வருவார் என்னும் ஏக்கத்துடன் மிகுந்த நம்பிக்கையுடன் நான் மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருந்தேன்.
வழக்கமாக ஞாயிற்றுக் கிழமைகளில் வருகின்ற நாளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் வெள்ளிக் கிழமை மாலையில் அலுவலகம் முடிந்தவுடன் நேராக என்னுடைய இல்லத்துக்கு வந்தடைந்தார். எனக்கு அளவில்லாத ஆனந்தம். வரும் சமயம் அவரது திருமணத்திற்கு கொடுக்கப் பட்ட சீர் முறுக்கு மற்றும் இனிப்பு வகைகளை கொண்டு வந்து இருந்தார்.
என் செல்லப் பெண் அவரைக் கண்டதும் பாபா வந்துட்டார் என்று சொல்லிக் கொண்டே அவரை கரங்களில் ஏந்தச் சொல்லி கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தது. அவருக்கு அதில் மிக்க சந்தோஷம். ஆனால் என்னால் அது முடியவில்லை. காரணம் நான் ஒரு கலாச்சாரக் கைதி.
அவர் கொடுப்பதற்கு முன்னரேயே அவரிடமிருந்து அவர் கொண்டு வந்து இருந்ததனை அவரிடமிருந்து பெற்று என்னிடத்தில் கொடுத்து விட்டு எங்கே எனக்கு சாக்லெட் என்று அவரிடம் கேட்டது. உடனே அவர் தமது பையிலிருந்து சாக்லெட் எடுத்து கொடுத்தார். அதன் பின்னர் அவர் அமர்ந்ததும் அவர் மடியில் அமர்ந்து கொண்டாள்.
அம்மாவுக்கு சாக்லெட் இல்லையா என்று கேட்டவுடன் இதோ எனக் கூறிக்கொண்டு மற்றொரு சாக்லெட் கொடுத்தார். உடனே என் செல்லப் பெண் அந்த சாக்லெட்டைப் பெற்றுக் கொண்டு முதலில் நீ சாப்பிடு என்று அவருக்கு பாதி சாக்லெட் கடித்த பின்னர் மீதியை என்னிடம் கொடுத்தது. எனக்கு அப்பொழுது தான் என் உயிர் திரும்பி வந்தது போன்ற உணர்வு. திருமணம் ஆனபின்னர் இது மாதிரியான உறவு நீடிக்குமா என சந்தேகத்துடன் இருந்தது நிவர்த்தியாகி விட்டது. எனக்கு மிக மிக சந்தோஷம்.
அவர் கொடுத்த சுவீட் காரத்தினை ஒரு தட்டில் வைத்து அதனையே அவருக்குப் பரிமாறினேன். அவரும் வழக்கம் போல் அதே சுவீட் மற்றும் காரத்தினை சாப்பிட்டு எனக்கும் கொடுத்தார். அப்போது தான் அந்த பலகாரங்களை அவர் சாப்பிட்டு இருக்கின்றார். அது வரையில் சாப்பிடவில்லை.
அலுவலக பெண் தோழிகள் அனைவருக்கும் கொடுத்த சமயம் அவர்கள் அப்படியே வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டதால் அவரது திருமணச் சீர் பலகாரங்களை என்னுடைய வீட்டில் தான் ருசித்துச் சாப்பிட்டு இருக்கின்றார். இதன் மூலம் நான் அவரை கவனித்துக் கொள்வது போன்ற அளவிற்கு அவர் கவனிக்கப் படவில்லை அல்லது சோகத்தில் இருந்திருக்கின்றார் என்பதனை மட்டும் அறிந்து கொண்டேன்.
அதன் பின்னர் தீபாவளியன்றும் திருமண நாளன்றும் நான் இருந்த நிலைமையினை அவரிடத்தில் தெவித்து விட்டு திருமண நாளன்று எனக்குத் தூக்கம் வரவில்லை என்றும் அன்றைய தினத்தில் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டிருந்தால் மிக மிகச் சந்தோஷமாக இருந்திருக்க முடிந்திருக்கும் என்று சொன்ன சமயம் அவர் திருமண நாளன்று நடக்க வேண்டிய முதலிரவு பின்னொரு நாளில் தான் நடந்தது எனவும் தேனிலவு எங்கும் செல்லவில்லை என்றும் தெரிவித்தார்.
அவரது இல்லற வாழ்க்கை பற்றிக் கேட்ட சமயம் தற்போது அதனைக் கேட்க வேண்டாம் நானாகவே ஒரு நாள் சந்தோஷமாகச் சொல்லும் வரையில் காத்திரு என்று சொன்ன சமயம் இன்னும் என் நினைவு அவரை வாட்டிக் கொண்டு இருக்கின்றது என்பதனை அறிந்த கொண்டேன்.
அதன் பின்னர் கூட பணியாற்றும் நண்பர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தோழிகளுக்கும் வரவேற்பு வைக்கப் போகும் நாளை என்னிடம் தெரிவித்து அதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அச்சமயம் உங்கள் தோழியர் அனைவருக்கும் நமது உறவு பற்றி தெரிந்துள்ள காரணத்தால் அந்த நிகழ்ச்சிக்கு நான் வந்தால் உங்கள் நிலைமை சந்தோஷமாக இருக்காது என்றும் அதன் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தேன். அவரும் சரியென ஒப்புக் கொண்டார்.
அந்த சமயத்தில் வெளியில் சென்றிருந்த என்னுடைய கணவர் வீடு திரும்பினார். அவர் அவரிடத்தில் திருமணம் நடந்தேறிய விதம் பற்றி விசாரித்தார். அப்போது திருமணத்திற்கு சென்று வரலாம் என்று அவர் அழைத்ததனை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார். அதன் பின்னர் மீண்டும் ஒரு முறை கீழே காலியாக உள்ள போர்ஷனில் குடி வந்து விடுங்கள். இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் சொன்ன சமயம் வேண்டாம் என்று சொன்ன மாதிரி இப்போது சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.
அப்போது தான் அவர் தன் மனைவியைப் பற்றி என் கணவரிடத்தில் முதன் முதலில் பேசினார். அவருக்கு வந்துள்ள மனைவி இன்னமும் தாய் தந்தை பாசத்தில் குறையாமல் இருப்பதாகவும் அவர்களை விட்டு வர மனமில்லாமல் அங்கேயே இருந்து கொண்டு என்னையும் அங்கேயே இருக்குமாறு வற்புறுத்துவதாகவும் அவரது அண்ணன் வீட்டிற்கு வருமாறு அழைத்தால் கூட சம்மதம் தெரிவிக்காமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதற்கு என் கணவர் குடும்பப் பாசம் அதிகம் உள்ள பெண்களைத் திருமணம் செய்து கொண்டால் சில நாட்கள் இப்படித்தான் இருக்கும் என்று தெரிவித்தார். நல்ல வேளையாக அவர் இங்கு வைக்கப் போகும் வரவேற்பு நிகழ்ச்சி பற்றி அவரிடம் தெரியப் படுத்தவில்லை. அதுவரையில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவரிடத்தில் தெரியப் படுத்தி இருந்தால் அவர் என்னை அழைத்துச் சென்று இருப்பார்.
என் மகள் என் அம்மாவைக் கல்யாணம் பண்ணிக்காமல் வேறு பெண்ணை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டே என்று சபையில் கேட்டு என் மானத்தை வாங்கி இருப்பாள். அதுவும் தவிர அவரது தோழிகள் அனைவரும் என்னைப் பார்த்து வருத்தப் பட்டிருப்பார்கள் என்பதனை நான் மட்டும் அறிந்து கொண்டேன்.
அதன் பின்னர் அவர் சென்று வருகின்றேன் என நம் இருவரிடத்தில் கேட்டு புறப்பட்டுச் சென்ற சமயம் இதுவரையில் நான் கேட்காத ஒரு கேள்வியினை என் கணவர் முன்னிலையில் என்னையும் அறியாமல் உற்சாக மிகுதியால் கேட்டு விட்டேன். அது என்னவெனில் மீண்டும் எப்போது வருவீர்கள்? அவரால் எதுவும் பதில் சொல்ல முடியாமல் விரைவில் என்று என்னிடம் விடை பெற்றார். மீண்டும் அன்று இரவு முழுக்க தூக்கம் இல்லாமல் தவித்தேன்.